Tuesday, January 24, 2023

புள்ளிமான் வேட்டை -12

 புள்ளிமான் வேட்டை -12

காலையில் ஸ்ரீரங்கத்தில் அனைவரும்  இறங்கிக் கொண்டார்கள். ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலையில் உள்ள ஒரு ப்ளட்டில் ராமகிருஷ்ணன் குடும்பம் வசித்து வந்தது.இரண்டு ஆட்டோ பிடித்து அங்கு சென்றார்கள்.  சித்தப்பா ராமகிருஷ்ணன்  "வாடா மணி வா .சம்யுக்தா வாம்மா." என்றவர் சுநந்தாவைப்பார்த்து

"மணி.நம்ப சுநந்தாவாடா இது.எப்டி வளந்தூட்டா" என்றார்.கடைசியில் வந்த ஸ்ரீகிருஷ்ணனை ராமகிருஷ்ணனுக்கு அடையாளம் தெரியவில்லை."என்ன சித்தப்பா.நோக்கு இவனை தெரியலையா. சரசாவோட பையன் ஸ்ரீ கிருஷ்ணன்" என்றான் சுப்ரமணியன்." 

ஸ்ரீ கிருஷ்ணனாடா நீ.அடையாளமே தெரில.ஆமாம் அப்பா,அம்மா வரலையா" என்று கேட்டார் ராமகிருஷ்ணன்.

"நான் சென்னையிலேர்ந்து வரேன்.அவாள்ளாம் மதுரைலேர்ந்து வைகைல வரா.பத்து மணிக்குள்ள வந்துடுவா" என்றான் கிருஷ்ணன். சத்திரத்தின் உள்ளே இருந்து வந்த ராஜேஸ்வரி" வாடா மணி .வா சம்யுக்தா.வாம்மா சுநந்தா.  பிரயாணம் சௌரியமா இருந்ததா" என்று கேட்டவள்  அருகில் ஒரு பையன் இருப்பதை பார்த்தவுடன் " ஏன்டா மணி. இந்த பையன பாத்தா சரசா பையன் கிருஷ்ணன் ஜாடையா இருக்கே "என்றாள். "கிருஷ்ணன் ஜாடை இல்லம்மா.கிருஷ்ணணே தான் இது" என்றான் சுப்ரமணியன். "கிருஷ்ணா நீ ரொம்பதான் வளர்ந்தூட்டே" என்றாள் ராஜேஸ்வரி."பாட்டி சௌக்யமா இருக்கேளா.

ரொம்ப வருஷம் கழிச்சு பார்க்கறேங்க பாட்டி. அதனால அப்படி தான் தெரியும் "என்றான் கிருஷ்ணன். "பார்றா. பெரிய மனுஷன் மாதிரி பேசுறான் இவன்" என்றாள் ராஜேஸ்வரி சிரித்துக் கொண்டே.

 ராமகிருஷ்ணன் அனைவரையும் பார்த்து "காபி சாப்ட்டூட்டு குளிச்சூட்டு வாங்க. டிபன் ரெடியா இருக்கு. டிபன் சாப்பிட்டதுக்கப்புறம்

விரதம் ஆரம்பிக்கப் போறது" என்றார். அதற்குள் அங்கு வந்த ஆத்து வாத்தியார் "ராமகிருஷ்ணா ரெடியா இருக்கயா" என்று கேட்டார். "குளிச்சூட்டு வந்தூட்றேன் மாமா" என்று ராமகிருஷ்ணன் துண்டை தோளில் போட்டுக் கொண்டு குளியல் அறைக்கு சென்றார்.

குளித்து ட்ரெஸ் செய்து அனைவரும் காலை டிபன் சாப்பிட்டார்கள்.அதற்குள் மாப்பிள்ளை பையன் சுந்தரமும் ஸ்ரீகிருஷ்ணனும் நெருங்கி பழகி விட்டிருந்தார்கள்.பத்தே காலுக்கு சரசாவும்,பாலகிருஷ்ணனும்,அவர்களுடைய பெண் ஷைலஜாவும் ஆட்டோவில் வந்து இறங்கினார்.மணையில் அமர்ந்திருந்த 

ராமகிருஷ்ணன், உமா மணையில் இருந்தபடியே அவர்களை வரவேற்றார்கள்.உள்ளே நடந்து சென்ற சரசா சுப்பிரமணியன் குடும்பம் உட்கார்ந்து இருந்த இடத்தை நோக்கி வந்து" என்ன மணிஅண்ணா சௌக்கியமா"என்று கேட்டாள். மணி எழுந்து நின்று "சௌக்கியம் தான் சரசா.நீ எப்படி இருக்க" என்றான். அப்புறம் பாலசுப்பிரமணியனை பார்த்து "உங்கள எல்லாம் பார்த்து ரொம்ப நாளாச்சு.நண்ணா இருக்கேளா" என்றான். "எப்படி இருந்தது மதுரையில் இருந்து டிரிப்" என்று சுப்ரமணியன் கேட்க "என்ன பெரிய ட்ரிப். மூன்று மணி நேரம். மதுரையில் இருந்து திருச்சி  அவ்வளவுதான்" என்றார் பாலசுப்பிரமணியன். சுனந்தாவை பார்த்த சரசா "மணி அண்ணா.நம்ம சுனந்தாவா இது. கிடு கிடுன்னு வளந்தூட்டா. என்ன பண்றம்மா நீ" என்று சுநந்தாவிடம் கேட்டாள்.சுநந்தா "செவன்த் செமஸ்டர் இன்ஜினியரிங் படிக்கிறேன்" என்றாள். சம்யுக்தாவை பார்த்து  "மன்னி சௌக்கியமா இருக்கேளா.அண்ணாவும்  மன்னியும்

அன்னிக்கு பாத்த கண்ணுக்கு அழிவில்லாம இருக்கேளே" என்றாள் சரசா. இதற்குள் பாலசுப்பிரமணியன் "எங்க நம்ம ஸ்ரீ கிருஷ்ணனை காணோம் "என்றார். அதற்கு சுப்ரமணியன்  "இவ்ளோ நாழியா இங்க தான் இருந்தான்.ஏதோ ஒரு கால் வந்தது .சரியா சிக்னல் கிடைக்கலேன்னு   மாடிக்கு போயிருக்கான்" என்றான்.அவன்  சொல்லிக்கொண்டே இருந்தபோதே மாடிப்படியில் இருந்து ஸ்ரீ கிருஷ்ணன் இறங்கி வந்து கொண்டிருந்தான். அப்பா,அம்மாவை  பார்த்தவுடன் விரைந்து வந்து" என்னம்மா, அப்பா. எப்படி இருக்கீங்க .ஷைலு  குட்டி. எப்படி இருக்க" என்றான்.

"டே.கிருஷ்ணா.இதாண்டா உங்க மணி மாமா. மெட்ராஸ்ல இருக்கா" என்றாள் சரசா. இதை கேட்ட ஸ்ரீ கிருஷ்ணன் சிரித்தான். "என்னடா சிரிக்கற" என்றாள் சரசா. "நேத்து ராத்திரி மணி மாமா எனக்கு இண்டரட்யூஸ் ஆயிட்டார்.நாங்க எல்லாம்  எதிர்பாராத விதமா ஒரே ட்ரெயின்ல, ஒரே கம்பார்ட்மெண்ட்ல, பக்கத்து பக்கத்தில டிராவல் பண்ணிண்டு வந்தோம்"என்றான்.

"ஓ அப்படியா சேதி" என்றாள் சரசா. கல்யாணம் களை கட்டத் தொடங்கியது.

No comments:

Post a Comment