Wednesday, June 24, 2020

விஸ்வாமித்ர கோத்ரம் (2 OF 2)

37. விஸ்வாமித்ர கோத்ரம் (2 OF 2) (சிசீ6) #ganeshamarkalam

“மொதல்ல சூடா காபியக் குடிச்சுட்டு நன்னா இருக்கான்னு சொல்லுங்கோ. உள்ளே போனதும் எங்காத்து மாட்டுப்பொண் கேப்பள். அவளுக்கு எது சமைச்சாலும் உடனுக்குடன் ஃபீட்பேக் வேணும். கன்டினுவஸ் இம்ப்ரூவ்மென்ட் செய்ய ஆசைப் படுவள்”

உண்மைதான், அத்தனை ஆசையா மின்னப் பின்னே தெரியாதவனுக்கு திண்ணையில் கிடந்தான் என்பதுக்காக மட்டுமே காபியெல்லாம் தரான்னா அதை எப்படி நன்னா இல்லைன்னோ குத்தம் குறை சொல்லிண்டே சாப்டரது? திவ்யமா இருந்ததுதான் உண்மை. அப்படியே சொன்னேன். புதுசா கறந்த பாலில் திக்கா டிகாக்ஷண் போட்டு நன்னா ஆத்தி கலந்து அத்தோட நின்னுடாம எல்லாத்துக்கும் மேல் ஒரு லேயர் டிகாக்ஷண் ஊத்தி அது கீழே போயிடரத்துக்கு மின்னாடி எதுக்கே வச்சா? அதுலேந்து வரும் அரோமாவே பாதி பாராட்டை அள்ளிடும். சொச்சத்துக்கு கேக்கணுமா? நாம கொஞ்சம் கொஞ்சமா சிப் செய்ய மேலே ஊத்தின டிகாக்ஷன் மொள்ளமா கீழே இறங்கி எப்ப சுவைச்சாலும் புதுக் காபி மாதிரி. பாராட்டினதும் மாமா முகத்தில் அத்தனை சந்தோஷம். அதில் மாட்டுப்பொண் ஜெயிச்சுட்டா என்பதைவிட வந்தவா மனம் குளிர்ந்ததே பிரதானமா தெரிஞ்சது. 

காபி சுகத்தில் ரெம்பவே லயிச்சுப் போனவனை பாத்து, “கோத்ரம் பத்தி பேசலாமா?” “ஆமாம். அது முக்கியம்.”

“கோத்ரம் நம்மோட ஆண் வம்ஸ பரம்பரை வரிசையை குறிக்கும். அம்மா நமக்கு அப்பா யார்னு காட்டுவா, அப்பா நம்ம கோத்ரம் என்னன்னு சொல்லிக் கொடுப்பர். நீங்க நைத்ருப காஸியப கோத்ரம்னு சொன்னேள். உங்களுக்கு இது எப்ப தெரிய வந்தது?” பூணல் போடரச்சே சொல்லித் தந்தா. அபிவாதயே சொல்ரச்சேயும் வரும்.” “ஆபிவாதயே சொல்ரதுன்னா என்னன்னு தெரியுமோ?” “நீங்களே சொல்லிடுங்கோ. பெரியவாளுக்கு நமஸ்காரம் செய்யரப்போ சொல்லணும்னு மனப்பாடம் செஞ்சு வச்சிண்டிருக்கேன். வெறொண்ணும் தெரியாது?”
“மின்னெல்லாம் ஆத்துக்கு பெரியவா, பண்டிதா, உஞ்சவிருத்தீன்னு வரச்சே வரவாளை வரவேற்று, நமஸ்காரம் செஞ்சு மரியாதை பண்ரச்சே அவா கேக்காமலே நாம யாருன்னு சாஸ்த்ரோத்தமா அறிமுகப் படுத்திக்க நம்பளைப் பத்தின அதி முக்கியமானதை சொல்லி சொல்வது அபிவாதயே. அதில் கோத்திரத்தையும் சொல்லணும்னு வச்சிருக்கா.”

“ஸமீப காலத்தில் கெனோகிராஃபிக் உபாயம்னு அமேரிக்காவில் ஒண்ணு செஞ்சா. இது மனித இனத்தோட மொத்த வரலாற்றை புரிஞ்சுக்கிரத்துக்கு. 2005 முதல் 2017 வரை, 8,30,300 பேரோட மரபணுவை செகரித்து படிச்சுப் பார்த்து ஒவ்வொருத்தரோட மூதாதையர் எங்கேந்து வந்திருப்பானும், எங்கேயெல்லாம் இடமாற்றம் ஏற்பட்டு இப்பொ இருக்கும் இடத்துக்கு வந்தான்னும் தெரிஞ்சுது. இதில் அப்பாவழி, அம்மாவழி இரண்டும் பார்க்கலாம். கொஞ்சம் சிலவு செஞ்சா நீங்களும் உங்களைப் பத்தி உங்க மூதாதையர் எங்கேந்து தோன்றினான்னும் தெரிஞ்சுக்கலாம். உங்க மரபணுவை சோதிச்சு கண்டு பிடிச்சுக் கொடுப்பா. ஆனால் கோத்ரம் இதுக்கும் மேல. இது நம்ம மூதாதையர் யார்னே சொல்லும்.” அடன்னு பட்டது. இன்னும் சொல்ரர்.
“நம்மில், நிறைய பேருக்கு கொள்ளுத்தாத்தாக்கு அப்புரம் பேர் சொல்லத் தெரியாது. நம்ம பெற்றோர் இதை சொல்லலை, அவாளுக்கே தெரியாம இருக்கலாம். திவச மந்திரம் சொல்லிண்டிருக்கச்சே வாத்தியார் திடீர்னு பேர் கேப்பா, நாம மேலே மின்விசிரியை பார்ப்போம். இப்படி ஆகும்கிரத்துக்காகவே பொது மந்திரத்தை சொல்லி காப்பாத்துவார். நம்ம வம்ஸாவளியை தெரிஞ்சு வச்சுப்பது நல்லது – எவ்வளவு பின்னே தெரியுமோ அவ்வளவு சிலாக்கியம்.” “நம்ப மூதாதயர்கள் யாரு?” கெக்கரேன்.

“ஹிந்துக்கள் நாமெல்லாம் 7 ரிஷிகளிடமிருந்து வந்தோம்னு நம்பரோம். இதில் அகஸ்தியரையும் சேர்த்து சிலர் 8ஆச் சொல்லுவா. விஸ்வாமித்ரரையும் சேர்த்துக்கலாம். சப்த ரிஷிகள்னா அது: அங்கீசார, அத்ரி, காஷ்யப, ப்ரிங்கு, வசிஷ்ட, குத்ஸ, பாரத்வாஜ. நம்ம கோத்ரம் தெரிஞ்சா இவா வரைக்கும் சம்பந்தப்படுத்தி பார்க்கலாம். கோத்ரத்துக்கு கீழே கணா, அப்புரம் குடும்பங்கள் இருந்தது. கொஞ்ச நாளைக்கப்புரம் சில கணாக்களும் கோத்ரங்களாகி, அப்புரம் இதனால் மேலும் ஊக்குவிக்கபட்டு சில குடும்பங்களையும் கோத்ரம்னு சொல்ல ஆரம்பிச்சுட்டா. இதனாலே கோத்ரங்கள் பெறுகிடுத்து, உங்கது, காஷ்யபரை சார்ந்தது. உங்கள் கோத்ரமும் இந்த 9பேர்லேருந்து வித்யாஸமா இருக்கலாம்”.

“ஒரு லிஸ்டில் பிராம்ணாளுக்கு மட்டுமே 100 கோத்ரத்துக்கு மேல படித்தேன்”. “ஆமாம். நீங்களும் ஒண்ணு புதுஸா ஆரம்பிக்கலாம், புது கோத்ரம் விளங்கரத்துக்கு நிறைய குழந்தைகள் பெத்துக்க தயாரா இருக்கணும். இதனாலேவோ என்னவோ சமீப காலத்திலே புது கோத்ரம் வரலை. எல்லாம் 3000 வருஷத்துக்கு முந்தி. ஆத்து வாத்யாருக்கு உங்காத்து கோத்ரம் தெரியும். புது வாத்தியார் மந்திரம் சொல்லிண்டே திடீர்னு “கோத்ரா நாம”ன்னு சொல்லுவா, நீங்களும் ஒரு ஈடுபாடில்லாம அவர் சொன்னதை திருப்பி சொல்லிட்டேள்னா மாட்டிப்பேள். அவர் அப்பிடி சொல்ரப்போ கவனமா கேட்டு உங்க கோத்ரத்தை சொல்லணும். மந்திரங்கள் தந்திரங்கள் நிரம்பியது. ஜாக்கிரதை”. சொல்லிட்டு பெரீசா சிரிக்கரர்.

“கோத்ரம் மூலமா நம்ம மூல குடும்பத்தை தெரிஞ்சுக்கலாம். “கோ” வார்த்தை ஒரு பசு கொட்டகையை குறிக்கும். அந்த காலத்லே ஒவ்வோரு குடும்பமும் ஒரு கொட்டகையை வச்சிண்டு பாராமரித்தது. அவாளை குறிப்பிட்டு சொல்ல அந்த பசுக் கூட்டத்தை சொல்லி கூப்பிடுவார்கள், அதுவே கோத்ரம் ஆனது. அப்போ ஜனத்தொகை குறைவு, பசு அதிகம். இப்போ அப்படியே தலைகீழ்”. “அம்மா வழி கோத்ரம் கிடையாதா?”

“கோத்ரம் அப்பா வழி மரபை மட்டும் குறிக்கும். பேண்ணுக்கு அப்பா கோத்ரம், அப்புரம் கணவனின் கோத்ரம். இது சரியானதான்னு எனக்கு தெரியலை – ஆனா அப்படித்தான்”. “அப்பிடின்னா தமிழ் பிராம்ண பையன் மட்டும் அவன் கோத்ரத்தை பத்தி கவலை பட்டா போதுமா?” “இல்லை, பெண்களுக்கும் இப்போ இருக்கிற கோத்ரம் தெரிஞ்சுருக்கணும். சகோத்ரத்திலே கல்யாணம் செஞ்சுக்க பிடாது. அது தப்பு. அதனால்தான் ஜாதகம் பார்கிரப்போ முதலில் கோத்ரத்தை கவனிப்பா”. “கோத்ரம் மட்டும் பாத்தா போதும், வேற பொருத்தங்கள் தேடிண்டு போவேண்டாம்னு சொல்லுவாளே”

“ஆமாம். உங்க வம்ஸாவளியிலே நிச்சயம் ஒரு மஹான், ரிஷி முனிவர், நிறைய நல்ல ஆத்மாக்கள் இருந்திருப்பா. நமக்கு தெரியாததுனாலே அவாளோட மஹாத்மியம் குறைஞ்சுடாது. அப்படிப் பட்டவா யாருன்னு தெரிஞ்சுக்கணும். இதுக்கு கோத்ரம் வாரியா லிஸ்ட் இருக்கு. இதை ப்ரவாரன்னு சொல்லுவா. உபனயனம் பண்ரப்போ ஒரு மந்திரம் வரும், இவாள் பேரை சொல்லி மரியாதை பண்ணி இவா மாதிரி பூணூல் போட்டுகிற பிள்ளையாண்டன் நன்னா வரணும்னு வேண்டிப்பா. நாம கடைப் பிடிக்கும் சடங்குகள்லெ இவ்ளோ நல்ல விஷயங்கள் இருக்கு”. மலைச்சுப் போரேன்
“ஒரு நல்ல பிராம்ணனுக்கு அவன் கோத்ரம், ப்ரவார, சூத்ரா (கல்பத்தில்) மற்றும் ஷாகா தெரியணும். இது நம்ம முழு Genographic வடிவம். ஆமேரிக்கா பொறக்கத்துக்கு 4000 வருஷத்துக்கு மின்னமே இதெல்லாம் நம்ம தேசத்தில் தெரிஞ்சிருக்கு.” “ஆமாம் மாமா, இப்பத்தான் சிலது புரியரது. என் பூணல் கல்யாணத்துக்கு 2 நாள் முன்னாடி என் பெரியப்பா எனக்கு அபிவாதயே சொல்லிக் கொடுத்தார். அதில் எல்லாமே வரது. உன்னை முழுசா அறிமுகப்படுத்திக்காம ஆசீர்வாதம் பண்ணுங்கோன்னு எப்படி கேப்பாய்னு நறுக்குன்னு குட்டினர்”.

“அந்த காலத்லே, காசி யாத்திரை போயிண்டுருக்கும் மாப்பிள்ளை பையன் அபிவாதயே சொல்லுவான். அதில் வரும் கோத்ரத்தை கேட்டு பெண்ணை பெத்தவர் இவன் நமக்கு ரத்த சொந்தம் இல்லைன்னு தெரிஞ்சுப்பார். அதுக்கப்புரம்தான் அவனை மஹாவிஷ்ணுவா பாவிச்சு, பாதபூஜை எல்லாம். நம்மாத்து பெண்கள் அவா புக்காத்து கோத்ரத்துக்கு போயிடறதுனாலே பையன் அவன் அத்தை பெண்ணையோ, மாமா பெண்ணையோ ஃப்ரீயா டாவடிக்கலாம். இப்படி டாவடிச்சு கல்யாணம் நடந்தால் வீட்டு நகை நட்டுகள் வெளியே போகாம பாத்துக்கலாம்”. சீரியஸா பேசிண்டிருக்கச்சேயே தமாஷ் பண்ரர் கனபாடிகள்.

“குலம் கோத்ரம் பாத்து கல்யாணம் பண்ணிக்கோன்னு சொல்வா. குலம்கிறது நம்ம கலாசார பழக்க வழக்கங்களை வச்சு. ஒரே குலத்தை தேடி கல்யாணம் செய்யணும், ஒரே கோத்ரத்லே செய்யப் பிடாது. சில பேருக்கு கோத்ரம் இருக்காது, இவா இந்த விஷயத்தை பின்பற்றாதவாளா கூட இருக்கலாம். ஒண்ணும் கெட்டுப் போயிடலை. ஆனா பொண்ணக் கொடுக்கரவன் விசாரிச்சுட்டு கொடுக்கணும்.” 
“நான் கேட்ட அந்த குணாதசியங்களுக்கும் கோத்ரத்துக்கும் என்ன தொடர்பு? விஸ்வாமித்ர கோத்ரமா இருந்தா கோப தாபங்கள் அதிகமா வருமா?
“ஆமாம் மறந்தே போயிட்டேன். அந்தக் கேள்வீலேதானே ஆரம்பிச்சம். சொல்ரேன் கேட்டுக்கோ. நம்ப குணாதசியங்கள் நம்ப மரபணுவைச் சார்ந்துதான் இருக்கும். ஆனா 3000 வருஷமா அதே குணம் கூடவே வருமான்னா வராது. நாளடைவில் நமக்கு ஏற்படும் அனுபவங்கள், நாம படிச்ச படிப்பு, நாம பழகின மனுஷா எல்லாமும் நம்ப குணாதசியங்களை சீர்படுத்தும். அதுக்காகத்தான் சிரத்தயா படிக்கணும், நல்ல அனுபவங்களா தேடிச் சேகரிச்சுக்கணும், நல்ல நட்புக்களா தேடிண்டு போணம்னு சொல்லுவம். விஸ்வாமித்ர கோத்ரம்னா சிடு சிடுன்னு இருக்கணும்னு கிடையாது. ஆனா அப்படி இருக்கரவா ஒரு வேளை விஸ்வாமித்திரரோட வம்ஸாவளீலே வந்திருப்பாளோன்னு தோணும். அதே சமயத்தில் அதே வம்ஸாவளீலே இருந்த சொச்ச மஹான்கள், நல்ல ஆத்மாக்கள் கிட்டேந்தும் நல்ல குணங்கள் இருக்கணுமே? இருக்கும். அதைத் தேடி கண்டுபிடிச்சு வளர்த்துக்கணும்”
சரிதான்னு பட்டது. பேசிண்டிருந்ததில் நேரம் போனதே தெரியலை. 4:45ஆச்சு. “இன்னொரு டம்ளர் காபி தரச் சொல்லட்டுமா?” “அச்சச்சோ! மாமா. டெம்ப்டிங்காத்தான் இருக்கு. வேண்டாம். நமஸ்காரம் பண்ரேன், என்னை ஆசீர்வாதம் செய்யணும்னு கேட்டுக்கரேன்”. “உள்ளே வா, சுவாமி உள் காமிக்கரேன்”. அழைச்சிண்டு போய் மாட்டுப் பொண், அந்த சுட்டிக் குழந்தைக்கு அறிமுகம் செஞ்சு வச்சு ஆசீர்வாதம் செஞ்சர். பிள்ளை ஆபீஸில். “கும்மோணம் வந்தா எங்காத்து அவசியம் வரணும்.” விஸிட்டிங்க் கார்ட் தரேன். “அதில் பின்னாடி எங்காம் இருக்கு”.

ராஜகோபாலஸ்வாமி திவ்யமா காட்சி தரர். இன்னைக்கு திருவேங்கடம் கனபாடிகளை சந்திக்கும் அதிர்ஷ்டம் கிடைக்கணும்னு இருந்திருக்கு. அதுக்காகவே என்னை மன்னார்குடியில் பிடிச்சு வச்சு லீலை செஞ்சுருக்கான் பால கோபாலன். பஸ்ஸில் வரச்சே, அம்மாவை அப்பா இனிமேல் திட்டாம பாத்துக்கணும் அதுக்கு ஏதாவது செய்யணும்னு யோசிச்சிண்டே வரேன். மாமா சொன்னாப்போல் நீடாமங்கலத்தில் பஸ்ஸ 20நிமிஷம் நிக்க வச்சுட்டான். இருந்தாலும் 745க்குள் ஆத்துக்கு போயிடலாம். வெண்ணையாத்தை தாண்டினதும் இன்னொண்ணும் தோணித்து. நைத்ருப காஸ்யப கோத்திரத்தின் நல்ல தன்மைகளை கண்டுபிடிச்சு அப்பாகிட்டே அதெல்லாம் இருக்கான்னு பாத்து அதை வெளிக் கொண்டு வராப்போல் நாமெல்லாம் நடந்துண்டா? 

காசீலே, ஹரித்வாரில் வம்ஸாவளியப் பத்தி எழுதி வச்சிருப்பான்னு படிச்சிருக்கேன். அங்கே போய் விசாரிச்சா எல்லாமும் புலப் பட்ருமோ? அத்தனை தூரம் யார் போக? அதுவுமில்லாம நம்பாங்களில் யார் அங்கே போய் காரியங்கள் செஞ்ச்சிருக்கப் போரா? வலைங்கைமான் தாண்டரச்சே இந்த ஐடியாவே முட்டாத்தனம்னு முடிவுக்கு வந்தாச்சு.

கும்மோணம் ப்ஸ் ஸ்டேண்டுக்குள் நுழையரத்துக்கு மின்னாடியே நிறுத்தச் சொல்லி இறங்கிக்கரேன். பொடி நடையா மஹாமகக் குளத்துக்கு போயிடலாம். காசிவிஸ்வநாதர் தெருவில்தான் எங்காம். வழீலே ஒரு ஜூஸ் கடை. ஒண்ணு குடிச்சுட்டு ஆத்தில் எல்லாருக்கும் வாங்கி எடுத்துண்டு போலாம்னு. 

கடை வாசலில் அம்மாவும் அப்பாவும். கோவிலுக்கு வந்தாளோ? இங்கே என்ன பண்ரா? யோசிக்கரச்சே கடைக்காரன் ரெண்டு கிளாஸ் ஸ்ட்ரா போட்டு நீட்டரான், வாங்கி குடிக்கரா. எதுத்த சாரிலேந்து பாக்கரேன். அப்பா குடிக்காம வச்சிண்டு. அம்மா முடிச்சதும் தன்னுதையும் தரார். அம்மா வேண்டாம்னு அவர் கையப் பிடிச்சு அவர் வாய்கிட்டே கொண்டு போரா. ரெண்டு பேர் கண்களிலும் கடை வெளிச்சத்தை மீறின ஒளி. 
நிச்சயம் விஸ்வாமித்ர கோத்திரம் இல்லை. நாங்கெல்லாம் மன்மதகோத்ரம்னு பட்டது. மனசு லேசாச்சு.

No comments:

Post a Comment