Saturday, January 14, 2023

குடவாசல் ஸ்ரீநிவாசப் பெருமாள்

 *ஸ்ரீராமஜெயம்* 

*திருப்பதி பெருமாளுக்கு தம்பி என்று வணங்கப்படும் குடவாசல்*ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவில்*🙏🙇‍♂️

*Kudavasal srinivasa Perumal koil*

திருப்பதி, திருமலையில் நடப்பது போன்றே இவ்வாலயத்தில் எல்லா வழிபாடுகளும் வைபவங்களும் நடத்தப்படுகின்றன. 

இவர் திருப்பதி பெருமாளுக்கு தம்பி என வணஙகபடுகிறார். 

திருப்பதி மலை செல்ல முடியாதவர்கள் பிரார்த்தனைகள் இந்த கோயிலில் செல்லுத்தபடுகிறது.

*ஆலய தல வரலாறு* 

முன்னொரு காலத்தில், வடதிசைக்கு அதிபதியான குபேரன் மகாவிஷ்ணுவை வணங்கி, "நான் எப்பொழுதும் தங்களை தரிசித்துக் கொண்டிருக்கும் பாக்கியத்தை அருள வேண்டும்'' என்று வரம் கேட்டார். 

அதற்கிணங்கிய மகாவிஷ்ணு, "கலியுகத்தில், கடத்துவாரபுர க்ஷேத்திரம் எனப்படும் திருக்குடவாயில் தலத்தில் வடக்கு நோக்கி எழுந்தருளி அனுக்ரகம் செய்கிறேன்'' என்று கூறினார்.

அதன்படியே ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீனிவாசராக- திவ்ய மங்கள விக்ரக வடிவில் பூமிக்கடியில் எழுந்தருளினார். 

இந்நிலையில், விஜயநகரப் பேரரசர் கிருஷ்ணதேவராயர் இப்பகுதிக்கு வந்தபோது, இங்கே ஒரு வைணவ ஆலயம் அமைக்க வேண்டும் என்று எண்ணினார். 

அதற்காக தன்னுடன் வந்திருந்த வேத பண்டிதர்களுடன் ஆலோசனை செய்தார். 

பூமி பூஜை செய்து முதலில் குளம் வெட்ட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. 

அதற்கான நாளும் குறிக்கப்பட்டது.

குறிப்பிட்ட நாளுக்கு முந்தைய இரவில், ஒரு வைணவ அன்பரின் கனவில் தோன்றிய திருப்பதி ஏழுமலையான், "குளம் வெட்ட நீங்கள் தேர்ந்தெடுத்திருக்கும் இடத்தில்- ஈசான்ய பாகத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் விக்ரகமாக நான் பூமிக்கடியில் உள்ளேன். பாலை ஊற்றி மண்ணைக் கரைத்து விக்ரகத்தை தேசப்படுத்தாமல் வெளியில் எடுத்து, எளிமையாக கோவில் கட்டி வடக்கு நோக்கி பிரதிஷ்டை செய்யுங்கள். 

திருப்பதி பெருமாளுக்கு அண்ணன் என்னும் சம்பிரதாயத்துடன் பிரார்த்தனைத் தலமாக ஒப்பிலியப்பன் கோவிலும், தம்பி என்ற சம்பிரதாயத்துடன் பிரார்த்தனைத் தலமாக இந்த குடவாயில் கோவிலும் பிற்காலத்தில் சிறப்பு பெறும்' என்று கூறி மறைந்தார்.

கண்விழித்த அந்த அன்பர் ஓடிச்சென்று கிருஷ்ண தேவராயரிடம் தான் கண்ட கனவைக் கூற, அதிசயித்த மன்னன் குடம் குடமாகப் பால் கொண்டு வருமாறு உத்தரவிட்டார். 

பின்னர் சுபமுகூர்த்தத்தில் பூமிபூஜை செய்து, பொன் ஏர் பூட்டி ஈசான்ய பாக நிலத்தை உழத் தொடங்கினார். 

ஓரிடத்தில் ஏர் தடைப்பட்டு நின்றது. அந்த இடத்தில் குடங்களிலிருந்த பாலை ஊற்றச் சொன்னார் மன்னர். 

அப்படியே செய்யப்பட, அங்கே வடக்கு நோக்கி எழுந்தருளியிருந்த பெருமாளின் திருமேனியைக் கண்டு அனைவரும் மெய்சிலிர்த்து நின்றனர்.

பூஜை செய்து அந்த விக்ரகத்தை எடுத்து, பெருமாள் அருளியபடியே வடக்கு நோக்கிய ஆலயம் அமைத்து, திருமலையைப் போன்றே ஆகமப்படி பிரதிஷ்டை செய்து வைத்தார் கிருஷ்ண தேவராயர். 

ஆலயப் பராமரிப்புக்கு வேண்டிய நிலங்களை நிவந்தமாகக் கொடுத்து, நித்திய பூஜைகளைச் செய்து வருவதற்கு சில குடும்பங்களை அங்கேயே குடியமர்த்தினார் கிருஷ்ண தேவராயர்.

அந்தக் குடும்பங்கள் தற்போது பலவாகப் பெருகி பல ஊர்களில் இருந்தாலும், ஆண்டுக்கொரு முறை இங்கு வந்து உற்சவத்தில் கலந்து கொள்கிறார்கள். 

இவர்கள் ஒன்றிணைந்து ஏற்படுத்தியுள்ள "ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் சேவா சமிதி' என்னும் அமைப்பு ஆலயத் திருப்பணிகளை சிறப்பாகச் செய்து வருகிறது.

*பிரார்த்தனை, பரிகாரம்:*

இவ்வாலயத்தில் நடைபெறும் எல்லா வழிபாடுகளும் வைபவங்களும் திருப்பதி- திருமலையில் நடப்பது போன்றே நடத்தப்படுகின்றன. 

திருமலையில் வெள்ளிக்கிழமை நடைபெறும் திருமஞ்சன தரிசனம் காண முடியாதவர்கள் இத்தலத்துக்கு வந்து கண்டு மகிழலாம்.

பெருமாளுக்கு சனிக்கிழமை உகந்த தினமாகும். 

அந்த நாளில் விரதம் இருந்து இவரை வணங்கினால், பெருமாள் குபேர சம்பத்தைத் தந்தருள்வார் என்பதில் ஐயமில்லை.

திருமலை பெருமாளைப்போலவே இத்தலத்துப் பெருமாளும் சர்வ அலங்காரத்துடன் காட்சி தருகிறார். 

இங்கு நடைபெறும் ஏகாந்த சேவையும் (அர்த்த சாம பூஜை) சிறப்பு வாய்ந்தது. 

பக்தர்கள் தரிசித்து பிரார்த்தனை செய்து கொள்ளலாம். 

வியாழக்கிழமைகளில் நேத்ர தரிசனம் கண்டு மகிழலாம்.

ஒவ்வொரு மாதமும் பெருமாளின் திருநட்சத்திரமான திருவோணத்தில் சந்நிதியில் நெய் தீபம் ஏற்றப்படுகிறது. 

அன்றைய தினம் லட்சுமியுடன் கூடிய ஸ்ரீநிவாசர் தீப வடிவாக பக்தர்களுக்கு அருள்புரிகிறார்.

இங்கே கோவில் கொண்டிருக்கும் யோக நரசிம்மருக்கும் (மூலவர்) லட்சுமி நரசிம்மருக்கும் (உற்சவர்) பிரதோஷ காலத்தில் தீபமேற்றி வழிபட்டால், கடன் தொல்லைகள் நீங்கும்; தொழில் விருத்தியும் பொருள் சேர்க்கையும் உண்டாகும்.

கல்விக் கடவுளான ஹயக்ரீவருக்கும் இங்கு சந்நிதி உண்டு. 

மாணவ- மாணவிகள் வியாழக் கிழமைகளில் இவரை வலம் வந்து ஏலக்காய் மாலை சாற்றி அர்ச்சனை செய்தால் கல்வியில் சிறக்கலாம்.

*காரியசித்தி ஆஞ்சநேயர்*

இங்குள்ள ஆஞ்சனேயர் காரியசித்திக்காக நூதன முறையில் பிரதிஷ்டை செய்யப்பட்டவர். 

ஐந்து வெற்றிலை, ஐந்து பாக்கு, ஐந்து பழங்களை வியாழன் அல்லது சனிக்கிழமைகளில் ஆஞ்சனேயருக்கு

சமர்ப்பித்து தொடர்ந்து ஐந்து வாரங்களும்; அமாவாசை நாட்களில் தொடர்ந்து ஐந்து மாதங்களும் வழிபடுபவர்களுக்கு எண்ணிய காரியங்கள் கை கூடுகின்றனவாம். 

வெண்ணெய் காப்பு, வடைமாலை சாற்றி வேண்டுதலை நிறைவு செய்யலாம்.

ஞாயிற்றுக் கிழமை காலையில் நீராடி, வெறும் வயிற்றுடன் இங்குள்ள கருட பகவானுக்கு தீபமேற்றி அர்ச்சனை செய்து வழிபட்டால், பிள்ளைப் பேறில்லாதவர்களுக்கு பிள்ளைப் பேறு கிட்டும் என்கிறார்கள்.

நம்மாழ்வார், பெரியாழ்வார், குலசேகராழ்வார், நாதமுனிகள், திருமங்கையாழ்வார், ஆண்டாள், நிகமாந்த மகாதேசிகர், ஸ்ரீராமானுஜர் ஆகியோர் தனிச் சந்நிதிகளில் சேவை சாதிக்கிறார்கள்.

தலச்சிறப்பு:

பெருமாளே விரும்பி வந்து இங்கு கோயில் கொண்ட தலம் என்னும் சிறப்போடு, வடக்கு நோக்கி பெருமாள் கோயில் கொண்டுள்ள தலம் என்னும் சிறப்போடும் இத்தலம் விளங்குகிறது.

திருவிழா:

வைகுண்ட ஏகாதசி, திருவோணம்.

கோரிக்கைகள்:

கடன் தொல்லைகள் நீங்க, தொழில் விருத்தியும் பொருள் சேர்க்கையும் உண்டாக, கல்வியில் சிறந்து விளங்க, திருமணம் கைகூட இங்குள்ள நரசிம்மரை வழிபடுகின்றனர்.

நேர்த்திக்கடன்:

பக்தர்கள் நெய் தீபமேற்றியும், வெற்றிலை, ஏலக்காய் மாலை, வெண்ணெய் காப்பு, வடைமாலை சாற்றியும் நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.

*கோவில் நடை திறந்திருக்கும் நேரம் :*

ஆலயம் தினமும் காலை 7.30 மணி முதல் 12.00 மணி வரையிலும்; மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் திறந்திருக்கும். ஏகாந்த சேவை இரவு 8.30 மணிக்கு நடைபெறும். விசேஷ நாட்களில் இந்த நேரம் மாறுபடும்.

கும்பகோணத்திலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் 20-ஆவது கிலோமீட்டரில் உள்ளது குடவாசல்.

இக்கோவில் கடன் தொல்லை கல்யாண தடை நீங்க பிள்ளைவரம் தரும் தலமாகும்.

*ஓம் நமோ வெங்கடேசாய*

குடவாசல் ஸ்ரீநிவாசப் பெருமாள் 

*நல்ல திருப்பங்களை தந்தருளும் திருப்பதி 

திருமால் மந்திரம்* 

 *ஓம் ஹ்ராம் ஹ்ரீம் க்லீம்* 
 *ஓம் நம ஸ்ரீ வேங்கடேசாய*

திருப்பதி திருமலையில் கோயில் கொண்டிருக்கும் வெங்கடேச பெருமாளை போற்றும் மந்திரம் இது. 

இந்த மந்திரத்தை தினமும் காலையில் எழுந்து குளித்து முடித்து விட்டு முதலில் விநாயகரையும், குலதெய்வத்தையும் 

மனதார வணங்கி விட்டு, மேற்கூறிய மந்திரத்தை 108 முறை துதித்தால் பலன் அதிகம். 

திங்கட்கிழமைகள், மாதத்தில் வரும் திருவோணம் நட்சத்திர தினத்தில் அதிகாலையில் எழுந்து 108 முதல் 1008 மந்திர உரு துதிப்பதால் வாழ்வில் நன்மையான விடயங்கள் அதிகம் ஏற்படும். 

தொழில், வியாபாரங்களில் லாபம் பெருகும். உங்களின் பொருளாதார நிலை பலம் பெறும் வீண் செலவுகள் ஏற்படாது.

கலியுக கடவுள் என போற்றப்படுபவர் திருப்பதி திருமலையில் கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீனிவாசன் ஆவார். 

எந்த ஒரு மனிதனுக்கும் செல்வ வளத்தை அருளும் கருணை கொண்டவர் வேங்கடவன். அவரை தினமும் வழிபடும் பக்தர்களின் வாழ்வில் பல நல்ல மாறுதல்கள் ஏற்படுவதை நாம் காண முடியம். 

இந்த திருப்பதி ஏழுமலையான் நவகிரகங்களில் சனீஸ்வரர் அம்சம் கொண்டவராகவும் இருப்பதால் அவரை தொடர்ந்து வழிபடுபவர்களுக்கு வாழ்வில் ஏற்படும் அனைத்து கஷ்டங்களும் நீங்கும்.🙏🌹

No comments:

Post a Comment