Monday, October 25, 2021

பசுபதிக்கு வைத்தியம்

 பெரியவா சரணம் 

பெரியவா   ஒரு முறை   எழுந்து   கொட்டகை    செல்லாமல்   அனுஷ்டானங்கள்    செய்யாமல்   படுத்திருந்தார். 

அதனால்   அணுக்கத்   தொண்டர்கள்    பெரியவாளுக்கு    உடல்நலக் குறைவு   என்று   ஆயுர்வேத    வைத்தியர்    ஒருவரை   அழைத்து   வந்தனர். 

பெரியவாவை   வணங்கிய   வைத்தியர்,  பெரியவாவின்   உடல் நிலையைக்   கவனித்துப்    பார்த்து,   புதிய   மூலிகைகளைப்   பறித்து,   அதனைக்    காய்ச்சி   உரிய   பக்குவம்    செய்து,   சிறு குடுவைகளில்   வைத்து    மடத்தில்   கொடுத்தார். 

வைத்தியர் , 'ஸ்வாமிகளுக்குக்    கொடுத்த    மருந்தை   பிறருக்குக்    கொடுத்து   வைத்தியம்   செய்யக் கூடாது' என்று   கூறிய பின் தான்   மருந்து   கலந்து   கொடுத்தார். 

இரண்டொரு நாளில்,  ஒரு   விவசாயி   தன்   மாடு   எழுந்திருக்க வில்லை.   அதற்கு    ஏதோ   நோய்   வந்து விட்டது.   எந்த   வைத்தியத்தாலும்   குணப்படுத்த முடியவில்லை   என்று    பெரியவாவிடம்  முறையிட்டார். 

பெரியவா    அந்த   மாட்டை   கொட்டகையிலேயே   சென்று   பார்த்தார்! அதைப்   பார்த்தவுடன்   தமக்காக,   ஆயுர்வேத  வைத்தியர்   தனிப்பட்ட   முறையில்   தயாரித்து  கொடுத்த   மூலிகை  மருந்தினை   அப்படியே   கொண்டு   வந்து   மாட்டிடம்   வைக்கச்  சொன்னார்.   அந்தப்   பசு   முழுவதும்  தின்று  விட்டது.   சில   நாளில்   மாட்டின் நோய்   தீர்ந்து விட்டது. பெரியவாளின் உயிரக்  கருணை   இது! 

அதன் பின்    அந்த   வைத்தியரிடம்   ஸ்வாமிகள், "எனக்கு    நீ   தந்த  மருந்தை மாட்டுக்கு   வைத்து விட்டேனே   என்பதில் உனக்குக்    கோபமா?" என்று   கேட்டார். 

வைத்தியர், "நான்   பசுபதிக்கு   வைத்தியம்   செய்யலாம்   என்று   நினைத்தேன் ; ஸ்வாமிகள்   பசுவுக்கு  வைத்தியம்    செய்து  விட்டார்கள்" என்று  மெதுவாகக்   கூறினார். 

உடனே   பெரியவா, "நீ   பசுவுக்கா   வைத்தியம்    பார்த்தாய்? சிவன், விஷ்ணு,  பிரம்மா, உமா, லக்ஷ்மி, சரஸ்வதி   உள்ளிட்ட   முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும்    அல்லவா   வைத்தியம்  செய்திருக்க!   அந்தப்   பசுவின்   உடலில்    எல்லா   தேவதைகளும்   குடி இருப்பதாக தினமும்   காலையில்    பூஜை  செய்கிறேனே!   என்னை விட   நான்   கும்பிடும்    தெய்வம்   பெரிசில்லையா? என்று    சொல்லி   புன்னகை   செய்தார். 

வைத்தியருக்கோ,  பரம திருப்தி!   ஸ்வாமிகளின்    ஆசிர்வாதமும்,   தெய்வங்களின்    அநுக்கிரஹமும்   ஒரு  சேரக்    கிடைத்ததில்   அவர்   அடைந்த  மகிழ்ச்சிக்கு   அளவே இல்லை! 

பெரியவாவை   சாஷ்டாங்கமாக   நமஸ்கரித்தார்.

No comments:

Post a Comment