Sunday, June 28, 2020

சந்தியாவந்தனம் செய்ததால்.... வேலை வேண்டுமா, மோட்சம் வேண்டுமா:

😷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😷
ஒழுங்கா சந்தியாவந்தனம் செய்ததால்....
வேலை வேண்டுமா, மோட்சம் வேண்டுமா:

நான் காவிரிக்கரை கிராமத்தில் வளர்ந்த பையன்.  ஸ்னானம் செய்தவுடன் மாமாக்கள் சந்த்யாவந்தனம் செய்வார்கள். பசங்கள் எல்லாம் குதித்து, கொட்டமடித்துவிட்டு, சந்தி பண்ண டைம் இல்லை என்று கம்பி நீட்டப் பார்ப்பார்கள். மாமாக்கள் விடுவார்களா? முறைச்சுப் பார்ப்பார்கள். வசைமழை பொழிவார்கள்.  உங்களுக்கெல்லாம் மோக்ஷம் கிடையாதுடா. நரகம்தான் என்று சபிப்பார்கள்.  இதுக்கெல்லாம் பயந்துண்டு பசங்கள் சந்தி பண்ற மாதிரி பாவ்லா பண்ணிட்டு, நடைகாயத்திரியாகப் பண்றோம் மாமான்னு சொல்லிட்டு டிமிக்கி கொடுத்துட்டு ஓடிவிடுவார்கள்.

சந்தியாவந்தனம் பற்றி நினைக்கும்போது எனக்கு என் நண்பன் வாழ்க்கையில் நடந்தது ஞாபகம் வருகிறது. நானே வகுப்பில் சுமார்தான். அவனோ என்னைவிட சுமார். வயதிலே என்னைவிட நாலுவருஷம் சீனியர். இருப்பினும் என்மீது உள்ள அன்பின் காரணமாக தங்கித் தங்கி நிதானமாகப் படித்து என் க்ளாஸ்மேட் ஆனான். ரெண்டு பேரும் 1950ல் SSLC (11th std) பாஸ் பண்ணினோம். அப்போது எனக்கு வயது பதிநாலரை, அவனுக்குப் பதினெட்டரை. நான் ஜோசப் காலேஜில் சேர்ந்தேன். அவனுக்குப் படிப்பில் நாட்டம் இல்லை. மாதம் ரெண்டு ரூபாய் ஃபீஸ் கட்டி, டைப்ரைட்டிங் க்ளாஸ் செர்ந்தான். வேலைக்கும் ட்ரை பண்ண ஆரம்பிச்சுட்டான்.

ரயில்வே வேலைக்கு இண்டர்வியூ கார்ட் வந்தது. அப்போது ரெயில்வே சர்வீஸ் கமிஷன் பம்பாயில் இருந்தது. என் நண்பனுக்குக் கட்டுமஸ்தான உடல்வாகு. யாழ்ப்பாணம் தேங்காய் சைசில் கட்டுக்குடுமி. தேன்கூடு கட்டியது மாதிரி முரட்டு தாடியுள்ள முகம். நெற்றியில் ஸ்ரீரங்கம் யானைக்குப் போட்டமாதிரி பட்டநாமம். அழுக்கு சேர்ந்த வாட்டர்ப்ரூஃப், ஃப்யர் ப்ரூஃப், சர்வப்ரூஃப் திக் காக்கி சட்டை. காவிரி புது வெள்ள ஜலத்தில் நனைந்து நனைந்து தீராத பழுப்பு கலர் பெற்ற ஜரிகை வேஷ்டி. காலில் செருப்பு கிடையாது.

இந்தக் கோலத்தில் இண்டர்வியூ போர்டுக்கு திருச்சி ஜங்ஷனில் உள்ள European and Anglo Indian Instituteல் திவ்ய தரிசனம் கொடுத்தான். பாக்கி பேர் எல்லாம் பாண்ட், பூட்ஸ், டை. ஆனால் நம்பாள் வழி தனி வழி.  இண்டர்வியூ போர்டில் ஒரு அதிகாரி வங்காளத்தை சேர்ந்தவர். சமஸ்கிருதம் படித்தவர் போலும். நம்ம ஹீரோவுடைய திவ்ய சொரூபத்தை பார்த்துட்டு கேட்டார் - "டு யூ நோ ஸான்ஸ்க்ரிட்?". அரை மனதுடன் அம்பி லைட்டா மண்டைய ஆட்டினான். நெக்ஸ்ட் கேள்வி: "Tell some sloka in Sanskrit and give the meaning". " பெருமாளே என்னை காப்பாத்து" என்று 
புத்திகொடுக்கும் குணசீலப்பெருமாளை மனப்பூர்வமாக வேண்டினான். பளிச்சுனு சந்தியாவந்தன மந்திரம் ஞாபகம் வந்தது. அதுதான் மனப்பாடமாச்சே. கம்பீரமாக, ஸ்பஸ்ஷ்ட்டமாக அம்பி எடுத்துவிட்டான். அவனுக்குத்தான் நல்ல குரள்வளம் உண்டே.

"ஆகாஸாத் பதிதம் தோயம்
யதா கச்சதி ஸாகரம்
சர்வ தேவ நமஸ்கார:
ஸ்ரீகேசவம் ப்ரதி கச்சதி"

ஆகாயத்திலிருந்து விழுகின்ற மழைத் துளிகள் எப்படி சமுத்திரத்தைச் சென்று அடைகிறதோ அது போலவே எல்லா கடவுள்களுக்கும் நான் செய்யும் நமஸ்காரம் கேசவனைச் சென்று அடைகிறது."

இதை பாவத்துடனும் ஆக்‌ஷனுடனும் சொன்னான்.  ப்ரமித்துப்போன பெங்காலி அதிகாரி "யூ ஆர் அப்பாயிண்டெட்" என்று சொல்லாமல் சொல்லிவிட்டார். 

குறிப்பு: சந்தியாவந்தனம் மோக்ஷம் கொடுக்குமா கொடுக்காதா? எனக்குத் தெரியாது. ஆனால் வேலை குடுக்கும் என்று தோண்றது.
😷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😷

No comments:

Post a Comment