புள்ளிமான் வேட்டை 17.
அன்று ஞாயிற்றுக்கிழமை. காலை எழுந்ததும் பல் துலக்கி அனைவரும் காபி குடித்தார்கள். சுப்பிரமணியன் கிருஷ்ணனைப் பார்த்து" நீ எத்தனை மணிக்கு கிளம்ப போறே" என்றார். "சுமார் எட்டரை மணிக்கு கிளம்பட்டுமா" என்றான் கிருஷ்ணன். 8:50 க்கு 18 E பஸ் இருக்கு. அத பிடிச்சி மெய்ன் ரோடு போய்டுங்க. அங்கேர்ந்து 54, 88 சீரிஸ் பிடிச்சா ஒன்பதே முக்காலுக்குள்ள ஹிக்கின்பாதம்ஸ் போயிடலாம்"என்றான் சுப்பிரமணியன். 8:30 மணிக்கு வீட்டில் இருந்து கிளம்பி பத்து நிமிடம் நடந்து,18 E நிற்கும் பஸ் ஸ்டாப்பிற்கு வந்து பஸ் வந்தவுடன் இருவரும் பஸ்ஸில் ஏறி, மெயின் ரோடில் இறங்கி அங்கு நின்று கொண்டிருந்த 88 ம் நெம்பர் பஸ்ஸை பிடித்தார்கள்.இருவரும்சேர்ந்து அமர இடம் இருந்தும் கிருஷ்ணன் தனியாக ஆண்கள் அமரும் இடத்தில் உட்கார்ந்து கொண்டான். ஒன்பது 40 க்கு எல் ஐ சி பஸ் ஸ்டாப் வந்ததும் இருவரும் இறங்கி கொஞ்ச தூரம் நடந்து ஹிகின்பாதம்ஸ் வாசலுக்கு வந்தார்கள். இன்னும் அந்த புத்தகக் கடை திறந்திருக்கவில்லை. பத்து நிமிஷம் இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். முதலில் சப்ஜெக்டை பற்றி பேசிக் கொண்டிருந்தவர்கள் பின்பு அவரவர்கள் சொந்த விருப்பு வெறுப்புகளை பற்றி பேச ஆரம்பித்தார்கள். "உனக்கு பொதுவா என்னென்னவெல்லாம் பிடிக்கும்" என்று கேட்டான் கிருஷ்ணன்."நல்ல பாட்டு பிடிக்கும். நல்ல சாப்பாடு இருந்தா சாப்பிடுவேன்" என்றாள் சுநந்தா ."உனக்கு என்ன பிடிக்கும் "என்று பதிலுக்கு சுநந்தா கிருஷ்ணனிடம் கேட்க " நேக்கு நிறைய விஷயங்கள் பிடிக்கும். கர்நாடக சங்கீதமோ, சினிமா பாட்டோ மனச தொடும்படி இருந்தா நிச்சயம் விரும்பி கேப்பேன். யாரேனும் உதவி என்று வந்து கேட்டா மறுக்காம செய்வேன். ஆபீஸில் கூட என்னிடம் வந்து யாரேனும் தங்கள் செய்யற ப்ராஜெக்ட் சில இடங்களில் ஸ்டக் அப் ஆகி என்னிடம் உதவி கேட்டு வந்தால் நிச்சயம் அதை நான் அவாளுக்கு செஞ்சு கொடுப்பேன். இதைத் தவிர ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தவறாமல் கோவில் போவேன். ஞாயித்துக்கிழமைல மயிலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ண மடத்துக்கு சென்று அங்கு நிகழும் பிரசங்கங்களை கேட்டூட்டு,கபாலீஸ்வரர் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து கொண்டு வருவேன்.கடைசியா நீ சொன்ன மாதிரி நல்ல சாப்பாடு கிடைச்சா ஒரு வெட்டு வெட்டுவேன்" என்று கூறி சிரித்தான் கிருஷ்ணன்.
ராமகிருஷ்ணா மடம் மற்றும் கபாலீஸ்வரர் கோவில் செல்வது பற்றி கிருஷ்ணன் சொன்னது தன்னை இம்ப்ரஸ் செய்வதற்காக கூறிய பொய்யாக இருக்குமோ என்று சுநந்தவுக்கு சந்தேகம் வந்தது.அவள் அவனிடம் "நீ அடுத்த முறை ராமகிருஷ்ணா மடம் போகும்போது, இரண்டு மணி நேரம் முன்னதாக நேக்கு சொன்னா நானும் வருவேன்"என்று கூறினாள். இப்படி கூறிவிட்டு அவனுடைய பாடி லாங்குவேஜ் பார்த்த அவளால் ஒன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை .அதற்கு பதில் சொன்ன கிருஷ்ணன்"ஓ. உனக்கு இதில் கூட இன்ட்ரஸ்ட் இருக்கா. சரி நெக்ஸ்ட் டைம் நான் போகும் போது மறக்காம உனக்கு போன் பண்றேன்" என்று கூறினான்.
சரியாக 10:00 மணிக்கு ஹிகின்பாதம்ஸ் திறக்கப்பட்டது. இருவரும் உள்ளே சென்றார்கள். வெகு நேரம் புத்தகங்கள் கிடைக்கிறதா என்று பார்த்துக் கொண்டிருந்தவர்கள் கடைசியில் கிருஷ்ணன் கூறியபடி ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்சில் அவர்கள் தேடிய புத்தகம் கிடைத்தது.கீழே உள்ள தமிழ் புத்தக வரிசையில் இருந்த மாணிக்கவாசகரின் "திருவாசகம் மூலமும் உரையும்" என்ற புத்தகத்தை வாங்குவதற்காக கிருஷ்ணன் அதை எடுத்தான்.ஹிகின் பாதாம்ஸை சேர்ந்த அங்கிருந்த ஒருவரிடம் "தெய்வத்தின் குரல். ஏழாம் பாகம் வந்துவிட்டதா" என்று கேட்டான் கிருஷ்ணன். "இல்ல சார். எனி டைம் வந்துடும் .நீங்க உங்க நம்பர் குடுத்துட்டு போனா நான் உங்களுக்கு அது வந்தவுடன் போன் பண்றேன்" என்று கூறினார்.அவரிடம் கிருஷ்ணன் தன் நம்பரை கொடுத்தான்.இருவரும் பில்லிங் கவுண்டர் அருகில் வருகையில் பணம் கொடுப்பதற்காக சுநந்தா தன்னுடைய கையில் இருந்த ஹேண்ட் பேக்கை எடுத்தாள்.இதற்குள் முந்திய கிருஷ்ணன் தன்னுடைய கிரெடிட் கார்டை பில்லிங் கவுண்டரில் கொடுத்தான்." எதுக்கு நீ பணம் தரணும். என் புஸ்தகம் தானே"என்ற சுநந்தாவிடம் "நீ, நான்னு பிரிச்சு பாக்கணுமா என்ன" என்றான் கிருஷ்ணன். இருவரும் வெளியில் வந்து எல் ஐ சி பஸ் ஸ்டாப்பில் நிற்க தி.நகர் செல்லும் 11 நெம்பர் பஸ் வந்தது. அதில் இருவரும் ஏறினார்கள்.ஆண்கள் அமரும் இருக்கையில் கிருஷ்ணன் அமர அடுத்திருந்த காலி இடத்தில் சுநந்தா அவனருகில் அமர்ந்தாள். அவள் அருகில் அமர்ந்திருக்கிறாள் என்று சுதந்திரத்தை எடுத்துக் கொள்ளாமல் சிறிது இடைவெளி விட்டு கிருஷ்ணன் இறங்கும் வரை உட்கார்ந்து கொண்டிருந்தான். "ஆமாம். மாணிக்கவாசகரின் திருவாசகம் புதஸ்தகத்த நீ வாங்கி இருக்கயே. அதெல்லாம் உனக்கு பிடிக்குமா" என்றாள் சுநந்தா. அதற்கு கிருஷ்ணன்" நீ கேட்டதால் இந்த விஷயத்தை நான் சொல்ல வேண்டியதாயிட்டுது .நீ சொன்னால் நம்ப மாட்டாய். எங்கள் ஆபீஸில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சுமார் 20 நிமிடங்கள் "தமிழால் அமுது ஊட்டிய பெரியோர்கள்" என்ற தலைப்பில் எங்கள் டீம் நண்பர்கர்களிடையே நான் உரையாற்றுவேன். வரும் வாரம் திருவாசகத்தில் இருந்து சில செய்திகளை சொல்லலாம் என்று இருக்கேன்.இந்த புத்தகத்தை ரொம்ப நாளா நான் தேடிண்டிருந்தேன். இப்போ கிடைச்சூட்த்து. இந்த வாரம் வெள்ளிக்கிழமைக்கு முன்னால இதை படிச்சு நான் கொஞ்சம் ப்ரிப்பேர் பண்ணிண்டூடுவேன்" என்றான்.இதைக் கேட்ட சுநந்தாவிற்கு ரொம்ப பிரமிப்பாக இருந்தது. மாணிக்கவாசகரின் திருவாசகத்தைப்பற்றி அவள் கேள்விப்பட்டிருந்தாள். அதைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமென்று ஆர்வம் அவளுக்கு கிருஷ்ணனால் இப்பொழுது ஏற்பட்டது. அவள் கிருஷ்ணனிடம் "நீ இதுபத்தி சொல்லப்போகும் போது உங்க டீம் மெம்பர்கள் தான் அலவ்டா, வெளியாட்கள் வரலாமா" என்று கேட்டாள். "தாராளமா வரலாம். என் டீமில் இருக்கற தாரிணியின் ரெண்டு மூன்று பெண் நண்பர்கள் கூட வெளிலேந்து இதைக் கேட்க வரா" என்று கூறினான் கிருஷ்ணன் .இதைக் கேட்ட சுநந்தா அவசர அவசரமாக"அது யார் தாரிணி" என்று கேட்டாள். அவள் கேட்பதின் உள் அர்த்தம் புரியாத கிருஷ்ணன் "என் டீமில் இருக்கும் மிகவும் புத்திசாலி ஆன பெண் தாரிணி.கற்பூர புத்தி.அவளுக்கும் தமிழில் ஆர்வம் அதிகம்" என்று சொன்னான் அவன்."சரி .அவ என்ன அழகா இருப்பாளா" என்று கேட்டாள் சுநந்தா. இதைக் கேட்டு கிருஷ்ணன் சிரித்துக் கொண்டே "கிட்டத்தட்ட எல்லா பெண்களும் இதே மாதிரி தான் கேக்கறீங்க. எனக்கு இது ஏன்னு புரியல. போன வாரம் நான் ஆபீஸில் திருச்சி சென்று வந்ததை பத்தி பேசிக்கொண்டிருந்தப்போ உன்னைப் பத்தியும் சொன்னேன். அப்போ என்னிடம் இதே கேள்வியை உன்னை பத்தி தாரிணி கேட்டாள்" என்று சொன்னான் கிருஷ்ணன். உடனே சுனந்தா அவசரமாக "நீ என்னைப் பற்றி என்ன சொன்னே"என்று கேட்டாள். அதற்குள் கிருஷ்ணன் தன் பேச்சை மாற்றி "இந்த வெள்ளிக்கிழமை நீ வருவதா இருந்தா சொல் .நான் எங்காவது வந்து பிக்கப் பண்ணிக்கறேன்"என்று கூறினான் .தான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் அவன் மழுப்புகிறான் என்று தெரிந்து அவளுக்கு. அதற்குள் தி. நகர் பஸ் ஸ்டாண்ட் வந்துவிட இருவரும் இறங்கி மாம்பலம் ரயில்வே ஸ்டேஷனுக்கு நடையை கட்டினார்கள்.
No comments:
Post a Comment