Monday, January 30, 2023

புள்ளிமான் வேட்டை-18

 புள்ளிமான் வேட்டை-18

தி. நகர் பஸ் ஸ்டாண்டில் இறங்கி  நடந்து மாம்பலம் ஸ்டேஷன் வந்து சேரும்போது மணி சரியாக பதிணொண்ணு இருபது ஆகியிருந்தது. பிளாட்பார்ம் டிக்கெட் வாங்கிக் கொண்டு வெளியூரில் இருந்து வரும் ரயில்கள் வரும்  பிளாட்பாரத்தை அவர்கள் அடைந்த பத்தாவது நிமிஷத்தில் பல்லவன் எக்ஸ்பிரஸ் வந்தது.பாட்டியின் கம்பார்ட்மன்ட் அருகில்  இருவரும் சென்றார்கள். முதலில் பாட்டியை பார்த்த சுநந்தா பாட்டியை  கையை பிடித்து கீழே இறக்கி விட்டாள்.கீழ இறங்கிய ராஜேஸ்வரி  கிருஷ்ணனை பார்த்து " நீ வேற வந்து இருக்கியா" என்றாள். "ஆமாம் பாட்டி. இன்னைக்கு லீவு தானே அதனால் தான் வந்தேன்" என்றான்.பாட்டியின் ஒரே பேக்கை தூக்கிக்கொண்ட  கிருஷ்ணன் வெளியில் வந்ததும்,  காத்திருந்த பல ஆட்டோ ரிக்ஷாக்களில் ஒன்றில் பேரம் பேசி அவர்கள் இருவரையும் ஏற்றி தானும் ஏறிக்கொண்டான். "என்ன பாட்டி. கல்யாணமெல்லாம் ஒரு வழியா முடிச்சூட்டு வந்தூட்டயா" என்றாள் சுநாந்தா. "ஆமாண்டி அம்மா. ராமகிருஷ்ணனுக்கு நான் போய் இருந்தது ரொம்ப சந்தோஷம். இன்னும் பத்து நாள் இருந்துட்டு போங்களேன் என்றாள் உமா. நெறைய நாள் ஏற்கனவே இருந்தூட்டதால கிளம்பி வந்தூட்டேன்"என்றாள் ராஜேஸ்வரி. ஆட்டோ வீட்டை அடைந்தது. வாசலிலேயே சுப்பிரமணியனும், சம்யுக்தாவும்  நின்று கொண்டிருந்தார்கள். இவர்கள் மூவரும் ஆட்டோவில் இருந்து இறங்கியதும், அம்மாவை பார்த்த சுப்ரமணியன்" ஒரு வழியா மெட்ராஸ் வரதுக்கு வழி தெரிஞ்சுதாக்கும்" என்றான் சிரித்துக் கொண்டே .அதற்கு ராஜேஸ்வரி "என்னடா பண்றது .உங்க சித்தப்பா விடமாட்டேன்றான்" என்றாள். கிருஷ்ணன் ஆட்டோவிற்கு உண்டான பணத்தை டிரைவரிடம் கொடுத்துவிட்டு  பாட்டியின் பையை தூக்கிக் கொண்டு வீட்டில் நுழைந்தான். சுநந்தாவை பார்த்த சுப்பிரமணியன் "நீ கேட்ட புஸ்தகம் கெடைச்சுதா" என்றான். "இல்லேப்பா .அதைவிட நல்ல புஸ்தகம் கிடச்சது. கிருஷ்ணன் தான் பணம் கொடுக்கிறேன் சொல்லி என்ன தடுத்துட்டான்" என்றாள் அவள்.தன் பர்ஸை திறந்த கிருஷ்ணன் "புத்தகத்துக்கு எவ்வளப்பா ஆச்சு" என்று  பணம் கொடுக்க முயன்றான். "மாமா. நீங்க புஸ்தகத்துக்கு பணம் கொடுக்கிறதா இருந்தா,ரெண்டு நாள் இருந்து இங்க சாப்படறதுக்கு நான் பணம் தருவேன். சரியா" என்றான் கிருஷ்ணன். இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த ராஜேஸ்வரி" விதண்டாவாதம் வேண்டாம். அவன் சுநந்தாவுக்கு புஸ்தகம் வாங்கிக் கொடுத்தல ஒரு தப்பும் இல்லை. அதேபோல,கிருஷ்ணா,நீ இதை உங்க ஆத்தை போல நெனைச்சுக்கணும்" என்றாள். பின்பு அனைவரும் சாப்பிட உட்கார சம்யுக்தா பரிமாறினாள். "திருச்சில  சாப்பாடு எல்லாம் எப்படி இருந்தது ."என்றான்  சுப்ரமணியன்  ராஜேஸ்வரியிடம்."எல்லாம் நம்பாம்  மாதிரி தான். முத நாள்  கொஞ்சம் சாம்பார் காரமா இருக்குன்னு சொன்னதுக்கப்புறம் காரத்தை கொஞ்சம்  கொறச்சிண்டுட்டா உமா" என்றாள் ராஜேஸ்வரி. சாப்பிட்டு எழுந்ததும்  ராமகிருஷ்ணன்,உமா வாங்கி கொடுத்த சுங்குடி புடவையை பெருமையுடன் எல்லோருக்கும் காண்பித்தாள் ராஜேஸ்வரி.உண்ட களைப்பு தீர அனைவரும் சிறிது நேரம் உறங்கினார்கள். மாலை 3 மணிக்கு எழுந்த சுப்பிரமணியத்துக்கு வெங்காய பஜ்ஜி வாசனை மூக்கை துளைத்தது .ஹாலில் வந்த சுப்பிரமணியன் "சம்யுக்தா.காபி தரயா" என்றான்."முதல்ல காபி சாப்பிடுறீங்களா . இல்ல பஜ்ஜி சாப்பிடுறீங்களா" என்றாள் சம்யுக்தா.  இதற்குள் ராஜேஸ்வரி, சுநந்தா மற்றும் கிருஷ்ணன் எல்லோரும் ஹாலுக்கு வந்தார்கள். எல்லோருக்கும்  பிளேட்களில்  பஜ்ஜியையும், தொட்டுக்கொள்ள வெங்காய சட்னியையும் கொடுத்தாள்  சம்யுக்தா. "பஜ்ஜி ரொம்ப டேஸ்டா இருக்கு மாமி" என்ற கிருஷ்ணனிடம்"தோ பார்.வேணும்னா இன்னும் கொஞ்சம் கேட்டு வாங்கிக்கோ. பூடகமா பேசாதே" என்றாள் ராஜேஸ்வரி சிரித்துக்கொண்டே.

பின் அனைவரும் காபி  சாப்பிட்டார்கள். "ராத்திரிக்கு என்ன டிபன் பண்ணட்டும்" என்று கேட்டாள் சம்யுக்தா.

அதைக் கேட்ட கிருஷ்ணன்" பஜ்ஜி, காபி சாப்பிட்டதே வயிறு ரொம்பீட்த்து.ராத்திரி நீங்க ஒண்ணுமே பண்ணலேன்னா நான் சந்தோஷப்படுவேன்" என்றான் ."அது எப்படிப்பா வெறும் வயித்தோடு போவே. ரெண்டு தோசை சாப்டூட்டு போ" என்றாள்  சம்யுக்தா. இரவு 7 மணிக்கு தோசையை சாப்பிட்டு விட்டு எல்லோரிடம் சொல்லிக் கொண்டு கிருஷ்ணன் அடையாறில் உள்ள தன் இடத்திற்கு புறப்பட்டான். போகும்போது "போயிட்டு வரட்டுமா" என்று கூறிய கிருஷ்ணனை பார்த்து சுநந்தா" எங்க ப்ரொபசரை பார்த்து என் ப்ராஜெக்ட் விஷயமா பேச  நீ  எங்க கேம்பஸுக்கு எப்ப வருவ"என்றாள்.

செவ்வாய், புதன்கிழமையில் வர ட்ரை பண்றன். உங்க ப்ரொபசரை பார்க்க சரியான டைம் எதுன்னு   கேட்டு நீ நேக்கு போன் பண்ணு . அப்புறம் பிக்ஸ் பண்ணிக்கலாம்" என்றான் கிருஷ்ணன்.

அவன் சென்ற பிறகு மகா பெரியவரின் படத்திற்கு அருகில் சென்ற  சுப்பிரமணியன் மனதிற்குள் "பெரியவா. உங்க கடாக்ஷத்தால எல்லாம் நான் நினைச்ச படியே போறதுன்னு நெனைக்கிறேன். மேற்கொண்டு எல்லாம் நல்லபடியா நடக்க நீங்கதான் அருளணும்" என்று வேண்டிக் கொண்டான்.

No comments:

Post a Comment