Saturday, June 27, 2020

திருப்புகழ் ஒரு எழுத்தாளர் பார்வையில் - சுஜாதா

திருப்புகழ் ஒரு எழுத்தாளர் பார்வையில் - சுஜாதா
==================================
திருப்புகழ் பற்றி சுஜாதா அதிகம் எழுதியதில்லை. இது “ திருப்புகழ் கருவூலம்” என்ற மலரில் 1988-இல் வெளியானது. -  “திருப்புகழ் அன்பர்கள்” (கர்நாடக மாநிலம்) வெளியிட்ட மலர்.  
==================================
இனி சுஜாதா வரிகளில்:

அருணகிரிநாதரின் திருப்புகழை நான் சின்ன வயதிலிருந்தே கேட்டிருக்கிறேன். ஸ்ரீரங்கம் சிறந்த வைஷ்ணவ ஸ்தலம் என்றாலும் அருகே இருக்கும்  திருவானைக்காவல், மலைக்கோட்டை தாயுமானவப் பெருமான், பிள்ளயார் கோயில் இவைகளால் சகல சமயக் கருத்துக்களும் சினேகமாக ஒன்றிவாழ்ந்தன, 

ஸ்ரீரங்கம் கோயிலிலேயே பல முக்கிய காரியஸ்தர்கள் சைவர்களாக இருந்தாலும் திருமண் அணிந்துகொண்டு, திருவரங்கப் பெருமானிடம் பக்தியாக இருப்பவர்கள். வீதிகளில் சில தினங்கள் பிரபந்தமும் ஒலிக்கும், சில தினங்கள் திருப்புகழ் பஜனை கோஷங்களும்  ஒலிக்கும்
முதன்முதலாக திருப்புகழில் என்னைக்  கவர்ந்தது அதன் சந்தம். மிருதங்கம்,  கஞ்சிரா இவைளின் அதிர்வுகளுக்கேற்ப அர்த்தம் புரியாவிட்டாலும் உள்ளுக்குள் துடிப்பை ஏற்படுத்தின

முத்தைத் தரு பத்தித் திருநகை என்னும் இறுக்கமான சந்தம்.
பாதி மதி நதி....சடைநாதர் அருளிய குமரேசா" என்று மெல்லச் செல்லும் நதி போன்ற சந்தமும் என்னில் அந்த வினோத சம்ஸ்கிருத - தமிழ் கலப்படமாக தமிழ்ச்சொற்களின் சாத்தியக்கூறுகளைப் புலப்படுத்தின-
திருப்புகழ் வெவ்வேறு வயதினருக்கு வெவ்வேறு உணர்வுகளைத் தரும். இளமையில் அதன் பாடல்களில் முற்பகுதியில் சொல்லியிருக்கும் காமம் என்னைக் கவர்ந்தது. அத்தனை சிறப்புடன் பெண்களுடன் கலப்பதை உலக இலக்கியம் எதிலும்  வர்ணிக்கப்படவில்லை என்பது என் அபிப்பிராயம். 

திருப்புகழின் ஓசை நயத்தை  மொழி பெயர்க்கவே முடியாது.  சற்று வயதானதும் திருப்புகழில் சொல்லியிருக்கும் மன்னிப்பும் பக்தியும் ஒருவனைக் கவர்கின்றன.
மரணத்தைப் பற்றிய பயம் ---
"கயல்விழித் தேனெனைச் செயலழித் தாயெனக் கணவகெட் டேனெனப் பெறுமாது கருத்துபுத்ராஎனப் புதல்வரப்பா எனக் கதறிடப் பாடையிற் றைலைமீதே" 
நாமே சொல்வது போன்ற உணர்வை  ஏற்படுத்துகிறது.
"தசையு முதிரமு நிணமொடு  செருமிய 
கரும கிருமிக ளொழுகிய பழகிய 
சடல வுடல்கடை சுடலையிலிடு சிறு  குடில்பேணும்" 

அந்த பயத்தை நீக்க 

இரவு பகலற 
எனது அற 
நினது அற.
இனிமை தரும் தனிமையை நாடு
வேத வித்தகா சாமி !

என்று சரணடைய வழியும் காட்டுகிறார்.

திருப்புகழில் எல்லாம் இருக்கிறது. அழகு பழகுகிறது. வாழ்வின் அதிசயங்கள், அசிங்கங்கள், இன்பங்கள், பக்திப்ரவாகம், மூச்சை நிறுத்தும்சந்தம். என்போன்ற எழுத்தாளர்களுக்கு தமிழ் மொழியில் வார்த்தை ஜாலங்களைக்  கண்டுகொள்ள ஒரு வரப்ராதம்.
(நன்றி: பசுபதிவுகள் - தமிழ் வலைப்பூ)

No comments:

Post a Comment