Thursday, June 18, 2020

இராம ஜென்ம பூமி முதல் கிருஷ்ண ஜென்ம பூமி வரை பகுதி 21

இராம ஜென்ம பூமி முதல் கிருஷ்ண ஜென்ம பூமி வரை பகுதி 21


கண்ணன் தேவகி வயிற்றில் அவதரித்த மதுராவிற்கு அருகில்,( மாமன் கம்சன் குழந்தையை கொல்லாது தடுக்க) அவர் யசோதையிடம் வளர்ந்த கோகுலம் ஒரு திசையிலும் ராச லீலை நிகழ்த்திய 
பிருந்தாவனம் எனப்படும் விருந்தாவன் வேறு திசையிலும் அமைந்துள்ளது. 
முதலில் கண்ணன் கோகுலம் வாழ் யாதவர்களின் தலைவர் நந்தகோபர் - யசோதா தம்பதியரால் வளர்க்கப்பட்டார். பின்னர் கோகுலம் வாழ் யாதவர்கள் கம்சனுக்கு அஞ்சி காடுகள் நிறைந்த பிருந்தாவனத்திற்கு இடம் பெயர்ந்தனர். குழல் ஊதி, மாடு மேய்த்து, நண்பர்களுடன் விளையாடி, வெண்ணெய் திருடி குறும்புத்தனம் செய்து காலத்தைக் கழித்த கிருட்டிணன பிருந்தாவனத்தின் செல்லப் பிள்ளையானார்.
இவ்விரு ஊர்களைத்தவிர யாதவர்களை இந்திரனிடமிருந்து காத்த கோவர்தன கிரியும் பார்க்க வேண்டிய இடங்கள்…மீண்டும் வாலிப வயதில் மதுரா திரும்பினாலும் எதிரிகளின் தாக்குதலிலிருந்து தப்ப த்வாரகா சென்று கடலுக்குள் கோட்டை அமைத்து ஆட்சி செய்கிறார். இறுதி வரை லீலைகளும் போர்களும் வாழ்க்கை முறையாகக்கொண்ட கடவுளாகவும் வரலாற்று நாயகனாகவும் பார்க்கப்படும் ,பாகவத,மகாபாரத,நாயகனை,பகவத் கீதையினை வழங்கிய தத்துவ நாயகனின் சுவடுகள் பாரதமெங்கும் பரவிக்கிடக்கிறது. 

கிருஷ்ணர் ஒரு தெய்வ குழந்தையாக, குறும்புக்காரனாக, முன் மாதிரி காதலனாக என பல வகைகளில் குறிப்பிடப்படுகின்றார். .
இளவயதில் பிருந்தா வனத்தில் இருந்த பெண்களின் மனதில் கிருஷ்ணர் இடம் பிடித்தார். இவர்களுள் ஒருவரான ராதையுடன் தெய்வீகக் காதல் புரிந்தார்.

அக்ரூரரின் வேண்டுகோளின் படி, பலராமன் மற்றும் கிருஷ்ணர் மதுரா சென்று தன் மாமன் கம்சனை அழித்து மதுராபுரியை தனது தாய் வழி தாத்தா உக்கிரசேனரிடம் ஒப்படைத்து விட்டு, கோகுலம் வாழ் யது குல மக்களுடன், சௌராஷ்டிர தீபகற்பத்தில் உள்ள கடற்கரை அருகே துவாரகை என்னும் புதிய நகரை உருவாக்கி வாழ்ந்தனர். சஙக கால புலவர் கபிலர் துவரை (துவாரகை) பற்றி கூறுகிறார்..(அடியேனின்  பஞ்ச த்வாரகா பயணக்கட்டுரைத்தொடரில் விரிவாக … )
. தனது அத்தை மகன்களான பாண்டவர்களுடன், குறிப்பாக அர்ஜூனனுடன் நட்பு கொண்டார். 

 மாலாய்ப் பிறந்த நம்பியை மாலே செய்யும் மணாளனை 
 ஏலாப் பொய்கள் உரைப்பானை இங்கே போதக் கண்டீரே 
 மேலால் பரந்த வெயில் காப்பான் வினதை சிறுவன் சிறகு என்னும் 
 மேலாப்பின் கீழ் வருவானை விருந்தாவனத்தே *கண்டோமே   நாச்சியார் திருமொழி–1

கண்ணனின் லீலைகள் புரிந்த அனைத்து இடங்களும் கோகுலம் ,பிருந்தாவனம் ,கோவர்த்தனத்தில் காட்சிக்கு இன்றும் காணக்கிடைக்கிறது. 
இளமைப்பருவம். 
வசுதேவர் குழந்தைக்குப் பெயர் சூட்ட விரும்பினார். வசுதேவர் வேண்டிக் கொண்டதன் பேரில் கர்க்க முனிவர், நாமகரணம் செய்ய, நந்தனது வீட்டிற்கு வந்தார். சந்தோஷமடைந்த நந்தகோபன், அவரை வரவேற்றுப் பூஜித்தார். யசோதையும், நந்தனும் கர்க்கரை நமஸ்கரித்தார்கள். புன்முறுவலுடன் விழாவிற்கு வேண்டியவற்றைச் செய்யச் சொன்னார். கர்க்கர் நந்தகோபனைப் பார்த்து,"நான் யதுகுலத்தின் குரு. இந்த விழாவை மிகவும் ரகசியமாகச் செய்ய வேண்டும்" என்று கூறினார். ஏனெனில், ஆடம்பரமாகச் செய்தால், கம்ஸனுக்குத் தெரிந்துவிடும் என்பதால் அப்படிச் சொன்னார். நந்தகோபனும் அதற்கு சம்மதித்தார். 
பிறகு கர்க்கர், ரோஹிணியின் குழந்தையை எடுத்து வரச் சொன்னார்.  அந்தக் குழந்தை, நல்லொழுக்கம் மிகுந்த  குழந்தையாக இருந்ததால், 'ராமன்' என்றும், பலசாலியாக இருந்ததால் 'பல' என்பதையும் சேர்த்து, "பலராமன்" என்று பெயரிட்டார்.  வசுதேவன், நந்தன் ஆகியோரின் இரு குடும்பங்களையும் இணைத்ததால், 'ஸங்கர்ஷணன்' என்றும் பெயரிட்டார். 

பிறகு, யசோதையின் குழந்தையை எடுத்து வரச் சொன்னார். கணக்கிலடங்கா ஆயிரக்கணக்கான பெயர்கள் கொண்ட இவருக்கு எந்த பெயர் சூட்டுவது? என்று கவலையடைந்தார். பிறகு ரகசியமாகப் பெயர் வைத்தார். மங்கலமாகவும், ஆனந்தமாகவும் இருப்பதைச் சொல்வதும், கருமையானதும், உலகத்தின் பாபத்தைப் போக்கும் தன்மை உடையதுமான “கிருஷ்ணன்” என்ற பெயர் வைத்தார். வசுதேவனின் குழந்தை என்பதால், "வாசுதேவன்" முதலிய பெயர்களையும் சூட்டினார். இந்தக் குழந்தைதான் ‘ஸ்ரீஹரி’ என்று சொல்லாமல், ஸ்ரீஹரியின் பெருமையை எடுத்துச் சொன்னார். மேலும் நந்தகோபனிடத்தில், "உன் மகனிடத்தில் பக்தி கொண்டவன் துன்பப்படுவதில்லை. உன் மகனுக்குத் துன்பம் தருபவன் நாசமடைவான்" என்று கிருஷ்ணனின் பெருமையை எடுத்துச் சொன்னார். மேலும், “இவன் அசுரர்களைக் கொல்வான். பந்துக்கள் நல்ல ஸ்தானத்தை அடையும்படி செய்வான். உன் மகனுடைய புகழைக் கேட்டு மகிழ்வீர்கள்” என்று கூறினார். பிறகு கர்க்கர், வெளிப்படையாக இக்குழந்தை ‘ஸ்ரீஹரி’ என்று சொல்லாமல், "இக்குழந்தையின் மூலம் அனைவரும் அனைத்துக் கஷ்டங்களையும் கடக்கப் போகிறீர்கள்" என்று கூறினார்.

இப்பொழுது பலராமனும், கிருஷ்ணனும் நந்தனின் வீட்டில் தவழ்ந்து விளையாட ஆரம்பித்தார்கள். தாமரை போன்ற பாதங்களில் உள்ள சலங்கைகளின் சத்தத்தைக் கேட்க ஆசை கொண்டு வேகமாகவும், அழகாகவும் தவழ்ந்தார்கள். இருவரும் சிரித்தபோது தெரிந்த பற்கள் மிக அழகாக இருந்தது. கைகளில் இருந்து நழுவி மணிக்கட்டில் விழுந்த கங்கணங்கள் அழுந்தியதால் உண்டான வடுக்களுடன் இருவரும் அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டார்கள்.

கிருஷ்ணன், தாமரை போன்ற பாதங்களுடனும், முன் நெற்றியில் கலைந்து விழுந்த கேசங்களுடனும் மிக அழகாக விளங்கினான். அனைவரும் ஆசை கொண்டு அவனைப் பின்தொடர்ந்தனர். அதைப் பார்த்து, இனிமையான சப்தத்துடன் சிரித்துக்கொண்டு ஓடினான். பிறகு நின்று, திரும்பிப் பார்த்து அனைவருக்கும் ஆனந்தத்தை அளித்தான். இருவரும் வேகமாக ஓடி சேற்றில் விழுந்து, சேற்றை உடம்பில் பூசிக் கொண்டார்கள். ஆகாயத்திலிருந்து முனிவர்கள் துதித்தனர். ஓடி வந்த தாய்மார்கள், கருணையோடு வாரி அணைத்து முத்தமிட்டார்கள். யசோதை, பெருகிய அன்புடனும், இவ்வாறு தெய்வக் குழந்தைக்குப் பாலூட்டி, மிகவும் பேறு பெற்றவளானாள். இப்போது தளிர்நடைப் பருவம் வந்தது. கண்ணன் தன் பிஞ்சுக் கால்களால், தளிர்நடை நடந்து, மற்ற இடைச்சிறுவர்களுடன் அருகே உள்ள வீடுகளில் விளையாடினான். வீடுகளில் உள்ள கிளி, பூனை, கன்றுகளை அவிழ்த்துவிட்டு அவற்றின் பின்னே ஓடினான். இடைச்சிறுவர்கள் சிரித்துக் கொண்டு அவனைத் தொடர்ந்தனர். 

பலராமனுடன் கண்ணன் சென்ற இடங்களில் எல்லாம், கோபிகைகள் அவர்களைக் கண்டு களித்தனர். வீட்டு வேலைகளையும், குழந்தைகளையும் மறந்து கண்ணனையே நினைத்து, பரவசமாக ஆனார்கள். கண்ணன், கோபிகைகள் கொடுக்கும் புதிய வெண்ணைக்கு ஆசைப்பட்டு இனிமையாய்ப் பாடினான். அழகாய் ஆடினான். அவர்கள் கருணையோடு கொடுத்த வெண்ணையை உண்டான். சில இடங்களில் புதிதாய்க் காய்ச்சிய பாலைக் குடித்தான்.

ஒரு நாள், மரத்தின் கிளைகள் மேலே பிரகாசிக்கும் நிலவினைப் பார்த்து, பழம் என்று நினைத்து, பெற்றோரிடம் கேட்டான். அவர்கள் வேடிக்கையாக "நீயே கூப்பிடு, அது வரும்" என்றார்கள். கண்ணனும் கூப்பிட, நிலவு நேராக அவனது கைகளில் வந்தது. அப்போது அவன் மேனி முழுவதும் நட்சத்திரக் கூட்டங்களுடன் அண்டங்களின் வடிவாகத் தோன்றினான். திகைப்புடன் நந்தகோபர் நோக்கும்போது, அவரை பேரின்பக்கடலில் மூழ்கச் செய்து, மறுபடியும் மாயையால், தான் அவரின் மகன் என்ற நினைவை ஏற்படுத்தினான். 
வாமனாவதாரத்தில் மகாபலியிடம் யாசித்துவிட்டேன். மறுபடி யாசிக்கமாட்டேன் என்று முடிவு செய்தவனைப் போல, யாசிக்காமல் அழகாய்த் திருடத் தொடங்கினான். ஒவ்வொரு நாளும் கோபிகைகள் யசோதையிடம் வந்து புகார் கூறத் தொடங்கினார்கள். ஒரு பெண், "இன்று காலை கண்ணன் என் வீட்டிற்கு வந்து, கன்றினை அவிழ்த்துவிட்டதால், அது மாட்டின் எல்லா பாலையும் குடித்துவிட்டது" என்று சொன்னாள். வேறொருத்தி, "அவன் வெண்ணை திருட ஆயிரம் வழி வைத்திருக்கிறான், உயரே உரியில் வைத்தாலும், ஒருவர் மீது ஒருவர் ஏறிக் கொண்டு வெண்ணையைத் திருடுகிறான்" என்று சொன்னாள். மற்றொருத்தி, "பாதி வெண்ணையை அவன் உண்டுவிட்டு மீதியை குரங்குகளுக்குக் கொடுக்கிறான்" என்றாள். ஒரு பெண், உயரே இருக்கும் பானையில் கல்லெறிந்து உடைத்துவிட்டு, அடியில் வாயைத் திறந்து தயிரைக் குடிக்கிறான்" என்று புகாரிட்டாள். 

அவர்கள் கூறும் புகாரைக் கேட்ட யசோதை, கோபமாகக் கண்ணனைப் பார்க்கும்போது, அவன் கண்களில் நீருடன் நிற்பான். அதைக் கண்டு மனம் பொறுக்காமல், அவனை எடுத்துத் தன் மடியில் வைத்துக் கொள்வாள். இவ்வாறு கோகுலத்தில், தயிர், நெய், வெண்ணையை அவன் திருடினாலும், இடைப்பெண்கள் அவனிடம் கோபம், வருத்தம் கொள்ளவில்லை. வெண்ணையுடன், அவர்கள் மனதையும் திருடி, அவர்களை மகிழ்ச்சிக் கடலில் மூழ்கடித்தான்.  

கண்ணனின் சிறு வயது லீலைகள் இரண்டு ஊர்களிலும் நடந்தது. 
கிருஷ்ணர் 5000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்ததாகச் சொல்லப்படும் பிருந்தாவனில் ராதாவின் இறைவழிபாடு சிறப்புமிக்கது. அங்கு அவரின் முக்கியத்துவம் கிருஷ்ணரின் முக்கியத்துவத்தை விஞ்சக்கூடியதாக இருக்கிறது.

பார்சானா மற்றும் பிருந்தாவனில் ராதாவல்லப் கோயில் உள்ளிட்ட அதிக எண்ணிக்கையிலான கோயில்கள் ராதா மற்றும் கிருஷ்ணன் இருவருக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது….

படங்கள்...கிருஷ்ணர் தொடர்பான இளவயது ரவி வர்மா மற்றும் ஓவியங்கள்….
                  தொடரும் இனி




No comments:

Post a Comment