Saturday, June 8, 2024

சீரக சம்பா பிரியாணி புலாவ்

 சீரக சம்பா பிரியாணி புலாவ்

🌾 ஆரோக்கிய உணவு 🌾 

தேவையான பொருட்கள்

 சீரகசம்பா அரிசி - அரை கிலோ
 பட்டை - 5 (சிறியது),
கிராம்பு - 5 ,
ஏலக்காய் - 2
பிரிஞ்சி இலை - ஒன்று ,
நீளமாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 3
 நீளமாக நறுக்கிய தக்காளி - 2
 கீறிய பச்சைமிளகாய் - 6
 இஞ்சி,பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி
 உப்பு -  தேவையான அளவு
 கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி
 புதினா இலை - இரண்டு கைப்பிடி
 கடலை எண்ணெய் -  2 குழி கரண்டி ( தங்களின் தேவைக்கேற்ப)
தேங்காய் பால் - 1கப்
கடலை எண்ணெய் - 2 குழி கரண்டி 

 செய்முறை

 சீரகசம்பா அரிசியை 20 நிமிடம் ஊறவைக்கவும். அடி கனமான பாத்திரத்தில்  அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை சேர்த்துத் தாளிக்கவும்.

 இத்துடன் பெரிய வெங்காயம், பச்சைமிளகாய், புதினா இலை  சேர்த்து வதக்கவும்  தக்காளி சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, உப்பு,  சேர்த்து நன்கு சுருண்டு வரும் வரை வதக்கி இத்துடன் அரிசி சேர்த்து ஒரு பங்கு அரிசிக்கு 1.5 பங்கு தண்ணீர் மற்றும் 1/2 கப் தேங்காய் பால்  ஊற்றி, உப்பு போட்டு முக்கால் பதம் வேகும் வரை  நன்றாக கலக்கி விட்டு மூடவும். இடையில் மூடியை திறந்து அரிசியைக் கிளறவும். முக்கால் பதம் வெந்ததும்  மெதுவாக கிளறி, எலுமிச்சைச் சாறு, ஊற்றி மீண்டும்  மூடி மேலே  கனமான பாத்திரத்தை வைத்து  தீயைக் குறைத்து 10 நிமிடம் குறைந்த தணலில் வைத்து இறக்கவும். ஐந்து நிமிடம் கழித்து மூடியைத் திறந்து கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

*இன்றைய உணவின் குறிப்புகள்* 

* சீரக சம்பா அரிசி என்றாலே வாசம் பக்கத்து வீதியிலும் வீசும்.

* இந்த புலாவ் கடலை எண்ணெய் தவிர்த்து நெய்யிலும் செய்யலாம் .

* பிரியாணி போல் தான் தனி மிளகாய் தூள் , மஞ்சள் தூள் தவிர்த்து செய்யும் உணவு , தக்காளியை தவிர்த்தும் செய்யலாம்.

* தங்கள் விருப்பப்படும் காய்கறிகளை சேர்த்தும் சுவைக்கலாம் 

* எந்த பாத்திரத்தில் செய்தாலும் முக்கால் பதம் வேகும் வரை நன்கு கிளறி பிறகு தம் போடும் பொழுது சரியான பதத்தில் பிரியாணி சுவைக்கும்.

* சுத்தம் செய்த வாழைப்பூவை லேசாக கடலை எண்ணெயில் பொறித்தும் பிரியாணியில் சேர்க்கலாம் .

* இந்த உணவிற்கு இணை உணவாக தயிர் பச்சடி மற்றும் குருமா மிகவும் சுவையாக இருக்கும்.

No comments:

Post a Comment