புள்ளிமான் வேட்டை-14.
முகூர்த்தத்தின் போது வழக்கமாக தரப்படும் லெமன்,சாத்துக்குடி ஜுஸுக்கு பதில் கொடுக்கப்பட்ட கிர்ணி பழ ஜூஸை எல்லோரும் விரும்பி சாப்பிட்டார்கள். 12 மணிக்கு சாப்பாடு பந்தி ஆரம்பமானது. திருச்சி ராஜா ஐயர் கேட்டரிங் என்றால் கேட்கவே வேண்டாம்.
நங்கவரத்தை பூர்விகமாக கொண்ட ராஜா ஐயர் சுமார் 30 வருடங்களுக்கு முன்பு திருச்சி வந்து,மேரேஜ் கேட்டரிங் தொழிலில் அடியெடுத்து வைத்தார்.இப்போது அத்தொழிலில் கொடி கட்டி பறக்கிறார்.ஒரே சமயத்தில் ஐந்து கல்யாண கேட்டரிங்களை நடுத்துமளவு ஆள் பலம் வைத்திருந்தார். எல்லா ஐடமும் நன்றாக இருந்தாலும் அவருடைய அசோகா அல்வாவை சாப்பிட்டு புகழாதவர் திருச்சி வட்டாரத்திலே இல்லை எனலாம்(என் இரண்டு பையன்கள் கல்யாணமும் திருச்சியில் தான் நடந்தன. பெண்களுடைய தகப்பனார்களிடம் நான்"எது எப்படி இருந்தாலும் பரவாயில்லை. ராஜா ஐயர் கேட்டரிங் மட்டும் அரேஞ்ச் பண்ணி விட வேண்டும்" என்று கண்டிப்பாக கூறியிருந்தேன்.அதே மாதிரி, இரண்டு கல்யாணங்களிலும் ராஜா ஐயர் கேட்டரிங்கே ஏற்பாடு செய்திருந்தார்கள்.. அப்போது சாப்பிட்ட அசோக் அல்வாவின் சுவையும், மணமும் இப்போது நினைத்தாலும் என் நாவில் நீர் ஊறுகிறது)
ராமகிருஷ்ணனுடைய சம்பந்தி ஒரு பெரிய பேங்கில் சி.எம். டி ஆக இருக்கிறார். ஒரே பெண்.பெண்ணின் கல்யாணத்துக்காக பணத்தை தண்ணீராக செலவழித்து இருக்கிறார். ராஜா ஐயர் சமையலை சாப்பிடுவதற்காகவே இந்த கல்யாணத்துக்கு வந்த கூட்டம் அதிகமாக இருந்தது.சாதாரண சாப்பாடு சாப்பிட்டாலே சாப்பிட்டபின் தூங்கி வழியும் ஜனங்கள் ராஜா ஐயர் முகூர்த்த சாப்பாடு சாப்பிட்டால் கேட்கவே வேண்டாம். சுப்ரமணியன் குடும்பமும், சரசா குடும்பமும் இரண்டாம் பந்தியில் உட்கார்ந்து சாப்பிட்டார்கள். சாப்பிட்டு எழுந்திருக்கும் போது மணி ஒண்ணேகாலை தாண்டி விட்டிருந்தது. சாப்பிட்டதும் சுப்பிரமணியமும்,சம்யுக்தாவும் ரூமிற்கு போய் கொஞ்ச நேரம் கண்ணயர்ந்தார்கள்.
சுநந்தாவின் கைகளை ஷைலஜா பிடித்துக் கொண்டு. "அக்கா இங்க கொஞ்ச நேரம் இருக்கயா. மாப்பிள்ளை பொண்ணும் சாப்ட வரப்போற.தமாஷா இருக்கும்"என்றாள்.
மாப்பிள்ளை சுந்தரத்தின் கூடவே ஸ்ரீ கிருஷ்ணன் வந்தான். பெண்ணும் மாப்பிள்ளையும் சாப்பிடும் போது மாப்பிள்ளை பெண்ணுக்கு ஊட்டி விடுவதும், பெண் மாப்பிள்ளைக்கு ஊட்டி விடுவதும் நடந்தன. கூடி இருந்தவர்கள் கைதட்டி மகிழ்ந்தார்கள். சுநந்தாவுக்கு இதையெல்லாம் பார்க்க வேடிக்கையாகவும், வெட்கமாகவும் இருந்தது.ஊடே ஸ்ரீகிருஷ்ணன் சுநந்தாவை பார்த்து சிரிப்பை உதிர்த்துக் கொண்டிருந்தான்.மூணு மணிக்கு ஒவ்வொரு ரூமையும் விசிட் செய்த சமையல்காரர், தொண்ணைகளில் பாதுஷா மற்றும் மிக்சர் வைத்து எல்லோருக்கும் கொடுத்துக் கொண்டிருந்தார். இதை தொடர்ந்து சூடான காபி வழங்கப்பட்டது. கண்விழித்த சுப்பிரமணியமும்,சம்யுக்தாவும் முகம் கழுவிக்கொண்டு நொறுக்கு தீனியை சாப்பிட்டுவிட்டு காபி குடித்தார்கள். நலங்கு நாலு மணிக்கு ஆரம்பிப்பதாக இருந்தது. இடையில் ஒரு மணி நேரம் இருந்தது. ரூமை விட்டு வெளியே வந்த சுப்ரமணியம் வெளி ஹாலில் சரசா, பாலசுப்பிரமணியம் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணன். இருப்பதை பார்த்தான். அவர்கள்அருகில் சென்று ஒரு சேரில் சுப்பிரமணியனும் உட்கார்ந்தான்.
ஐந்து நிமிடம் கழித்து சம்யுக்தா மற்றும் சுநந்தா வந்து உட்கார்ந்தார்கள். சுப்பிரமணியன் கிருஷ்ணனை பார்த்து "ஆமாம். மெட்ராஸ்ல நீ எங்க தங்கிண்டிருக்க" என்று கேட்டார். "அடையார்ல ஒத்துராத்ல பேயிங் கெஸ்டா தங்கி இருக்கேன் மாமா" என்றான் ஸ்ரீ கிருஷ்ணன். சரசாவை பார்த்து சுப்ரமணியன்"இவன் கண்ட இடத்துல சாப்டுண்டு உடம்பை கெடுத்துக்கணமா. நம்மாத்துலே இருந்துண்டு சாப்டூட்டு ஆபீஸ் போலாமே" என்றான். அதற்கு சரசா" நேக்கு இதுல ஒண்ணும் அப்ஜெக்ஷன் இல்லேண்ணா. அவனுக்கு சரீன்னு பட்டா சரி" என்றாள். ஸ்ரீ கிருஷ்ணன் சுப்பிரமணியனிடம்
" காலையில் சீக்கிரமே கிளம்பி போயிடுவேன். திரும்பி வரும்போது ராத்திரி ரொம்ப நாழி ஆயிடும். அதுக்கப்புறம் நான் ஓ.எம்.ஆர் லேந்து ராமாபுரத்ல இருக்க உங்காத்துக்கு வர ரொம்ப கஷ்டமாயிடும். அகாலத்தல வந்து உங்களுக்கும் தொந்தர குடுக்க வேண்டி இருக்கும்"என்று சொன்னான்."அப்ப நீ ஒண்ணு பண்ணு. சனி, ஞாயிறு லீவு தானே. சனிக்கிழம காலையில எழுந்து காபி சாப்டூட்டு எங்காத்துக்கு வந்துடு. சனி, ஞாயிறு எங்காத்துல இருந்துட்டு, ஞாயிற்றுக்கிழமை ராத்திரி சாப்டூட்டு உன் இடத்துக்கு போயிடலாம்" என்றான். "சரி மாமா. நான் பாக்கறேன்" என்றான் கிருஷ்ணன். உடனே சரசா" ஏண்டா பாக்கறேன்ற.மாமா வருந்தி வருந்தி கூப்பிடறா. சனி ஞாயிறு அங்கு போயிடு" என்றாள்.
"சரிம்மா .அப்படியே பண்றேன்" என்றான் ஸ்ரீ கிருஷ்ணன். சுநந்தாவுக்கு இந்த அரேஞ்மென்ட் நல்லதாகப்பட்டது. தனக்கு கோர் சப்ஜெக்டில் ஏதாவது சந்தேகம் இருந்தால் அத *அவரிடம்* கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்று நினைத்தாள்.
No comments:
Post a Comment