இராம ஜென்ம பூமி முதல் கிருஷ்ண ஜென்ம பூமி வரை பகுதி 20
திரு ஆயப்பாடி என்று தமிழர்களால் வைஷ்ணவர்களால் போற்றப்படும் இடம். பசுக்களின் கூட்டம் நிறைந்த இடம் கோகுலம். ஐந்தாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் பழைமை மாறாமல் காட்சியளிக்கின்றது. மாடு இனங்களும் கால்நடைகளும் வாழ்வுதர வாழும் மக்கள் கூட்டம். பால், தயிர், வெண்ணெய் செழிப்பாகக் கிடைக்கிறது.
கோகுலத்தில் கண்ணன் புரண்டு விளையாடிய இடம் என்று கூறியவுடன் நம் மக்கள் மண்ணிலே புரண்டு புரண்டு இன்பம் அடைகின்றனர். என்ன ஆச்சர்யம்! ஒருதுளி மண்ணும் உடம்பிலே ஒட்டவில்லை. கண்ணன் தவழ்ந்து சென்று மகிழ்ந்தது போல் முட்டியிட்டு தவழ்ந்து சென்று கண்ணன் ராதை சந்நிதியில் மகிழ்ந்து குழந்தையாக மாறி தரிசனம் செய்கின்றனர்.
மண்ணை உண்ட கண்ணன் ஏழு உலகங்களையும் தன் வாயில் யசோதை மயங்கக் காட்டிய “பிரம்மாண்ட காப்’, பிறர் வீட்டு வெண்ணெய் உண்ட கண்ணனை உரலில் கட்டிய “உகல் பந்தனம்’, மாயவடிவுடன் வந்து பாலூட்டிய பூதகியை அழித்த “நந்தபவனம்’, கண்ணன் ஆயர் சிறுவர்களோடு விளையாடிய “ரமண ரேடி’ போன்ற அனைத்துப் புண்ணியத் தலங்களையும் இன்றும் காணலாம்
நந்த பவனம்
நந்த மஹாராஜர் வசித்த அனைத்து இல்லங்களுமே நந்த பவனம் எனப்படுகிறது. கோகுலத்தில் இருக்கும் நந்தபவனின் தனிச்சிறப்பு யாதெனில், இங்குதான் முதன் முதலில் கிருஷ்ண ஜன்மாஷ்டமியும் கிருஷ்ண-பலராமரின் குழந்தைப் பருவ லீலைகளும் ஆரம்பமாயின. வஸுதேவர் கிருஷ்ணரை கோகுலத்தில் விட்டுச் சென்ற பின்னர், மறுநாள் காலை நந்த பவனத்தை மையமாக வைத்து கோகுலமே விழாக்கோலம் பூண்டது. யசோதைக்கு குழந்தை பிறந்த செய்தியை அறிந்த கோகுலவாசிகள் ஆடம்பர உடைகளை அணிந்து பரிசுப் பொருட்களை எடுத்துக் கொண்டு, குதூகலத்துடன் நந்த பவனிற்கு கூட்டம் கூட்டமாக திரண்டனர். கிருஷ்ணரின் வரவை கோலாகலமாக கொண்டாட விரும்பிய நந்த மஹாராஜர் அரண்மனை முழுவதையும் மலர்களாலும் பட்டுத் துணிகளாலும் அலங்கரித்து, நறுமணப் பொருட்களால் மணம் கமழச் செய்தார். கோகுலவாசிகள் வீதி முழுவதும் ஒருவர் மீது ஒருவர் தயிர், பால் மற்றும் வெண்ணையைத் தெளித்து தங்களது பேரானந்தத்தை வெளிப்படுத்திய வண்ணம் கிருஷ்ண பிரேமையில் மூழ்கினர். கிருஷ்ணர் தமது திருமேனி, முக வசீகரம், புன்முறுவல் முதலியவற்றால் அனைத்து கோகுலவாசிகளையும் ஆட்கொண்டு, அவர்களது இதயத்தில் பேரானந்த அலையை ஏற்படுத்தினார். நந்த மஹாராஜர் பிராமணர்களுக்கு 18 இலட்சம் பசுக்களை தானமாகக் கொடுத்தார். அனைத்து பசுக்களும் முத்துமாலை மற்றும் தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது. கோகுலத்தின் ஐஸ்வரியத்தை இதன் மூலம் எளிமையாகப் புரிந்துகொள்ளலாம்.
மதிமயங்கிய கோகுலவாசிகள் கிருஷ்ணரின் அழகைக் கண்டுகளித்த கோகுலவாசிகள் கண்கள் படைக்கப்பட்டதற்கான உண்மையான காரணத்தை அறிய தொடங்கினர். கிருஷ்ணர் படிப்படியாக வளரத் தொடங்கினார். மழலைப் பேச்சில் மதிமயங்குவது அனைவருக்கும் இயல்பு. கிருஷ்ண-பலராமரின் மழலைப் பேச்சுகளைப் பற்றி சொல்லவும் வேண்டுமா? கோகுல மண்ணில் அவர்கள் தவழ்ந்து விளையாடுகிற காட்சிகளைக் கண்ட கோகுலவாசிகள் தங்களது இதயங்களை பறிகொடுத்தது மட்டுமல்லாமல், ஒருவித ஆன்மீக பெருமிதமும் கொண்டனர்.
இன்றைய கோகுலத்திற்குச் செல்வோம். கோகுலத்திற்கு தற்போது பயணம் மேற்கொள்பவர்கள் நந்த பவனில் கம்பீரமாக காட்சியளிக்கும் 84 தூண்களைக் காணலாம். 5,000 வருடத்திற்கு முன் நந்த மஹாராஜரின் காலத்தில் கட்டப்பட்ட தூண்கள் இன்றும் இவ்விடத்தில் போற்றி பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இவ்விடம் தற்போது கோயிலாக மாற்றப்பட்டுள்ளது. நந்த மஹாராஜர் அன்னை யசோதையின் மூர்த்திகளுக்கு நடுவே கருமை நிறத்தில் பலராமரின் விக்ரஹத்தையும், தொட்டிலில் புல்லாங்குழல் ஊதும் கோபாலரின் விக்ரஹத்தையும் காணலாம்.
நந்த பவனிற்கு வெகு அருகில் நந்த மஹாராஜரின் கோசாலை அமைந்துள்ளது. இந்த கோசாலைக்கு சற்று தூரத்தில் சப்த-சமுத்திர கிணறும் உள்ளது. இந்த கிணற்றில் பிரபஞ்சத்தில் காணப்படும் ஏழு சமுத்திரங்களின் நீரும் உள்ளடங்கி காணப்படுகிறது. வைசிய மன்னரான நந்த மஹாராஜர் பாரம்பரிய வழக்கமாக இந்த கிணற்றில் தினந்தோறும் நீராடுவார். வைசிய தொழிலில் தெரியாமல் செய்யும் பாவ விளைவுகளிலிருந்து விடுதலை பெற இக்கிணற்று நீர் உதவுகிறது என்பது ஐதீகம். நந்த பவனத்தின் 84 தூண்களின் ஒரு பகுதி ஸநாதனரின் பஜனை நந்த பவனின் நுழைவாயிலுக்கு வெகு அருகில் ஸநாதன கோஸ்வாமியின் பஜனை குடில் அமைந்துள்ளது.
தற்போது இருபது அடி ஆழத்தில் பாதாள தேவியின் ஆலயமும் அமைந்துள்ளது. கிருஷ்ணர் தோன்றிய சில தினங்களில் கம்சனின் ஆணையை ஏற்று பகாசுரனின் சகோதரியான பூதனை கிருஷ்ணரைக் கொல்வதற்காக தனது மார்பில் விஷத்தைத் தடவிக் கொண்டு கோகுலத்திற்கு வந்தாள். கிருஷ்ணர் பூதனையின் மடியில் பாலை அருந்தியபோது, அவளது உயிரையும் சேர்த்து குடித்தார். கிருஷ்ணர் கைக்குழந்தையாணக இருந்தாலும் கோகுலவாசிகளுக்கு தம்மால் அசுரர்களிடமிருந்து பாதுகாப்பைத் தர முடியும் என்னும் நம்பிக்கையை உலக மக்களுக்கு வெளிப்படுத்துகிறார். பூதனை வதம் செய்யப்பட்ட இடம் நந்த மஹாராஜரின் இல்லத்திற்கு வெகு அருகில் இருப்பதை இன்றும் காணலாம்.
மற்றொரு முறை, அன்னை யசோதை கிருஷ்ணரை தொட்டிலில் கிடத்தியபோது, அவர் சகடாசுரனை வதம் செய்தார். இவ்விடத்தையும் கோகுலத்தில் காணலாம். பொதுவாக, குழந்தையை மேலே தூக்கிப் போட்டு பிடித்து விளையாடுவது வழக்கம். அன்னை யசோதையினால் தம்மை குறிப்பிட்ட தூரத்திற்கு போல் தூக்கிப் போட முடியாது என உணர்ந்த கிருஷ்ணர், தமது அந்த விருப்பத்தை திருணாவ்ருதன் என்ற அசுரனின் மூலமாக நிறைவேற்றிக் கொண்டார். திருணாவ்ருதன் கோகுலத்திற்கு வந்தபோது, யசோதையின் கையிலிருந்த கிருஷ்ணர் தமது உடல் எடையை அதிகரித்தார். யசோதை வேறு வழியில்லாமல் கிருஷ்ணரை தரையில் இறக்கினான். அச்சமயத்தில் அங்கே காற்று உருவில் வந்த திருணாவ்ருதன் கிருஷ்ணரை மேலே தூக்கிக் கொண்டு புறப்பட்டான். கிருஷ்ணர் தமது பறக்கும் விருப்பத்தை நிறைவேற்றியபடி, திருணாவ்ருதனையும் வதம் செய்தார். இம்மூன்று அசுரர்கள் வதம் செய்யப்பட்ட இடத்தை கோகுலத்தில் இன்றும் காணலாம்.
கிருஷ்ணன் மாடுகளுக்கு நீர் ஊட்டிய “கிருஷ்ண குண்டா’, கிருஷ்ணன் லீலைகளைக் கண்டு வானில் மேலே நகர விருப்பமில்லாமல் தங்கிய “சூர்ய சந்திர குண்டா’, நந்தகோபன், கண்ணனைப் பாதுகாக்க கலந்து ஆலோசித்த “நந்தனாபடக்’, யசோதை நீராடிய “யசோத குண்டா’, யசோதை தானே முயன்று தயிர் கடைந்த “ததி மந்தன்’ எனப் பல குளங்களைத் தரிசித்து மகிழும் வாய்ப்பு கிடைத்தது.
மாலை வேளைகளில் மாடு மேய்த்து மாடுகளை ஒரே இடத்தில் குழலூதி அழைத்த கண்ணனின் பாதச் சுவடுகள் பதிந்த இடம்- “சரண் பஹாடி’. இந்த இடத்திற்குப் பல மைல்கள் தூரம் கால்நடையாகக் குன்றுகளில் ஏறி கண்ணன் திருவடிகள் பதிந்த இடத்தைப் பார்த்து மகிழ்ந்தது, பரவசமான அனுபவமாக இருந்தது.
படம் மதுரா,கோகுலம் காட்சிகள்
You tube link ல் Nand gaon ஐ முழுதும் தரிசிக்கலாம்
தொடரும். …
1,2)க்ருஷ்ணரை கட்டிப்போட்ட உரல்,இடம்3,4)மண்ணைத்தின்ற,தவழ்ந்த இடம்...இங்கு பக்தர்களும் தவழ்ந்து செல்கிறார்கள்






No comments:
Post a Comment