இராம ஜென்ம பூமி முதல் கிருஷ்ண ஜென்ம பூமி வரை பகுதி 25
( Sujatha &Venkatesan 6381369319)
மறு நாள் பஸ் ஏறி கோவர்தன் (23)கிமீ போறோம்
வெயில் கொளுத்தறது...இவர் கோவர்தன் பார்த்துட்டு நேரா ஆக்ரா போயிடலாம்னு ரூமை காலி பண்ணிடலாம்னதால லக்கேஜை தூக்கிண்டு வெயில்ல நடக்க முடியல.பஸ்ஸடான்டலருந்து கோயுல் 1 கிமீ. ஒரு ரிக்ஷாவையும் காணோம். இவர் கிருஷ்ண பக்தர்கள் கிருஷ்ணர் நடந்த இடத்துல கால் படக்கூடாதுன்னு கொளுத்தற வெயில்ல அங்க ப்ரதஷணம் பண்ணின்டு வரத காட்டி நடக்கறதா கஷ்டம்கிறார்...மலையையே தூக்கின க்ருஷ்ணா..இந்த லக்கேஜை தூக்க தெம்ப கொடுன்னு தூக்கிண்டு நடக்கறேன்.
இவர் கதை சொல்லிண்டு வரார்.
🍀கோவர்தன மலை:
வைகுண்டத்தைவிட உயர்ந்தது மதுரா, மதுராவைவிட உயர்ந்தது விருந்தாவனம், விருந்தாவனத்தைவிட உயர்ந்தது கோவர்தன மலையாகும். ஆரம்பத்தில் 115 கிமீ நீளமும் 72 கிமீ அகலமும் 29 கிமீ உயரமும் கொண்டிருந்த கோவர்தன மலையானது, புலஸ்திய முனிவரின் சாபத்தினால் தினமும் கடுகளவு குறைந்து, தற்போது வெறும் 80 அடி உயரமாக மட்டும் காணப்படுகிறது. கலி யுகம் 10,000 வருடத்தை எட்டும்போது கோவர்தன மலை மறைந்து விடும் என்று கர்க ஸம்ஹிதையில் கூறப்பட்டுள்ளது.
கோவிந்த குண்டம்:
இந்திரனின் கொடிய மழைத் தாக்குதலிலிருந்து விரஜவாசிகளைக் காப்பதற்காக பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தனது ஏழு வயதில் இடது கை சுண்டு விரலால் கோவர்தன மலையை ஏழு நாள்கள் குடையாகத் தூக்கிப் பிடித்தார். தனது அபராதத்தை உணர்ந்த இந்திரன், சுரபிப் பசு, ஐராவத யானை, மற்றும் தேவர்களுடன் வந்து மன்னிப்பை வேண்டினார். அப்போது பகவானுக்கு அபிஷேகம் செய்ததால் தேங்கிய அபிஷேக நீரானது கோவிந்த குண்டம் என அழைக்கப்படுகிறது.
மானஸ கங்கை:
கன்றின் வடிவில் வந்த வத்ஸாசுரனை கிருஷ்ணர் வதம் செய்ததால், அவர் கங்கைக்குச் சென்று புனித நீராட வேண்டும் என்று அவரது நண்பர்கள் கூறினர். கங்கையை கிருஷ்ணர் மனதால் நினைக்க, கோவர்தனத்தின் ஒரு பகுதியில் கங்கை ஓர் ஏரி போன்று தோன்றியது. கிருஷ்ணரின் மனதிலிருந்து தோன்றியதால், இதற்கு மானஸ கங்கா என்று பெயர்.
ஒருமுறை கங்கையின் மகத்துவத்தைக் கேள்வியுற்ற விரஜவாசிகள் கங்கைக்குச் சென்று நீராட விரும்பினர். கங்கைக்குச் செல்ல வேண்டாம், கோவர்தனத்திலேயே கங்கை உள்ளது,” என்று கூறி அவர்களை கிருஷ்ணர் மானஸ கங்கைக்கு அழைத்து வந்தார். கரையில் கிருஷ்ணரைப் பார்த்த மாத்திரத்தில் அங்கு தோன்றிய கங்கா தேவியைக் கண்டு வியந்த விரஜவாசிகள் கங்கைக்கு தங்களது வந்தனங்களை செலுத்தி புனித நீராடினர்.
குஸும் ஸரோவர்:
கோவர்தன பகுதியில் அமைந்திருந்த ஒரு தோட்டத்தில் கோபியர்கள் பறித்திருந்த மலர்களை தோட்டக்காரரின் வடிவில் வந்த கிருஷ்ணர் தட்டிவிட, இவர் கிருஷ்ணர் என்பதை அறிந்து கொண்ட இராதை பூக்களை நீரினால் தூய்மைப்படுத்த வேண்டும் என்று விரும்பினார். கிருஷ்ணரோ உடனடியாக தனது புல்லாங்குழலால் தரையை இருமுறை குத்தினார், அதனால் ஏற்பட்ட இரண்டு துவாரங்கள் பாதாள லோகம் வரை சென்றன. அதிலிருந்து வந்த நீரினால் பூக்கள் தூய்மை செய்யப்பட, அந்த நீரானது குஸும் ஸரோவர் (பூக்களின் ஏரி) என அழைக்கப்படுகிறது. இதன் அருகில் வனபிஹாரி (வனத்தில் திரிபவர்) என்ற பெயரில் கிருஷ்ணருக்கு ஒரு கோயில் உள்ளது.🍀
கிருஷ்ண பக்தையான மீராவிற்கு கிருஷ்ணனின் திருநாமங்களில் மிகவும் பிடித்தது கிரிதாரி என்னும் நாமம்தானாம்.அதனால்தான் அவள் பாடல்கள் எல்லாம் 'மீரா கே பிரபு கிரிதர நாகர' என்னும் முத்திரையோடு முடிந்திருக்கும். எனக்கு மீரா அளவிற்கு பக்தி கிடையாது. ஆனாலும் எனக்கும் மீராவைப் போல கிருஷ்ணரின் பெயரில் கிரிதாரி என்னும் பெயர்தான் மிகவும் பிடிக்கும். அதனால் கோவர்தன் கிரியை தரிசிக்க வேண்டுமென்பதில் எனக்கு ஆவல் கொஞ்சம் அதிகம் இருந்தது.
திருவண்ணாமலையை கிரி வலம் செய்வது போல் கோவர்தன மலையையும் கிரி வலம் செய்வார்கள் என்று கேள்விப்பட்டிருந்ததால் திருவண்ணாமலையைப் போல பெரிய மலையாக இருக்கும் என்று நினைத்திருந்தேன். ஆனால் அப்படி எதுவும் இல்லை. சிறிய கோவிலாகத்தான் இருக்கிறது.
கோவில் உள்ளே நுழைந்ததும் வலது கை பக்கம் கிரிராஜ் சந்நிதி. அதற்கு பக்கத்திலேயே ஒரு கடையில் ஒரு சிறிய டம்பளரில் பாலும், இனிப்புகளும் விற்கிறார்கள். வட இந்தியர்கள் அங்கு பால் வாங்கி கிரிராஜுக்கு அபிஷேகம் செய்து விட்டு, இனிப்புகள் வாங்கி படைத்து விட்டுதான் கிருஷ்ணரை தரிசிக்க செல்கிறார்கள். கிருஷ்ணன் கோவர்த்தன கிரிக்கு பூஜை செய்யும்படி கோபர்களை பணித்த காரணமாக இருக்குமோ? எப்படியிருந்தாலும் அவர்களின் பக்தி பிரமிக்க வைக்கிறது.
உள்ளே பிரதானமாக இருப்பது வட இந்திய பாணி ராதா கிருஷ்ணர். அழகான தோற்றம். பிரதான மேடைக்கு இரு புறமும் சுவற்றில் பெரிய கோவர்த்தன கிரியை தூக்கி ஆயர்களை காக்கும் கிருஷ்ணன் படமும், காளிங்க மர்தன கிருஷ்ணனின் படமும் மாட்டப் பட்டிருக்கின்றன.
பிரதான மேடைக்கு இடது புறமும் வலது புறமும் உள்ள மேடைகளில் பஞ்சினால் கிருஷ்ணரும், கைலாச தோற்றமும் செய்திருந்தார்கள்.
இந்த கோவிலை பரிக்ரமா என்னும் கிரிவலம் இருபத்தோரு கிலோ மீட்டர்களை சுற்றி வர நன்கு மணி நேரம் ஆகும் என்றார்கள். ஒரு வேளை அப்படி சுற்றி வரும் பொழுது மலை கண்ணில் படலாம். இப்போது அந்த இடம் மேட்டுப்பாங்காக இருப்பதை வைத்தும், கிரிராஜ் சந்நிதியில் காணப்படும் பாறையை வைத்தும் ஒரு காலத்தில் மலையாக அல்லது குன்றாக இருந்திருக்கும் என்று நினைத்துக் கொண்டோம்.
நாங்கள் இந்த 2005 ல் வந்த டூரில் மீண்டும் மதுரா வந்து ஆக்ராவில் ட்ரெய்ன் ஏறி சென்னை வந்தாலும் கிருஷ்ணரோடு தொடர்புடைய மகாபாரதப்போர் நிகழ்ந்த குருஷேத்திரம் வேறொரு முறை சென்ற அனுபவம் நாளை…
படங்கள்1,2)கோவர்தன் ஓவியம்3)சிற்பம்4)கிரிராஜ் மந்திர் 5)குசும் சாஹர் குளம்
தொடரும்.





No comments:
Post a Comment