Friday, June 19, 2020

இராம ஜென்ம பூமி முதல் கிருஷ்ண ஜென்ம பூமி வரை பகுதி 24


இராம ஜென்ம பூமி முதல் கிருஷ்ண ஜென்ம பூமி வரை பகுதி 24 
Sujatha &Venkatesan 6381369319)

மறுநாள் கார்த்தால க்ருஷ்ண ஜென்ம பூமி போறோம்...
கால் பதித்ததுமே குறும்புக் கண்ணன் (கிருஷ்ணனின் குழந்தைப்பருவ பெயர்) தன் பிஞ்சுப் பாதம் பதித்து, நின்ற, நடந்த, ஓடிய இடங்களிலா நாம் நிற்கிறோம் என்கிற எண்ணம் மேலோங்கி நம் உடல் சிலிர்க்கிறது...
பெரியாழ்வார் நினைவுக்கு வரார்….

 செங்கமலக் கழலில் சிற்றிதழ் போல்விரலிற் 
          சேர்திகழ் ஆழிகளும் கிண்கிணியும், அரையிற் 
 தங்கிய பொன்வடமும் தாளநன் மாதுளையின் 
          பூவோடு பொன்மணியும் மோதிரமும் கிறியும் 
 மங்கல ஐம்படையும் தோள்வளையும் குழையும் 
          மகரமும் வாளிகளும் சுட்டியும் ஒத்திலக 
 எங்கள் குடிக்கரசே! ஆடுக செங்கீரை, 
          ஏழுலகும் உடையாய்! ஆடுக ஆடுகவே. 
 (பெரியாழ்வார் திருமொழி-6.10)

தவழ்ந்து வரும் கிருஷ்ணன் கொள்ளை அழகுடையவனாகக் காணப்படுகிறான். பார்க்கப் பதினாயிரம் கண்கள் போதவில்லையாம். ஒவ்வொரு அங்கமாகப் பார்த்து, ரசித்து, அவ்வங்கங்களில் பூட்டப்பெற்ற அணிகலன்களையும் கண்டு, அவை அவனுக்குப் பொருந்தும் அழகினையும் ரசிக்கின்றார். சின்னஞ்சிறு செந்தாமரை போன்ற சிறு திருவடிகள்; அவற்றின் சிறு இதழ்கள் போன்ற குட்டி விரல்கள். அவற்றில் அணிவிக்கப்பட்டுள்ள அழகு திகழும் திருவாழி மோதிரங்கள். கால்களை அழகு செய்யும் கிண்கிணிச் சதங்கை. அரை எனும் இடையில் பொன்னரை ஞாண். மாதுளைப்பூபோன்ற வடிவில் அமைந்த பொற்பூக்களை இடையிடையே வைத்துக் கோர்த்த பொன்மாலையும், கைகளில் மோதிரங்களும், மணிக்கட்டில் தங்க வடங்களும் அணிவிக்கப்பட்டுள்ளன. அட! எவ்வளவு அழகாக இவை இவனுக்குப் பொருந்துகின்றன.

இவற்றுடன் மங்கல ஐம்படையும் அணிந்திருக்கிறான். திருத்தோளில் அழகான தோள்வளைகள்; காதில் மகரக் குண்டலங்கள்: செவிகளில் பூண்ட மற்ற ஆபரணங்கள், நெற்றிச்சுட்டி, இவை அனைத்தும் ஒத்து விளங்கும்படியாக செங்கீரை ஆடுவாயாக! என வேண்டும் தாய், பெரியாழ்வாராகி ‘இவன் எங்கள் குலம் விளங்க வந்த அரசன்; குடியைக் காப்பவன்,’ எனும் பேருண்மை மனதிலெழ,”நீ ஏழுலகிற்கும் உரிமை பூண்டவனல்லவோ! செங்கீரை ஆடுக!’ என வேண்டுகிறார்.
  
க்ருஷ்ணர் பிறந்த சிறையை எப்பவோ கோயிலா மாத்தியிருக்கா..இப்பவும் உண்மையான ஜெயில்ல போய் க்ருஷ்ணனை சந்திக்கற மாதிரி இருக்கு. அங்கங்க ஏகப்பட்ட செக்யூரிட்டி கெடுபிடி. பர்ஸ் பெல்ட் எல்லாத்தையும் பிடுங்கி வச்சுண்டு. 

மசூதியும் கோவிலும் ஒன்னோடொன்னு ஒட்டி உறவாடிண்டு ....காட்சி தர்றது...ரெண்டுலயும் மட்டுமில்ல தூண் துரும்பிலும் இருக்கற என்னை ,எனக்குன்னு ஒரு கட்டடம் நீங்களே கட்டி ஒன்னை இடிச்சு ஒன்னை கட்டி நீங்க விளையாடற விளையாட்டுக்கு நான் வரலேன்னு சொல்ற மாதிரியும் இருக்கு..இல்ல உங்களில் இருக்கும் ப்ரம்மத்தை தேட இதெல்லாம் என்னோட விளையாட்டு உனக்கு தெரியாதான்னு அவன் கேக்கறா மாதிரியும் இருக்கு...
இருந்தாலும் இந்த நாட்டோட இதிகாச நாயகர்கள் பொறந்த எடம்னு கோடானு கோடி மக்கள் உணர்வு பூர்வமா நம்பற இடத்துல சுதந்தரமா சேவிக்க முடியாம இத்தனை கெடுபிடிகள் செய்ய வேண்டிய மத அரசியலை நெனச்சு வேதனைதான் பட முடியறது. 

உள்ளே இவ்வளவு கஷ்டப்பட்டு வந்தாலும் நம்ம கோயில்  ஶ்ரீனிவாசரை,ரங்கநாதரை சேவிக்கற அனுபவம் பக்தி பரவசம் கிடைக்காம எதோ ஒரு அன்னிய தன்மை தடுக்கறது. 

''கனையாலால் ஜீகீ ஜெய்!'' என்று முழங்கி மகிழ்ச்சியுடன் கிருஷ்ணனை முதன் முதலில் தொட்டில் போட்ட இடத்தில் ‘கண்ணன் ஆடிய தொட்டிலை’ இன்றும் காணலாம். பால கிருஷ்ணனை பிரதிஷ்டை செஞ்சு ஆலயமாக்கி வழிபடுகிறா...கிருஷ்ண ஜென் மாஷ்டமியன்று இந்த ''ஊஞ்சல் உற்சவம்'' சிறப்பாக நடக்கறதாம். இங்க சந்நதியில் குட்டிகிருஷ்ணனை தொட்டிலில் போட்டிருக்கிறார்கள். அதுவே தெய்வ சந்நதியாக இருக்கு. தினமும் குடம் குடமாக வெண்ணெய் நைவேத்தியம் செய்யறா...எண்ணற்ற பக்தர்கள் இங்கு நாள்தோறும் வந்த வண்ணமா...இங்கு வழிபட வரும் குழந்தைகள் மட்டுமே காணிக்கை செலுத்தி தொட்டிலை ஆட்டி மகிழறாங்க.பெரியவாளுக்கு அனுமதியில்லை !

பக்திப் பரவசத்தோடு கோயிலின் எல்லாப் பகுதிகளையும் பார்த்து ரசித்து சிலிர்த்துக் கொண்டிருக்கும்போதே, மனதுக்குள், எங்கே கிருஷ்ணன் பிறந்த அந்த சிறை? என ஒரு பெரிய கேள்விக்குறி. இந்த கட்டிடமோ நவீன  கட்டிடம். கிருஷ்ணன் பிறந்ததோ மதுராவின் சிறையின் ஒரு சிறு அறையில் என சந்தேகம் மேலோங்க, மக்கள் வரிசை வரிசையாக ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு செல்வதைப் பார்த்து பின்தொடர்ந்தேன். அருகில் தான் இருக்கிறது, அந்த பழமை மாறாத கம்பீரச்சிறை! ஒரு ஆள் மட்டுமே நுழைந்து நடக்கும்படியான அந்த குறுகிய சந்துகளை எல்லாம் கடந்து நடக்க, நடக்க அட! 'மரங்களில் நான் அரசு' என்ற கண்ணன் அரசந்தளிர் போன்ற பிஞ்சுக் குழந்தையாய் அவதரித்த புனித இடம் கண் முன்னே விரியறது. 

கோவில் பத்தி இவர் சொல்றார்...

கிருஷ்ண ஜன்மஸ்தான் என்றும் அழைக்கப்படும் புகழ் வாய்ந்த கோயிலான கிருஷ்ண ஜன்மபூமி கோயில், இந்தியாவின் மிகப் புனிதமான இந்து வழிபாட்டுத் தலங்களுள் ஒன்றாகப் போற்றப்படுகின்றது.

கோயில் வளாகத்தினுள் இருக்கும் சிறு சிறை போன்ற ஒரு அறையில் தான் கிருஷ்ணர் அவதரித்ததாக நம்பப்படுகின்றது. இக்கோயில், ஜஹாங்கீரின் ஆட்சிக்காலத்தின் போது, ஆர்ச்சாவைச் சேர்ந்த ராஜா வீர் சிங் பந்தேலாவினால் கட்டப்பட்டதாக நம்பப்படுகின்றது.
எனினும், பின்னோக்கிப் பார்க்கையில், இங்கு உள்ள முதல் கோயில் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன் கிருஷ்ண பகவானின் கொள்ளுப் பேரனால் கட்டப்பட்டது என்றும் ஒரு கதை உலவி வருகின்றது.
இக்கோயிலின் புகழ் ஓங்கி இருந்த காலத்தில், இதன் மகிமை, வார்த்தைகளாலோ அல்லது ஓவியங்களினாலோ விவரிக்க இயலாதவொன்றாக இருந்துள்ளது. ஆனால் முதன் முதலாகக் கட்டப்பட்ட கோயில், முஹமது கஜினியால், கிபி 1017 ல் இன்னும் பல கோயில்கள் மற்றும் புத்த விகாரங்களோடு சேர்த்து அழிக்கப்பட்டது.
இத்தனை வருடங்களில் இக்கோயில் பல்வேறு வகை கட்டுமான மாற்றங்களுக்கு உட்பட்டுள்ளது. தற்போது உள்ள வளாகம் அச்சு அசல் இந்து கட்டுமான பாணியின் பிரதிபிம்பமாகத் திகழ்கிறது.

ஔரங்கசீப்பின் ஆட்சிக்காலத்தின் போது, இக்கோயிலுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தைக் குலைக்கும் நோக்கில், இதற்கு அடுத்தாற் போல் மிகப் பிரம்மாண்டமான மசூதி ஒன்று கட்டப்பட்டது.  

வெளியே வர்றோம். 

பக்கத்துல கெடுபிடி இல்லாத இன்னொரு கோயில்...
இந்த கோயிலின் உருவச் சிலை ஒரே சாளக்கிராம கல்லில் செதுக்கப் பட்டது. அருகிலேயே மரத்தால் செய்யப்பட்ட 'ஹோகி' என்ற இருக்கையும், ஒரு சால்வையும் உள்ளது. இது சைதன்ய மகாபிரபு இந்த கோயிலுக்கு அளித்ததாம். 

இங்க கிருஷ்ணன் சிலை இருக்கு. அதன் அருகில் ராதையின் சிலை இல்லை. அதற்கு பதிலா அழகா கிரீடத்தை ராதையாக பாவித்து ஸ்ரீ கிருஷ்ணனுக்கு அருகில வச்சிருக்கா. 

கண்ணன் விரும்பி சாப்பிடும் பால், பால் ஸ்வீட், வெண்ணெய் என்று மதுரா நகர் கடைவீதிகளில் ஒரே பால்மயம்தான்! மண் தம்ளர்களில் மண்வாசம் மணக்கமணக்க சூடான பால் தருகிறார்கள். கோபியர் கொஞ்சும் கிருஷ்ணன் தான் மாடுமேய்த்தவனாயிற்றே. அதற்கு சாட்சியாக மதுராநகர வீதிகளில் இன்றும் பசுக்கள் மிகச் சுதந்திரமாக வளைய வந்துகொண்டிருக்கின்றன.
   படம். 1,2,3)கிருஷ்ணர் பிறப்பு ஓவியங்கள்4)கிருஷ்ண ஜன்ம பூமி வெளித்தோற்றம்.             நாளை ..கோவர்த்தன்




No comments:

Post a Comment