Wednesday, June 24, 2020

விஸ்வாமித்ர கோத்ரம் (1 OF 2)

36. விஸ்வாமித்ர கோத்ரம் (1 OF 2) (சிசீ6) #ganeshamarkalam

எங்கப்பா ரெம்ப கோவக்காரர். மின்னெல்லாம் அப்படி நிறைய பேரப் பாக்கலாம். எங்கம்மாவப் பாத்தா பரிதாபமா இருக்கும். சின்ன வயசில் அப்பா அம்மாவ திட்ரதை சும்மா வேடிக்கைப் பாக்கத்தான் தோணும். வேறென்ன செய்ய? கொஞ்சம் வளர்ந்ததும் “சண்டை போடாதப்பா, பயமா இருக்கு.” ரெண்டு பசங்களில் நான் கடைசீ. என் சொல்பேச்சை சித்தே கேப்பர். செல்லப் பிள்ளை பயப்படரானேன்னாவது.

இப்பெல்லாம் ஆம்பிள்ளை அப்படி இருப்பது சாத்தியமில்லை. ஆத்துக்காரி ஒட்ட வெட்டிடுவா. எங்கம்மா மாதிரி அடங்கிப் போரவா அபூர்வம். ஆண்களும் மாறிட்டாளா, இல்லை அடங்கிப் போயிட்டாளான்னு தெரியலை. என் ஜெனெரேஷன் ரெண்டும்கெட்டான். கோவம் வந்தா சீறிப் பாஞ்சுட்டு, ஆத்தில் கல்பனா பதிலுக்கு குரலை உசத்திட்டா பம்மிண்டு போயிடர ஜாதி. எம்பொண்ணு ஜானகி ஒருக்கா சொன்னா, “அம்மா பக்கம் லாஜிக்கே இல்லை. நீ தம் கட்டி தாக்குப் பிடிச்சிருந்தா ஜெயிச்சிருப்பாய், அவசரப் பட்டு விட்டூட்டியே!” ஆனா சண்டை நீடிச்சிருந்தா பொண் யார் பக்கம் சாய்வானு சொல்ல முடியாது. வார் டயத்தில் பொண்கள் அப்பாவுக்கு பரிஞ்சு பேசுவான்னு பீரங்கி தூக்கினோம்னா அதாலேயே அடி வாங்கி விழுவம். பம்மிடரது பெட்டர்.

கல்யாணமான் புதுசில், மாமனார் அத்தனை கோபப் படுவதும், ஒண்ணுமில்லாத விஷயத்துக்கேல்லாம் திட்டரதையும் பாத்த கல்பனா “ஜாதகத்தில் உங்காத்து கோத்ரம் தப்பா போட்டு ஏமாத்தி என்னை கல்யாணம் செஞ்சுண்டுட்டேள்.” “இல்லையே, நைத்ருப காஸ்யப கோத்திரம்தானே!” “இல்லை இல்லை, உங்கப்பாவ பாத்தா விஸ்வாமித்ர கோத்ரமா தெரியரது?”  

எங்க பெட்ரூம் மித்தத்துக்கு இந்தண்டை. கல்யாணம் ஆனதும் அப்பாவே “பெரீய ரூமை நீ எடுத்துக்கோடா செல்லம்”. அண்ணாக்கு இதில் சித்தே மனஸ்தாபம். அவனதும் பெரீய ரூம்தான். ஆனா அப்பா தன் ரூமை கண்ணனுக்கு தந்துட்டர்னு. அவன்தான் 2 வருஷம் மின்னே “ஃப்ரொன்ட் ரூம் வேணும், ஜன்னலைத் தொறந்தா கார்டென் வ்யூனு கேட்டு வாங்கிண்டான். அப்பா தன் ரூமை யாருக்கும் தரமாட்டார்னு. என் ரூம்லேந்து பாத்தா மாமரமும், அந்தண்டை மாட்டுக் கொட்டாயும் தெரியும். இப்ப அது போச்சாம்.

மன்னியோட இருகச்சே ஜன்னலை தொறந்து வச்சிண்டா கசமுசா செய்வான்? ஜன்னலுக்கு வெளீலே என்ன இருந்தா என்ன? எங்க ரூம் ஜன்னலை தொறக்கவே வேண்டாம்னுட்டா கல்பனா. 2 மாசம்தான் ஆச்சு கல்யாணம் ஆகி. தூங்க விடமாட்டா. அன்னைக்கும் உள் காரியங்களை மன்னியோட பங்கு போட்டுண்டு முடிச்சுக் கொடுத்துட்டு சீக்கிரமே வந்து, மித்தத்தில் உக்காந்து எழுதிண்டிருந்த என்னை “வாங்கோ நாழியாரது, கார்த்தாலே மன்னார்குடி போணம்.” ஞாபகப்படுத்தி இழுத்துண்டு வந்தா. சரீன்னு ஆசையா நேறுங்கிப் போனா “கோத்ரத்தில் ஏமாத்திட்டேள்!” அப்படீன்னாலும் சகோத்திரம் இல்லை. இன்னும் நெறுங்கிப் போலாம். அப்பத்தான் சுரேர்னு மண்டைக்கு புரிஞ்சது. அப்பா இத்தனை காட்டுக் கத்தல் செஞ்சு அம்மாவ ஹிம்சிப்பதை சொல்லிக் காட்டராளாம்.

மன்னி பரம சாது. இவ மாதிரி துடுக்கா பேசமாட்டா. ஒருவேளை மின்ரூமில் அண்ணாவ மண்டகப்படி நடத்தராளோ? இவளைக் கேட்டா தெரியும். எல்லாத்தையும் இவாளுக்குள் பகிர்ந்துக்கரான்னு மட்டும் தெரியும். அன்னைக்கு “கிணத்தடீலே துணி ஊறப் போட்டு வச்சிருக்கேன், நம்ம துணியை அடிச்சு துவச்சு அலசி காயப் போட்டுட்டு வாங்கோ” அனுப்பிச்சா. மன்னிதான் அவா துணிகளை துவச்சுட்டு “கண்ணா, உங்களுக்கு நீர் இறைச்சுத் தரட்டுமா?” “வேண்டாம் மன்னி. நானே பண்ணிக்கரேன்.” “ராத்ரீயும் அத்தனை வேலை செஞ்சுட்டு இப்ப கிணத்தடீலே, கஷ்டமாயில்லையோ?”. மொதல்ல புரியலை. அப்பரமா மன்னி அப்படி கேட்டாடி அதுக்கென்ன அர்த்தம்?” இவள் தலைலே தட்டிண்டு, “மரமண்டை! ஆனாலும் மன்னி அத்தனை டெயரக்டா கேட்டிருக்கப் பிடாது”.

புதுசா ஏதாவது ட்ரை செய்யரச்சே கலந்து பேசிப்பான்னு சந்தேகம். ஒருநா கார்த்தாலே அண்ணா கோபாலன் சித்தே விந்தி விந்தி நடந்துண்டே சாப்பிட வந்தான். “அங்கே டேமேஜே ஆகிடுத்தோ!” கண் ஜாடையா கல்பனா மன்னியக் கேக்க அவள் வெக்கப் படரா மாதிரி நடிக்கன்னு போச்சு.

அப்பா கோவம் பல சமயம் ஞாயமாப் படும். வள்ளுன்னு சில சுடு சொற்களை கொட்டிடுவர். அத்தனை பெரீய ரியேக்ஷன் தேவைப்படாத உப்புச் சப்பில்லாத விஷயமா இருக்கும். எல்லாரையும் வச்சிண்டே. மாட்டுப்பொண்கள் ரெண்டு பெரும் இப்படி நடக்கரச்சே நின்னுண்டிருந்தா அம்மாக்கு கஷ்டமாயிருக்கும்னு கொயட்டா போயிடுவா. எல்லாம் முடிஞ்சு நிசப்தமானதும் அடுக்களைக்குள் வந்து அம்மாவுக்கு ரெண்டு பக்கமும் உக்காந்துண்டு ஆறுதலா கூடமாட ஒத்தாசை செய்வா. அம்மா கண்ணில் நீர் கோத்துக்கும். அப்பா திட்டினதுக்கில்லை. இவா வாத்சல்யமா நடந்துப்பதை பாத்துட்டு.

ஒருநா அப்பா வெளீலே போயிருகச்சே எங்கள மட்டும் வச்சுண்டு “எனக்கு மாட்டுப்பொண்கள் வாய்ச்சாப்போல் வாழ்க்கை அமையலை!” அம்மா. இதையும் சொன்னள். “சித்தே கோபக்காரரே தவிர குணத்தில் யாருக்கும் சோடையில்லை உங்கப்பா.” அதான் சாக்குன்னு கல்பனா “என்னண்டை இப்படி கோபமா யாராவது பேசினா பொட்டிய எடுத்துண்டு கிளம்பிடுவேன்.” சித்தே கழிச்சு மன்னி “நானும்”.

அண்ணா சொல்ரான் “இப்படி கோபம் வரது ஜீன்ஸ்லே இருக்கு. ஒண்ணும் செய்ய முடியாது, மாத்தரத்துக்கு கவுன்சலிங்க், ட்ரெயினிங்க் வேணும். இந்த வயசில் நிச்சயம் மாறப் போவதில்லை. சகிச்சுக்கணும்”. “நமக்கும் அதே ஜீன்ஸ்தானே நமக்கு கோபம் வரலை?” “சித்தே போனதும் வரும். இல்லை அம்மா ஜீன்ஸ் சாந்தப் படுத்தியிருக்கும்!.”

எங்காம் கும்மொணம். அப்பாவும் நாங்களும் இங்கேதான் வேலை. சொந்த வீடு. நிலபுலங்களும். குத்தகைக்கு விட்ருக்கம். நான் LICலே. அது விஷயமா கிளம்பி மன்னார்குடி வந்தாச்சு. வந்த இடத்தில் பாக்க வேண்டியவாளப் பாத்துட்டு திரும்பரத்துக்கு மின்னாடி ராஜாகோபாலஸ்வாமி கோவிலுக்கு போகாம எப்படி? கோவில் தொறக்க இன்னும் 3 மணி நேரம் இருக்கு. நடை தொறக்கட்டும் தரிசனம் செஞ்சுட்டு போலாம்னு. அது வரைக்கும் என்ன பண்ணலாம்ன்னு யோசிச்சுண்டே. ரெம்பப் பெரீய கோவில். அடுக்கடுக்கா போகும்.

விசாரிச்சதில் ராஜவீதியில் ஆர்யாஸில் நல்ல சாப்பாடு கிடைக்கும்னு போயாச்சு. சாப்டூட்டு வரச்சே கல்லாவுலே இருந்த பெரியவர், “ஊருக்கு பூதுசா, என்ன வேலையா வந்தீர்?” இப்பெல்லாம் அப்படி யார் விசாரிக்கரா. சொன்னேன். “அட பாலிசி எடுத்துக் கொடுப்பேளா? என்னோட ஒண்ணு ப்ரீமியம் கட்டாம 5 வருஷமா செத்துக் கிடக்கு, ஏதாவது செய்ய முடியுமா?” இவர் செத்தா காசு கிடைக்கும், பாருங்கோ பாலிசியையே கொன்னு போட்டிருக்கார். “விவரம் சொல்லுங்கோ ரிவைவ் செய்யலாம். இல்லை கட்டினதை கணக்கு தீத்துத் தர ஏற்பாடு செய்யரேன்.” ஒரு பையனக் கூப்பிட்டு ஆத்துக்கு போய் கொண்டு வர சொல்ரார். “கோவில் தொறக்க 430ஆகும் என்ன செய்யப் போரேள்?” “தெரியலை”.

“இப்படியே தெற்கா போய் செண்டைப் பேட்டை தெருவில் திரும்பினேள்னா 3ஆவது வீடு ஒரு கனபாடிகள். அவாத்து திண்ணை பெரீசா. வாசல்ல நிறைய மரம், கூலா உக்காந்துக்கலாம். அவாத்தில் பாலிஸியும் எடுத்துப்பா. அப்பரமா வந்து இங்கே காபி குடிச்சுட்டு தரிசனத்துக்கு போலாம்”. சரியா பட்டது. போயிட்டேன்

திண்ணை பெரிசுதான். ஒரு தவ்வு தவ்வி ஏறி உக்காந்துக்கரேன். வாசக் கதவு சாத்தியிருக்கு. பெல் அடிச்சு கூப்பிட்டு பாலிஸி எடுத்துப்பேளான்னு எப்படி? சாப்டூட்டு கனபாடிகளும் தூங்குவர். இடம் கிடெச்சதே பெரீய விஷயம். தூணில் சாஞ்சுக்கரேன். அப்படியே கண் அசந்துட்டேனோ!

சொப்பனத்தில் இவள். எப்பவும் பண்ராப்போல். பெட்ரூமுக்கு நான் வரத்துக்கு மின்னாடி இவள் வந்து பூந்துண்டூ யாருக்கும் தெரியாம வாங்கிக் கொடுத்த மெல்லிசு நைட்டீய மாட்டிண்டு வருவது நான்தான்னு செக் செஞ்சுட்டு கதவைத் தொறந்ததும் அப்படியே என்னை நகரமுடியாம, மூச்சு முட்ட கட்டிக்கரா. தினம் ஒரே சர்ப்ரைஸ்னாலும் பிடிக்கர விதம் விவரிக்க முடியாதபடி மாறும். எங்க பிடிச்சு கிள்ளுவான்னு சொல்ல முடியாது. கிள்ளினா கத்தப் பிடாது. கத்திட்டா நான் தோத்துட்டேனாம். அப்பரம் ராத்திரி பூரா அவ சொல்ரதை நான் செய்யணும். அதுவே ஜாலியா இருந்ததால் கிள்ளரத்துக்கு மின்னாடியே கத்திடுவேன். இன்னைக்கு கட்டிண்டதும் என்னமோ ஜன்னலை தொறந்து வச்சுட்டாப்போல் சில்லுன்னு காத்து. ஏஸியெல்லாம் வச்சுக்கலை. எங்கேந்து?

பக்கத்துலே நங்குன்னு ஏதோ பாத்திரம் வைக்கர சப்தம். கண்ணத் தொறந்து பாத்தா மன்னார்குடி கனபாடிகளாத்து திண்ணைலே இருப்பதும் பட்டுப் பாவாடை கட்டிண்டு 8 வயசு இருக்கும் ஒரு பொண் என் பக்கத்தில் கூஜாவை வச்சுட்டு என்னையே பாப்பதையும் புரிஞ்சிண்டு கண்டது கனவுன்னு சுதாரிச்சுக்கரேன். நல்லவேளை! வந்த இடத்தில் குழந்தை பயப்படும் படியா ஒண்ணும் செஞ்சுடலை.

“குடிக்க தண்ணீர் தரச் சொன்னா தாத்தா”. “தேங்க்ஸ். தாத்தா உள்ளே இருக்காளா?” ஆமாம்னு ஆட்டிட்டு சிட்டாப் பறந்துடுத்து. அவ செஞ்சாப்போல் என்னால் தாவ முடியுமான்னா நிச்சயமா முடியாது. வாசப் படியை மிதிக்க திண்ணைலேந்து இறங்கணும். செய்யாம நேர ரேழீக்குள் தவ்வி மறைஞ்சுட்டா. பேர் காவேரியாத்தான் இருக்கணும். தாகத்துக்கு கேக்காம கொண்டு வந்துட்டாளே! சித்தே கழிச்சு காவேரியோட தாத்தா வரர். 

“என் பேர் திருவேங்கடம். தாகத்துக்கு குடிச்சுக்கோங்கோ. அப்பரமா காபி தரச் சொல்ரேன். பாவம் தூங்கிண்டிருந்தேள், பேத்தி எழுப்பிட்டாளோ?” “அதெல்லாம் இல்லை. நான் வந்ததே உங்களைப் பாக்கத்தான்”. ஆர்ய பவனில் நடந்ததையும், மன்னார்குடி வந்த காரியத்தையும், கோவில் பாத்துட்டு கும்மொணம் கிளம்பிடுவேன்னும் சொல்ல, ரெம்ப சந்தோஷம். நிறைய பேர் எங்காத்து திண்ணைலேதான் சிரம பரிஹாரம் செஞ்சுப்பா. எல்லாரும் வந்துண்டும் போயிண்டும் இருக்கணும்னுதானே கட்டினது! உங்களுக்கு கல்யாணம் ஆகிடுத்தா?” ஆய்டுத்துன்னு டேட்டும் சொல்ரேன். இப்பத்தான் 2 மாசம் ஆரதுன்னு சொல்ல வெக்கம். “சீக்கிரம் தரிசனம் செஞ்சுட்டு கிளம்புங்கோ. நீடாமங்கலத்துக்கிட்டே மேம்பாலம் கட்டியாரது, லெவெல் கிராஸிங்கில் போட்டுடுவன். 6 மணி பஸ் பிடிச்சா, 8க்குள் போயிடலாம்”. சமீபத்தில் கல்யாணம் செஞ்சிண்டவா பரபரப்பை புரிஞ்சு வச்சிருக்கர்.

பாலிஸி எடுத்துப்பேளா? வாய்வரை வந்துடுத்து, கிளம்பரச்சே அடுத்த தடவை வரப்போ வருவேன் எடுத்துக்கணும்னு வாஞ்சையா சொல்லிக்கலாம், இப்ப வேண்டாம்னு. இத்தனை உபசாரம் செய்யரர், அதில் ஆதாயம் தெடிக்கப் பிடாதுன்னு பட்டது. இப்பெல்லாம் வேத சாஸ்திரங்கள் அறிஞ்ச கனபாடிகளை பாக்கரதே அபூர்வம். நாம ஏன் இந்த கோத்திரம் மேட்டரை இவரண்டை கேக்கப் பிடாது? 

“உங்க கிட்டே சில விஷயங்களை கேட்டு புரிஞ்சிக்கலாம்னு, டயம் இருக்கோன்னோ?” “பேஷா இருக்கு கேளுங்கோ தெரிஞ்சதை சொல்லித் தரேன்”.

“நாங்க நைத்ருப காஸியப கோத்ரம். கோத்திரத்துக்கும் நம்ப குணாதசியங்களுக்கும் தொடர்பு இருக்கா?” “ஏன் கேக்கரேள்?” எங்கப்பா பட படன்னு கோவிச்சுப்பதை சொல்லி, “என் ஆத்துக்காரி அவர் விஸ்வாமித்ர கோத்ரம்னு சொன்னா, அதான் அடிப்படை என்னன்னு புரிஞ்சுக்க ஆசை.”

“புரிஞ்சிக்கலாம், மாத்திக்க முடியாது தெரியுமோ?” சிரிக்கரர். “இல்லை, மாத்த மாட்டேன். சொல்லுங்கோ”. அதுக்குள்ளே இவர் மின்னமே சொல்லி வச்ச ஃபில்டர் காபி மணக்க மணக்க வந்தது. (நாளை நிறைவடையும்)

No comments:

Post a Comment