Sunday, January 15, 2023

பட்டாணி புலாவ்

 *டக்குனு ஒரு லஞ்ச் பாக்ஸ் ரெசிபி!*

🌷🌷🌷🌷


*பட்டாணி புலாவ்*

           🌷



 இதைவிட ஈஸியா, சுவையா, ஆரோக்கியமா, யாராலும் காலையில லஞ்ச் பாக்ஸ்க்கு ரெசிபி ரெடி பண்ணவே முடியாதுங்க.


காலையில் எழுந்து குழந்தைகளுக்கும் கணவருக்கும் பிடித்த மாதிரி ஆரோக்கியமான லஞ்ச் பாக்ஸ் ரெசிபி தயார் செய்வது என்பது அவ்வளவு சுலபமான விஷயம் அல்ல.

தினம் தோறும் சமைக்கக்கூடிய இல்லத்தரசிகளுக்கு தான் அந்த கஷ்டம் தெரியும். மிக மிக எளிமையான முறையில் ஒரு நாளைக்கு இந்த லஞ்ச் பாக்ஸ் ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க.

லஞ்ச் பாக்ஸ் திரும்பி வரும்போது காலியாக தான் வரும். குழந்தைகளுக்கும் கணவருக்கும் தேவையான ஊட்டச்சத்தும் இந்த ரெசிப்பியிலிருந்து நிச்சயம் கிடைக்கும்.

வாங்க அந்த லஞ்ச் பாக்ஸ் ரெசிபி என்ன என்று நாமும் தெரிந்து கொள்வோம்.

ஆரோக்கியம் தரும் பட்டாணி புலாவ் செய்வது எப்படி:

முதலில் இதற்கு 1/2 கப் அளவு பச்சை பட்டாணி தேவை. பிரஷ்ஷாக கிடைக்கக்கூடிய பச்சை பட்டாணியாக இருந்தால் அப்படியே பிரியாணியில் சேர்த்துக் கொள்ளலாம்.

அப்படி காய்ந்த பச்சை பட்டாணி என்றால் 8 மணி நேரத்திற்கு முன்பு தண்ணீரில் போட்டு ஊற போட்டு எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

1 டம்ளர் அளவு அரிசியை தண்ணீரில் போட்டு 20 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

உங்கள் விருப்பம் தான் சாப்பாட்டு அரிசி, பச்சரிசி, பாசுமதி அரிசி, சீரக சம்பா என்று உங்கள் வீட்டில் எந்த அரிசி இருக்கிறதோ அந்த அரிசியை நீங்கள் இந்த ரெசிபிக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

அடுத்து ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் 1 கைப்பிடி அளவு புதினா, 1/2 கைப்பிடி அளவு கொத்தமல்லி தழை, தோல் சீவிய இஞ்சி – 1 இன்ச், பூண்டு பல் – 6, மிளகு – 5, பச்சை மிளகாய் – 4, கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி, இந்த பொருட்களை எல்லாம் போட்டு விழுது போல அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

இப்போது குக்கரை வைத்து இந்த புலாவ் தாளிக்க வேண்டியது தான் வேலை. அடுப்பில் குக்கரை வைத்து சூடானதும் 2 ஸ்பூன் நெய் அல்லது எண்ணெய் ஊற்றி, பிரியாணி இலை – 1, பட்டை – 1, லவங்கம் – 2, அண்ணாச்சி பூ – 1, ஏலக்காய் – 1, மராத்தி மொக்கு – 1 இந்த பொருட்களை எல்லாம் போட்டு தாளித்து, நீளவாக்கில் வெட்டிய பெரிய வெங்காயம் போட்டு, வதக்கி 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து, ஊற வைத்திருக்கும் பச்சை பட்டாணியை போட்டு, மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் விழுதையும் போட்டு, நன்றாக வதக்கி விடுங்கள்.

விழுதின் பச்சை வாடை நன்றாக நீங்க வேண்டும். அதன் பின்பு அரிசிக்கு தேவையான அளவு தண்ணீரை ஊற்ற வேண்டும். 1 கப் அரிசிக்கு, 2 கப் அளவு தண்ணீர் ஊற்றி, மீண்டும் 1/2 கப் அளவு கூடுதலாக தண்ணீர் ஊற்றுங்கள். காரணம் பச்சை பட்டாணி இதில் சேர்க்கப் போகின்றோம் அல்லவா. காய்ந்த ஊறவைத்த பச்சை பட்டாணிக்கு அரை கப் அளவு தண்ணீர் கூடுதலாக தேவைப்படும்.

பிரஷ்ஷாக கிடைத்த பச்சை பட்டாணி என்றால் தண்ணீர் அதிகமாக ஊற்ற வேண்டாம். அரிசியோடு அது வெந்துகொள்ளும். தண்ணீரை ஊற்றி கொதி வந்ததும் உப்பு போட்டு ஊற வைத்திருக்கும் அரிசியை போட்டு, கலந்து குக்கரை மூடி மூன்று விசில் விட்டால் சூப்பரான மணக்க மணக்க பச்சை பட்டாணி புலாவ் தயார்.

இதில் புளிப்பு சுவை தேவை என்றால் தண்ணீர் ஊற்றும் போது ஒரு ஸ்பூன் எலுமிச்சை பழச்சாறை சேர்த்துக் கொள்ளலாம். அது நம்முடைய விருப்பம் தான்.

இந்த ஆரோக்கியம் தரும் லஞ்ச் பாக்ஸ் ரெசிபி உங்களுக்கு பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

🌷🌺🌷🌺🌷🌺🌷🌺🌷🌺

No comments:

Post a Comment