இராம ஜென்ம பூமி முதல் கிருஷ்ண ஜென்ம பூமி வரை பகுதி 22
கிருஷ்ணர் வளர்ந்த பிருந்தாவனத்தின் பெருமை அளவிடற்கரியது, உத்திரப்பிரதேச மாநிலத்தில், மதுரா மாவட்டத்தில் இத்திருத்தலம் அமைந்துள்ளது. பகவான் கிருஷ்ணன் குழந்தைப் பருவத்தில் பல அற்புதத் திருவிளை யாடல்களை நிகழ்த்திய இடம் இதுவே.
கண்ணனின் பால லீலைகளோடும், மற்றும் இளமைக் கால வாழ்க்கையோடும் தொடர்புடைய இடங்களின் பரப்பு மொத்தமாக விரஜபூமி என்று அழைக்கப்படுகிறது. வட நாட்டில் உத்தரபிரதேச மாநிலத்தில் இதன் பெரும் பகுதி உள்ளது. சில பகுதிகள் அதன் அண்டை மாநிலங்களான ராஜஸ்தான் மற்றும் ஹரியானாவிலும் அமைந்துள்ளன. இந்த விரஜ பூமி சுமாராக 285 கி.மீ. சுற்றளவு கொண்டது.
இதை வலமாகக் சுற்றி வருவது, விரஜ பரிக்ரமா எனப்படும். இதில் பெரிய சிறிய பாதைகள் உண்டு. இப்படி வலம் வர இயலாதவர்கள் கோவர்தன மலையை வலம் வந்து வணங்குவர். உடலளவில் அதற்கும் முடியாதவர்கள், மதுரா அல்லது பிருந்தாவனத்தை வலம் வருவதும் உண்டு.
பக்தர்கள் அனைவரும் இதில் ஈடுபடுகிறார்கள் என்ற போதிலும், நிம்பார்க்கர் மற்றும் வல்லபர் மரபைச் சேர்ந்த வைணவ அடியார்கள், பரிக்ரமாவை முக்கியமாகக் கருதுகிறார்கள். கிருஷ்ண ஜன்மாஷ்டமியன்று பிருந்தாவனம் சென்று சேர இதைச் செய்கிறார்கள். பெரிய பாதை வழியாகச் சென்று இதை முடிக்கச் சுமார் இரண்டு மாதங்கள் வரை கூட ஆகலாம்.
கிருஷ்ணன் அவதரித்த மதுரா, ராதை அவதரித்த பர்ஸானா, ஆயர் பாடியான கோகுலம் எல்லாம் விரஜ பூமியில் உள்ளன. பிருந்தா என்பது துளசியைக் குறிக்கும் என்று கூறுவர். பிருந்தாவனத்தில் தான் கண்ணன், மாடு கன்றுகளை மேய்த்தான். பிருந்தாவனத்தில் 12 வனங்கள் உண்டு. இவற்றுள் யமுனைக்கு மேற்கில் ஏழும், கிழக்கில் ஐந்தும் உள்ளன.
பிருந்தாவனத்தில் தான் கிருஷ்ண லீலைகள் எல்லாம் நிகழ்ந்தன. கிருஷ்ணன் மேய்த்த மாடு, கன்றுகளையும், மற்ற கோபாலச் சிறுவர்களையும் ஓராண்டுக் காலம் பிரம்மன் ஒளித்துக் கொண்டு போன பொழுது அவை எல்லாமாகத் தானே இருந்து, பிரம்மனைக் கண்ணன் மயக்கிய இடமும் இதுவே!
பிருந்தாவனத்தில் நூற்றுக்கணக்கான பழைய மற்றும் நவீன ஆலயங்களும், காண வேண்டிய இடங்களும் பல உள்ளன. யமுனையில் நீராடிய பின் இந்த தலங்களை அவசியம் தரிசிக்க வேண்டும். கேசீகாட், காளிய மதன்காட், சீர்காட், ரமண்ரேதீ, வம்சீவட், சேவாகுஞ்ச், நிதிவனம், பாங்கே விஹாரி மந்திர், ராதா ரமண் மந்திர், கோவிந்தஜி மந்திரி. ரங்கஜி மந்திர் முதலானவை முக்கிய தலங்களாகும்.
இவற்றுள் பாங்கே விஹாரி கோவிலில் அடிக்கடி திரையால் மூலஸ்தானத்தை மறைப்பார்கள். தரிசிக்க வரும் பக்தர்கள் பின்னால் குறும்புக்கார கண்ணன் ஓடி விடுவான் என்ற பயம் தான் இதற்குக் காரணம்
வனமாலை மினுங்க கணங்களோடு மேகம் கலந்தாற்போல வேர்த்து நின்று விளையாடிய ராசகிரீடை செய்து மகிழ்ந்த பிருந்தாவனம், ஓர் அற்புத ஸ்தலம். பிருந்தாவனத்தில் தங்கி பரிகாரமாகக் கால்நடைப் பயணம் செய்வது கோடி புண்ணியம்.
கண்ணனின் அருள் பெற வந்த இடம் “ஆதித்ய லீலா’. பெளர்ணமி இரவுகளில் கண்ணன், கோபியருடன் இரவு ராசகிரீடை செய்த “வம்ஸிவடம்’.
குதிரை வடிவில் வந்த கேசி அரக்கனை வென்ற “கேசிகாட்’. கோபியருடன் இணைந்து விளையாடிய “நிதுவனம்’. கண்ணனால் சாபவிமோசனம் பெற்ற “காளியகாட்’. கண்ணன் மாலைப் பொழுதில் விளையாடி “úஸவாகுஞ்ச்’ என்று பல இடங்கள் இன்றும் காணப்படுகின்றன. விரியும் கதிர் போல்வான் இன்றும் பிருந்தாவனத்தில் காட்சி அளிப்பான் என்று கண்ணனின் பக்தர்கள் ஆடியும் பாடியும் அழைக்கின்றனர்.
சில புண்ணியத் துறைகள்
கம்சன் மாளிகையின் பின்புறம் ஓடும் யமுனை ஆற்றில் ராசகிரீடை செய்து மகிழ்ச்சியோடு வரும் பலராமன் வேண்டுகோளுக்கு இணங்கிவராத யமுனை ஆற்றைத் தன் கலப்பையால் இழுத்து தடம் மாற்றிய “பலராம்காட்’.
கண்ணன், கோபியரின் ஆடைகளைப் பறித்து வஸ்த்ராபரணம் செய்து விளையாடிய “சீரகாட்’. கண்ணன் தனக்கேயுரியவன் என்று நினைத்த சுக்ரூரர் நாண, குளத்தின் கரையிலும் குளத்தின் ஆழத்திலும் காட்சி அளித்த “சுக்ரூரர் காட்’, 24 தீர்த்தங்களுள் நடுவாக விளங்கும் கம்சன் அந்திமக்கிரியை நடத்திய “விஸ்ராம்காட்’. துருவன் தங்கி ஓய்வெடுத்த “துருவகாட்’ என்று பல புண்ணியத் தலங்கள் கண்டு மகிழ்வு ஏற்பட்டது. கார்த்திகை மாதம் சுக்லபட்ச த்வதியை யமுனை பிறந்தநாள் என்று இன்றும் கொண்டாடிக் களிக்கின்றனர்.
காம்யவனம்
கண்ணன் கோபியர்களுடன் உலா வந்த காம்யவனம், அடர்ந்து விரிந்த காடாக உள்ளது. மது அரக்கனை அழித்து, மதுசூதனன் என்று கண்ணனுக்குப் பெயர் வரக் காரணாக இருந்த “மதுவனம்’.
குமுத மலர்களைக் கண்ணன், கோபியருக்கு அளித்து விளையாடிய “குமுதவனம்’ எனப் புல்லும் கல்லும் கதை பேசும் வனங்கள் பல இன்றும் உள்ளன. கல்யாண குணங்கள் நிறைந்த கண்ணன் திருவடிகள் மனதில் நிலையாக இருக்கவேண்டும் என்று மனம் பிரார்த்திக்க, வனங்களை பயபக்தியுடன் சுற்றிப்பார்த்தோம்.
ஶ்ரீரங்கநாத் ஜி அல்லது ரங்கநாதர் கோவில்:
சென்னையைச் சேர்ந்த ராதாகிருஷ்ண சேத் மற்றும் கோவிந்ததாஸ சேத் ரூ.45 லட்சங்கள் செலவழித்து 1845ல் தொடங்கி 1851ல் கட்டிமுடிக்கப்பட்ட கோவிலாகும். தென்னிந்திய கோவில் கட்டுமான முறையில் கட்டப்பட்டதாகும் இருப்பினும் வாசலில் உள்ள வளைவு ராஜஸ்தான கட்டுமான அமைப்பில் உள்ளது. சுற்றுச்சுவர் 231 x 132 மீ அல்லது 770 x 132 அடிகள் கொண்டு குளம் மற்றும் அழகிய நந்தவனத்தைக் கொண்டுள்ளது. கோபுரத்தின் உயரம் 18 மீ / 105 அடிகள் உள்ளது. தென்னிந்திய பூஜாரிகளால் ஶ்ரீராமானுஜர் சம்பிரதாயத்தின் படி, பூஜை மற்ற கிரியைகள் நடக்கின்றன. பிராதன தெய்வங்கள் விஷ்ணு மற்றும் மஹாலக்ஷ்மி ஆகும், தவிர, ராமர்-சீதை-லக்ஷ்மணர், நரசிம்மர், ஆழ்வர்கள் விக்கிரங்களும், சன்னிதிகளும் உள்ளன. இக்கோவில் தென்னிந்திய கட்டிடக்கலை அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. இந்தியா முழுவதிலிருந்தும் ஏகப்பட்ட பக்தர்கள் இங்கு வந்து செல்கிறார்கள். இந்திய ஒருமைப்பாட்டைக் காட்டும் கோவில்களில் இதுவும் ஒன்று என்பதை அறிந்து கொள்ளலாம்.
கோபேஸ்வர மஹாதேவ் மந்திர்
பிருந்தாவனத்தில் உள்ள இன்னொரு சிவன் கோவில். வழக்கமான முறையில் லிங்கம் உள்ளது. பக்தர்கள் தங்கள் விருப்பம் போல, பால், வில்வம், பூக்கள் கொண்டு வந்து அபிஷேகம் செய்து பூஜித்துக் கொள்ளலாம். இந்த ஈஸ்வரர் யமுனை நதியில் மூழ்கி எழுந்த போது, ஒர் அழகிய கோபிகையாக மாறினாராம், அதனால் கோபேஸ்வரர் என்றழைக்கப்படுகிறார். கிருஷ்ணருடைய பேரன் வஜ்ரநாப இந்த லிங்கத்தைப் பிரதிஸ்டை செய்தார். அதுமுதல், வைஷ்ணவர்கள், இந்த லிங்கத்தை வணங்கி விட்டு மற்ற கோவில்களை சென்று பார்க்கிறார்கள். யமுனை நதி நீற்றைக் கொண்டு வந்து அபிஷேகம் செய்கின்றனர். சிவன் ராஸலீலையைப் பார்ப்பதற்காக ஒரு கோபியைப் போன்று வந்தபோது, விரிந்தாதேவி அனுமதித்தாராம். முன்னர் இவர் உள்ளே நுழைய முற்பட்டபோது தடுக்கப் பட்டார், ஏனெனில், ராஸலீலையின் போது, எந்த ஆணும் உள்ளே செல்ல முடியாது. இதனால், விரிந்தாதேவி, சிவனை தன்னுள் சக்திபாவத்தைச் செல்லுத்துமாறு அறிவுருத்தினார். அவ்வாறே, சிவன் யமுனையில் மூழ்கி எழுந்தபோது அழகான கோபிகையாக மாறிவிட்டாராம், அதனால் அனுமதிக்கப்பட்டாராம்.
பன்ஸிவட்–மஹா–ரசஸ்தல்: விரிந்தாவன் நகரத்தின் மையத்துள் உள்ளது “பன்ஸி வட் மஹாராஸ் ஸ்தலி” என்ற இடம் 30,000 சதுர அடி பரப்பைக்கொண்டுள்ளது. யமுனை நதி பின்பக்கம் ஓடுகின்றது. அங்கிருந்து ஒரு சிறிய சத்தின் மூலம் இங்கு வந்தடையலாம்.
பன்ஸி = புல்லாங்குழல் (இசைக்க)
வட் = அரசமரம் (அடியில், ராதா-கிருஷ்ண)
மஹாராஸ் = ராஸலீலை (பெரிய, அறிந்து கொள்ல முடியாத காரியங்களை)
ஸ்தலி = இடம் (செய்த இடம்)
இங்கு ஒரு அரசமரம் (வட்) உள்ளது, அங்கு ராதா கோபிநாத் காட்சியளித்தார்
மற்றும் காமதேவனை வெற்றிக் கொள்கிறார், இதைப் பற்றி இடைக்கால இலக்கியங்களில் பல குறிப்புகள் காணப்படுகின்றன ..அப சஹ்ர ஸ்யாமா என்பவரின் இணைத்தளத்திலிருந்து இக்குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன..மேலே குறிப்பிட்ட கோபேஸ்வரும் கதையும் இதில் வருகிறது. இக்கதையின் படி கிருஷ்ணருக்கு வயது பதினொன்று. கமதேவன் அங்கு வந்து தன்னுடன் யுத்தத்திற்கு வருமாறு அழைக்கிறான். கிருஷ்ணர் தனக்கு வயது 11 என்பதால், எப்படி தன்னுடன் சரிநிகராகப் போரிட முடியும் என்று கேட்கிறார். அதற்கு காமதேவன், நாரதர் தான் போரிடத் தகுதியானவர் கிருஷ்ணர் என்று சொல்லியனுப்பியதாக காமதேவன் சொன்னான். “அப்படியென்றால், “கிலா யுத்தத்திற்கு” அல்லது “மைதான் யுத்தத்திற்கு” வரத்தயாரா?”, என்று கிருஷ்ணர் கேட்டதற்கு, “அது என்ன என்பதை நீங்களே சொல்லிவிடுங்கள்” என்று காமதேவன் சொல்ல, “நான் ராதாவுடன் நிகுஞ்ச வனத்தில் இருந்தால், கிலா யுத்தம் செய்யலாம், இல்லை இங்கு பன்ஸிவட்டில் கோபிகைகளுடன் இருந்தால் அது மைதான யுத்தம் ஆகும்”, என்றார். மைதான யுத்தத்திற்கு வர, காமதேவன் தோற்றுப் போகிறான். எப்படி காமனை சிவன் எரித்து வெற்றி கொண்டாரோ, அதே போன்று, கிருஷ்ணர் காமனை வென்றார் என்று இடைக்கால இலக்கியங்கள் கூறுவது உன்னிப்பாகக் கவனிக்கத் தக்கது...மேலும், கிருஷ்ணர் கோபிகைகளின் உடைகளை அபகரித்தார் (வஸ்த்ரஹரணம்) என்பதும் இங்குதான் நடந்துள்ளது. இவையெல்லாம் பாகவதப் புராணம் 10ம் அத்தியாயத்தில் வருகின்றன. பக்தி வேதாந்ர்த தாகூர் போன்றோர் இந்த அத்தியாயம் இடைச்செருகல் என்று எடுத்துக் காட்டியுள்ளனர்
ஸ்யாம் சுந்தர் மந்திர்: ஶ்ரீவைஷ்ணவ, சைதன்ய, கௌடியாமடங்களின் சம்பிரதாய பக்தர்களுக்கு உள்ள ஏழு முக்கியமான கோவில்களில் இதுவும் ஒன்று. ஶ்ரீ ஜீவ, கோபால, லோகநாத, பூகர்ப கோஸ்வாமிகள் இங்கு விஜயம் செய்திருக்கிறார்கள்...இங்குள்ள ஸ்யாம் சுந்தர் விக்கிரகம் யாராலும் செதுக்கப்பட்டது, உருவாக்கப்பட்டதல்ல. 1578ம் ஆண்டு வசந்த பஞ்சமி தினத்தன்று ஶ்ரீமதி ராதாராணியே தோன்றி, ஶ்ரீஸ்யாமானந்த பிரபுபாத ஸ்வாமிகளுக்கு அளித்ததாகக் கூறப்படுகிறது. ராதாராணியின் காலணி விழுந்து கண்டெடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அவ்விடமும் காட்டப்படுகிறது[9]. இக்கோவிலில் புதுப்பிக்கப்படும் வேலைகள் நடந்து கொண்டிருக்கும் போது, சுமார் 500 வருட காலத்திற்கு முந்தைய ஒரு குகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது...நடுவில் ஒரு பெரிய திறந்த இடம், சுற்றிலும் உயரமான சுற்றுப்பிரகாரத்தில், கோவில் உள்ளது. நாங்கள் சென்றிருந்த போதும், வேலைகள் நடந்து கொண்டிருந்தன. வயதான காலத்தில் அவரால் வெளியே செல்ல முடியவில்லை, விக்கிரகம் தானாக உருவானது, குகைக் கண்டுபிடிக்கப்பட்டது போன்ற விவரணங்கள் முகமதியர்களின் தாக்குதல்களை மறைமுகமாக பதிவு செய்யப்பட்டு, உணர்ந்தப்படுவது போல இருக்கின்றன. முகமதியர்களின் தாக்குதல்கள்களினின்று தப்பிக்க மூல-விக்கிரங்களை கிணறுகளில், குளங்களில், மற்ற நீர்நிலைகளில், குகைகளில் போட்டு மறைத்து வைப்பது வழக்கம். பிறகு அவர்கள் தொல்லை தீர்ந்தபிறகு, பரிகார பூஜை செய்து, விக்கிரகத்தை ஸ்தபிப்பது வழக்கம். அந்நிலையில், அது தானாகத் தோன்றியது என்று சொல்லப்பட்டது போலும்.
சேவா குஞ் அல்லது நிகுஞ் வனம்... கோபிகைகள் தங்களை அழகாக அலங்கரித்துக் கொண்டு, கிருஷ்ணருக்கு சேவை செய்ய இங்கிருந்து கிளம்புகிறார்கள். மக்கள் நம்பிக்கை என்னவென்றால், தினமும் ராதா-கிருஷ்ண இரவில் இங்கு வருகின்றனர். அதனால், அவர்களுக்கு வேண்டிப் பொருட்களை எல்லாம் இங்கு வைக்கின்றனர். நிஜ் மந்திர் என்ற கோவில் அழகாக அலங்கரிக்கப்படுகிறது. ஒவ்வொரு கிருஷ்ண பக்தரும் இங்கு வருவது, புண்ணியமாகக் கருதுகின்றனர். இது ஒரு மரங்கள்-செடிகள் வளர்ந்துள்ள பெரிய தோட்டமாகும், இதில் நெளிந்து-வளைந்து செல்லும் பாதைகள் உள்ளன. இப்பொழுது கட்டப்பட்டுள்ள 4-5 சிறிய கோவில்களும் உள்ளன. ராதா-கிருஷ்ணர் இங்குதான் நடனமாடினர் என்று புதிய கதைகளை உருவாக்கியுள்ளனர். அளவுக்கு அதிகமான இசை வேறு ஒலிக்கச்செய்துள்ளனர். நடுநடுவே கடைகளும் வைத்துள்ளனர். வியாபாரரீதியில் பொழுது போக்கும் இடம் போல காட்சியளிக்கிறது.
🌹🌹🌹🌹🌹🌺🌺🌺🌺🌺🌸
படங்கள்,பிருந்தாவனத்தின் சில கோயில்கள்,ப்ரேம் மந்திர்க்ருஷ்ண பலராம் மந்திர்,குசும் சரோவர்,ரங்கனாதர் கோயில்,பெருமாள்...
தொடரும்





No comments:
Post a Comment