Monday, January 2, 2023

கடலை சட்னி

 *இட்லி, தோசைக்கு சூப்பரான இந்த ஸ்டார் ஹோட்டல் கடலை சட்னி*

🌺🌺🌺🌺🌺

சட்னியை பொறுத்த வரையில் ஒவ்வொரு சட்னியும் ஒவ்வொரு ருசி தான். வீட்டில் அரைக்கும் சட்னி ஒரு ருசியிலும், ரோட்டு கடையில் கிடைக்கும் சட்னிகள் ஒரு வித சுவையிலும் இருக்கும். அதே நேரத்தில் பெரிய பெரிய ஹோட்டல்களில் கிடைக்கும் சட்னிகள், இவற்றையெல்லாம் விட கொஞ்சம் வித்தியாசமான சுவையில் இருக்கும். அந்த வகையில் நல்ல ருசியான ஸ்டார் ஹோட்டல் சட்னியை எப்படி செய்வது என்பதை பற்றி தான் இந்த சமையல் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

*தேவையான பொருட்கள்

 வேர்க்கடலை -1 கப் , பொட்டுக்கடலை – 1/4 கப், பச்சை மிளகாய் – 4,
பூண்டு – 2 பல்,
கருவேப்பிலை – 2 கொத்து, கொத்தமல்லி – 1 கைப்பிடி. புதினா இலைகள் – 5,
புளி – 1 கொட்டை பாக்கு அளவு,
கடுகு -1/4 டீஸ்பூன்,
உளுந்து -1/4 டீஸ்பூன், 
எண்ணெய் -1 டேபிள் ஸ்பூன்,
 காய்ந்த மிளகாய் -2,
தேங்காய் துருவியது – 1/4 கப்
 எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்.

*செய்முறை*

 அடுப்பை பற்ற வைத்து ஒரு பேனை வைத்து சூடானதும், அதில் வேர்க்கடலையை தோல் உரித்து சேர்த்து சிவக்க வறுத்துக் கொள்ளுங்கள். பிறகு பொட்டுக்கடலையை சேர்த்து இதையும் சிவக்க வறுத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு அதில் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, புதினா, பூண்டு புளி, தேங்காய் என அனைத்தையும் சேர்த்து லேசாக வதக்கி ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து ஒரு சுற்று விட்டு எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது நாம் சேர்த்த அனைத்தும் கொரகொரப்பாக அரைப்பட்டிருக்கும். இந்த நேரத்தில் எடுத்து வைத்த கைப்பிடி அளவு கொத்தமல்லியும் சேர்த்து மறுபடியும் அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இந்த முறையும் அதிக பைனாக இல்லாமல் கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அரைத்து எடுத்த சட்னியை ஒரு பவுலில் மாற்றி வைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்ததாக ஒரு சின்ன தாளிப்பு கரண்டி வைத்து எண்ணெய் ஊற்றி சூடானவுடன் கடுகு, உளுந்து போட்டு பொரிந்த உடன் காய்ந்த மிளகாயை கிள்ளி போட்டு கருவேப்பிலை இலைகளையும் சேர்த்து அடுப்பை அணைத்து விடுங்கள். தாளிப்பை எடுத்து வைத்து சட்னியில் ஊற்றி கலந்து விட்டால் ஸ்டார் ஹோட்டல் சட்னி ரெடி.

சுட சுட இட்லியுடன் இந்த சட்னி ஊற்றி சாப்பிட்டால் அதன் சுவை அந்த நாள் முழுவதும் நாக்கிலே ஒட்டிக் கொண்டிருக்கும். அந்த அளவிற்கு இதன் சுவை பிரமாதமாக இருக்கும். நீங்களும் இந்த முறையில் சட்னி ட்ரை பண்ணி பாருங்க.

🌺🌺🌺🌺

No comments:

Post a Comment