Monday, June 22, 2020

எங்கள் கும்பகோணம்

"கணக்கற்ற பெருமைகொண்ட "   எங்கள் கும்பகோணம் "

" எந்த இயற்கை சீற்றங்களாலும் எந்த பாதிப்பும் எப்பவுமே  ஏற்படாத பெருமை பெற்ற சக்தி கொண்ட  ஊர் கும்பகோணம் என்று படித்துள்ளேன்"

" கோவில்கள் சூழ்ந்த  எங்கள்
 கும்பகோணம் ஒரு கோவில்  நகரம்"

 கணக்கில்லா கோவில்கள்
 கும்பகோணத்தில் கண்டு மகிழ

 காலங்கடந்த சிற்பங்கள் அழகை
 கண்டுகளிக்க  கோவில்கள்

  குறை தீர்க்கும் கோயில்கள்
  கும்பகோணம் சுற்றிலும்,...,"

 நவகிரகங்களின் அருள் பெற
 நவகிரக கோவில்கள் சுற்றி உண்டு

  காசிக்கு வீசென காலம் காலமாய்       
கும்பகோணத்தை சொல்வதுண்டு

 வருடம் பூரா ஆன்மீகம் என
 விதம் விதமாய் சத்சங்கம்

  காப்பி என்று சொன்னாலே
  கும்பகோணம்  டிகிரிதானே !

 கேம்பிரிட்ஜ் ஆஃப் சவுத் இந்தியா
  காலேஜ்  எங்கள் ஊரில் தான்.

  வெள்ளியிலிருந்து ஈயம் வரை
  வேண்டிய பாத்திரம் கிடைத்திடுமே!

   குத்துவிளக்கின் அழகை
  கும்பகோணத்தில் பார்க்கலாம்

  பட்டுத்தரியும் இங்குண்டு
  பட்டுத் துணிகள் பல உண்டு.......

  தெற்குப்பக்கம் அரசலாறு
  வடக்குப் பக்கம் காவிரியாறு

  கணக்கற்ற குளங்கள்
  கும்பகோணம் நகரத்தில்

  மகாமக குளம்,பொற்றாமரைக்குளம்
  மத்தியில் அமைந்த அழகு நகரமிது

 கும்பேசர், நாகேசர், பாணபுரீஸ்வரர்
 குடிகொண்ட புண்ணிய   ஸ்தலமிது

 சாரங்கபாணி சக்கரபாணி, ராமரென
 சகலரும் அருள்பாலிக்கும் ஸ்தலமிது

மங்களாம்பிகை என்றென்றும்
மங்களங்கள் வழங்கும் ஊர் இது,

 சுற்றியுள்ள கிராம மக்கள் தினம்
 சுற்றி வரும்  ஊர் இது.

 தேரோடும் வீதிகளில் காலம் காலமாய்
 தேர் நகரும் அழகு ஊர்வலமுண்டு. 

 சித்திரைத் திங்களில் கோவில்களில்
 சுற்றிவரும் தேர்கள் கொள்ளை அழகு

வருடம் முழுவதும் கோவில் திருவிழா
வரும் பக்தர் கூட்டம் கணக்கில்லை.....

அட்சய திருதியில் ஒன்று கூடும்
அனைத்து கோவிலின் கருட வாகனம்

பசுமை மிகுந்த கறிகாய்கள்
பக்கத்து சுற்றியுள்ள கிராமங்களில்

பிஞ்சு வெண்டை, பச்சை கத்தரி,
பிஞ்சு பரங்கி, நீள புடலை, மிதிபாகல், 

மணத்தக்காளி, வாழைத்தண்டு,
பிஞ்சு வெள்ளரி, குஞ்சு அவரை,

மணக்கும் புஷ்பங்கள் பலவகை,
மணக்கும் வாய்க்கு பாக்கு வெற்றிலை

அத்தனையும் புதியதாய் பசுமையாய்
அனுபவித்து மகிழ கும்பகோணம்

கும்பகோணம் சுற்றிலும்
கணக்கில்லா க்ராமங்கள்

விதம் விதமான மாம்பழங்கள்
வேறு எங்கும் இப்படி பார்த்ததில்லை

("காலையில் காலப்பாடி, காதர்,
     (காதர் தான் அல்ஃபோன்ஸா)
சாப்பிடும்போது செந்தூரா 
பகலில் பங்கனபள்ளி
மதியம் மல்கோவா
ராத்திரிக்கி பாதிரி, ருமாணி,
இரவு நேரம் இமாம்பசந்த்..."

ஒவ்வொன்றும் அத்தனை ருசி.....")
( இத்தனை பழங்களும் பக்கத்தில் கிராமத்தில் எங்கள் ஊரில்  எங்கள் தோப்பில் 1970's இல் விளைந்தது.....)

கும்பகோணம் சுற்றிலும் விளையும்
கணக்கற்ற வகை மாம்பழங்கள்........

வாழைத்தோப்பும் அதிகம்தான்
வாழைகள் விதமும் அதிகம்தான்

பலாப் பழ வகைகளும்
பல உண்டு எங்கள் ஊரில்

அற்புதமான ஊர்  கும்பகோணம்
அனைவரும் விரும்பும் கும்பகோணம்

சொல்லச் சொல்ல மாளாதே!
சொல்லி முடியா பெருமைகள்!

அனைவரும் வந்து பார்க்க வேண்டிய
அற்புதமான புண்ணிய ஸ்தலம் இது.

எங்கள் ஊர் பெருமைகள் போல்
உங்கள் ஊரில் உண்டா நட்பே ?

" சொர்க்கமே என்றாலும்.......எங்க
   சுகமான கும்பகோணம் போல 
                                                வருமா?....... "

No comments:

Post a Comment