Thursday, January 19, 2023

அப்பா பேசறார்-3

 அப்பா பேசறார்-3

 அப்பாவின் குரல் தொடர்ந்தது " டேய்.ரகு. நான் பேசறதுக்கு இப்ப நீ பதில் சொல்ல வேண்டாம் .நீ பதில்சொல்ல ஆரம்பிச்சேன்னா உனக்கு ஏதோ ஆயிடுத்தூன்னு  எல்லாம் நெனைச்சுப்பா.உன் பொண்டாட்டி  ரொம்ப சூடிகை. ஈஸியா இதை கண்டு பிடிச்சிடுவா. அதனால இப்ப நான் சொல்றது கொஞ்சம் கேட்டுக்கோ. சாப்பிட்டு முடிஞ்ச பிறகு மொட்டை மாடிக்கு வா. நிறைய விஷயம் பேச வேண்டீது இருக்கு. நம்ப பேசணும்" என்றது அந்த குரல். மேற்கொண்டு அந்த குரல் "இன்னும் பதினோரு நாள் காரியம் பாக்கி இருக்கு. அதுவும் பன்னெண்டாம் நாள் காரியம் இருக்கே,அது நெக்கு எடுத்துடும் .ரொம்ப ச்ரமமா இருக்கும். அதனால ஒழுங்கா சாப்பிட்டு உடம்ப சரியா வச்சிக்கிறத பாரு"என்று கூறி அத்துடன் அந்த குரல் நின்று விட்டது.ரகுவிற்கு தன் மனநிலை பற்றி சந்தேகம் வந்துவிட்டது .உள்ளபடியே  புத்தி பேதலித்து விட்டதோ என்று கூட நினைத்தான். கிடு கிடுவென சாப்பிட்டு விட்டு ஏதோ போன் வந்து அதை அட்டென்ட் செய்கிற மாதிரி மொபைலை காதில் வைத்துக் கொண்டு "கொஞ்சம் இருங்கோ.எனக்கு இங்க சரியா கேட்கல .நான் மொட்டை மாடிக்கு வந்து பேசறேன்" என்று சொல்லி மொட்டை மாடிக்கி போனான். இதையெல்லாம் சாருமதி பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு லேசாக சந்தேகம் வந்தது. ரகுவின் முகத்தில் திகைப்பும்,பயமும், ஓரளவுக்கு சந்தோஷமும் மாறி மாறி வந்ததை பார்த்த அவள் அவனுக்குள் ஏதோ நடக்கிறது என்று நினைத்துக் கொண்டாள். மாடிக்கு சென்ற ரகுவிடம் அப்பாவின் குரல்

"ரகு இப்ப நான் சொல்றத கவனமா கேளு. மீதி  நாள் காரியத்தை பண்றததற்கு ஞான வாபி, ராம தீர்த்தம், முக்தி ஸ்தலான்னு அலைய வேண்டாம். வீண் செலவு தான் மிச்சம்.எனக்கு என்னமோ நீ இதை நம் ஆத்துலேயே தான் பண்ணனும் இருக்கு .ஆத்துக்கு பின்னாடி நெறைய இடம் இருக்கு .அங்கு ஒரு குடிசை போட்டுக்கோ. அங்கே கல் ஊனி, தினப்படி எல்லாத்தையும் பண்ணீடு. சாஸ்திரிகள் அவர் சவுரியத்துக்கு வேற இடத்துல பண்ணணம்னு தான் சொல்லுவார்.நீ திட்டமா முடியாதுன்னு சொல்லிடு." என்றது. "சரிப்பா" என்று ரகு சொல்லிக் கொண்டிருக்கும் போது மாடிக்கு ஏறி வந்து கொண்டிருந்த சாருமதி 'சரிப்பா'என்று ரகு  சொன்னதை கேட்டு விட்டாள்.கடைசி படியும் ஏறி  மொட்டை மாடிக்கு வந்த சாருமதி" யார் கிட்ட பேசிண்டு இருக்கீங்கோ"என்றாள். என்ன பதில் சொல்வது என்று ஒரு நிமிடம் புரியாமல் திகைத்த ரவகு "ஆபீஸ்ல இருந்து என் பிரண்டு போன் பண்ணி துக்கம் விஜாரிச்சான். அவன்கிட்ட தான் பேசிண்டு இருந்தேன்" என்று பொய் சொன்னான்.இந்த பதிலில் சாருமதி திருப்தி அடையவில்லை." சரி. சரி. ரொம்ப நேரம் இங்க  நிக்காதேங்கோ.  பனி பெய்யறது . உடம்பை பத்திரமா வைச்சிருந்ததான் கொற நாள் காரியமும் செய்ய முடியும். கீழே வாங்க" என்றா. "நான் தோ வரேன். நீ போ" என்றான் ரகு. பின்புஅப்பாவின் குரல் "நான் சொன்னனேல்யோ. உன் பொண்டாட்டிக்கு கல்பபூர புத்தி. டக்குனு  கண்டுபிடிச்சிட்டா பாரு. இனிமேதான் நீ ஜாக்கிரதையா இருக்கணும் ."என்றது.

"அப்பா நீங்க இப்ப எங்க இருக்க. கூட யாராவது இருக்காளா" என்றான் ரகு." எங்கே இருக்கேன்னு எனக்கே தெரியல டா .தெரிஞ்சா கூட சொல்லக்கூடாதுன்னு உத்தரவாகி இருக்கு" என்றார் அப்பா." "யாருப்பா உத்தரவு போடறா" என்றான் ரகு. அதற்கு எந்தவித பதிலும் இல்லை. பத்து நிமிடம் நின்று பார்த்த பிறகு அவனுக்கு அப்பா தொடர்ந்து பேசாதது ஏமாற்றம் அளித்தது .கீழே இறங்கி வீட்டுக்குள்ளே சென்றான் ரகு.

No comments:

Post a Comment