தனிமை (மனதை தொட்டுவிடும் கதை – 89)
#ganeshamarkalam
தனிமை கொடுமையானதும்பா. தப்பு செஞ்சவாளை அதான் ஜெயிலில் போடரா. நமக்கோ பேச பழக, பாத்திண்டிருக்க சுத்தி மனுஷா தேவை. நம்மை ரூமில் போட்டு அடைச்சுட்டா அது நம்மை ரொம்பவே வருத்தும். இப்போதான் ஜெயில் ரொம்பி வழியரதே. அதனால் பெரீசா தப்பு செஞ்சவாளை மட்டும் தனியா ரூமில் அடைக்கரதுதான் அதிகபக்ஷ தண்டனையாம். இதை படிச்சப்போ இது ஒரு கேணத்தனமான வழக்கம்னு தோணித்து.
ஏன்னா எனக்கு தனிமை பிடிக்கரது. என்னை சுத்தி இருக்கிரவா எல்லோரும் அப்படியே காத்தில் கரைஞ்சு போயிடணும், இல்லைன்னா பூமி பிளந்து இவாளை முழுங்கிடணும். அப்போதான் எனக்கு விடிவுன்னு யோசிப்பேன். அப்படி இருகச்சே தனிமை எப்படி ஒரு தண்டனை ஆகும்? கேணப்பசங்க! என்னைப்பிடிச்சு ஜன்னலே இல்லாத சத்தமே வராத ரூமில் போட்டா ரொம்பவே மகிழ்ச்சியா இருப்பேனே!
இவன் ஒரு லூசுப்பயன்னு உடனே நீங்க முடிவுக்கு வந்துடப்பிடாது. உங்களைப்போல நானும் கூட்டுக்குடும்பத்தில் பிறந்து, வளர்ந்து அப்புரம் கல்யாணம் கார்த்தீ பாத்து, குழந்தைகளை பெத்து எடுத்துண்டு அவாளை கரை சேர்த்துட்டு, பேரக்குழந்தைகளையும் பாத்தாச்சு. “அதான் சாமர்த்தியமா இப்போ தனிமையை தேடிக்கராய், உனக்கு வேணும்கிரபோது உன்னைச்சுத்தி இருந்தவாளோட உழைப்பையும் அன்பையும் ஆசை தீர அனுபவிச்சுட்டு இப்போ வலுவிழந்து எந்த சந்தோஷத்தையும் அனுபவிக்க முடியாம போனப்புரம் யாரும் கிட்டெக்க வரப்பிடாதுன்னா என்ன அர்த்தம்?” நீங்க கேக்கரது கரெக்ட். லாஜிக்காவும் இருக்கே!
இப்படி ஏன் நீங்க யோசிக்கக்கூடாது? “இத்தனை வருஷம் ஒரு குடும்பத்தலைவனா இருந்து எனக்குன்னு ஏற்பட்ட கடமைகளை துளிக்கூட பிழராமல் முழுசா செஞ்சு முடிச்சுட்டு கொஞ்சம் என் விருப்பப்படி வாழ நினைச்சா என்ன தப்பு? இப்போவும் நான் அதைச்செய்யணும், இப்படி நடந்துக்கணும்னு எதிர்பார்த்துண்டு, இல்லைன்னா குத்தம் குறை சொல்லிண்டு, சுத்தி இருக்கிரவா உசுரை எடுத்தா? ஒன்ணும் வேண்டாம் போ, நான் என் வழீலே போரேன்னு யத்தணிக்கச்சே ஃப்ரீயா விடணுமா இல்லையா? உடம்பில் மிஞ்சி ஓடர கடைசீ சொட்டு ரத்தத்தையும் உறிஞ்சு குடிப்போம்னா எப்படி?” அதான்.
இப்படி பொத்தாம் பொதுவா பேசினா உங்களுக்கு விளங்காது. மத்தவாளுக்கு சாதகமாவே யோசிப்பேள். சொன்னால்தானே உங்களுக்கும் புரியும்? சொல்ரேன்.
என் பெயர் சிவராமன். ரிடயர் ஆயி 7 வருஷம் ஓடிப்போச்சு. இப்போதான் படிப்பு முடிச்சு வேலைக்கு இன்டெர்வ்யூக்கு போனாப்புலே இருக்கு. படிக்கரச்சே எப்போடா படிப்பு முடியும் எப்போ புஸ்தகத்தை மூட்டை கட்டிவச்சுட்டு ஹாய்யா வேலையில் அமரலாம்னு இருந்தது. நன்னா படிப்பேன், இருந்தாலும் பரீக்ஷை எழுதரது, லேப் நோட் மைன்டைன் பண்ரது, யூனிஃபார்ம் போட்டுண்டு ஸ்கூலுக்கு போரதெல்லாம் பிடிக்கலை. காலேஜிலேயும், புஸ்தக மூட்டை இல்லையே தவிர விதவிதமான பாடங்கள் “உன்னை அமுக்கி மூச்சுத்திணற வைப்பதில் நாங்களும் கில்லாடின்னு வதைச்சு எடுத்தது. சீக்கிரம் படிப்பை முடிக்கணும்னே ராப்பகலா படிச்சு அரியர்ஸ் வைக்காம பாஸானேன்.
கேட்டான் பாருங்கோ ஒரு கேள்வி இன்டெர்வ்யூவில்! “இந்த வேலை உனக்கு எவ்வளவு அவசியம்? உடனே தோணினதை சொல்லியிருந்தா தொரத்தி அடிச்சிருப்பா! “உங்கள் நிறுவனத்தில் சேரணும்னு சின்ன வயசுலேந்தே என் லக்ஷியம்”னேன். அத்தொட விட்ருக்கணும். “ஏன் எங்கள் நிறுவனம்?” “இங்கேதான் ப்ரொஃபெஷனலிஸமும் இளம் உள்ளங்களுக்கு வழிகாட்டியாவும் வளர்ச்சி தர ஆப்பர்ச்யூனிடிகளும் இருக்கு.” கேள்வி கேட்டவனுக்கே நான் சொன்னது ஆச்சார்யமா இருந்தது போலேருக்கு. எங்கூட சேர்ந்து அவனும் வளரலாம்னு என்னை சேர்த்துண்டான்.
சரிதான், இன்னும் ரெண்டு வருஷத்தில் பெர்மனென்ட் ஆகிடும், அப்பா, என் அம்மா மாதிரி ஒரு பொண்ணை பாத்து எனக்கும் கல்யாணம் செஞ்சு வச்சுட்டார்னா செட்டில்னு தோணித்து. எனக்கு ஒரு பாஸ் வாய்ச்சான். தினம் கூப்பிட்டு “எப்படீயிருக்கே”ன்னு விசாரிப்பான். உடனே ஒரு முக்கியமான வேலை கொடுக்கப்போரான்னு புரிஞ்சுக்கணும். “உடனே வா”ன்னு தன் கேபினுக்கு கூப்பிட்டா, கொஞ்சம் முன்னாடி அவன் பாஸ் அவனை தன் கேபினுக்கு கூப்பிட்டனுபிச்சு இதே வேலையை கொடுத்துட்டான்னு அர்த்தம். அதை எனக்கு கொடுத்து அவன் அதை முடிப்பான்.
எனக்குக் கீழே இன்னும் யாரையும் போடலை, நானே சேர்ந்து இப்போதான் 3 மாசம் ஆரது?
சொல்லுவான், 12 வருஷம் கழிச்சு ஆவன் அந்த நிலமைக்கு வந்தானாம். “நிலமை”ன்னு அவன் சொல்ரது, ஒரு கேபின், தனி டெலிபோன், ஏஸி, தனக்குன்னு ஸ்டெனோ எல்லாத்தையும் சேர்த்து. அப்படி ஒரு இலக்கை அடையணும்னு எனக்கும் வைராக்கியம் வரும். 10 வருஷத்திலேயே. கேபின், ஏஸி, போன் இல்லைன்னாலும் பரவாயில்லை, ஸ்டெனோ அவசியம். அவளைப்பாகிரச்சே அவன் மூஞ்சிக்கு இப்படி ஒரு யோகமான்னு தோணும். பக்கத்தில் உக்காத்தி வச்சிண்டு மணிக்கணக்கில் டிக்டேஷன் கொடுப்பான். குடுத்ததை மாத்துவான், டைப் செஞ்சா அடிச்சுத்திருத்துவான். திட்டுவன். நானா இருந்தா ஆசையா வச்சுப்பேனே!
ஊர் ஊரா ரயிலும் பஸ்ஸிலும் மொழிதெரியாத இடத்துக்கெல்லாம் அனுப்பினா. பெண்டு எடுத்தது. எல்லாம் வயித்துப் பிழைப்புக்கு. அப்போதான் தோணித்து. எங்கூட படிச்சவா சிலர் மேல்படிப்புக்குன்னு IIT போய் அங்கேந்து போஸ்ட் டாக்டரேட்னு அமேரிக்கா. நான் அப்படி போயிருந்தால் இந்த துன்பத்துலேந்து தப்பிச்சிருக்கலாம்.
இன்னொரு பக்கம் கல்யாணம் நடந்தது. அப்பா அம்மா பாத்துவச்ச பொண். அழகா, இன்னித்தேதிக்கு அனுஷ்கா மாதிரி அப்பவே. உங்க காலுக்கடீலே கரப்பான்பூச்சி. கதையை படிச்சிண்டிருக்கிறவா பொறாமையில் கண் பட்டுடுமோன்னு அப்படி பயமுறித்தினேன்.
சிலசமயம் அவள் குணம் இன்னொரு சினிமாவில் வர சொர்ணாக்கா மாதிரி. திட்டுவா, அவள் சொல்ரதைத்தான் செய்யணும். “முதல்லே நீங்க கல்கத்தாவில் வேலை செய்யரது எனக்குப் பிடிக்கலை. நம்மூர்பக்கமே போயிடலாம்”. போலாம்தான். எவன் சம்பளம் தருவான்? பிடுங்கல் தாங்கமுடியாம சின்ன கிளாஸ் படிச்சிண்டிருந்த ரெண்டு பசங்களையும் கூட்டிண்டு திருச்சியிலேயே வேலை தேடிண்டு செட்டில் ஆகிட்டோம். “திருச்சி ஏன்”னு கேளுங்கோ! அவ மனுஷா இருக்கிர ஊர். அது என்னமோ திருச்சியை குத்தகைக்கு எடுத்துண்டா மாதிரி 30 குடும்பம்.
நாள் கிழமைன்னா பரவாயில்லை, புதன், வெள்ளி, ஞாயிறு நிறைஞ்ச நாள்னு வந்துடுவா. “என்னடி உங்காத்துக்காரர் மூடி டைப்பா”ன்னு இவ அத்தை ஆரம்பிச்சு விட்டதை இவள் சித்தி நூல் மாதிரி பிடிச்சிண்டு கொண்டுபோவா. ஒருதடவை காதில் விழுந்தது. “நீ ஜாக்கிரதையா இருந்துக்கோடீ, அவ்வளவுதான் சொல்லுவேன்”னுட்டு கொயட்டா எழுந்து போரா. அப்புரம் கேட்டுத் தெரிஞ்சிண்டேன், ஜாக்கிரதையா எதுக்கு இருக்கச்சொன்னான்னு இப்போ அதைச்சொன்னா இந்தக்கதை நீளமாப்போகும். அந்த மாமி சொன்னதை நம்பி என் நடத்தையிலும் நீங்க சந்தேகப்படுவேள்.
ஆத்தில் நிறைய சிலவாகும். என் ஆத்துக்காரி கொஞ்சம் ஓட்டக்கை. ஈடு கொடுக்க நிறைய சம்பாதிக்க வேண்டியிருந்தது. சம்பாதிச்சேன். அவளும் குழந்தைகளும் சந்தோஷமா இருக்க முடிஞ்சதை செஞ்சேன். தலை நரைச்சு, முகத்தில் கோடு விழுந்து, லேசா வழுக்கை விழர சமயத்தில் என் பொன்ணுக்கு நல்ல வரன் வந்தது. சேர்த்து வச்சது புஸுக்குன்னு கரைஞ்சது. இவளே கேட்டா, “அடுத்தவளுக்கு என்ன செய்யப் போரேள்”னு. நான்தான் செய்யணும், இவ அத்தையா செய்யபோரா? 2 வருஷத்தில் அதுவும் எப்படியோ சமாளிச்சு நடந்தேரியது.
ரெண்டு சம்பந்திமாமாவும் தங்கம், என்னைபோல கஷ்டப்பட்ரவா. சம்பந்திமாமிகள் வேர லெவெல். மாத்தி மாத்தி ஒவ்வொரு விசேஷத்துக்கும் செஞ்சுட்டு பாத்தா பின்னம்மண்டையில் மட்டும் லேசா கொஞ்சம் மயிர் ஒட்டிண்டிருக்கு. எண்ணை தேச்சு குளிக்கரதை விட்டுட்டேன். கொஞ்சம் கவனக்குறைவா சீக்காய்பொடியை அழுத்தி தேச்சுட்டேன்னா அதுவும் போயிடும்.
எனக்கு பேரங்களோட விளையாடர வயசில், எங்கப்பாவுக்கு ஸ்ட்ரோக். அவர்பாட்டுக்கு ஊரில் குத்தகை எடுத்து பாத்திண்டிருந்தர். நினைவில்லாதாவரை கிராமத்தில் எப்படி விடரது? அழைச்சிண்டு வந்துட்டேன். எங்கூடத்தான் வச்சிண்டு கடைசீவரைக்கும் பாசமா பாத்திண்டேன். எனெக்கென்னவோ என்னை நன்னா பாத்துண்டார். அவர் தகுதிக்கு மீறி படிக்கவச்சார்னுதான். “சம்பாதிக்கராயே, எனக்கும் கொஞ்சம் சிலவுக்கு அனுப்பு”ன்னு கேட்டதில்லை. இதை ஒருதடவை ஆத்துக்காரிகிட்டே சொன்னப்போ “அதான் எல்லாத்துக்கும் சேர்த்து இப்போ லம்பா சிலவு வச்சுட்டாரே”ங்கிரா. அப்போதான் பட்டது இவர் செஞ்ச ஒரே தப்பு எனக்கு அனுஷ்காவை கண்ணில் காட்டி ஒரு மிகச்சாதாரண பொண்டாட்டியை ஏற்பாடு செஞ்சுட்டர்னு. பேச்சு மூச்சில்லாம கிடப்பவரிடம் என்னத்தை கம்ப்ளைன் பண்ரது? கேக்கரத்துக்கு முன்னாடி தப்பிச்சிண்டு போயிட்டர்.
நானும் என் ஆத்துக்காரி மட்டும்னு ஆச்சு. “அது எப்படி, நம் பொண்கள், அப்புரம் மாப்பிள்ளை அவா குழந்தைகள்னு இருக்காளே”ன்னு இவ. அவாத்து சைடில் சில விக்கெட்டுகள் விழுந்துட்டாலும் கும்பல் குறையலை, சமாளிக்க பொறுமை தேவை. எனக்குத்தான் அது கிடையாதே, யாராவது வரான்னு அரசல் புரசலாக்கூட தகவல் எட்டினா எங்கேயாவது கிளம்பிப்போயிடுவேன். திரும்பி வந்தா “உங்களை பாத்துட்டு போணம்”னு உக்காந்திருப்பா. ஹாலில்தான் என் போடோ இருக்கே! அவாளை கண்டுக்காம உள்ளே போனேன்னா, “இவளே! உங்காத்துக்காரருக்கு எங்களை கண்டா பிடிக்கலையா”ன்னு கேப்பா. அது எப்படி கரெக்டா கண்டுபிடிக்கரான்னு படும்.
கஷ்டப்பட்டு ஒரு சிரிப்பை அடி வயித்துலேந்து எடுத்து மூஞ்சிலே ஒட்டிண்டு வெளீலே வந்து குசலம் விசாரிச்சுட்டு போவேன்.
இப்போ 67 வயசாச்சு. இனிமேல் என்ன பயம்? மனசில் எவ்வளவு அசூயயை சுமப்பது? இன்னும் மத்தவாளுக்காக ஏன் வாழணும்? கடமைகளை பூர்த்தி செஞ்சாச்சு. பேரக்குழந்தைகளை அவாளை பெத்தவா பாத்துப்பா. இவ பண்ராமாதிரி மணிகொருதடவை போன் போட்டு “எப்படி இருக்காண்டி, ஸ்கூல்லேந்து வந்துட்டானா, என்ன சாப்பிட்டான்னு கேட்டுண்டு, பொண்ணு வாழ்க்கையை தான்தான் நகத்திண்டு பொராப்புலே என்னால் நடிக்கவோ, கொள்ளவோ முடியாது. ஆனா எனெக்கென்னமோ மனசுக்குள்ளே என் லைஃப் வேஸ்ட் ஆனா மாதிரியும், சொச்ச காலத்தையாவது பிக்கல் பிடுங்கல் இல்லாம தனியா வாழணும்னும் தோணியது.
அதில் ஆத்துக்காரிக்கு என்ன ரோல்? அவளை ஒதுக்கி வக்கரது எப்படி சரி? தனீயான்னா? ரூமுக்குள் போய் கதவை சாத்திக்கரதா? இல்லை யார்கிட்டேயும் சொல்லிக்காம கண்காணாத இடத்துக்கு போய் வாசம் பண்ரதா?. “எங்கேயாவது போயிடரது”ங்கிர ஆப்ஷந்தான் பிடிச்சது. அப்படீன்னா எங்கே? சூரியனார் கோவில்கிட்டே போய் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துண்டு தனியா தங்கிட்டா? ஏன் சூரியனார் கோவில்? அங்கே தினம் 2 வேளை அன்னதானம். சும்மா வாசல்லே நின்னா 10 பொட்டலம் கையில் விழும். அது “தனிமை” மாதிரி படலையே? என்னை நானே ஏமாத்திக்கரேனோ?
“டொங்”குன்னு ஒரு வாட்ஸப் மெசேஜ். எந்த பிரகஸ்பதி கார்த்தால 11 மணிக்கு குட் மார்னிங்க் சொல்ரானோ! முதல்ல ப்ளாக் பண்ணிடணும்.
கடைசீ பேரன். “தாத்தா இதோட எழுதி போடோ எடுத்து அனுப்பிச்சிருக்கேன் ரெண்டு திருக்குறள் இருக்கு, படிச்சு அர்த்தம் சொல்லுன்னு ஆடியோ மெசேஜ். அவன் அப்பனுக்கும் சரி நான் பெத்து அவனுக்கு கல்யாணம் பண்ணிகொடுத்த என் பொண்ணுக்கும் சரி, தமிழ் தெரியாதுன்னு ஞாபகம் வந்தது. சரி இது ஒண்ணு மட்டும் சொல்லிக் கொடுத்துட்டு சூரியனார் கோவில் போலாம்னு எடுத்துபடிச்சேன்.
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.
தென்புலத்தார், தெய்வம், விருந்தினர், சுற்றத்தார், தன் குடும்பம் என்னும் ஐந்திடத்தும் பேணுதல் இல்வாழ்பவனுக்குச் சிறப்பாகும். மனைவி பிள்ளைகளிடத்தில் அன்பும், தேடிய பொருளை நட்பு சுற்றங்களுடன் பகிர்ந்து கொள்ளும் அறமும் இருந்தால் இல்வாழ்க்கையின் பண்பும் அதுவே; பயனும் அதுவே. இதை குழந்தைக்கு புரியராமாதிரி ஆங்கிலமும், தமிழும் கலந்து விளக்கம் சொன்னேன். போனை வச்சதும் எனக்கே புத்தி சொல்லிண்டா மாதிரி இருந்தது. இதுவரைக்கும் நீ வாழ்ந்தது உன் வாழ்க்கையைத்தான், மத்தவாளுக்காகவே உழைச்சுக்கொட்டி தேய்ஞ்சு போயிட்டா மாதிரி நினைக்கவே பிடாது.
அப்புரம் நான் நடந்துக்கரதை பாத்து என் ஆத்துக்காரி மூக்கின்மேல் விரலை வச்சுட்டு எடுக்கவேயில்லை.
No comments:
Post a Comment