அறுபதாம் கல்யாணம் (மனதை தொட்டுவிடும் கதை – 92) #ganeshamarkalam
மிஸ் ஆயிடுத்துன்னு தெரியரத்துக்கே 3 வருஷம் ஆயிடுத்து. அப்படி என்னத்தை மிஸ் பண்ணிட்டேள்னு கேக்கலாம். என் அறுபதாம் கல்யாணத்தை. மிஸ் ஆச்சுன்னு எப்போ தெரிஞ்சது? குழந்தைகளோட திருநள்ளாறு போய் அங்கேந்து மார்கண்டேயர் கோவிலைப் பாத்துடணும்னு போரச்சே வழீலே திருக்கடையூர் வந்ததே அப்போ. டூ லேட்! ஓண்ணும் பண்ணமுடியலை.
நான், ஆத்துக்காரி விமலா, என் பையன் ரமணன், மாட்டுப்பொண்ணு கௌசல்யா அப்புரம் என் பேரன், விஜித் ஷேத்ராடணம்னு கிளம்பினோம். பாக்கிர கோவிலுக்கெல்லாம் ஸ்தலபுராணம் சொல்லுன்னு கேட்டுண்டே வந்தான் பேராண்டி. கார்லே போரச்சே எல்லோருக்கும் பொழுதும் போகணுமா இல்லையா? நானும் “ஒரு நல்ல சந்தர்ப்பம், குழந்தைக்கு நல்ல சத் விஷயங்களை அறிமுகப்படுத்தலாம்”னு. ஆனா என் பேரனுக்கு அவன் கேக்கிர குறுக்கு கேள்விக்கும் பதில் சொல்லணும். இல்லைன்னா “போ தாத்தா உனக்கொண்ணும் தெரியலை, நீ வேஸ்டு”ம்பான்.
திருநள்ளாத்துக்கு 24 கிமீன்னு போட்டிருந்தது. அப்போ கேட்டான் ஒரு கேள்வி. “சனீன்னா சேடர்ன்னு சொன்னாய். ஸ்கூல்ல டீச்சர் சேடர்ன் ரொம்ப பெரூசுன்னு படம் காட்டினா. அப்படி பெரீசா இருக்கர சனி காக்காமேலே எப்படி சவாரி செய்யும்?” சமாளிக்கணும். இல்லைன்னா நீங்க ஒரு சக்ஸஸ்ஃபுல் தாத்தாவா குப்பை கொட்ட முடியாது.
அப்படி திருநள்ளாத்தை பத்தியும் நளமகராஜைவை பத்தியும் சொல்லி முடிக்கலை, திருக்கடையூர் வந்தது. மணி 1230 ஆச்சுதனாலே நடை சாத்தியாச்சு. அங்கேந்து இன்னும் 10 நிமிஷம் ஆகும் மார்கண்டேயரை பாக்க. எங்களுக்காக குருக்கள் வைடிங்க். அப்போ திருக்கடையூருக்கும் கதை சொல்லுன்னான். சொல்லலைன்னா குர்குரே வேணும்பான். அவன் அம்மா அவனுக்குத்தெரியாம எதுக்கும் இருக்கட்டும்னு வாங்கி பையில் திணிச்சதை பாத்துட்டான். உடம்புக்கு ஆகாது. அவனுக்கு கதை சொல்லிண்டே வரச்சே “அச்சச்சோ”ன்னு நடுவிலே வாயில் வந்துடுத்து. “என்ன தாத்தா ஆச்சு?” “ஒண்ணும் இல்லைடா”ன்னுட்டு கதையை தொடர்ந்தேன். எனக்கு அறுபதாம் கல்யாணம் பன்ணலையேங்கிரதும் அது இப்போதான் ஞாபகம் வந்ததுக்குத்தான் அந்த “அச்சச்சோ”ன்னு குழந்தைக்கு ஏன் சொல்லணும்?
அதுக்கப்புரம் மனசு நான் சொல்ர அந்தக்கதையில் லயிக்கவேயில்லை. எதையோ பறிகொடுத்தாமாதிரி. அப்படியே 2 வருஷம். என் நிலைமையில் நீங்க இருந்தாத்தான் உங்களுக்கு புரியும்.
எல்லாத்தையுமே பாத்துப்பாத்து செஞ்ச எனக்கு, ரமணன்தானே சஷ்டியப்த பூர்த்தி செஞ்சிருக்கணும்? எனக்குத்தான் மறந்துபோச்சு, அவனுக்காவது தோணியிருக்க வேண்டாமா? இல்லை அவன் மாமனாராவது பொண்ணுகிட்டே சொல்லி ஏற்பாடு செஞ்சிருக்கலாம். ஒருவேளை எதுக்கு சிலவுன்னு யோசிச்சானோ? என்னை கேட்டா கொடுத்துடப்போரேன்! இப்போ அவன் குத்தம்னு சொல்லலை. ஆனா சாஸ்திரப்படி தள்ளிப்போயிடுத்தே?
விமலாவுக்கு எல்லோரோட ராசி, நக்ஷத்திரம் லக்னம் எல்லாம் அத்துப்படி. அர்ச்சனைக்கு இவ சொல்ரச்செ குருக்களே அசந்து போவர். 20பேருக்கு கரெக்டா சொல்லுவா. “சககுடும்பானாம்”மெல்லாம் அவ ஒத்துக்கமாட்டா! எப்படி இந்த சுபகாரியத்தை மறந்து போனா? பிள்ளையாண்டனையும் மாட்டுப்பொண்ணையும் தூண்டிவிட்டிருக்க வேண்டாமோ?. உப்பு சப்பில்லாத விஷயத்துக்கெல்லாம் என் ஆத்துக்காரி அவாளோட சேர்ந்து எனெக்கெதிரா சதி செய்வாளே? வீடு வாங்க கையில் பொட்டு காசில்லை. “லோனைப்போட்டு உடனே அப்பாவை ஒரு வீட்டை கட்டச்சொல்ரா எத்தனை நாள் வாடகை ஆத்தில் குடியிருக்கரது”ன்னு அவனை தூண்டிவிட்டு என்னையும் கடனாளியாக்கி தன் காரியத்தை சாதிச்சிருக்கா. நிறைய இருக்கு, ஒண்ணு சொன்னேன் சிறுகதையோன்னோ! “உங்கப்பாவை நரைச்ச முடியோட மாலையும் கழுத்துமா பாக்கணும். சிலவுக்கு அப்பா தருவார்”னு ஆசை காட்டி இத்தையும் செஞ்சிருக்கணுமே! செய்யலை.
என் கல்யாணம் நடந்தப்போ B&W ஃபிலிம்தான். எனக்குமட்டும் மாலை போட்டுண்டு இவளோட கலர் வீடியோ எடுத்துக்க ஆசையில்லயா?
கௌசல்யா, என் மாட்டுப்பொண்ணு வக்கணையா, ஏதாவது காரியம் ஆகணும்னா “அப்பா”ன்னு கூப்டுண்டு வருவா, இல்லைன்னா “மாமா”தான். அன்னைக்கு “அப்பா உங்ககிட்டே ஒண்ணு சொல்லணும்”னு குழைஞ்சா. “என்னம்மா?”. “எங்க ரூமில் ஏஸி இருந்தா நல்லது, அவரால் இப்போ PF லோன் போடமுடியாதாம். நீங்க வாங்கித்தர முடியுமா?” குழந்தைகளுக்கு நாமா சௌகர்யத்தை செஞ்சுகொடுத்திருக்கணும், கேக்கும்படியா வச்சுட்டோமேன்னு உடனே ஸ்பிளிட் ஏஸி இன்ஸ்டால் செஞ்சேன். அதுக்கப்புரம் அவள் உள்ளெ நுழைஞ்சிண்டா நாள்பூரா வெளிலேயே தலை காட்டரதில்லை. இந்த செகண்ட் ஹாண்ட் அப்பனுக்கு அவளாவது அறுபதாம் கல்யாணம்னு யோசிச்சிருக்கணுமா இல்லையா? இன்னும் 5 வருஷத்திள் அவளை பெத்த அப்பனுக்கு 60 ஆகும். அப்போ பாக்கத்தானே போரேன்.
என் மாமனார் இன்னும் இருக்கர். சரி அவருக்கு போன் போட்டு முறையிடலாம், ஆத்தில் மூத்தவர் ஏதாவது வழி, அல்லது ஆறுதலாவது சொல்லுவர்னு கூப்பிட்டா “தூங்கிண்டிருக்கர் எழுந்துக்கட்டும் கூப்பிடச்சொல்ரேன்”னு மாமி., “என்ன விஷயம் மாப்பிள்ளை”ன்னு இழுத்தா. இந்த வயசுலே வரதக்ஷினை பத்தலைன்னு மிக்ஸி க்ரைண்டெர் ஏதாவது கேட்டுடுவேனோன்னு! “ஒண்ணும் இல்லை, சும்மாத்தான்”னு வச்சுட்டேன்.
சஷ்டிஅப்த பூர்த்தியை கரெக்டா 60 வயசு நிரையரச்சே செஞ்சுக்கணுமாம். சில அபூர்வ சந்தர்பங்களில் கொஞ்சம் முன்னாடி. நாம் பொறந்த அன்னைக்கு (60 வருஷத்துக்கு முன்னாடி) கிரகங்களும் நக்ஷத்திரங்களும் எப்படி இருந்ததோ, கிடத்தட்ட அப்படி ஒரு அலைன்மென்டில் திரும்பவும், ஒரு மறுபிறவி எடுத்துண்டு கொண்டாடரா மாதிரியாம். அதுனாலே லேட்டா “எப்போ சௌகர்யமோன்னு செய்யப்பிடாதாம். இதெல்லாம் கேட்டதும் மனசு இன்னும் கனத்தது. எப்பேர்ப்பட்ட விஷயத்தை மிஸ் பன்ணிட்டோம்னு.
அதுமட்டுமில்லை! 60 வயசு வரைக்கும் நாம பணத்துக்கு பின்னாடி நாயா பேயா அலைஞ்சு கந்தலாகி இப்போ சத் விஷயங்களில் ஈடுபடுத்திக்க இந்த பூர்த்தி ஒரு சந்தர்பத்தை கொடுக்கிரதாம். ஒரு ஸ்பிரிச்சுவல் வாழ்க்கையை வரவேற்கிரா மாதிரி. எனக்கு மட்டும் ஏன் இப்படி ஆச்சு?
பாத்தேன், இப்படி அழுது அரட்டிண்டு இருக்கரதுக்கு பதிலா, லோலோன்னு இவன் செஞ்சிருக்கலாமே, அவள் செஞ்சிருக்கலாமேன்னு குத்தம் சொல்ரதுக்கு பதிலா இனிமேல் எங்கே என்ன விசேஷம் நடந்தாலும், குறிப்பா சஷ்டியப்த பூர்தின்னா, கூப்பிட்டாலும் கூப்பிடலைன்னாலும் ஆஜர் ஆயிடரதுன்னு தீர்மானம் செஞ்சேன்.
அன்னைக்கு என் நண்பரோட அறுபதாம் கல்யாணத்துக்கு அவர் குழந்தைகள் வந்து அழைச்சிட்டு போனா. பக்கத்திலேதான். சரிதான் அவசியம் போயிடணும்னு எனக்கு பட்டது. இருந்தாலும் கொஞ்சம் பிசி மாதிரி பாவ்லா வழக்கமா செய்யரதுதானே! என்னைவிட விமலாவுக்கு இதில் இன்டெரெஸ்ட். “ஆத்துக்கு வந்து நம்பளையும் மதிச்சு அழைச்சுட்டு போயிருக்கா, ஒரு நடை போய் மூஞ்சியை காமிச்சிட்டு வந்துட்ரதுதான் நமக்கும் மறியாதை”ன்னா. அவ சொல்ரச்சே தர்ம போதனை செய்யராப்புலே இருக்கும் தட்டமுடியாது. ரொம்ப பிகு பண்ணினா “ஏன் ஒருநாளைக்கு சமையல் கட்டில் நான் வேகாம இருந்துட்டா உங்களுக்கு என்ன?” அப்பவும் மசியலைன்ன “பாருங்கொ இருக்கர தண்ணி கஷ்டத்தில் ஒரு வேளை சமையல் பாத்திரம் விழலைன்னா தண்ணி மிச்சாம்தானே”ன்னு பாயின்டில் பிடிப்பள். சரின்னுட்டு கிளம்பிடுவேன்.
60ஆம் கல்யாணம் சீக்கிரம் முடிஞ்சுட்ரது. முதல் கல்யாணம்னா 3 வேளையும் அங்கேயே பாத்துண்டுடலாம். இவ சொன்ன அளவில் மூணுமடங்கு தண்ணி மிச்சம்
.
இப்போல்லாம் 57 – 59 வயசுக்காராளை பாத்தா நானே வலியப்போய் “எப்போட பூர்த்தி பண்ணிக்க போராய்”ம்பேன். பண்ணிண்டா என்ன லாபம், விசேஷம்னு லெக்சர் எடுப்பேன். நமக்கு இல்லாம போனது அவனுக்காவது கிடைக்கட்டும்னுங்கிரது ஒரு லாஜிக். நம்ப பூவாவுக்கு வழி, தண்ணியும் மிச்சம். அப்படி நான் போய் பேசினதில் ரெண்டு பேர், “ஆமாம் பண்ணிக்கலாம்தான், திருக்கடையூரில் பண்ணிக்கலாம்னு யோசிக்கரேன்”னா. எனக்கு சுரேர்ன்னுது. நம்பளையும் அவ்வளவு தூரம் டிக்கெட் போட்டு அழைச்சிண்டு போவானா என்ன? மாட்டான். ஆத்தோட மனுஷாளை மட்டும்தான். அப்போ நானும் என் ஆத்துக்காரியும்? உடனே மூளை ஓவர்டைம் செய்யும். “இங்கேயே உங்காத்துலேயே பண்ணிண்டாத்தான் விசேஷம்னு ஆரம்பிப்பேன். கன்வின்ஸ் செய்யரது ஈஸி இல்லை.
இப்படி இருகச்சே மாமனார் போன் செஞ்சர். “மாப்பிள்ளை அன்னைக்கு கொஞ்சம் அசதி, உடம்பை சாச்சுடுத்து. நீங்க போன் செஞ்சேளாம். இன்னைக்குத்தான் சாவகாஸமா சொல்ரா. ஏண்டி, இப்படி பண்ணினாய்னு திட்டிட்டேன்”கிரர். இவராவது திட்ரதாவது? நானும் விமலாவை திட்டமுடியாது, இவரும் அவள் அம்மாவை நிமிந்துகூட பாக்கமுடியாது. எல்லாம் ஜீன்ஸ்லே வச்சு அனுப்பியிருக்கான். குசலம் விசாரிச்சிட்டு என்ன மேட்டர்னர். விஷயத்தை சொன்னேன். “மாமா, என்னோட சஷ்டியப்த பூர்த்தி மிஸ் ஆகிடுத்து. கவலை அறிக்கரது. என்ன செய்யலாம்? ஏதாவது பரிகாரம் இருக்கா”ன்னேன்.
அச்சச்சோ, இவருக்கே நடந்துதான்னு தெரியலையே? என்னையும் சேர்த்து 3 மாப்பிள்ளை, 2 பசங்க வேர. நாங்களும் பண்ணிவைச்ச ஞாபகம் இல்லை. நான் கேட்ட கேள்வியை எப்படி எடுத்துப்பாரோ? ஆனா அவர் அப்படி எதையும் யோஸிக்காம, “மாப்பிள்ளை முதல்லே உங்க மனசுலே இருக்கிர கவலையை எடுத்து தூர எறிங்கோ. இதெல்லாம் புருடாஸ்”னு ஒரு போடு போட்டாரே பாக்கணும்! எனக்கு உடனே லேசா ஜன்ம சாபல்யம் கிடெச்சாமாதிரி பட்டது.
“மாப்பிள்ளை, கவனமா கேளுங்கோ”ன்னு சொல்லிட்டு ஆரம்பிச்சர்.
“அந்தக்காலத்துலே 60 வயசுவரைக்கும் உயிரோட இருப்பதே அபூர்வம். 35லேந்து 50க்குள் சிவப்பிராப்தி அகிடும். 60 வயசு வரைக்கும் ஒருத்தர் இருந்தாள்னா, நம்ப ஹிந்து காலண்டரில் எல்லா வருஷத்தையும் பாத்துட்டான்னு பெருமைப்பட்டுக்கலாம். அதை கொண்டாட அப்படி வச்சா. இப்போ இது நிறையப்பேருக்கு ஜுஜூபி. அதுனாலே இது பெரீய மேட்டர் இல்லை.”
“ரெண்டாவது, நாம 60 வயசு வரைக்கும் நம்மை பாடாப்படுத்தின கிரகங்களும், நக்ஷத்திரமும் திதியும் நாம பொறந்தப்போ எப்படி இருந்ததுதோ அதே அலைன்மென்டுக்கு திரும்பவும் வந்தா நம்ம சொச்ச வாழ்க்கையும் அதேமாதிரிதானே அமையும்? அப்படி ஒரு மறுபிரவி தேவையா? 60வயசில் திரும்ப பிறக்கச்சே மூட்டு வலியும் நெஞ்சில் படபடப்பும் தொந்தியும் தொப்பையுமா இன்னொரு கல்யாணம் ஒரு கேடா? அப்படியே பண்ணிக்கணும்னா கொயட்டா ஆத்தில் சாமி உள்ளில் மாலை மாத்திண்டு சரவணபவனில் போய் ஒரு ஸ்பெஷல் தாளி சாப்டுட்டு ஆத்துக்காரியை தள்ளிப்படுக்க சொல்லிட்டு தூங்கிடணும்.”
“அறுபதாம் கல்யாணம் அக்னி சாக்ஷியா முன்னாடி செஞ்சிண்ட விவாஹ பிரதிஞைகளை எல்லாம் புதுப்பிச்சுக்கரதுக்காகவும் பண்ரா. அதில் மட்டும் அர்த்தம் இருக்கு. இத்தனைநாள் கணவனா என் கடைமைகளை செஞ்சாலும், ஏதும் குத்தம் குறை இருந்தா சொச்ச டயத்தில் விட்டுப்போனதை பூர்த்தி செஞ்சு காட்டுவேன்னு பொண்டாட்டிக்கு இன்னொரு சத்யம் செஞ்சு கொடுக்கராரா மாதிரி. அதுபோல அவளும் செய்வான்னு நம்பலாம். நம்பணும். மத்ததெல்லாம் புருடாஸ்”னு முடிச்சார்.
நீங்க மறுபிரதிஞை எடுத்துண்டேளான்னு தைரியத்தை வரவழைச்சுண்டு கேட்டேன்.
அறுபதாம் கல்யாணம்னு பண்ணிக்கலையே தவிர ப்ராமிஸ் புதுப்பிச்சேன். ஆனா நீங்க நினைக்கராப்புலே இல்லை. எனக்கு 17 வயசில் கல்யாணம் ஆச்சு. வருஷத்துக்கு ரெண்டுதடவை மானசீகமா அக்னியை நினெச்சிண்டு விவாஹ பிரதிஞைகளை புதுபிச்சுப்பேன். வயசாகும்போதே அப்படி செஞ்சு செஞ்சு 84 தடவை புதுப்பிச்சுண்டாச்சே. அதாவது மானசீகமா எனக்கு 84 கல்யாணம் ஆயிடுத்து, அப்போபோய் 60ஆம் கல்யாணம்னு யாராவது பன்ணிப்பாளா”ன்னு ஒரு போடு போட்டர். நீங்களும், இன்னைக்கு ஆரம்பிச்சு என்னைப்போல ஆயிசு காலம்பூரா செஞ்சேள்னா உங்களுக்கும் உங்கள் இல்வாழ்க்கைக்கும் நல்லது”ன்னர்.
82 வயசில் இப்படி ஒரு தெளிவு! அத்தோட தன் பொண் விமலாவோட சொச்ச வாழ்க்கைக்கும் சமத்தா எங்கிட்டே உத்தரவாதம் வாங்கிக்க பாக்கரர்!
அது எப்படியோ, என் அறுபதாம் கல்யாணம் மிஸ் ஆகிடுத்தேன்னு கவலை பட்ரதை விட்டொழிச்சேன்.
No comments:
Post a Comment