31. பரோபகாரம் (சிசீ6) #ganeshamarkalam
“இன்னைக்கு என்ன சமைக்கட்டும்?” கேட்டுண்டே கஸ்தூரி வந்தா. “என்ன காய் இருக்கு?” தெரிஞ்சுக்காம எதையாவது சொல்லி ‘எழுந்து போய் வாங்கிண்டு வந்தா பண்ணித் தரேன்’னுடுவா. அவ சொன்னதை வச்சு “பொடலங்காய் கறி, தக்காளி பருப்பு போட்டு ரசம் வச்சுடு, மோர்மிளகாய் வறுத்துட்டாயான்னா யதேஷ்டம்.” லாக்டவுனில் இதுக்கு மேலே என்னத்தை எதிர்பாக்கன்னு சொல்லிட்டேன்.
சிலர் டோக்லா, பிட்லை, உருளை சிப்ஸ், வடை, பஜ்ஜீன்னு தடபுடலா சாப்டாறது தெரியும். முகநூலில் வந்திண்டிருக்கே! ஒருத்தர் சேம்பு ஃப்ரை பண்ணி போடோ. பாத்ததும் எடுத்து நாக்லே ஒத்திக்கணும்போல். அத கஸ்தூரியும் பாக்காம இல்லை. பாத்துட்டு நான் கேக்காமலேயே சிலதை பண்ணலாம்தான். “உங்களைக் கேக்காம ஒருநாளாவது சமைச்சிருக்கேனா”ன்னு அப்பரம் ஏதாவது விவகாரம் வரச்சே சொல்லிக் காட்ட தோதுப்படும். நமக்கோ இன்னது வேணும்னு ஓபனா கேக்க கூச்சமாயிருக்கு. அதை நன்னா தெரிஞ்சிண்டு பயன்படுத்திக்கரா.
நீங்க உடனே முடிவுக்கு வந்திருப்பேள், இவாத்தில் இன்னைக்கு ரசஞ்சாதம்னும் தொட்டுக்க புடலங்காய் கறியும்னு. அப்படீன்ன்னா நீங்க கஸ்தூரிய சரியாப் புரிஞ்சுக்கலைன்னுதான் அர்த்தம். இது பண்ணிடு இன்னைக்கு போதும்னு நான் சொல்லி வாய மூடலை, “ரசத்தை தொட்டுண்டு ரவா தோசை எப்படி சாப்டுவேள்?” நான் ஏன் ரசத்தை தொட்டுண்டு ரவா தோசை சாபிடணும்? ரவா தோசை பத்தி பேச்சில் வரவேயில்லையே! ராத்திரிக்கு ரவா தோசை செய்யப் போராளாம். அதுக்கு கார்த்தால சமையல் தோதா வரணுமாம். எனெக்கெப்படி தெரியும்? கூடவே இன்னொண்ணூம் சொல்ரா. “புதுசா ரசம் வச்சா மொர்க்குழம்பு வீணாப் போயிடும்”. பக்குன்னுது. “மோர்க்குழம்பு எங்கேந்து வந்தது?” “மிந்தாநா உங்களுக்கு பிடிக்குமேன்னு வச்சது, நீங்க குத்திக்கவேயில்லை. ஒரு கிண்ணீலே ஃப்ரிட்ஜில் கிடக்கு.”
சரியாப் போச்சு. ப்ரிட்ஜில் என்ன இருக்குன்னதுக்கு தக்காளி புடலங்காய்னா. மோர்க்குழம்பு சொல்லலை. “அது இருப்பது எனெக்கெப்படி தெரியும்?” நிறைய பண்டங்கள் போட்டு செஞ்சது, வீணடிக்கப் பிடாதே! “ஆத்தில் புருஷான்னு இருந்தா அப்பப்ப போய் ப்ரிட்ஜில் என்ன வச்சிருக்கான்னு பாக்கணும்.” அது சரி! “அன்னைக்கு அப்படி பிரிட்ஜை தொறந்தப்போ, “உள்ளே ஒண்ணும் இல்லை, அப்படியெல்லாம் நோண்டப் பிடாதுன்னு எட்டூருக்கு கேக்கராப்போல் சண்டை போட்டாய்?” “பின்னே! போடாம என்ன செய்வா? போனவாரம் க்ரேட் செஞ்சு பச்சடிக்கு வச்சிருந்த கேரட்டை எடுத்து தின்னுருக்கேள். அதான் அப்படி சொன்னேன்.”
எடுத்து தின்னது என்னமோ வாஸ்த்தவம். அப்பப்ப நடக்கறதுதான். இவளுக்குத் தெரியாதுன்னு நினைச்சேன். கண்டுபிடிச்சிருக்கா. உடனே வந்து திட்ட வேண்டியதுதானே? சில திட்டல்கள் சரியான சமயத்துக்காக வச்சிண்டிருந்துட்டு நாம எதிர்பாக்காதப்போ இப்படி. ஃப்ரிட்ஜுக்குள் சிசி டிவி காமரா வச்சிருப்பாளோ? தொறந்ததும் லைட் அடிச்சதே! குனிஞ்சு எதை எடுத்தாலும் ஸ்பஷ்டமா வீடியோ காட்சியா இவ போனுக்குப் போகுமோ? இனிமேல் மூஞ்சிய துண்டால் சுத்திண்டு போய் எடுக்கணும். உஹூம்! துண்ட வச்சே கண்டு பிடிச்சுடுவா.
“சரி. எதையாவது சமை!” “நேத்து பொரிச்ச அப்ளம் 4 இருக்கு. மோர்க்குழம்பும் மோர்மிளகாயும்”. ரைமிங்கா சொல்ரா. நானும் சும்மா இல்லாம ராத்ரிக்கு ரவாதோசை வேண்டாமே! மோர்களி கிண்டிட்டா இன்னிப்போது மொருமொருன்னு போயிடும்.” என் வார்த்தையில் இருந்த நக்கலை புரிஞ்ச்ஜிண்டாளா தெரியலை. புரிஞ்சிண்டிருப்பா. இன்னொருநா இதுக்கு தகுந்த பதில் தருவா. இப்பத்தைக்கு இந்த பிராம்ணனை விட்டுப் பிடிப்பம்னு.
ஒரு 9 இருக்கும். “அரிசி களைஞ்சு தண்ணீ விட்டு குக்கரில் வச்சிருக்கேன். சித்தே ஊறட்டும், அப்பரம் குக்கரைத் தூக்கி ஸ்டவ்வில் வைங்கோ. நான் இப்ப வரேன்!” எங்கேயோ கிளம்பிப் போனா. அவள் போன 10நிமிஷம் கழிச்சுத்தான் மாஸ்க் மாட்டிண்டாளான்னு கவலை வந்தது. ஆத்தில் அவளோடதை காணம்.
இப்படி கஸ்தூ எதிர்பாராத விதமா எங்கேயாவது கிளம்பிப் போரச்சே கொஞ்ச நேரத்துக்கானாலும் அதி அற்புதமான சுதந்திரம் கிடைக்கும். ப்ரிட்ஜை தொறந்து என்னெல்லாம் இருக்குன்னு நன்னா நோட்டம் விட்டேன். மோர்குழம்பு தவிர பழைய பீர்க்கங்காய் துவயல். மேலோட்டமா டார்க் ப்ரவுன் கலரில். ஏடு புடெச்சிண்டு. ஃப்ரிட்ஜில் வச்சுட்டா ஆச்சா? சமைச்ச எல்லா பண்டங்களுக்கும் ஆயுசுன்னு ஒண்ணு இருக்கோன்னோ! துகயல் இன்னிக்கோ நாளைக்கோன்னு கஷ்டப் பட்டுண்டு. மோர்குழம்பு இன்னைக்குனு ஆனப்பரம் அதை டேஸ்ட் செஞ்சு பாத்துடணும்னு ஒரு ஸ்பூன் எடுத்து வாயில் விட்டுக்கரேன். தேறிடும். இன்னைக்கு காலி செய்யலைன்னா துகையலுக்கு துணையா கிளம்பிடும். நாளைக்கு சனிக்கிழமை வேற. சனிப்பொணம் தனியா போகாது.
சாதம் எடுத்து வடிக்கலாம்னு நினைக்கரச்சே ஃபோன். கஸ்தூரி ஃபோன் மாதிரின்னா இருக்கு? எடுத்துண்டு போலயோ? மறந்துடுவா. ஆத்துலேந்து கிளம்பரச்சே செல்போனை மறந்து வச்சுட்டு போவது போன இடத்தில் மறந்து வச்சுட்டு வரத்துக்கு தேவலை. யாரா இருக்கும்? எடுத்து பாக்கரேன். காலர் “கோவிட் மாமி.” இப்படி ஒரு பேரான்னு யோசிக்க 2 செகண்டில் இது கஸ்தூரி வச்ச பேர்னு புரிஞ்சது. இப்படி ஏன்? டிஸ்கனெக்ட் செஞ்சுட்டு இல்லை அடிக்க விட்ருக்கணும். எனக்கு சாதம் வடிக்கணும். எத்தனை வேலை. அப்படி செய்யாம எடுத்து அக்ஸெப்ட் செஞ்சு காதில் வச்சுக்கரேன்.
ஹலோன்னு சொல்லலை, அந்தப் பக்கத்துலேந்து “சொல்ரேன் எழுதிக்கோ” அந்த ஸோ கால்ட் கோவிட் மாமி கடை சாமானெல்லாம் சொல்ரா. நானும் ஒரு பேப்பரில் எழுதிக்கரேன். 2 கீலோ சன்ரைஸ். (ரஜனி கேட்ட ஒரு கூடை சன்லைட் மாதிரி), வெல்லம் கால் கிலோ, சம்பா கோதுமை, சேமியா ஒரு பேக்கட், ரின் சோப், ஹேண்ட் வாஷ், 4 சாக்லேட் க்ரீம் பிஸ்கெட், சின்ன வெங்காயம், ரெண்டு நல்ல தேங்கா தட்டிப் பாத்து, ஏதாவது பச்சைக் காய்கறி, கருகப்பிலை, கொத்தமல்லி, பச்சை மிளகாய்.” நான் கஸ்தூரி இல்லை, ஜகதீசன், நீங்க யாருன்னு கேக்கரத்துக்குள் டப்புன்னு வச்சுடரா.
சரி போட்டம் இவள் வந்ததும் கேட்டுக்கலாம். மளிகைக் கடைக்கு போகவேண்டிய கால் இவளுக்கு.
குக்கரை வச்சுட்டு வந்து 10 நிமிஷமாச்சு அடுக்களைலேந்து கொடகொடன்னு சத்தம். போய் பாத்தா குக்கர் மூடி நர்த்தனம் ஆடிண்டு. கேஸ்கட்டே போடலை. எல்லாத்தையும் ரெடியா வச்சுட்டேன் அடுப்பில் ஏத்தினாப் போதும்னாளே. தலைலே அடிச்சிண்டே நல்ல வேளை பாத்துட்டம், அவ வந்து பாத்திருந்தா தொலைஞ்சம்னு தோணித்து. ஆனா கேஸ்கெட் போட்டு வச்சுட்டு இந்தண்ட வரலை விஸில் கேட்டது. அதெப்படி சாத்தியம்? ஓடினா பக்காத்தாத்து விஸில். நான் சாதம் வடிக்கரப்போ பாத்தா அவாத்திலும் வடிக்கணும்? பக்கத்து மனையில் அப்பார்ட்மென்ட் வந்ததுலேந்து இந்த குழப்பம். அவாத்து ஃப்ரிட்ஜிலும் மோர்குழம்பு இருக்குமோ. இங்கே இருப்பதை அங்கே கொண்டுபோய் ஓசைப்படாம வச்சுட்டு வந்துட்டா?
ஆனா பாருங்கோ மணி 1130 ஆச்சு இவளை இன்னும் காணம். எங்கே போயிருப்பா? வாசல்லே போய் பாத்தா தெருக் கோடீலே வந்திண்டிருக்கா. அப்பாடான்னு ஆச்சு. சமையல் வேலை இல்லைன்னதும் பாருங்கோ வெளீலே உலா. துளிக்கூட பயமில்லை. கிட்டக்க வரவர கழுத்தில் மாஸ்க் தெரிஞ்சது. ஒரே ஒரு பக்கம் காதில் மத்ததெல்லாம் தோளில் கூடவே அந்த ரெண்டு நாடா நீளமா இங்கேந்து பாத்தா லேடி டாக்டர் கஸ்தூரி MBBS FRCS ஸ்ததெஸ்கோப் மாட்டிண்டு ஒய்யாரமா பேஷன்ட்ஸ் ரவுண்ட்ஸ் முடிஞ்சு வராபோல் ஃபீல் ஆச்சு.
“எங்கே போய்டாய்? இத்தனை நேரமா? இன்ன இடத்துக்கு போரேன், இத்தனை நாழி ஆகும்னு சொல்ரதில்லையா?” “ஒரு விவகாரம், மத்யஸ்த்தம் செய்யப் போனேன். சொன்னா அதுக்கெல்லாம் நீ போவேண்டாம்னு கிளம்பரச்சே அஸ்த்து சொல்லுவேள் அதான்”. அட! பஞ்சாயத்து போயிருக்கா. விவகாரம்னு சொல்ரா. “என்ன மேட்டர்? நானும் தெரிஞ்சுக்கலாமா?” “கொரோனா போக குளிச்சுட்டு வரேன். அப்பரம் பெசலாம்”.
“2ன்ட் மெயினரோடில் ராஜிய அவ ஆம்படயான் வெளீலே தள்ளி கதவச் சாத்திட்டானாம். அதுக்கு இன்னைக்கு ரெஸிடென்ட் வெல்ஃபேர் அசோஸியேஷன் ஆட்களுடன் நேரில் போய் என்ன ஏதுன்னு கேட்டு சுமுகமா பிர்ச்சனைய சால்வ் செய்ய டயம் குறிச்சு வச்சிருந்தம். அதுக்கு போயிருந்தேன்”. ராஜி தெரியும். ஒருநா ஆத்துக்கு வந்திருந்தா. இவா ரெண்டு பெரும் மின் ரூமில் உக்காந்திண்டு குசுகுசுன்னு என் காதில் விழுந்துடப் பிடாதுன்னு பெசினது நினைவில். இது நடந்தது ஜனவரியில். அப்ப கேட்டதுக்கு ‘ஃபேமிலி மேட்டர், ஆம்படையான் பொண்டாட்டிக்குள். உங்களுக்கு புரியாது’ன்னூட்டா. என்ன பிர்ச்சனைன்னு எததையோ சுவாரஸ்யமா யோசிச்சிட்டு விட்டுட்டேன். இத்தனை நாள் சகிச்சிண்டிருந்துட்டு நேத்துதான் வெளீலே தள்ளி கதவ சாத்தியிருக்கான். ரெம்ப பொறுமைசாலி. குணாவ தெரியும் அவன் அப்பார்ட்மென்ட் கீழே கார் ஷெட்டில் கடை. எல்லாரும் கார். இவன் கடைய பார்க் செஞ்சுருப்பான். எது கேட்டாலும் கிடைக்கும். இல்லை வரவழைச்சுத் தருவான்.
இப்ப சண்டை என்னங்கிறதை விட தீர்வு ஆச்சான்னு தெரிஞ்சுக்க ஆசை. ஏன்னா கஸ்தூ இன்வால்வ்ட்.
அப்பரமா சொல்ரா. ராஜீக்கும் குணாக்கும் ஒத்துப் போலை. இத்தனைக்கும் +2 அப்பரம் 8த் ஸ்டாண்டர் படிக்கும் ரெண்டு குழந்தைகள் இருக்கா. ஒத்துப்போனா என்ன ஆலைன்னா என்ன? பேசாம தனி ரூமில் இருந்துக்க வேண்டியதுதானே? இவளோட அப்பா அம்மா, தங்கை இவளோடத்தான் இருக்கணும்னு அடம் பிடிக்கராளாம். அவன் பிடாதூங்கரான். வீடு இவன் பேரில். அதை எம்பேருக்கு மாத்து. எதுக்கு? ஏன்னா அவன் சாயங்காலமாச்சுன்னா எங்கேயோ போயிடரான், அவனுக்கு இன்னொரு வொயிஃப் இருக்கான்னு இவ சந்தேகம். தன்னையும் தன் புள்ளைகளையும் காப்பாத்திக்க வீடு. நித்தம் நச்சரிச்சா? வெளீலே தள்ளி கதவச் சாத்திட்டன்.
“அசோஸியேஷனுக்கு யார் சொன்னா?” “நான்தான். ராஜி பாவம் ஆத்துக்குள் போமுடியாம வாசல்ல நின்னுண்டு மிந்தாநா ஃபோன் போட்டா. உங்கப்பாவ வரவழைச்சு எப்படியாவது திரும்ப நுழைஞ்சுடு. நாங்க வெள்ளிக்கிழமை வரோம்னேன். பஞ்சாயத்துக்கு நிறைஞ்ச நாளா இருக்கட்டும்னு”.
“எல்லாரும் இன்னைக்கு வந்திருந்தாளா?” “ஆமாம், ஆஃபீஸ் பேரர்ஸ், ராஜீக்கு தோழியா நான், அவள் அம்மாவும் அப்பாவும்”. “குணா?” “அவனில்லாமையா?” “என்ன முடிவெடுத்தேள்?” “இப்பத்தைக்கு ட்ரூஸ். வெளீல தள்ளி கதவச் சாத்தினா டொமெஸ்டிக் வயலன்ஸ் கேஸ் போடுவம், அடுத்த வாரம் செகண்ட் ரவுண்ட் பெச்சு வார்த்தை. இடையில் அதுவே சுமுகமா தீர்ந்து போனாலும் ஓகே”. “குணா சின்னவீடு வச்சிருக்கானா?” “அப்படித்தான் தோணித்து”. “உனக்கென்ன தோண்ரது, அவா சுமுகமா சமரசம் செஞ்சுண்டு போயிடுவாளா?” கேட்டதும் தோணித்து சமரசமோ சமமோர்குழம்போ ஏதோ ஒண்ணு ஆனாச் சரின்னு. “ஆகாம விடமாட்டம்”
நாட்டில் இத்தனை கொரோனா, வியாதி, ஊரட்டங்குன்னு அல்லோல கல்லோல பட்டாலும் அடிப்படையில் மனுஷா மாறலை. “நீ ஏன் இதில் டீப்பா?”
“ஒருத்தி வந்து கஷ்டத்தை சொல்லி பிழியப் பிழிய அழுதா சும்மா எப்படி? இவ பக்கமும் தப்பு இருக்கும் எல்லாத்தையும் குடஞ்சுண்டு உள்ளே பிரவேஸிக்க முடியலை. ஏதோ என்னால் முடிஞ்சது. அத்தனை பேர் மாஸ்க் மாட்டிண்டு தள்ளி நின்னுண்டு வாக்குவாதம் பாக்க சுவாரஸ்யமா!” அட! அவா 2 பேருக்கும் இடையில் இடைவெளிய குறைக்க இவா தள்ளீ நின்னுண்டு பாடு பட்ருக்கா பாத்துக்கோங்கோ!.
“அது போட்டம். கோவிட் மாமி யாரு?” “புவனேஸ்வரி. ஏன் கேக்கரேள்? “சும்மாத்தான்.” “ஃபோன் வந்ததா?” மளிகை லிஸ்ட்டை கொடுத்தேன். “அவாத்துப் பையன் வேலைக்கு போன இடத்தில் டெஸ்ட் எடுத்து பாஸிடிவ்வாம். அழைச்சிண்டு போயிட்டா. மாமியையும் டெஸ்ட் செஞ்சு இல்லைன்னு விட்டாச்சு. அப்பார்ட்மென்டில் மத்த ஜந்துக்கள் வேற இடத்துக்கு ஓடிட்டா. அவசியமானது வாங்கிக்க முடியலையாம். நான்தான் சொல்லுங்கோ வாங்கிண்டு வந்து தரேன்னு.” மின்னமே 2 வாட்டி வாங்கிக் கொடுத்தேன்.”
“அதென்ன கோவிட் மாமி? புவனேஸ்வரீன்னு சேவ் செய்யப் பிடாதா?” சீசன் முடியரவரைக்கும். நமக்கும் ஒரு கோவிட் ஃபேமிலியத் தெரியும்னு வேண்டாமா?” “அது சரி. வாங்கித் தந்துக்கு காசு தந்துடுவாளா?” “பிள்ளயாண்டன் ஆத்துக்கு க்ஷேமமா வந்ததும் தருவா”
என்னை அறியாம பிள்ளையாண்டனுக்கு 11 காயத்ரி சொல்ல ஆரம்பிச்சேன்.

No comments:
Post a Comment