Friday, June 26, 2020

திருமயம் ஸ்ரீ சத்திய மூர்த்தி பெருமாள் கோவில்.

திருமயம் ஸ்ரீ சத்திய மூர்த்தி பெருமாள் கோவில்.

ஸ்ரீ  உஜ்ஜிவனத் தாயார் ஸமேத ஸ்ரீசத்திய மூர்த்திப்  பெருமாள் {உற்சவர் :ஸ்ரீ அழகியமெய்யர்}திருமயம் திவ்யதேசம், புதுக்கோட்டை மாவட்டம்.

திருமயம் என்ற திருமெய்யம், பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் 43 ஆம் திருப்பதியாகும். புதுக்கோட்டையிலிருந்து கிட்டத்தட்ட இருபது கி.மீ தொலைவில் திருமெய்யம் திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் முத்தரையர்களால் கட்டபட்ட குடைவரைக்கோவில்.

ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட (பாடப்பட்ட) 108 திவ்ய தேசங்களில் 18 திவ்ய தேசங்கள் பாண்டிய நாட்டில் அமைந்துள்ளன. திருமங்கை ஆழ்வார் தனியாக சென்று மங்களாசாசனம் செய்த கோயில்கள் மொத்தம் 46 ஆகும். அவற்றுள் இந்தத் திருமெய்யமும் ஒன்று. இத்தலத்தில் சத்திய மூர்த்தி, திருமெய்யர் என இரண்டு மூலவர்கள் உள்ளனர். சைவ வைணவ ஒற்றுமைக்கு அருகருகே அமைந்த சத்திய கிரீஸ்வரர் (சிவன்) கோவிலும் ,சத்தியமூர்த்தி பெருமாள் கோவிலும் சாட்சி பகர்கின்றன. திருமயத்தின் விஷ்ணு கோயிலுக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. இக்கோவில் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலை விட மிகவும் பழைமையானது என்றும், இது காரணமாக இதற்கு ‘ஆதி ரங்கம்’ என்றும் பெயர் ஏற்பட்டதாக நம்பப்படுகிறது. சத்ய மகரிஷி முன் தோன்றி பெருமாள் காட்சி தந்த தலம்.
கோயில் நடைதிறந்திருக்கும் நேரம்
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை

முத்தரையர் காலக் குடைவரைக் கோவில்
இது ஒரு முத்தரையர் காலத்திய குடைவரைக் கோவிலாகும். திருமயம் மலைச் சரிவில் ஒரே கல்லினால் அமைந்த அதிசயிக்கத்தக்க குடைவரைக் கோவிலில் இரண்டு பெருமாள் சன்னதிகள் உள்ளன. வேலைப்பாடமைந்த கற்றளியான சத்தியமூர்த்தி கோயில் அவற்றுள் ஒன்று. இக்கோவிலுக்கு ஒரே ஒரு சுற்றுச்சுவர் மட்டும் உள்ளது. எனவே இந்த சத்தியமூர்த்தி பெருமாள் கோவிலை தனியே திருச்சுற்று சுற்றி வரமுடியாது. காரணம் மூலவர் சந்நிதி குடைவரைக் கோயிலாக அமைந்துள்ளதேயாகும்.

ஆதிரங்கம்
[1] சதுர் யுகம் என்பது ஒரு யுகம் முடிந்து மறு யுகம் பிறக்கும் காலச் சக்கரத்தைக் குறிக்கும் அளவு. இந்த அளவின் படி திருவரங்கத்து பெருமாள் 64 சதுர் யுகங்களுக்கு முன்னால் தோன்றினார். ஆனால் திருமெய்யம் சத்யகிரிநாதன் (அழகிய மெய்யன்) 96 சதுர் யுகங்களுக்கு முன்னரே தோன்றியவராதலால், திருமெய்யம் திருத்தலம் ஆதிரங்கம் என வழிபடப்படுகிறது.

மூலவர் சத்தியமூர்த்தி
இத்தலத்தில் சோமச்சந்திர விமானத்தின் கீழ், நின்ற கோலத்தில் சத்தியமூர்த்தி எனும் நாமம் தாங்கி ஒரு கரத்தில் சங்குடனும் மற்றொரு கரத்தில் பிரயோகச் சக்கரத்துடனும் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார். தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு என்றும் சத்தியமாகத் துணை நிற்பேன் என்று இத்தல இறைவன் வாக்குறுதி தந்ததால் இவருக்கு ’சத்தியமூர்த்தி’ என்ற திருப்பெயர் வந்தது.

மூலவர் திருமெய்யர்
இக்குடைவரைக் கோவிலின் மூலவர் ‘யோக சயன மூர்த்தி’யான ’திருமெய்யர்’ உருவம் ஸ்ரீரங்கத்தை விட மிகப்பெரிய உருவம் தாங்கியவர். திருமெய்யத்தின் பள்ளி கொண்ட பெருமாள் உருவம் இந்தியாவிலேயே மிகப்பெரியது. சுற்றிலும் தேவர்கள், ரிஷிகள், பெருமாளின் நாபிக் கமலத்திலிருந்து புறப்படும் தாமரை மலரில் பிரம்மாவும், மார்பில் குடியிருக்கும் மகாலட்சுமியும் எழுந்தருளியுள்ளார்கள். மூலவரான பெருமாளுக்கு 12 வருடங்களுக்கு ஒருமுறை தைல காப்பு இடப்படுகிறது. ‘மது’ ‘கைடபர்’ என்னும் இரு அசுரர்களிடமிருந்து பூமிதேவியையும், தேவர்கள், கின்னரர்களையும் காப்பாற்றி அருள்கிறார் என்கிறது தல வரலாறு.

தாயார் உஜ்ஜீவனத்தாயார்
இத்தலத்தின் தாயார் உஜ்ஜீவனத்தாயார் (ஸ்ரீஉய்ய வந்த நாச்சியார்) எனும் திருநாமம் தாங்கி எழுந்தருளியுள்ளார். இத்தாயாரை வழிபட்டால் குழந்தைபேறு நிச்சயம்; பல வாழ்க்கை நலன்களும் விளையும்; பேய், பிசாசு பிடித்தவர்கள், நரம்புத் தளர்ச்சி நோயில் துன்புறுபவர்கள் நன்மை பெறுவர் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மேலும் மனநிலை பாதிப்புகளுக்கு உடனடியாக பலனளிக்கும் பரிகாரத் தலம் இத்தாயாரின் சந்நிதி. இவர் படிதாண்டா பத்தினி என்பதால், வீதிஉலா வருவது இல்லை. தரிசிக்க திருக்கோயிலுக்குச் சென்றால் மட்டுமே முடியும்.

பழங் காலத்தில் தினமும் இரவில் தாயாருக்கு புட்டும் பாலும் நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு விநியோகம் செய்து வரும் வழக்கம் இருந்து வந்தது. பின்னர் பண வசதி இன்மையால் இது நின்றுவிட்டது.[1]

தல வரலாறு
பெருமாள் அரவணையில் படுத்து யோக நித்திரையில் ஆழ்ந்திருந்த சமயம், மது மற்றும் கைடபர் என்ற இரு அரக்கர்கள் ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய தேவியரை அபகரிக்க முயன்றனர். இதற்கு அஞ்சிய தேவியர் இருவரும் ஒளிந்து கொள்ளலாயினர். பெருமாளின் திருவடிக்கருகில் பூதேவியும், மார்பில் ஸ்ரீதேவியும் தஞ்சமடைந்தனர். பெருமாளின் நித்திரை கலைந்துவிடுமே என்ற கவலையில் அவரை எழுப்பாமல் ஆதிசேஷன் என்ற ஐந்து தலை நாகம் தன் வாய் மூலம் விஷத் தீயை கக்கினார். பயந்து நடுங்கிய அரக்கர்கள் ஒடி ஒளிந்தனர். கண்விழித்த பெருமாளிடம் தன் செய்கை பெருமாளுக்கு சினத்தை ஏற்படுத்திவிடுமோ என்று பயந்து அஞ்சியவாறு இருந்த ஆதிசேஷனை, பெருமாள் தான் துயில்கையில் அரக்கர்கள் செய்த வனகொடுமையினைத் தடுக்க எடுத்த வீரச்செயல்களை மெச்சிப் புகழ்ந்தார்.

புராண வரலாறு
திருமெய்யம் திருக்கோயிலின் பெருமை பிரம்மாண்ட புராணத்தில் விளக்கப்பட்டுள்ளது.
சிவபெருமானே நாரதருக்கு இத்திருத்தலப் பெருமைகளைக் கூறியதாகவும், சத்திய தேவதையும் தர்மதேவதையும் கலியுகத்தில் இங்கு வந்து வழிபடுவர்களுக்கு கவலை இல்லா மனத்தையும் நீண்ட ஆயுளையும் அளிப்பதாகவும் புராண வரலாறு கூறுகிறது.
சத்தியகிரி எனும் இம்மலை சாளக்கிராம மலைக்கு ஒப்பானது என்று பிரம்மாண்டப் புராணத்தில் கூறப்படுகிறது.
சைவ வைணவ ஒற்றுமை
திருமெய்யம் குன்றினுடைய செங்குத்தான தெற்கு நோக்கிய சரிவில் திருமாலுக்கும் சிவபெருமானுக்கும் அறுபதடி தூரத்தில் அடுத்தடுத்து இரு திருக்கோயில்களும் அமைந்துள்ளன. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருமெய்யம் திருமாலையும் , சிவபெருமானையும் ஒரே வாயிலின் வழியாகச் சென்று தரிசிக்கும் வண்ணம் இத்திருக்கோயில்கள் அமைக்கப்பட்டு சைவ வைணவ ஒற்றுமைக்கு உதாரணமாக உள்ளன.

புஷ்கரணி
சத்ய புஷ்கரணி அனைத்துப் பாவங்களையும் போக்கும் சக்தி வாய்ந்த திருக்குளமாகக் கூறப்படுகிறது.

சிற்பக்கலை சிறப்பு
தசாவதார மண்டபத்தில் உள்ள தூண்களில் உள்ள சிற்பங்கள் சிறப்பானவை. தூண்களில் உள்ள தசாவதார திருக்கோலங்கள் மற்றும் துவஜஸ்தம்பத்திற்கு அருகில் உள்ள தூணில் உள்ள ராமாவதாரம் மற்றும் வாமன அவதாரம் சிற்பங்கள் அழகு வாய்ந்தவை.

வேண்டுதல்கள்
குழந்தைப்பேறு இல்லாதோர், பேய் பிசாசு பிடித்தவர்கள், நரம்புத்தளர்ச்சி நோயில் துன்புறுபவர்கள் நலம் பெற தாயாரிடம் வேண்டுதல்கள்

பலன்கள் : தொன்நம்பிக்கைகள்
இத்தலம் பரிகார தலமாக பல்வேறு பிரச்சனைகளுக்குக் கூறப்படுகிறது.[1]

மனநிலை பாதிப்பு
திருமணத்தடங்கல்
கணவன் மனைவி ஒற்றுமையின்மை

நேர்த்திக்கடன்
உஜ்ஜீவனத்தாயாருக்கு திருமஞ்சனம், புடவை சாத்துதல். வளையல்,பொம்மை ஆகியவற்றை உபயம் அளித்தல்.
பெருமாளுக்கு வெண்ணெய் பூசுதல், தூய உலர்ந்த ஆடை சாற்றுதல்.
திருவிழா
வைகாசி பௌர்ணமி தேரோட்டம். பத்து நாட்கள் திருவிழா.
ஆடிபூரம் திருவிழா, பத்து நாட்கள் திருவிழா. ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கூடுவர்.
கிருஷ்ணஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி ஆகிய நாட்கள் சிறப்பு உடையது.
மங்களாசாசனம்
திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார். ஒரு பாசுரம்:

மையார் கடலும் மணிவரையும் மாமுகிலும் கொய்யார் குவளையும்
காயாவும் போன்று இருண்ட மெய்யானை மெய்ய மலையானைச்
சங்கேந்தும் கையானை கைதொழாக் கையல்ல கண்டோமே.

No comments:

Post a Comment