🌹🌹🌹🌹👍🌺🌺🌺🌺
கொரானாவும் கோவிந்த ராஜனும்(கௌசல்யா கேசவராஜ்)
கோவிந்த ராஜன் ...வயது 75. ஒரு வருடம் முன்பு மனவியை இழந்தவர்.ஒரே பெண் லக்ஷ்மி தெருக்கோடியில் ஒரு பெரிய அப்பார்ட்மெண்டில் இருக்கிறாள். ஒரே பேரன் அமெரிக்காவில்.தன்னுடன் வந்து இருக்க சொல்லி பெண்ணும் மாப்பிள்ளையும் கூப்பிட்டும் இவர் மறுத்துவிட்டார். தனிமை விரும்பி. வீட்டில் டிவி கிடையாது. பேப்பர் படித்து டென்ஷனாகி BP ஏறுவதால்
பேப்பரும் படிப்பதில்லை.ஸ்மார்ட் போன் பிடிக்காது. சாதாரண போன்.
உலக விஷயம் தெரியாமல் இருக்கிறீர்களே என்று யாராவது கேட்டால் அவர் சொல்லும் பதில் எழுபது வருடங்களாக ஒரே மாதிரி செய்திகள்தான்.சில செய்திகளை படித்தால் ரத்தம் கொதிக்கிறது. அதனால் என்தேர்ந்தெடுத்த நண்பர்கள் போதும் எனக்கு என்று புத்தக அலமாரியை காட்டுவார்.மகள் தினமும் இரண்டு வேளை வந்து அவருக்கானஎளிமையான உணவை கொடுத்து விட்டு போய் விடுவாள்.காபி, கஞ்சி மட்டும் அவரே போட்டுக்கொள்வார்.
இன்று அவருக்கு திடீரென்று வெளி உலகத்தை பார்த்தால்என்ன என்று தோன்றியது.வெளியே போய் ஆறு மாதம் இருக்கும்.மகளிடம் சொல்லலாம் என்றால் போன் ரீ சார்ஜ் செய்யாததால்சொல்ல முடியாது. இன்று என்னவோ புத்தகம் படிக்க பிடிக்கவில்லை. வலது பக்கம் திரும்பினால் கடைத்தெரு.இவரது வீட்டுக்கு பக்கத்தில் காலி மனை. பக்கத்து வீடுகளில் யாரையும் தெரியாது. யாரிடமும் பேசியதில்லை.வீட்டை பூட்டிக்கொண்டு வெளியே வந்ததும் கால்கள் கொஞ்சம் தள்ளாடியது. கடைத்தெரு பக்கம் திரும்பியதும் ஒரு வினோதமான காட்சியை பார்த்தார்.தெருவில் போகும் எல்லோரும் மாஸ்க் போட்டு கொண்டிருந்தனர். கண்கள் மட்டும்தான் தெரிந்தது. என்னாச்சு ? பொல்யூஷன்ரொம்ப ஜாஸ்தி ஆயிடுத்தோ என்று நினைத்தவர் மற்றொரு வினோதத்தை பார்த்தார். காய்கறி கடை மளிகை கடை வாசலில் சாக்பீஸால் வட்டங்கள் ஓரடி இடைவெளியில் வரையப்பட்டிருந்தது.
அந்த வட்டத்தில்தான் வரிசையாக பையுடன் மாஸ்க் அணிந்த மக்கள் நின்று கொண்டிருந்தனர்.கோவிந்த ராஜனுக்கு லேசாக தலை சுற்றுகிற மாதிரி இருந்தது.காய்கறிக்கடையில் இருந்த ராஜீவ் காந்தி( அவன் அப்பா இந்திரா அபிமானி) இவரின் தள்ளாட்டத்தை பார்த்தான்.அவன் பார்ட்னரிடம் கடையை ஒப்படைத்து அவன் வீட்டுக்கு கிளம்பியவன் இவரை நெருங்கி என்னா சார் செய்யுது என்று அவர் கையை பிடித்து கொண்டான். லேசா தலைய சுத்துது என்றவர் தன் தெருவை காண்பித்து அந்த தெருவில் நாலாவது வீடு என்றார்.அவருக்கு வீடு வரையில் போக உதவி தேவைப்பட்டது.தனியாக வெளியே வந்தது தப்பு. லக்ஷ்மி திட்ட போகிறாள் . அவர் வீடு வரை வந்தவன் சாவியை வாங்கி பூட்டை திறந்து உள்ளே போய் அவரை உட்கார வைத்தவுடன் தனியாக அவரை விட்டு போக மனமில்லாமல் எப்படி தனியா இருக்கீங்க யாரும் இல்லையா என்றான்.அவர் தன் பெண் தெருக்கோடி அப்பார்ட்மெண்ட்தான் ,இன்னும் ஒரு கொஞ்ச நேரத்தில் வந்து விடுவாள் என்றார்.
அவர் பெண் வரும் வரை அவருக்கு துணையாக இருக்க வேண்டும் என்று தீர்மானித்தவனுக்கு திடீரென்று தான் அவர் கையை பிடித்து கூட்டி வந்தது
நினைவு வந்து பகீரென்றது. இந்த ஆளுக்கு அது இருந்தா?ராஜீவ் கொரானா என்று பெயர் சொல்ல மாட்டான். அது அல்லது பலானது என்பான்.பேர் சொன்னால் கூப்பிட்டயா என்று வந்து விடும் என்று அவன் அம்மா சொன்னதிலிருந்து பயம்.
சட்டென்று எழுந்தவன் இரு சார் கை கழுவிட்டு வரேன் என்று வாஷ்பேசினில் இருந்த ஹேண்ட் வாஷை தாராளமாக தடவி முழங்கை வரை நுரைக்க ஒன்று இரண்டு இருபது வரை சொல்லி பிறகு
தேய்த்து தேய்த்து டாக்டர்கள் சொல்லிக்கொடுத்தபடி கழுவினான். கோவிந்த ராஜன் அவன் செய்வதை பார்த்து திகைத்து விட்டார்.கொஞ்சம்
மெண்ட்டலாக இருப்பானோ என்று திடீர் சந்தேகம் வந்தது.
கைகழுவி விட்டு வந்தவன் நாற்காலியை சரியாக ஒரு மீட்டர் மனதால் அளந்து தள்ளி போட்டு அமர்ந்தான். உன் பேர் என்னப்பா என்றார். ராஜீவ் காந்தி என்றவுடன் அவர் சந்தேகம் சற்று உறுதியானது.
"ஆமாம் மோடி சொன்ன மாதிரி கை தட்டினயா சார்?
விளக்கு புடிச்சயா? நாங்க எங்க வீட்டில பசங்க கூட சேர்ந்து ஜோரா கை தட்டினோம்.மெழுகுவத்தி டார்ச் எல்லாம் ஏத்தினோம்.
அவரும்தான் மோடி மஸ்தான் வேலை எல்லாம் செஞ்சு பார்த்தார். இது அசைய மாட்டேங்குதே! ஸ்ட்ராங்கா உக்காந்து போக மாட்டேங்குது.சரி அது போறப்ப போட்டோம்
அது வரைக்கும் கையை கழுவிக்கிட்டே இருக்க வேண்டியதுதான்.நீ என்னா சார் சொல்ரே?" என்றான்.
ராமநாதனுக்கு தலை மறுபடி லேசாக சுற்றியது. ப்ரைம் மினிஸ்டர் எதற்கு கை தட்ட சொன்னார்? விளக்கேத்த சொன்னார்? அது சரி ! மனசு சரியில்லேன்னா என்னன்னவோ கற்பனை வரும் போல. சைகாலஜி சம்பந்தமாக தான் படித்ததெல்லாம் நினைவு படுத்தி பார்த்தார். இவனுக்கு தேங்ஸ் சொல்லி எப்படியாவது கிளப்ப வேண்டும் என்று நினைத்தவர்
ரொம்ப நன்றிப்பா என்று எழுந்து நின்று அவன் அருகில் வந்து கைகளை நீட்டினார் கைகளை குலுக்குவதற்கு.அவன் தடுமாறி எழுந்து பின்னால்
நகர்ந்து இப்ப எதுக்கு கையை நீட்டற? இப்பத்தான கை கழுவினேன்? மறுபடி கழுவ வெக்காத. உலகம் முழுக்க நம்ப பாரத பண்பாடுன்னு
கை கூப்பறாங்க. நீ என்ன பெரிசு ஸ்டைலா கை கொடுக்க வர.ஒழுங்கு மரியாதையா கவர்மெண்ட் சொல்றத கேளு. மாஸ்க் போடாம வெளில வந்த. இப்ப கை குடுக்க வர. ஒன் பொண்ணு வரட்டும் சொல்றேன். நீ என்னவோ எது சொன்னாலும் திரு திருன்னு முழிக்கற. " அவன் பேசிக்கொண்டிருக்கும் போது கோவிந்த ராஜன் குழப்பத்தின் உச்சியில் தலை சுற்றலுடன் இருந்த போது கதவை திறந்து கொண்டு அவர் பெண் லக்ஷ்மி உள்ளே நுழைந்தாள். https://www.facebook.com/100001467288908/posts/3247295205329357/?d=n
No comments:
Post a Comment