ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்
ஸ்ரீ ரெங்கநாயகித் தாயார் ஸமேத ஸ்ரீரெங்கநாதஸ்வாமி கோவில், ஸ்ரீரங்கம், முதன்மை திவ்யதேசம், திருச்சிராப்பள்ளி மாவட்டம்.
இத்தலத்தில் மிகப்பிரம்மாண்டமாக அமைந்துள்ள திருக்கோவிலே ஸ்ரீ ரங்கநாதசுவாமி திருக்கோவிலாகும். 108 வைணவ திவ்ய தேசங்களில் முதன்மையானதாக கருதப்படும் இத்தலம் "பூலோக வைகுண்டம்" என்று அழைக்கப்படுகிறது. லட்சுமி தேவி தினமும் வந்து பூஜிக்கும் ஸ்தலமாகும். மதுரகவி ஆழ்வாரை தவிர மற்ற 11 ஆழ்வார்களால் 247 பாசுரங்களால் ஸ்ரீ அரங்கனை போற்றி மங்களாசாசனம் செய்த ஸ்தலமாகும். கவிசக்கரவர்த்தி கம்பர், கம்பர் இராமாயனத்தை இத்தலத்தில் தான் அரங்கேற்றினார் (தாயார் சன்னதிக்கு அருகில்). காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளால் சூழப்பட்ட தீவில், கோயிலின் ஏழு சுற்று மதில்களுக்குள் அமைந்துள்ளதுமான திருவரங்கம் (ஸ்ரீரங்கம்) என்னும் ஊர், 600 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு தீவு நகரம் ஆகும். இச்சுற்று மதில்களில் வாயில்களாக 21 கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் மிகப் பெரிதான இராஜகோபுரம், 72 மீட்டர் (236 அடி) உயரத்துடன், தென்னிந்தியாவிலேயே பெரிய கோபுரமாக விளங்குகின்றது. இது 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாயினும், 1987 ஆம் ஆண்டு முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டது. சோழ நாட்டு காவிரி ஆற்று கரையில் அமைந்துள்ள முதல் தலம்.
தல வரலாறு
திருவரங்கம் கோயில் சிலை பிரம்மாவின் தவத்தால் திருப்பாற்கடலிருந்து வெளிப்பட்டு தோன்றியதாகும் (இதை சுயம்பு என்று கூறுவர்). பிரம்மா நித்திய பூசை செய்ய சூரியனை நியமித்தார். பிறகு சூரிய குலத்தில் பிறந்த அரசன் இட்சுவாகு இந்த சிலையை தனது தலைநகரமாகிய அயோத்திக்கு வழிபடக் கொண்டு சென்றான். இராமர் அச்சிலையை இலங்கையிலிருந்து தனது பட்டாபிஷேகத்துக்கு வந்த விபீஷணனுக்கு பரிசாகக் கொடுத்தார். இதனை விபீஷணன் தனது தலையின் மீது சுமந்து இலங்கைக்கு எடுத்துச் செல்கையில் வழியில் காவிரியாற்றின் கரையை அடைந்தான். அங்கு சிலையை கீழே இறக்கி வைக்க கூடாது என்று என்னினான். அப்போது ஒரு சிறுவன் அங்கு ஆட்டு மந்தையை மேய்த்து கொண்டிருந்தான், அச்சிறுவனிடம் அச்சிலையை கொடுத்து விட்டு கீழே வைக்க கூடாது என்று சொல்லி விட்டு இளைப்பாறினான். அச்சமயம் சிறுவன் சிலையை கீழே வைத்து விட்டான், பின்னர் விபீஷணன் அவன் மீண்டும் புறப்பட வந்தான், சிறுவன் சிலையை கீழே வைத்ததை கண்டு, சிறுவன் என்ன காரியம் செய்தாய் என்று கூறி சிலையை எடுத்தான். எடுக்க முடியவில்லை. எவ்வளவோ முயன்று பார்த்தான். கலங்கினான். பின் சிறுவனாக வந்தது விநாயக பெருமான் சிலையை கீழே வைத்தது நான் தான் என்று கூறி மறைந்தார். அவ்விநாயகற்கு காவிரி ஆற்றின் மற்றொரு கரையில் கோவில் உள்ளது, அதுவே மலை மீது இருக்கும் மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயில் ஆகும், திருவரங்கம் கோவிலுக்கு எதிரில் அமைந்துள்ளது. பின் வைகுண்ட பெருமாள் அரங்கநாதராக காட்சியளித்து காவிரிக்கரையிலேயே தங்கி இருக்க விருப்பம் என்று தெரிவித்தார். அங்கு சோழ நாட்டை ஆண்டுவந்த தர்மவர்ம சோழன் ஆறுதல் கூறினார். விபீஷணனுக்காக, தான் "தென்திசை இலங்கை நோக்கி" பள்ளிகொண்டருள்வதாக உறுதியளித்தார். பின்னர் தர்மவர்ம சோழன் அச்சிலையைச் சுற்றி கோயில் எழுப்பி வழிபாடு செய்தார். பின் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கோவில் மணலால் மூடப்பட்டது. பின் வந்த சோழ மன்னர் ஒருவர் மணலால் மூடிய கோவிலை ஒரு கிளியின் உதவியுடன் கோவிலை கண்டுபிடித்ததால் கிளி சோழன் என்று அழைக்கப் பெற்றார், அக்கோவிலை புரணமைத்து, பின்பு அரங்கநாதருக்கு பிரம்மாண்டமான பெரிய கோவிலை காட்டினார் கிளி சோழன். அக்கோயிலே தற்போதைய வழிபடும் அரங்கநாதர் கோவிலாக உள்ளது.
குடதிசைமுடியைவைத்துக் குணதிசைபாதம் நீட்டி
வட திசைபின்பு காட்டித் தென்திசையிலங்கை நோக்கி
கடல்நிறக் கடவுளெந்தை அரவணைத்துயிலிமாகண்டு
உடலொனக்குருகுமாலோ என்செய்கேனுலகத்தீரே.
ஸ்ரீ தொண்டரடிப் பொடி ஆழ்வார் முதலாயிரம் திருமாலை 19 வது பாட்டு.
பஞ்சரங்க தலங்கள்
கோவில் அமைவிடம்
ஸ்ரீரங்கநாதஸ்வாமி திருக்கோவில் ஸ்ரீரங்கப்பட்டணம்
ஸ்ரீரங்கநாதஸ்வாமி திருக்கோவில் திருவரங்கம்
ஸ்ரீ சாரங்கபாணி திருக்கோவில் கும்பகோணம்
ஸ்ரீ அப்பால ரெங்கநாதர் கோயில் திருப்பேர் நகர் என்ற கோவிலடி (தஞ்சாவூர்)
ஸ்ரீ பரிமள ரங்கநாதபெருமாள் திருக்கோவில் மயிலாடுதுறை திருச்சுற்றுகள்
இதன் ஏழு மதில் சுற்றுக்களையும் ஏழு உலகங்கள் என்று கூறுவர்.
மதில் சுற்றுகள் ஏழு உலகங்கள்
மாடங்கள் சூழ்ந்துள்ள திருச்சுற்று -பூலோகம்,
திரிவிக்ரம சோழன் திருச்சுற்று -புவர்லோகம்,
அகலங்கனென்னும் கிளிச்சோழன் திருச்சுற்று-ஸுவர்லோகம்,
திருமங்கை மன்னன் திருச்சுற்று -மஹர்லோகம்,
குலசேகரன் திருச்சுற்று -ஜநோலோகம்,
ராஜமகேந்திர சோழன் திருச்சுற்று -தபோலோகம்,
தர்ம வர்ம சோழன் திருச்சுற்று-ஸத்யலோகம்.
நவ தீர்த்தம்
சந்திர புஷ்கரணி
வில்வ தீர்த்தம்
சம்பு தீர்த்தம்
பகுள தீர்த்தம்
பலாச தீர்த்தம்
அசுவ தீர்த்தம்
ஆம்ர தீர்த்தம்
கதம்ப தீர்த்தம்
புன்னாக தீர்த்தம்
தெற்கு ராஜகோபுரம்
ஸ்ரீரங்கத்திலுள்ள ரங்கநாதசுவாமி கோயில் இராஜகோபுரம்.
கோயில் தென்புறத்தில் 400 ஆண்டுகளுக்கு முன், நாயக்க மன்னர்களால் ஆரம்பிக்கப்பட்டு, முற்றுப்பெறாத தெற்கு ராஜகோபுரம், அகோபில மடத்தின் 44 வது ஜீயர் அழகிய சிங்கரின் முயற்சியால் கட்டுமான பணிகள் 1979ல் தொடங்கி 8 ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்று 13 நிலைகளுடனும், 13 கலசங்களுடன் 236 அடி உயரத்தில் 1987 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.
ராஜகோபுரம் கட்டுமானம் கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள்:
1.7 கோடி செங்கற்கள்
20,000 டன் மணல்
1,000 டன் கருங்கல்
12 ஆயிரம் டன் சிமெண்ட்
130 டன் இரும்பு கம்பிகள்
8,000 டன் வர்ண பூச்சு
ராஜகோபுரத்தின் மொத்த எடை ஒரு இலட்சத்து 28 ஆயிரம் டன்கள்
சங்கம் மறுவிய காலத்தில், மதுரகவி ஆழ்வார் நீங்கலாக அனைத்து ஆழ்வார்களும் (கிபி 5ம் நூற்றாண்டிலிருந்து 9ம் நூற்றாண்டு வரை) திருவரங்கத்தானை பற்றி பாடியுள்ளனர். நாலாயிய திவ்விய பிரபந்தத்தில், 247 பாசுரங்கள் திருவரங்கத்தான் மேல்தான்.
திருமங்கை ஆழ்வார் 73
தொண்டரடிப்பொடி ஆழ்வார் 55
பெரியாழ்வார் 35
குலசேகராழ்வார் 31
திருமழிசையாழ்வார் 14
நம்மாழ்வார் 12
திருப்பாணாழ்வார் 10
ஆண்டாள் 10
பூதத்தாழ்வார் 4
பேயாழ்வார் 2
பொய்கையாழ்வார் 1
விழாக்கள்
வைகுண்ட ஏகாதேசி
மார்கழி மாதத்தின் வளர்பிறை ஏகாதேசியானது 'வைகுண்ட ஏகாதேசி' என்று அழைக்கப்படுகிறது. இந்த விழா திருவரங்கத்தில் 21 நாட்கள் கொண்டாப்படுகின்றன.
பிரமோச்சவம்
இத்தலத்தில் மூன்று பிரமோற்சவங்கள் நடைபெறுகின்றன. ஆதி பிரம்மோட்சவம், பூபதி திருநாள் என்று இந்த பிரமோட்சவங்கள் அழைக்கப்படுகின்றன.
1001 கலச அபிஷேகம்
இக்கோயிலில் உலக நன்மைக்காக 57 ஆண்டுகளுக்குப் பிறகு நம்பெருமாள் உபய நாச்சியார்களுக்கு 1001 கலச அபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி 27 ஆகஸ்டு 2014இல் நடைபெறுகிறது. இதே போன்று இக்கோயிலில் 1957ஆம் ஆண்டு துரைபிரதட்சணம் மண்டபத்தில் 1001 கலசங்கள் வைத்து பூஜைகள் நடத்தப்பட்டன. 1001 கலசங்களில் 360 மூலிகை மருந்துகள் சேர்க்கப்பட்டு அபிஷேகம் நடைபெறுகிறது. இக்கலசங்கள் 81 கலசங்கள் பிரம்ம பதம் என்றும், 520 கலசங்கள் தேவ பதம் என்றும் 400 கலசங்கள் மானூஸ் பதம் என்றவாறு அமையும்.
குட முழுக்கு
இக்கோயிலில் 2001ஆம் ஆண்டு மார்ச் 15 இல் கும்பாபிஷேகம் நடந்தது. 12 ஆண்டுகள் நிறைவுற்ற நிலையில், கடந்த ஆண்டு ஜூன் 5ம் தேதி முதல் துவங்கியது. சம்ப்ரோக்ஷணம் எனப்படும் குடமுழுக்கு இரு கட்டங்களில் நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் இக்கோயிலில் 43 உபசன்னதிகளுக்கும், 11 கோபுரங்களுக்கும் செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி 2015 ஆம் ஆண்டு அன்று காலை 5.40 மணி முதல் 6.40 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற்றது. ரங்கநாதர், ரங்கநாயகி தாயார் உள்ளிட்ட முக்கிய சன்னதிகள் மற்றும் ராஜகோபுரம், வெள்ளை கோபுரம் உள்ளிட்டவைகளுக்கு இரண்டாம் கட்டமாக கும்பாபிஷேகம் 18 நவம்பர் 2015 அன்று நடைபெற்றது
No comments:
Post a Comment