Monday, June 22, 2020

ஆசீர்வாதம் (2 of 2)

35. ஆசீர்வாதம் (2 of 2) (சிசீ6) #ganeshamarkalam

(நேற்றய தொடர்ச்சி)

ஷட்டகர் பொண்ணும் மாப்பிள்ளையும் மணக்கோலத்தில் திவ்யமா கிட்டக்க வரா. நான்தான் “குழந்தைகளை ரெம்ப பெண்ட் எடுக்கேண்டாம், எங்க ரெண்டு பெருக்கும் சேர்த்தே பண்ணட்டும்.” மாமியும், என் ஆத்துக்காரியும் இத்தனை நாழி எங்கே ஒளிஞ்சிண்டிருந்தாளொ, சட்டுன்னு பக்கத்துலே நின்னுக்க என் மாமனார் தேங்காய வாங்கிக்க நமஸ்காரம் செஞ்சாரது. 

மாப்பிள்ளை அபிவாதயே சொல்ரர். கல்யாணத்தில் அதுவே ஹைலைட்டுன்னு நினைச்சுண்டேன். சொல்லிட்டு சாஷ்டாங்கமா நமஸ்காரம் செய்யரப்போ மாமா “க்ஷேமமா இருங்கோ!” அக்ஷதைய போட்டுடரார். வனஜா மட்டும் கல்யாணப் பொண் கன்னத்தை கிள்ள, எல்லாரும் நகந்து போரா. எனக்கு சப்புன்னு ஆச்சு. மாமனார் பேத்திக்கு நீளமா எதாவது சொல்வர், நாமளும் மனப்பாடம் செஞ்சி இன்னொரு விசேஷத்தில் பயன் படுத்திக்கலாம்னு நினைச்சது நிறைவேறலை.

இந்த நமஸ்காரம், ஆசீர்வாதம் விஷயத்தைப் பத்தி ஒரு ரிசேர்ச் செய்யணும். எந்தெந்த அகேஷணுக்கு சும்மா காலைத் தொட்டுக் கும்பிட்டா போதும், பாவனையா மதின்னும் எதுக்கு சாஷ்டாங்கம் + வாய் நிறைய ஆசீர்வாதம்னும். பிராம்ணாளாப் பொறந்துட்டதால் நான்-பிராமின் ஆத்து விசேஷத்லேயும் ஐயரை கும்பிட்டுக்கோன்னு அழைச்சிண்டு வரா. அதென்னமோ நாம ஆசீர்வாதம் செஞ்சா இன்னும் சுபிக்ஷமா இருப்பான்னு நம்பிக்கை. வெளீலே நம்பள கேலி செஞ்சாலும் இதுக்கு குறைச்சலில்லை. தலை வேற மல்லிகைப்பூவா நரச்சுடுத்தோன்னோ!

வயசாரதை நாம கவனிக்காம போனாலும் மத்தவா கவனுச்சுடுவா. நம்ம கலாச்சாரத்துலெ ஆத்துக்கு வர சிறுசுகள் மாமா நமஸ்காரம் பண்ரேன் ஆசீர்வாதம் பண்ணுங்கோன்னு சொல்ரச்சே நாம எதிர்பாக்கரத்துக்குள்ளே அந்த ஸ்டேஜுக்கு வந்துட்டோம்னு தெரியும். 

இப்போல்லாம் போர இடத்தில் ஒரு சமிக்கை கிடைச்சா போதும் எழுந்து நிப்பேன். மேற்கே பாத்து. வனஜாவையும் கூப்பிடுவா, அவளும் வலது பக்கமா, இல்லை இடது பக்கமான்னு தடுமாறிட்டு என்னை லேசா இடிச்சு ஏதாவது சொல்லுங்கோன்னு சொல்லுவா. நான் இன்னித் தேதிக்கு நன்னா இருப்பது நிறைய பெரியவா என்னை ஆசீர்வாதம் செஞ்சதுனால்தானு அடிச்சுச் சொல்வேன். அப்போ என்னோட பங்கை இப்ப செய்யணுமா வேண்டாமா? இந்த தலைமுறை சின்னஞ் சிறுசுளுக்கு அதிர்ஷ்டம் என் மூலமா போய் சேரும்னா ஏன் தயங்கணும்? நமஸ்காரம் செய்யரச்சே மனதில் பட்ட வாழ்த்துக்களை சொல்லிடுவேன். சொன்னதும் ஆத்ம திருப்தி கிடைச்சாப்போல இருக்கும் 

நல்ல சிந்தனையும் அதை மத்தவாளுக்காக எண்ணி அதை அவா கிட்டே கொண்டு சேர்த்தது நம்மை புதிப்பித்து விடுகிறது. இன்னும் சொல்லப் போனா பிரத்தியாருக்கு ஆசீர்வாதம் செய்ய நம்மை இன்னும் தகுதி ஆக்கிகொள்ளணும்னு யோசிக்கவும் நிர்பந்தப்படுத்தும்.

ஆனா மாமனார் சிம்பிளா சப்புன்னு “க்ஷேமமா இருங்கோ” அப்படீன்னுட்டாரே! பக்கத்துலே இருக்காரே, கேட்டுட்டேன். 

“இந்த ஆசீர்வாதம் இருக்கே ரெம்ப பெரீய மேட்டர் மாப்பிள்ளை. விவரமா பேசுவம்” பீடிகையோட ஆரம்பிக்கரர். இலை போட இன்னும் நாழியாகும். கார்த்தாலே சாப்டது இன்னும் இறங்கலை.

“ஆசீர்வாதம் செய்யரப்போ மனசுக்குள்ள, நுணிநாக்கில் முணுமுணுத்துண்டோ சொல்லப் பிடாது. நாம வாழ்த்துவது நம்மை அண்டி எதிர்பார்ப்போட வந்தவா காதில் ஸ்பஷ்டமா விழணும். நமஸ்காரம்னு செய்ய வந்தவாளை “அடட இதெல்லாம் எதுக்கு,வேண்டாம்’னு தட்டிவிடவும் பிடாது. வாழ்த்தணும், வாய் நிறைய வாழ்த்தணும். வாய் நிறையன்னு சொன்னதுக்கு ஒரு அர்த்தம் இருக்கு தெரியுமோ?” நடுவில் கேள்வி கேட்டு நான் கவனமா கேக்கரேனான்னு பாத்துப்பர். சுபாவம். “சொல்லுங்கோ”.

“வாய் நிறையன்னா நீளமா ஒரு சொற்பொழிவு மாதிரி சொல்வது இல்லை. நாம அவாமேல் வச்சிருக்கும் அன்பும், வாத்ஸல்யமும் வாழ்த்தப் போகிர விஷயமும் மனசு பூரா ரெம்பி அது நம்ப நாக்கு வழியா ததும்பிண்டு வராப்போல் சொல்லணும். சொல்வதை சுறுக்கமா சொன்னாலும் வாய் நிறைய என்பதுக்கு அதான் அர்த்தம்.” “சரி, என்ன சொல்ல என்பதுலேதான் தடுமாற்றம். அதுக்கென்ன செய்ய?”

“இளம் வயதினர் மனஸில் என்ன இருக்குன்னு தெரிஞ்சா அதுக்கு தகுந்தாப்போல் ஆசீர்வாதம் செய்யலாம்தான். அன்னைக்கு ஒரு இளம் கப்பிள் அவா தம்பி கல்யாணத்துக்கு அழைக்க வந்திருந்தா. அவாளை சந்தோஷமான திருமண வாழ்க்கை அமையட்டும், சீக்கிரம் ஒரு குழந்தை பிறக்கட்டும்னு ஆசீர்வாதம் பண்ணலாம். அவா ஃ.பேமிலி பிளானிங்க் கடைப்பிடிச்சுண்டு இருக்காளாம் – அப்ப? மாணவான்னா நன்னா படிப்பு வரணும், நல்ல காலேஜ்லே அட்மிஷன் கிடைக்கட்டும்னு சொல்லலாம். நம்மாத்து குழந்தைகளை ஆசீர்வாதம் பண்றது சுலபம், நமக்குத்தான் அவாளுக்கு என்ன வேணும்னு, எதுக்கு ஆசைப்படரான்னு தெரியுமே. பிரத்தியாருக்கு?” 

“என் குழப்பமும் அதுதான் மாமா. மணமக்கள்னதும் பலர் சீக்கிரம் சந்தானப் பிராப்த்தி உண்டாகட்டும்னு சொல்லி நமுட்டுச் சிரிப்பு கொடுப்பா பாத்திருக்கேன். நீங்க சிம்பிளா சொன்னது ஆச்சர்யம்” “வாஸ்த்தவம். சொல்ரேன்.”

“காஞ்சி மஹாபெரியவாளை பாக்க போனா அக்ஷதை கொடுத்து ஆசீர்வாதம் பண்ணுவார். அவர் “க்ஷேமமா இருங்கோ”ன்னு சொல்ரது நன்னா கேட்கும். இது எல்லாவும் உள்ளடக்கிய ஆசீர்வாதம், ஆனா அவாளுக்கு தெரியும் நாம என்ன வேண்டிண்டு வந்தொம்னு. மஹாபெரியவா முன்னாடி நிப்பதே புண்யம். கொஞ்சநாள் முன்னாடி இன்டெர்னெட்டை துழாவினதிலும், சமுஸ்க்ரிதம் தெரிஞ்சவாளோட பேசினதிலும் க்ஷேமம்னா என்னன்னு புரிஞ்சது. இதை அடிக்கடி பயன்படுத்துவோம், நாம சொல்ர மந்திரங்களிலும் வரும். ஆத்து சாஸ்த்ரிகளை கேட்டப்போ மழுப்பிட்டார், க்ஷேமம்னா க்ஷேமந்தான் அர்த்தம்னுட்டார். எனெக்கென்னமோ இந்த வார்த்தையை போரபோக்கில் சொல்லிண்டு போரோம்னு தோணித்து”.

“சமுஸ்க்ரதம் தவிர மத்த பாஷைலேயும் இதுக்கு பயன்பாடு இருக்கு, பல அர்தங்களுடன். பொதுவா “க்ஷேமம் உண்டாகட்டும்”னா நல்லது ஆகட்டும், செழிப்பு (அபிவிருத்தி) உண்டாகட்டும்னு அர்த்தம். பிரயாணம் கிளம்பரவாகிட்டே “க்ஷேமமா போயிட்டு வாங்கோ”ன்னா பாதுகாப்பான பிரயாணமா இருகட்டும்னு அர்த்தம். சில மொழிகளில் விடையளித்தலுக்கு சமம். வயசுலே பெரியவா சொல்லி ஆசீர்வாதம் பண்ணா இதுக்கு அபிவிருத்தி, சுகம், சந்தோஷம், மனசாந்தி இப்படி. க்ஷேமமா இருப்பது பாதுகாப்பா, சௌகர்யமா, சுலபமா, அமைதியா, எல்லாத்துலேருந்தும் விடுதலை அடைஞ்சாபோல. பகவத்கீதை படிச்ச அனுபவம் உண்டா மாப்பிள்ளை”.

டக்குன்னு இப்படி மடக்குவர்னு எதிர்பாக்கலை. படிச்சிருக்கேன். கேள்வி கேட்டர்னா? படிச்சயான்னு மட்டும் கேக்காம படிச்ச அனுபவம் உண்டான்னது ஆழமா பட்டது. இல்லைங்கரா மாதிரி தலைய ஆட்டிண்டே “படிச்சிருக்கேன்.”

“பகவத் கீதையில் பாகம் 9, செய்யுள் 22இல் இந்த வார்த்தை மிக சிறந்த அர்தத்தோட வரது. கிருஷ்ணர் சொல்ரார்: “யார் என்னை எப்போதும் வேற எந்த சிந்தனையும் இல்லாம பிரார்த்தனை பண்ராளோ, சதா சர்வ காலமும் பக்தி சிரத்தையோட இருக்காளோ அவாளுக்கு வேண்டியதை, பொருள்வகை மற்றும் ஆன்மீக நலன்களை தேடிக் கொடுத்து பாதுகாக்கவும் செய்கின்ற பொறுப்பை ஏற்றுக் கொள்கிரேன்”. இதில் “பாதுகாக்க” எங்கிர அர்த்தத்தில் க்ஷேமத்தை பிரயோகிக்கிரார். கடவுள் அவரை சரணாகதி அடைந்தால் நமது ஆன்மீக சொத்துக்களை பாதுகாப்பதாக சத்தியம் செய்கிரார். பாதுகாப்பா நம்மோடயே இருக்கப் போவதாய் சொல்லுகிரார் கிருஷ்ணர். க்ஷெமத்துக்கு அவ்வளவு அழகான பல அர்த்தங்கள். யார் பிரயோகிக்கராங்கிறதை பொருத்து.” இன்னும் சொல்லிண்டே போரார்

“என் தகப்பனார் என்னை அசீர்வாதம் செஞ்சப்போ நல்ல ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் எல்லா அப்பாவும் சொல்ர மாதிரி, மத்தவா சொன்னா சொத்து சுகம், வளமை குறிப்பா கார், சொந்த வீடு இப்படி. ஒரு சாது அக்ஷதை கொடுத்து அசீர்வாதம் பண்ணினா மனசாந்தியும் சந்தோஷத்தையும் அருளுகிரார்கள் என்று வச்சுக்கலாம். அதில் எல்லாமே அடங்கும், நீங்க எது நடந்தால் சந்தோஷம்னு நினைக்கிரேளோ அது எல்லாமே. ஆனால் ஸ்ரீகிருஷ்ணர் அர்ஜுனங்கிட்டெயும் அவன் மூலமா கீதையை படிக்கிரவா எல்லோருக்கும் சொல்ரது ஆன்மீக சொத்தை கொடுத்து அதனால் கிடைக்கும் நல்லது எல்லாத்தையும், கூடவே வந்து பாதுகாத்து கொடுப்பதையும் சொல்லுகிரார்”.

என் மாமனார் பெசப் பேச அத்தனை ஆச்ச்சர்யமா இருந்தது. எங்கப்பா கிட்டே மூக்குப்பொடி வாங்கி போட்டுண்டு தும்மிண்டு சிரிச்சிண்டு இருப்பவர்கிட்டே இத்தனை விஷயங்களா? இவருக்கு மாப்பிள்ளையா வாச்சது கெத்தா ஃபீலாச்சு. என் கண் விரிஞ்சு கொடுப்பதையும் வாயப் பிளந்துட்டதையும், காது கேப்பதை கவனிச்சுண்டே இன்னும் சொல்ரர்.

“மனுஷாளுக்கு இருக்கக் கூடிய மிகப்பெரிய சவால் என்னன்னா வேண்டிக்கிர விஷயத்தை அடைவது இல்லை. அடைஞ்சதை தக்க வச்சுக்கிரதுதான். க்ஷேமமாகட்டும்னு ஒருத்தர் நம்மை ஆசீர்வாதம் செஞ்சால் நமக்கு கிடைச்சதை தொலைச்சுடாம பாதுகாத்து வச்சுப்போம்னு சொல்லி அதனால் நமது பவிஷ்யம் நன்னா ஆகுன்னு அர்த்தம். கிருஷ்ணபரமாத்மா உபயோகித்த பதம் ‘யொக க்ஷெமம்”. நாம அவர் கிட்டெ சரணாகதி அடைஞ்சுட்டா அவர் எல்லாத்தையும் பாத்துப்பார் - உங்களுக்கு தேவையானதை அவரே கொடுத்துட்டு உங்களையும் உங்களிடம் கொடுத்ததையும் பாதுகாப்பார்னு அர்த்தம்”.

“அதையே இப்படி கல்யாணத்தில் மாலையும் கழுத்துமா வந்து காலில் விழரவாளுக்கு சொல்லலாமா?” 

“ஒண்ணு தெரிஞ்சுக்கணும். நாம அவாளவிட வயசானவா, மூத்தவா, சீனியர் சிடிஜன். அவ்ளோதான். ஆனா சாதரண மனுஷா. நாம ஒண்ணும் பெரீய புண்யவானோ ரிஷி முனியோ சித்தர்களோ இல்லை. வயசுக்கு மதிப்புத் தந்து காலில் விழரா. இந்த மாதிரி விசேஷங்களில் விழ வைப்பா. அதுக்காக நம்பளை பத்தி உயர்வா நினைச்சிண்டு ரெம்பத்தான்னு பினாத்தப் பிடாது. அதே சமயத்தில் அவா காது குளிர, உண்மையா மனசால வாழ்த்து சொல்லியே ஆணம். அது முக்கியம். நாம சொன்னதால் அது நடந்துடப் போரதா என்ன? ஆனா துவேஷமில்லாம விரோதம் பாராட்டாதவா விரும்பிச் சொல்வது பலிக்கும்னு நம்பிக்கை”.

“அதான் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் சொன்னதையே நாம நம் மூலமா அவாளுக்கு தெரியப் படுத்தினாலே போதுமானது. எனக்கு கிடெச்ச இந்த நமஸ்காரம் அந்த பரமாத்மாவுக்கு போகட்டும், இந்த சந்தோஷமான தருணத்தில் உங்களுக்கு கிடெச்சிருக்கும் சந்தோஷம் உங்க கூடவே பெர்மானென்ட்டா இருக்க அவன் ஆசீர்வாதம் செய்யட்டும் எங்கிர அர்த்தத்தில் க்ஷேமமா இருங்கோன்னு சொல்லிடுவேன். ஒண்ணுமே பிர்ச்சனை இல்லை பாருங்கோ.”

கல்யாணக் காரியம் முடிஞ்சு நானும் வனஜாவும் ஹோட்டலுக்கு கிளம்பரச்சே அங்கேந்தே ஊருக்கு கிளம்பிடுவம்னு தம்பதியா மாமா மாமிக்கு மண்டபத்லேயே நமஸ்காரம் செஞ்சம். இவர் “க்ஷேமமா இருங்கோ”. மாமியோ மாமாவை முழங்கையால் இடிச்சு “இதென்ன இத்துணூண்டு? நன்னா ஆசீர்வாதம் செய்யுங்கோ”. அதுக்கு அவர் “மாப்பிள்ளை புரிஞ்சிப்பர்”.

எழுந்ததும் கண் அடிச்சு வழியனுப்பரர். அதை இவள் கவனிச்சிருக்கா. 


ஏர்போர்ட்டில் உக்காந்திண்டு “அப்பா எதுக்கு கண்ணடிச்சர்? “உனக்கு நல்ல ஆம்படையானா கிடெச்சிருக்கானாம், நீ அதை தக்க வச்சுண்டு சந்தோஷமா இருக்கணும்னு ஆசீர்வாதம் செஞ்சர்.” “உளராதீங்கோ. நானே கடுப்புலே இருக்கேன்.” “ஏண்டி? அப்படி என்ன நடந்துடுத்து?” 


"என்னோட டுப்பர்வேர் வச்ச தாம்பூலப் பையை மண்டபத்தில் எடுத்து வச்சுக்க மறந்துட்டேன்!"

No comments:

Post a Comment