Monday, January 16, 2023

புள்ளிமான் வேட்டை முன்னுரை

 புள்ளிமான் வேட்டை

 முன்னுரை

டெக்னாலஜி  முன்னேற்றங்கள் சிகரங்களை தொட்டு நிற்கின்றன.அதே சமயம் கலாச்சாரம் சீர்குலைந்து போய்க் கொண்டிருக்கிறது. என்றும் இல்லாத அளவிற்கு விவாகரத்துக்கள் தொடர்ந்து நடக்கின்றன. கலப்புத் திருமணங்கள் பெருகிவிட்டன. ஒரு ஆண் மாற்று ஜாதி பெண்ணை விரும்பி திருமணம் செய்வதை விட ஒரு பெண் மாற்று ஜாதி பையனை திருமணம் செய்து கொள்வது பெருகிவிட்டது என்று நான் நினைக்கிறேன்.இது தவறாகவும் இருக்கலாம். இது இப்படி இருக்க வெளியில் ஜாதி மறுப்பு என்று பசப்பு வார்த்தைகள் சொல்லிக் கொண்டிருப்பவன் கூட தனக்கென்று வரும்போது தன் ஜாதியில் தான் பெண்ணை தேடுகிறான். இந்த கண்றாவியை எங்கே போய் சொல்வது.இனம் மாறி, ஜாதி மாறி, மதம் மாறி திருமணங்கள் நடந்தது போக, இப்பொழுது தேசம் மாறி திருமணங்கள் நடக்கின்றன. பல பிரபலங்களின்  மகன்களும், மகள்களும் அயல் தேசத்தில் இருக்கும் வெள்ளை தோல் படைத்தவனையோ அல்லது கருப்புத் தோல் படைத்தவனையோ திருமணம் செய்து கொள்கிறார்கள்."என்னடா.இப்படி ஆகிவிட்டதே" என்று அவர்களது பெற்றோர்கள் வருத்தப்படாமல் நடந்ததை பெருமையாக பீற்றிக்கொள்ளும் அவலமும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

சமீபத்தில் பிராமண சங்க கூட்டத்தில் ரங்கராஜ் பாண்டே பேசும்போது "ஸ்டீபன் எனக்கு உறவாகிவிட்டார்" என்று வேடிக்கையாக குறிப்பிட்டார்.இதுபோல ஒன்றை நான் கிட்டத்தட்ட 50 வருடங்களுக்கு முன்னே குறிப்பிட்டிருக்கிறேன். 1970 இல் ஒரே கல்லூரியில்(College of engineering,Guindy) ஒரே வகுப்பில் படித்த சுமார் 26 பேர்(நான் உட்பட) பாரத் எலெக்ட்ரானிக்ஸ் என்ற பெங்களூர் கம்பெனியில் 1971ல் ஒட்டுமொத்தமாக வேலையில் சேர்ந்தோம். எங்களுடன் படித்து,எங்களுடன் வேலை செய்தவர்களில் ஹபீப் மொகமத் என்று ஒருவரும் இருந்தார். என்னுடைய மற்ற நண்பர்களிடம் நான் "ஹபீப் இன்றைக்கு நமது நண்பனாக இருக்கலாம்.ஆனால்  பிற்காலத்தில் அவன் நமக்கு சொந்தக்காரனாக கூட ஆகலாம்" என்று விளையாட்டாக கூறினேன்.நான் கூறிய மாதிரி இப்பொழுது நிறைய நடக்க ஆரம்பித்து விட்டன.

என்னுடைய புள்ளிமான் வேட்டை கதை என்னுடைய இந்த கருத்தை அடிப்படையாகக் கொண்டது.சில கதை புனைபவர்கள், படிப்பவர்கள் பாராட்ட வேண்டுமென்று எழுதுவார்கள்.சிலர் தங்கள் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்த வேண்டி எழுதுவார்கள். நான் இப்போது எழுதப்போவது இரண்டாவது வகை. என்னுடைய இந்த கதையால் ஏதோ பெரிய சமுதாய சேவை செய்யப் போகிறேன் என்று நான் நினைக்கவில்லை. ஏதோ என்னால் முடிந்தது ஒரு துரும்பை கிள்ளி போட்டு இருக்கிறேன் அல்லது ஒரு சிறு விதையை நட்டு இருக்கிறேன்.அது விருக்ஷமாகுமா என்று எனக்கு தெரியாது. கூடிய விரைவில் என்னுடைய புள்ளிமான்(வேட்டை) துள்ளி வரும்.இறுதியில் கொடூர வேடன் வலையில் புள்ளிமான் சிக்கியதா இல்லையா என்று தெரிந்து கொள்ள கதையை தினமும் படிக்க வேண்டி வரும்.

No comments:

Post a Comment