Wednesday, June 24, 2020

குண்டு மல்லி

குண்டு மல்லி (மனதை தொட்டுவிடும் கதை – 72)
#ganeshamarakalam

வாடகைக்கு குடியிருக்கிரவா எல்லோரும் ஆசைப்படுவா. சொந்தமா ஒரு வீட்டை, சின்னதானாலும் சரி, கட்டிண்டு அதில் போரத்துக்கு. ஞாயமான ஆசை, ஆனால் சுத்தி தோட்டம், பூச்சடி வைக்கணும், தென்னைமரம் நடணும், மாங்காய் பரிச்சு சாபிடணும்னு அடுக்குவா. மாங்காய் மட்டும் டைரெக்டா பறிச்சுச்சாப்பிடரது சொப்பனத்தில் வரும். மாங்கன்னு நட்டு தண்ணி ஊத்தரதெல்லாம் வராது.

நாங்களும் அப்படித்தான். டில்லியில் கரோல்பாக் பிரசாத் நகரில் குடுத்தனம் வச்சப்போ ரெண்டு ரூம் செட். மேலே வாடகை கொடுக்க முடியலை. ஒரு பால்கனீன்னு பேச்சுக்கு இருக்கும். அதில் செடி வச்சா மேல் ஃப்ளாட்டில் பிந்தூ அஹூஜா தலைவாரிட்டு சீப்புல கழண்டு வந்த முடியை ஆட்காட்டி விரலில் லாகவமா சுத்தி மோதிரம் பண்ணி சுண்டிவிடாள்னா நேர என் செடியில் அன்னைக்கு பூத்த பூவில் வந்து உக்காரும்.

ஒருதடவை என் ஆத்துக்காரி சொல்லியும் கேக்காம அதை ஒரு பென்சில் நுணிலே எடுத்துண்டு போய் அவாத்து கதவை தட்டினேன். நைட்டீன்னு ஒரு கர்மத்தை டைட்டா மாட்டிண்டு மறைக்க வேண்டியதெல்லாம் பிதுங்கரதை கண்டுக்காம வந்து கதவை தொரந்தா. “ஆப்கி கீம்தி சாமான் நீசே ஆகயா, சம்மல்கே ரக்னா”ன்னு பென்சிலை நீட்டினேன். நீட்டின பென்சிலை அதிர்ச்சியோட அவ பாக்க, அவளையே நான் ஆச்சர்யமா பாத்துட்டு பென்சிலை கையில் கொடுத்துட்டு வந்துட்டேன். அப்புரம் போடலை. 1 வாரம் கழிச்சு வெளீல பாத்தபோது தலை வாரிக்கரதையே விட்டுட்டா மாதிரி இருந்தாள்.

அப்போலேந்தே எனக்கு சொந்த வீடு கட்டணும்னு. ஆத்துக்காரி சேமிக்க ஆரம்பிச்சா. அப்பாவும் நான் கொஞ்சம் தரேன்னர். பாண்டிச்சேரியில் 3 சென்ட் நிலம் கிடெச்சுது. ஜிப்மெர்க்கு எதுக்கே ராதாகிருஷ்ணன் நகர்னு ப்ளாட் போட்டு வித்தன். 2 வருஷம் கழிச்சு ஆர்கிடெக்ட் டிஜைன் போட, HDFC லோன் கொடுத்தான். மஹானுபாவன். வீடு கட்டி குடியும் போயாச்சு. யாரும் காமன் வெராண்டான்னு செருப்பை விடமாட்டா. மொட்டை மாடி எனக்கும் சொந்தம்னு காலை பரப்பிண்டு 10 மணி வரைக்கும் தூங்கமாட்டா. குறிப்பா பந்து பந்தா முடி சேராது.

கிரகப்பிரவேசம் ஆனதுமே அப்பா வீட்டை சுத்தி 4 தென்னங்கன்னு வச்சுட்டர். அப்புரம் அங்கே இங்கேன்னு அலைஞ்சு எங்களுக்கு பிடிச்சா மாதிரி பூச்செடி கொண்டுவந்து வைப்பர். அவரே சனி ஞாயிறில் வந்து உரம் வச்சு தண்ணி எப்படி பாய்ச்சணும்னு தன் மாட்டுபொண்கிட்டே சொல்லிட்டு போவர். கடைசீல தாகத்துக்கு ஒரு டம்ளர் நீர்க்க ஆத்தி மோர் கொடுன்னு வாங்கி குடிச்சுட்டு போவர்.

அவர் இருந்தது சேதாரப்பேட்டை தாண்டி மயிலம் போர வழியில் 6 கிமீ தள்ளி. ஒரு தோட்டத்தை குத்தகை எடுத்து பாத்திண்டிருந்தர். எங்காத்தில் நான்தான் முதல் பட்டதாரி. அதில் அவருக்கு ரொம்ப கர்வம். அவர் அப்பா ரொம்பவே கஷ்டப்பட்டு இவரையும் இவர்கூட பிறந்த 2 பெண்களையும் வளர்த்தாராம். அவர் போனப்புரம் தங்கிப்போயிட்ட ரெண்டு தங்கைகளுக்கும் இவர்தான் சிரமப்பட்டு கல்யாணம் செஞ்சர். வேணும்கிர வரதக்ஷிணை கொடுக்கலைன்னும் அப்புரம் ஒண்ணுமே சீர் செய்யலைன்னு ரெண்டு பேரும் அண்ணாவை பாக்கவே வரலை. எங்கேயோ வடநாட்டில் ஜாகைன்னு சொல்லியிருக்கர். அவா கல்யாணமே என் அம்மா கொண்டுவந்ததை கரைச்சு பன்ணினது. “போங்கோடி”ன்னு இவரும் ஒதுக்கி வச்சுட்டர். ஆனா என் மேலையும் என் அக்கா மேலையும் அவ்வளவு பாசம். லோன் கிடைச்சாலும் முதலில் காலி மனை வாங்கவும், கட்ரப்போ பத்தாததுக்கும் உதவினார். 

இதெல்லாம் பிள்ளைக்கு செய்யரதுதானேன்னு ஊதித்தள்ளிட்டா என் ஆத்துக்காரி. அவளுக்கு நாங்க இருந்த நிலமையும், மண்புழு தலையை தூக்கரா மாதிரி மெல்ல மேலே வந்ததையும் இப்போவும் தனக்குன்னு வச்சிருந்ததையும் எனக்கு தந்தார்னா? இவளுக்கு புரியவா போரது?. அதுக்காக இவள் கொடுமைக்கார மாட்டுபொண்ணுன்னு நினைக்கப்பிடாது. இளநீர் பறிச்சாலோ தேங்காய் இறக்கினாலோ அப்பாவாத்துக்கு கொண்டுபோய் கொடுத்துட்டு வாங்கோன்னு அனுப்புவா. இவ மனசிலேயும் ஈரம் ஊத்தெடுக்கும், அப்பப்போ.

ஆத்தில் என்னென்ன இருக்குன்னு உங்களுக்கு கேக்கத்தோணும். தோணணும். அப்போதான் கதையை கவனமா படிக்கரேள்னு சொல்லுவேன்.

வாசல்ல சிவப்பு, மஞ்சள், பிங்க் அரளி, இடுப்புயரத்துக்கு அழகா பூக்கும், சாமிக்கு வைப்பள். அதைத்தவிர நிறைய முல்லை செடிகள். சில குரோட்டன்ஸ். ரெண்டு பக்கமும் தேக்கு மரக்கன்னு வச்சு அது இப்போ ஒரு 30அடி பொயிருக்கு. இலை விழுந்து அள்ளி மாளலை. தென்னை காய்க்கிரது. ஒரு மாமரம். இப்போது இலை மட்டும்தான். அப்புரம் பின்னாடி ஒரு வில்வமும், கருகப்பிலை ரெண்டு கத்திரிக்காய் வெண்டைக்காய் பாத்தி கட்டி. மாடிப்படி கிட்டே அப்பா முதல்ல வச்ச குண்டு மல்லியும் கொடியா படர்ந்து. 3 சென்டில் இவ்வளவா? வீட்டை எங்கே கட்டினேன்னு தோண்ரதா? எங்கப்பா சாமர்த்தியம். ஆர்கிடெக்டை கூப்பிட்டு என் பையனுக்கு என்ன வேணும்னு தெரியும் நான் சொல்ராப்புலே பண்ணு அப்புரம் என் மாட்டுப்பொண்கிட்டே அப்ரூவல் வாங்கிட்டு முனிசிபலிடிக்கு கொடுன்னு சொன்னர்.

வேடிக்கை என்னன்னா, 10 தேங்காயும் 500கிராம் வெண்டைக்காயும் இவள் அவருக்கு அனுப்பிச்சா, அவர் 1 டஜன் நார்தங்காயும் அரைக்கூடை எலுமிச்சம்பழமும் பர்த்திக்கு அனுப்புவர். இப்படி 5 வருஷம் ஓடித்து. எங்களுக்கு ரெண்டும் பொண்கள். அம்மா சொல்லுவா, “பாருடா இப்படி பெத்துப்போடுவான்னுதான் அப்பா நிறைய முல்லையும் மல்லியுமா வச்சா”ன்னு. இவள் அதை கேட்டு மோவாயில் தோளை இடிச்சிண்டு போவள். இதே இடி தென்னை மரத்தில் விழுந்தால் 4 தேங்காய் விழும். மரம் ஏர்ற கூலி மிச்சம்னு தோணும். “எனக்கு பெண் பிறந்ததுக்கு அவளை குத்தம் சொல்லாதே, அதுக்கு நான்தான் காரணம்”னு அம்மாவுக்கு விளக்கினேன். “போடா உன் சயின்ஸும் சப்பைகட்டும், அவதான் காரணம்”னுட்டு போனா. ஆனா குத்தம் சொல்ரதை குறைச்சிண்டா.

இந்த வருஷம் மாமரம் பூத்துக்குலுங்கித்து வடு காமிக்க ஆரம்பிச்சதும் அப்பா வந்து அது வடு மரமா, காயா இல்லை பழமான்னு பாத்துட்டு, பழ மரம்தான், இனிக்கும், அவசரப்படகூடாதுன்னு, பறிக்க தோதா தொரட்டியும் அது நுணீலே பையும் கட்டிக்கொடுத்தர். மொட்டை மாடீலேந்து குழந்தைகளே 50 பழம் சடசடன்னு பறிச்சுப் போட்டுடுத்துகள். அப்புரம் என்ன பாதி அப்பா அம்மாவுக்கு, மீதி நமக்குன்னு தீர்மானம் எடுத்து. நிறைவேத்தினோம். ஆனால் மாமரம் காய்ச்ச அதே வருஷம் அம்மா போய் செர்ந்தாள். மயக்கம் வரதுன்னாளாம். ஆஸ்பத்ரிக்கு போலாம்கிரத்துக்குள்ள உயிர் போயிடுத்து.

அதுக்கப்புரம் அப்பாவுக்கு அங்கே இருக்கப்பிடிக்கலை. குத்தகையை திருப்பிக்கொடுத்துட்டு காசிக்கு போரேன்னு கிளம்பினர். வர 3 மாசம் ஆகும், எல்லாத்தையும் சுத்திப்பாத்துட்டு வரேன்னர்,

எனெக்கென்னவோ தன் தங்கைகளைத் தேடித்தான், அவாளை ஒருதடவையாவது பாத்துடணும்னு வடக்கே காசி ஒரு சப்பைகட்டுன்னு பட்டது. தடுக்கலை. செலவுக்கு பணத்தை கொடுத்து ஒரு க்ரெடிட் கார்டும் கொடுத்தனுப்பிச்சேன்.

திரும்பி வந்தா உடல் மெலிந்து கண்ணுக்கடீலே கருவட்டம். மனசு சோர்ந்து. என்னன்னு கேட்டதுக்கு ஒண்ணுமில்லைன்னு மழுப்பிட்டர். தானே சொல்லட்டும்னு குடயலை. எங்களோட சில நாள் இருந்து உடம்பை பாத்துக்கோங்கோன்னு இவளே சொல்ல சரின்னர். சாமர்த்தியமா சிலநாள்னு சொன்னா. இனிமேல் எங்களோடயே இருந்துண்டு பேரக்குழந்தைகளோட சொச்ச காலத்தை கழிக்கணும்னு அவர் காசிக்கு கிளம்பரச்சேயே தீர்மானம் செஞ்சு வச்சிருந்தேன். இவளை கன்வின்ஸ் செய்யணும். போகப்போக இவளும் ஒண்ணும் குதர்க்கமா நடந்துக்க மாட்டான்னு நம்பினேன்.

அப்பா அவள் வாய் தவறி சொன்ன அந்த சில நாட்களே உயிரோட இருந்தர். என்னவோ தெரியலை 3 மாசத்தில் உடம்பு மோசமாச்சு. ஆஸ்பதிரியில் சேர்த்து வைத்தியம். அதெல்லாம் பிர்ச்சனை இல்லை. அவரோட கூட ஒருத்தர் இருந்தே ஆகணுமாம். ஒரு மாசம் லீவு போட்டுட்டு இருந்தேன். இதைவிட என்ன நெட்டி முறிக்கர வேலை? இவள் ஆஸ்பத்திரிக்கும் ஆத்துக்குமா. அவர் சாகரத்துக்கு ரெண்டு நாள் முன்னாடி என்னை கிட்டெக்க அழைச்சு சொன்னார். தில்லியில் கடைசீ தங்கையை கண்டுபிடிச்சு அவாத்துக்கு போனாராம். “அடையாளமே தெரியலைடா, அப்படி மாறிட்டா. “உள்ளே வாங்கோ”ன்னு மாப்பிள்ளை கூப்பிட்டான், இவளோ “உன் மூஞ்சியை பாத்து பேசரத்துக்கே பிடிக்கலை”ன்னுட்டு உள்ளே போயிட்டா. ஏன்னு தெரியலை. நான் கொஞ்சநாழி ஸ்தம்பித்து போய் நின்னுண்டிருந்துட்டு கிளம்பி வந்துட்டேன். பெரியவளை தேடவேயில்லை, அங்கேந்து காசிக்கு போய் கூடப்பிறந்தவா எல்லோரையும் முழுக்குப்போட்டுட்டு இப்படியே இருக்கப்பிடாது, நீ வருத்தப்படுவாய்னு வந்துட்டேன்கிரார். என்னதான் கங்கையில் முழுகிட்டாலும் அவள் சொன்னது இப்போவும் வலிக்கரதுடா”. அடுத்தநாள் போயிட்டர்.

வருஷங்கள்தான் என்னமா ஓட்ரது! ஓரு பொண் MBBS முடிச்சுட்டு பிராக்டீஸ் பண்ரா. அனெஸ்தலாஜிஸ்ட். அவள் பேசர பேச்சைக்கேட்டே மயங்கி விழுந்த ஒருத்தனையே கல்யாணம் செஞ்சு வச்சோம். அப்புரம் சின்னவள் விஸ்காம் படிச்சுட்டு விஜய் டீவீயில் வேலை. தொகுப்பாளிணி. இன்னும் என்னென்னமோ!. அவளையும் ஒரு நல்ல இடமா கொடுத்தாச்சு. மாமரம் ரெண்டு வருஷத்து ஒருதடவைதான் காய்க்கரது. 4இல் 1 தென்னை பட்டுப்போச்சு. தேக்கு வானுயர்ந்து நிக்கரது. 

இவ “பொண்ணு மாப்பிள்ளையெல்லாரும் செர்ந்து வந்தா படுத்துக்கரத்துக்கு ரூம் வேண்டியிருக்கு, கீழே எக்ஸ்டெண்ட் செஞ்சு மாடி கட்டினா நன்னா இருக்கும், நாமும் தாராளமா புழங்கலாம்”னா. “சரி”ன்னு பட்டது. எஸ்டிமேட் போட்டு பாத்தா முடியும்னு தோணித்து. அப்பா இருந்தால் தங்கிட்டே என்ன இருந்தாலும் அதை தயங்காம கொடுத்திருப்பார். அம்மா கையில் காதில் கழுத்தில் எது இருந்தாலும் தந்திருப்பா. நாத்தனாருக்கே கொடுத்தவளாச்சே! 

இப்போவும் அவா கொடுப்பான்னு எதிர்பார்த்து இல்லாதவாளை இப்படி ஞாபகப்படுத்திக்கரோமேன்னு வெக்கமாவும் இருந்தது. தப்புத்தான்.

ஆர்கிடெக்ட் வந்தான். அளவெடுத்தான். படம் போட்டான். எங்களை கூப்பிட்டு இப்படி மாத்தினா உங்களுக்கு 3 எக்ஸ்ட்ரா ரூம் கிடைக்கும் மாடீலே 2, கீழே 1, பெரீய பால்கனியும்னுட்டு முகப்பு எலவேஷன் படம் போட்டுண்டு வரேன்னான். அவன் எப்போ வருவான், எப்போ வேலை ஆரம்பிக்கலாம்னு தான் செய்யப்போறதை என் ஆத்துக்காரி எல்லோருக்கும் டமாரம் அடிக்காத குறையா சொல்லிட்டா.

ஆர்கிடெக்ட் காமிச்சது கண் பட்டுடும்போல. ஆனா என் மனசில் உறுத்திண்டீருந்ததை கேட்டேன். இதை பண்ணணும்னா எந்தெந்த மரத்தையெல்லாம் வெட்டணும்னு. அவன் சொன்னான் தென்னை, மா போயிடும். முன்னாடி இருக்கிர பூச்சடிகள்லாம் போயீடும், தேக்கு அப்படியே விட்டுடலாம். இப்போ புதுசு புதுசா பூச்செடிகள் நர்ஸரிலே, மாடிலே தொட்டியில் வச்சுத்தரேன், டெர்ரேஸ் கார்டன் பொடுங்கோ, காய்கறிகளும் வரும்னான். சரி பிளானை வச்சுட்டு போங்கோ, நாங்க பசங்களுக்கும் காமிச்சுடரேன்னு வாங்கி வச்சிண்டேன்.

ராத்திரி தூக்கம் இல்லை. இவள் “என்ன பலமா யோசனை”னா. நாங்க முதலில் தில்லியில் பிளாட்டில் இருந்ததையும் இன்னொரு பொண்ணின் தலைமயிர் எங்களை கிசுகிசு மூட்டினதையும், அப்புரம் இந்த மாதிரி தனி வீடு வேணும்னு எதுக்காக கட்டிண்டு வந்தோம்னும் ஞாபகப்படுத்தினேன். உம் கொட்டிண்டே அவ தூங்கிட்டா. எனக்குத்தான் தூக்கமே வரலை.

திங்கட்கிழமை காத்தாலே குளிச்சிட்டு துவட்டிண்ட துண்டை மாடீலே காயப்போட போரச்சே கீழே கிழக்கு மூலையில் அப்பா வச்ச குண்டு மல்லிக்கொடி நெடிய வளர்ந்து அதை அவர் இழுத்து கட்டிய 12 அடி உயரத்தில் பெரீய குடைமாதிரி பச்சப்பசேல்னு இலை விட்டுண்டு வெண்பச்சையா ஆயிரம் மொக்குகளோட, “ரெண்டுநாள் டயம் தாங்கோ நான் எப்படி பூத்துகுலுங்கரேன் பாருங்கோ”ன்னு என்னை பாத்து கெஞ்சராப்புலே. இவளை கூப்பிட்டு காண்பிக்கணும். புதன்கிழமை இவளை வந்து பாருன்னு டைடானிக்கில் செய்யராமாதிரி இவ கண்ணை பொத்திண்டு கைப்பிடிச்சுவர்கிட்டே அழைச்சிண்டு வந்தேன். “என்ன தள்ளிவிடப் போரேளா”ன்னு அவளுக்கு ஹாஸ்யம். “இல்லைடீ இப்போ கண்ணைத்தொரந்து பாரு.”

வெள்ளை வெளேர்னு கொத்து கொத்தா குண்டு மல்லி ஒரு ஆயிரம் பூ இருக்கும் அவளை பாத்து சிரிச்சது. கண்கள் விரிந்து வாய மூடாம பாத்தா. சித்தெ கழிச்சு, “உங்க அப்பா வச்சது, ஒவ்வொரு பூவிலேயும் அவர் சிரிக்கரா மாதிரி இருக்கு”. ஒவ்வொரு பூவும் ஒரு டம்ளர் மோர் கொடுன்னு கேக்கரது”ங்கிரா. கண்ணில் ஜலம், நான் பாக்காத போது தொடச்சுவிட்டுக்கரா.

கீழே போய் ஆர்கிடெக்ட்டை போனில் கூப்பிட்டு, வீடு மாடிஃபிகேஷன் பண்ணப்போரதில்லைன்னுட்டா.

No comments:

Post a Comment