தாடி (மனதை தொட்டுவிடும் கதை – 91)
#ganeshamarkalam
வேலை ஓய்வுக்கப்புரம் செய்யணும்னு வச்சிருந்ததில் ஒண்ணு ட்ரெக்கிங்க் போரது. டிஸ்கவரி சேனல் பாத்துட்டு அதே மாதிரி நானும் செஞ்சுபாக்கணும்னு. எப்படியும் கூடியசீக்கிரம் மூட்டு வலி வந்து, உக்காந்து எழுந்திருக்கரதே ட்ரெக்கிங்க் மாதிரி தோணும். அது நடக்கிரபடி நடக்கட்டும் இப்போ நிஜமாவே எதுலேயாவது ஏறிப்போகணும்னு.
அதுக்கேத்தா மாதிரி என் ஏரியாவில் சிலர் சபரிமலைப்போக பிளான் பண்ணிண்டிருந்தா. கேள்விப்பட்டு இதுவே புண்ய யாத்திரையாவும் நாம் நினெச்ச ட்ரெக்கிங்காவும் இருக்கும்னு சேர்ந்துண்டேன். இதில் அனுபவமுள்ள ஒருத்தர் ஒரு குருசாமிகிட்டே என்னை அழைச்சிண்டு போனர். விதிமுறைகளும் அனுஷ்டானங்களும் அவர் சொல்லித்தந்தர். எல்லாத்துக்கும் ஷார்ட்கட்டும் விதிவிலக்குகளும் உண்டுன்னு திரும்பி வர வழீலே கூட்டிண்டுபோனவன் சொல்லிண்டே வந்தான். யோசிச்சேன். என்ன நியமங்களோ, அதை சரியா கடைப்பிடிப்பதுன்னு ஒரு வைராக்கியம் வந்தது. நம்மால் முடியாதது ஒண்ணும் இல்லைங்கர கர்வம்தான் எல்லாத்தையும் செய்யவச்சது. பக்தி சிரத்தையெல்லாம் இல்லை. ஆபீஸ், உத்யோகம், கஸ்டமர் மீடிங்க், எதுவும் இல்லாததனால் ஒரு சபரிமலை யாத்ரீ எப்படி தயார்படுத்திக்கணுமோ அப்படி.
ட்ரெக்கிங்க்னா அப்படி ஒரு ட்ரெக்கிங்க். அழகா போயிட்டு அற்புதமா தரிசனம் கிடெச்சு ஆத்துக்கு ரயிலில் திரும்பி வரச்சே என்னைப்போல் கன்னிச்சாமிகளுக்கே வர டவுட் நிறைய வந்தது.
குருசாமியோ ஃபர்ஸ்ட் கிளாசில் சுகமா வரர். நாங்க 3டியர் கோச்சில். எந்தக்கோச்சுன்னு விசாரிச்சிண்டு அவர்கிட்டே போய் சரணடஞ்சோம். எல்லாரும் “ஆத்துக்கு போனதும் என்ன செய்யணும்”, “கழட்டின உடைகளை அடுத்த பயணத்துக்காக எப்படி எடுத்து வைக்கணும்”, “போட்டுண்ட மாலையை என்ன பண்ரது” எல்லாம் கேட்டுண்டா.
என் டர்ன் வரச்சே பல கேள்விகளுக்கும் தீர்வு கிடெச்சுட்டதுனாலே, “ஒண்ணே ஒண்ணு பாக்கி இருக்கு அதை கேக்கட்டுமா”ன்னேன். “பேஷா”ன்னர்.
“எப்போ ஷேவ் பண்ணிக்கலாம்?”
எப்பேர்ப்பட்ட இடத்துக்கு போயிட்டு வந்தாலும் நமக்கு நம்ம விசாரம். “ஆத்துக்கு திரும்பின அன்னைக்கு விட்டுட்டு மத்தாநாள் உங்க சௌக்கரியம்போல.” சொன்னவர், அத்தோட நிக்காம “உங்கள் வயசுக்கும், களையான முகத்துக்கும் தாடி ஸ்யூட் ஆரது”ன்னும் சொன்னர். “ஆமாம், ஆமாம்”னு கூட இருந்த தலைகள் ஆட நானும் நம்ப ஆரம்பிச்சேன்.
ஒரு 10 நாளாவே எனக்கு ஒரு ஹேபிட் ஒட்டிண்டிடுத்து. அதான் நீண்டு வளர்ந்த வெண் தாடியை நீவி விட்டுக்கரது. ரெண்டு விரலால், இல்லைன்ன 3 விரல். பின்னாடிலேந்து முன்னாடி, இல்லை எதிர்பக்கமா, சில சமையம் ரெண்டும் பண்ணிட்டு, கொத்தா பிடிச்சு நேரே கீழ்நோக்கி ஜென்டிலா! கொஞ்சநாழி அப்படி பண்ணலைன்னா தாடையில் நம நமன்னுது. நமநமப்பு தாடையிலா, இல்லை கைவிரலிலான்னு கொஞ்சநாழி கழிச்சு குழப்பம். அதான் இத்தை மழிச்சுடலாம்னு யோசிச்சிண்டிருகச்சே இவர் இப்படி சொல்லி வச்சர். எப்படீருந்தாலும் இன்னும் ஒருநாள் இருக்கு, யோசிச்சு ஒரு நல்ல முடிவா எடுத்துடணும்னு எங்கள் கோச்சுக்கு வந்தேன். ரயில் ஆட்டத்தில் தாடியும் ஆடித்து.
எல்லோரும் அவனவன் வாங்கிண்டு வந்த நேந்திரம் சிப்ஸ் பாக்கெட்டை பிரிச்சு மேஞ்சானுவ. எங்கிட்டேயும் நீட்டினா. அதில் ஒண்ணு, வெல்லம் இஞ்சி தடவி முழிமுழியா இருக்கும். அதை மட்டும் கையில் அள்ளிண்டேன். நீட்டினவனுக்கு இவன்கிட்டே நீட்டிருக்கப்பிடாதோ இவ்ளோ எடுத்துண்டுட்டானேன்னு. இன்னும் மாலை போட்டிருந்ததால் திட்ட முடியலை.
ஒரு சாமி இன்னோரு சாமியை திட்டலாமான்னும் தெரியலை. ஆனா ஆத்துக்குப்போய் விரதம் முடிக்கரத்துக்கு முன்னாடி சிப்ஸ் சாப்பிடலாம். தப்பில்லையாம்.
நான் இங்க்லீஷ் எலெக்ரிகல்ஸில் வேலை பாக்கிரச்சே எங்கள் ஸ்டேஃபோர்ட் அலுவலகத்தில் ஜான் எட்வெர்ட்ஸ்னு ஒரு நண்பர். அவன் தாடி ப்ரஸித்தம். அவன் பரம்பரையில் எல்லோரும் தாடி வச்சிருக்கா. மலைக்குப் போகாமலேயே! அதை பெருமையா காட்டுவான். அங்கே போனா அதை புகழ்ந்து பேசுங்கோ உங்களுக்கு ட்ரிங்க்ஸ் வாங்கிக்கொடுத்து டின்னர் ட்ரீட் தருவான்னு சிலர் சொல்லியிருந்தா. அப்படியே நடந்தது. ஆத்துக்கு போய், ஒரு செல்ஃபீ எடுத்து அவனுக்கு அனுப்பணும். என்ன சொல்லுவான்? எங்கூட போட்டி போடராயாம்பன். அனுப்பிச்சேன். “Who is this?”ன்னு பதில் அனுப்பினான். அப்போதான் தெரிஞ்சது எனக்கு என்னவோ ஆகிடுத்துன்னு. தாடியோட என்னை அவனுக்கு அடையாளம் தெரியலை. இது புதுப்பிர்ச்சனையோன்னு தோணிப்போச்சு.
இன்னைக்குள்ளே நாமா ஏதாவது சில காரியங்களை செஞ்சு அதுலேந்து நமக்கு இந்த தாடி சரியா செட் ஆகுமான்னு கண்டுபிடிக்கணும்னு முடிவுபண்ணினேன்.
முதலில் ஆத்துலேந்து கிளம்பினேன், பஸ்ஸில் ஏறி சௌக்கார்பேட்டைவரை போயிட்டு வரலாம்னு. ரொம்ப நாளாவே கேஸர் லஸ்ஸி வாங்கிக்குடிக்கணும்னு ஆசை. மின்ட் ஸ்ட்ரீட்டில் இருக்கும் தினேஷ் சோனியும் அவர் செஞ்சுகொடுக்கும் லஸ்ஸியும் பிரசித்தி. அரை கிளாஸ் உங்களால குடிக்கமுடிஞ்சா நீங்க பீமன். நேர பூக்கடை பஸ் ஸ்டாண்டில் இறங்கி அங்கே போனேன். என்னைப்பாத்துட்டு “நாற்காலி வேணுமா பெரியவரே”ன்னான். ஏன் அவனுக்குத் அப்படி தோணித்து?
குடு குடு கிழவன், பாவம் இவ்ளோ தூரம் நடந்து வந்திருக்கர், லஸ்ஸி கொடுத்து தர்மம் செஞ்சா நல்லதுன்னு தோணித்தோ? அவன் கொடுத்த கிளாஸை “ரெண்டு கையால் பிடிங்கோ”ன்னு கொடுத்தான். குடிக்க ஆரம்பிச்சதும்தான் தெரிஞ்சது வாய்க்குள்ள லஸ்ஸீ ஏன் போகலைன்னு. கெட்டியாத்தான் இருக்கு, தெரியும், ஆனால் முதல் ரெண்டு விழுங்கு தாடிக்கு சமர்ப்பணம் ஆச்சு. என் வெள்ளைத்தாடி மஞ்சளா மாறரதை நின்னிண்டிருந்தவா எல்லோரும் ரஸிச்சா. ஒரு சின்னப்பையன், “தாத்தா நீ எல்லாத்தையும் கீழே விடர”ன்னான். அப்போதான் தெரிஞ்சது தப்பு நடக்கிரதுன்னு.
அப்படியே கையால் தாடியை ஸ்டைலா வழிச்சுவிட்டுண்டு – அதான் தெலுங்கு சினிமா பாக்கிரோமே – கையையும் அவாளுக்கு தெரியாம நக்கிண்டேன், அப்புரம் மீசையும் தாடியையும் நன்னா விலக்கிண்டு உதட்டை கிளாசால் கண்டுபிடிச்சு மிச்சத்தை குடிச்சேன். காசு கொடுக்கரச்சே ஆச்சர்யமா பாத்தான். கொடுப்பேன்னே எதிர்பாக்கலை. பர்ஸ் வேர வச்சிருக்கேன்.
அங்கேந்து நேர அடையாறில் என் பொண்ணாத்துக்கு. தன் 1 வயசு பொண்ணுக்கு சட்டை வாங்கணும் “நான் போவேன், கொஞ்சம் ஆத்துக்கு வந்து குழந்தையை பாத்துக்கரையா”ன்னும் வெய்யலில் அவளை இழுத்தடிக்க வேண்டாமே”ன்னு கேட்டுண்டா. அங்கே போனா குழந்தை சமுத்தா தூங்கரது. என்னை அதிஸயமா பாத்த என் சீமந்த புத்ரியோ “அதான் மலைக்குபோயிட்டு வந்துட்டாயோனோ, இன்னும் என்ன கூத்து”ன்னு கமென்ட் விட்டாள். “நீ பாத்துக்கோ, சின்னது எழுந்துக்கரத்துக்குள் பக்கத்தில் போயிட்டு இதோ வந்துட்ரேன்”னு போனா. தனக்குன்னாலும், தன் குழந்தைக்குன்னாலும் துணி எடுப்பதில் பெண்களுக்கு டயம் ஆகுமா இல்லையா?
என் போராத நேரமா இல்லை இவளுக்கு பசிச்சுடுத்தான்னு தெரியலை, சின்னது முழிச்சிண்டுடுத்து. அம்மாவை காணோம். யாரோ பூச்சாண்டியை துணைக்கு விட்டுட்டு போயிருக்கான்னு மட்டும் அந்த சின்ன மண்டைக்குள் தோணியிருக்கு. நான் கிட்டெக்க போய் “தாத்தாடி கண்ணு, தாத்தா வந்திருக்கேன்”னு சொல்லப்போய் வீல்னு ஒரு சத்தம் போட்டாளே பாக்கணும். கையில் எடுத்து தூக்கி வச்சிண்டு கொஞ்சலாம்தான், சாதாரணமா போயிருந்தா பாத்ததும் தத்தக்கா புத்தக்கான்னு வந்து ஆசையா கட்டிண்டு விளையாடுவள். இன்னைக்கு?. நல்லவேளை என் பெண் வந்து தன் பெண் கிட்டேந்து என்னை காப்பாத்தினா.
கிளம்பிப்போரச்சே மட்டும் அந்த சின்னது ஸ்பஷ்டமா டாடா காட்டித்து. இனிமேல் வந்துடாதேங்கிராப்புலே.
திரும்பி வரச்சே பஸ்ஸில் ஒரு பொண்ணு லேடீஸ் சீட்டிலேந்து தான் எழுந்து “நீங்க உக்காருங்க”ன்னு இடம் கொடுத்தாள். இன்னொரு பொண் பக்கத்தில் உக்கார கூச்சமா இருந்தது. “பரவாயில்லை பெரியவரே, உக்காருங்க”ன்னா. பின்னாடி சீட்டில் இருந்தவ “இங்கே முடியலைன்னா ஸ்டாப்பில் நிக்கரச்சே முதியோர் சீட் முன்னாடி இருக்கு அங்கே போங்க”ன்னு அட்வைஸ். 58 வயசில் செப்டம்பரில் ரிடையர் ஆனேன். ஜனவரியில் மலைக்குப்போனேன். அதுக்குள்ள எப்படி முதியோர் ஆனேன்?
குரோம்பேட்டை பஸ் ஸ்டாண்டில் இறங்கச்சே, பைக்கில் வந்த நண்பர், எங்கூட மலைக்கு வந்தவர் என்னைப்பாத்துட்டு “வாங்கோ சார் ஆத்தில் ட்ராப் செஞ்சுட்ரேன்”னு சொன்னார். அவர் எங்கூட ட்ரெக்கிங்க் வந்ததால் அவருக்கு என்னை அடையாளம் தெரிஞ்சது. போர வழீலே “நான் தாடி வச்சுக்கவா இல்லை எடுத்துடவா”ன்னு கேட்டேன். அவரோ ஒரே வாரம் விரதம் இருந்துட்டு ஃபாஸ்ட் ட்ராக் பில்க்ரிமேஜ் செஞ்சவர். ஆத்துக்கு வந்ததும் ஷேவ் செஞ்சாச்சாம். என்னை “எடுக்கவும் வேண்டாம், வைக்கவும் வேண்டாம், இது ரெண்டுக்கும் நடுவில் நிறைய ஆப்ஷன் இருக்குன்னு சொல்லிக்கொடுத்தர். ஒரு வெப்சைட் கொடுத்து “அங்கே பாருங்கோ”ன்னு அனுப்பிச்சர். ஆமாம், இதுக்கெல்லாம் கூட நெட்டில் சொல்ரா.
அந்த வெப்சைட் இன்டெராக்டிவ். என் செல்ஃபீ, அதான் ஜான் எட்வர்ட்ஸுக்கு அனுப்பிச்சதை அப்லோட் செஞ்சால் அது உடனே இந்தத்தாடியை எப்படியெல்லாம் விதவிதமா ட்ரிம் செஞ்சுக்கலாம்னு டக்கு டக்குன்னு காமிக்கரது. கொஞ்சநாழி அதை ஓடவிட்டு “என் மூஞ்சிபோர போக்கை” ஆச்சர்யமா பாத்திண்டிருந்தேன். காபி போட்டு எடுத்துண்டு கிட்டக்க வந்த ஆத்துக்காரி “அதை பாத்திண்டிருந்த என் நிஜ மூஞ்சி பொர போக்கை பாத்துட்டா.
“என்னனா ஆச்சு உங்களுக்கு, அப்பவே சொன்னேனே, போய் காசைக்கொடுத்து ஷவரம் செஞ்சுண்டு வரசொல்லி எத்தனை நாழி ஆச்சு. காபியை குடிச்சுட்டு உடனே அதைச்செய்யுங்கோ”ன்னா. நான் “இங்கே வந்து பாருடீ, ஷவரம் எத்தனை விதமா பன்ணிக்கலாம்னு போட்டிருக்கு, உனக்கு எது பிடிக்கரதுன்னு சொல்லு அதையே வச்சுக்கலாம்”னேன்.
என் பக்கத்துலேயே ஒரு ஸ்டூலை இழுத்துப்போட்டுண்டு உக்காந்தா.
அவளுக்கு இப்போ தாடியோட இருக்கர என் மூஞ்சி அப்புரம் அவ 35 வருஷம் முன்னாடி கல்யாணம் பண்ணிண்ட மூஞ்சி இது ரெண்டைத்தவிர மத்ததெல்லாமே பிடிச்சிருந்தது. வெளிப்படையா சொல்லலேன்னாலும் அவள் முகத்தில் மலர்ந்த மகிழ்ச்சியை வச்சு அப்படித்தான் முடிவுக்கு வரணும். எல்லாம் என் முகமாவே இருந்தாலும் ஃப்ரென்ச் பியர்ட் வச்ச என் முகம் 8ஆவதா நெட்டில் வந்ததைப்பாத்துட்டு, “கொஞ்சம் அங்கே நிறுத்துங்கோ, என்லார்ஜ் பண்ணுங்கோ அப்படியே பிடிங்கோ”ன்னுட்டு “இவர் யார்? நன்னா இருக்காரே இவர் மாதிரி வச்சுண்டு வாங்கோ”ன்னுட்டு டம்ளரை எடுத்துண்டு போனா.
அப்படி பண்ணிண்டா நம்ம துணை ஜனாதிபதி ஒருத்தர் இருந்தர் அவர் மாதிரி ஆகிடுவேனோன்னு பட்டது. குலதெய்வம் கோவிலுக்கு அப்படியே போனா எங்கூர் கிராமத்தில் இருக்கரவா அங்கே முன்னாடி குடியிருந்துட்டு துபாய்க்கு ஓடிப்போன துலுக்காணம் 40 வருஷம் கழிச்சு திரும்பி வந்துட்டான்னு பேசிப்பா.
பாத்தேன், குருசாமி, தினேஷ் சோனி, என் பேத்தி, பஸ் கண்டக்டர், என் ஆத்துக்காரி இப்படி பலபேர் சொன்னதை எல்லாம் கனக்கில் எடுத்துண்டு அதிகநேரம் யோசிக்காம, நேர க்ரீன் ட்ரென்ட்ஸ்கு போனேன். அங்கே என்னோட ரெகுலர் பர்கண்டி செர்வீஸ் செய்ய வந்தான். “புது மெனு பாக்கரீங்களா”ன்னு மூஞ்சி கிட்டே நீட்டினான். பியர்ட் ட்ரிம்மிங்க் 345/- பிளஸ் டாக்ஸ். “கார்ட் கொண்டுவரலை ஆத்துக்கு போய் எடுத்துண்டு வந்துடரேன்”னு தப்பிச்சேன் பிழைச்சேனு அங்கேந்து நேர பஸ் ஸ்டாண்ட் கிட்டே பழைய ரிவால்விங்க் சேர் போட்ட சலூனுக்குள் நுழைஞ்சேன். 70 ரூபாய்க்கு பேரம் பேசி முழுத்தாடியும் மழிச்சிண்டு, மீசையையும் எடுத்துட்டு காத்தோட்டமா மூஞ்சியை மாத்திண்டு ஆத்துக்கு வந்தேன்.
குளிச்சுட்டு பாத்ரூம்லேந்து வெளீலெ வந்தா என் பொண் தன் குழந்தையோட உக்காந்துண்டு அவ அம்மாவோட பேசிண்டிருக்கா. சின்னது, நேத்தைக்கு என்னைப்பாத்துட்டு அலறினது, இன்னைக்கு “தாத்தா எங்கே”ன்னு கேட்டதாம் காமிச்சிட்டுப் போலாம்னு வந்தாளாம்.
“அடி செல்லம், தாத்தாவை தேடினாயா”ன்னு கிட்டக்க போனால், முழுசா தாடி/மீசை இல்லாமா அப்போதான் உரிச்ச நாட்டுக்கோழி மாதிரி இருந்த என்னப்பாத்துட்டு மறுபடியும் வீல்னு கத்தித்து.
“இப்போ ஏண்டி உம்பொண் கத்தரா”ன்னு விசாரிச்சா, அவ கேக்கரா “உன் மீசையயும் ஏன் எடுத்தாய்”னு. அவளுக்கு முன்னாடி மீசை மட்டும் வச்சிண்டு கொஞ்சின தாத்தாவைத்தான் தெரியுமாம்.
70 ரூபாய்க்கு பாக்கேஜ் டீல், ரெண்டையும் எடுக்கலாம்னு ஆஃபர்னு எப்படி சொல்வேன்?
No comments:
Post a Comment