புள்ளிமான் வேட்டை-16
இரவில் ஸ்ரீரங்கத்தில் ரயில் ஏறி மறுநாள் காலை மாம்பலத்தில் இறங்கி, ராமாபுரத்தில் உள்ள சொந்த வீட்டிற்கு சுப்பிரமணியன் குடும்பம் வந்து சேரும் பொழுது காலை 5:30 மணி ஆகி இருந்தது. விடியற்காலையில் எழுந்து விட்டதால். அனைவரும் கொஞ்ச நேரம் உறங்கினார்கள். ஏழரை மணிக்கு எழுந்து சம்யுக்தா காபி கலந்து கொண்டுவந்து சுப்பிரமணியனை எழுப்பி கொடுத்தாள். காபியை குடித்த சுப்பிரமணியம் இரண்டு நாளாக கல்யாணத்தில் நடந்ததை எல்லாம் மனதில் அசைபோட்டுக் கொண்டிருந்தான். எல்லாமே ஓரளவிற்கு தான் எதிர்பார்த்த மாதிரி போகிறது என்று லேசான சந்தோஷம் வந்தது அவனுக்கு. சுநந்தா கிருஷ்ணனிடம் சென்னை திரும்பி வரும்போது பேசிக் கொண்டிருந்ததை பார்த்த அவனுக்கு ஓரளவுக்கு சுநந்தா மனம் திரும்புவாள் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. சம்யுக்தாவுக்கு இதெல்லாம் ஒன்றும் தெரியாததால் அவள் இதைப் பற்றி ஒன்றும் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. திங்கள் கிழமையிலிருந்து தொடங்கி அந்த வாரம் கிடுகிடுவென சென்றது. கல்யாணத்தில் நடந்த எல்லா நிகழ்ச்சிகளையும் பார்த்த சுநந்தாவுக்கு மிக லேசான மன மாற்றம் ஏற்பட்டது என்பது உண்மைதான். சில சமயம் அவள் மனம் அவளது அப்போதைய பாய் பிரண்டையும்,ஸ்ரீ கிருஷ்ணனையும் கம்பேர் செய்ய ஆரம்பித்தது. சில சமயம் தன்னுடைய தற்போதைய நிலைப்பாடு தவறோ என நினைத்தாள். "சீ,சீ. உண்மையான காதலுக்கு முன் மதம் ஒரு பிரச்சனையாக இருக்க கூடாது " என மனதை தேற்றிக்கொள்ள ஆரம்பித்தாள்.அப்போது அவள் மனம் "நீ இப்போது வயப்பட்டிருப்பது உண்மையான காதலா" என்று கேட்க ஆரம்பித்தது. மொத்தத்தில் அவளுக்கு ஒரே குழப்பமாக இருந்தது.
சுப்பிரமணியன் ஸ்ரீரங்கதிலிருந்து வரும்போது கிருஷ்ணனுடைய நம்பரை வாங்கிக் கொண்டு வந்திருந்தான்.
வெள்ளிக்கிழமை காலை பதினோரு மணிக்கு ஆபீஸிலிருந்து சுப்பிரமணியன் ஸ்ரீ கிருஷ்ணனுக்கு போன் செய்து "என்னப்பா. நாளைக்கு சனிக்கிழமை மறக்காம ஆத்துக்கு வந்துடு" என்றான். "சரி மாமா வந்தூட்றேன்"என்று கூறிய கிருஷ்ணன் மறு நாள் காலை எட்டு மணிக்கு சுப்பிரமணியத்தின் வீட்டில் ஆஜரானான். வரும்பொழுது நான்கு ஆப்பிள் பழமும், இரண்டு கொய்யாப்பழமும் வாங்கி வந்திருந்தான். "எதுக்குப்பா இதெல்லாம்" என்றான் சுப்பிரமணியன்.
"வெறும் கையோடு போக வேண்டாமேன்னு வாங்கிண்டு வந்தேன், மாமா" என்றான் கிருஷ்ணன். "கிட்டின சொந்தத்துக்குள்ள பார்மாலிட்டி எல்லாம் வேணாமேப்பா" என்றான் சுப்பிரமணியன்.
11:30 மணிக்கு சமையல் ஆனதும் சம்யுக்தா எல்லோருக்கும் பரிமாறினாள்.
"கிருஷ்ணா. நோக்கு
என்ன பிடிக்கும்னு நேக்கு தெரியாது. அதனால நான் என்னமோ சமைச்சிருக்கேன்" என்றாள் சம்யுக்தா. "நீங்க என்ன பண்ணியிருந்தாலும் அது நேக்கு பிடிக்கும் மாமி" என்றான் கிருஷ்ணன்.
கிருஷ்ணன் சாப்பிட்டு கொண்டே "என்ன மாமா. பாட்டி என்னைக்கு வரா" என்றான். "நாளைக்கு பல்லவன்ல வரா. நாளை காலைல மாம்பலத்துக்கு போய் அழசிண்டு வரணும்" என்றான் சுப்பிரமணியன்.
"மாம்பலத்துக்கு எத்தனை மணிக்கு பல்லவன் வருது மாமா"என்றான் கிருஷ்ணன். கிட்டத்தட்ட 11 மணிக்கு வந்துடும்பா" என்றான் சுப்பிரமணியன்.
"நான் போய் அழசிண்டு வந்துடறேன் மாமா" என்றான் கிருஷ்ணன்.
அப்பொழுது அங்கு வந்த சுநந்தாவிடம்"ஏம்மா. நீ நாளைக்கு ஹிக்கின்பாதாம்ஸ் போய் ஏதோ டெக்ஸ்ட்புக் வாங்கணும்னயே .எப்ப போணம்" என்று கேட்டான்சுப்ரமணியன். சுநந்தா"ஹிக்கின்பாதாம்ஸ் "10 மணிக்கு தொறக்கறதப்பா"என்றாள். "அப்போ ஒண்ணு பண்ணு. நாளைக்கு நீயும் கிருஷ்ணனும் காலையில கிளம்பி ஹிக்கின்பாதாம்ஸ் போய்டு.
நீ எந்த புக் வாங்கணும்னு கிருஷ்ணன் செலக்ட் பண்ணுவான்னு நெனைக்கிறேன். புக் வாயிண்டு அங்கேந்து நேர மாம்பலம் ஸ்டேஷன் போய் பாட்டிய பிக்கப் பண்ணிண்டு வந்துடுங்கோ"என்றான் சுப்பிரமணியன்.
சுநந்தா பதிலளிக்க சிறிது தயக்கம் காட்டினாள். கிருஷ்ணனுடன் வெளியே போக ஆரம்பித்தால் அது கிருஷ்ணனுக்கு தன்மேல் ஒரு ஈர்ப்பு வந்து விட வாய்ப்பு இருக்கிறது என பயந்தாள். மறுபடியும் சுப்பிரமணியம் தன் பிரம்மாஸ்திரத்தை பிரயோகம் செய்தான்.
" தோ பார்மா. நோக்கு இஷ்டம் இல்லைன்னா நீ பாட்டுக்கு தனியா போய்க்கோ.அவன் உன் சப்ஜெக்ட்ட படிச்சிருக்கான். அதுல கோல்ட்
மெடலிஸ்ட் வேற.அவன் கூட வரது நோக்கு உபயோகமா இருக்குமேன்னு நான் நெனைச்சேன். அப்புறம் உன் இஷ்டம்" என்றான் குரலில் வருத்தம் தொனிக்க(சுப்பிரமணியன் இப்போதெல்லாம் பயங்கரமாக நடிக்க கற்றுக் கொண்டிருக்கிறான்). இதைக் கேட்டதும் சுநந்தா"ஏம்பா இப்படி சொல்ற. நான் அப்படி நெனைக்கல. என் பிரண்டு வாணி வரேன்னு சொல்லி இருந்தா. நான் அவ கிட்ட போன் பண்ணி அவளை வர வேணாம்னு சொல்லிட்றேன்" என்றாள்.
(சுநந்தாவும் இப்போது நடிக்க ஆரம்பித்து இருக்கிறாள்)
No comments:
Post a Comment