அப்பா பேசறார்-1
அப்போதுதான் கிளினிக்கிலிருந்து ரகு வந்திருந்தான். ஒரு வாரமாக இரவில் படுக்க கிளினிக்கிக்கு போய் விடுகிறான்.ரகுவின் அப்பா சுதர்சனத்திற்கு ஒரு வாரமாக உடல்நிலை சரியில்லாததால் பிரைவேட் கிளினிக்கில் சேர்த்து இருந்தார்கள் .நெஞ்சில் கபம் கட்டிக் கொண்டிருந்தது. சாப்பாடு சரியா இறங்கவில்லை .மூச்சு விடுவதில் சிரமம்.மருந்து, மாத்திரை,இன்ஜெக்ஷன் கொடுத்தும் அதிக பயன் ஏற்படவில்லை. சுதர்சனத்திற்கு இந்த தை பிறந்தால் 83 வயது முடிந்துவிடும். சென்ட்ரல் கவர்மெண்டில் ஆபீசராயிருந்து ரிட்டயர் ஆனவர்.கணிசமான பென்ஷன் வருகிறது.ரகுக்கு அடுத்தது தம்பி கோபாலன்.பெங்களூரில் சாப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்கிறான். ரகுவுக்கும், கோபாலனுக்கும் கல்யாணம் ஆகி குழந்தைகள் இருக்கிறார்கள்.
"ஏன்டா .என்ன சொல்றா டாக்டர்" என்று கவலையுடன் கேட்டாள் வைதேகி.வைதேகியும்,சுதர்சனமும் மனமொத்த தம்பதிகள்.கல்யாணம் முடிஞ்சு அறுபத்திரண்டு வருஷம் ஆகிறது. "என்னம்மா சொல்றது.டாக்டர் என்ன மருந்து கொடுத்தாலும் கேட்க மாட்டேங்குதுன்றார்.
ரெண்டு நாள் போனதக்கப்புறம்தான் நெலயா ஏதாவது சொல்லமுடியும்கிறார்"
என்றான். "பெருமாளே. என்னை ஏன்டாப்பா இப்படி சோதிக்கறே" என்ற வைதேகி தாலிக்கொடியை கண்களில் ஒற்றிக்கொண்டு மானசீகமாக தாயாரிடம் மாங்கல்ய பிச்சை கேட்டாள். உள்ளே இருந்து வந்த ரகுவின் மனைவி சாருமதி"காபி குடிச்சூட்டு வந்தேள்னா குளிக்கலாம். வென்னீர் ரெடியா இருக்கு.டவலும் பாத்ரூமுல வெச்சிருக்கேன்.நேக்கும் டயத்துல ஆபிசுக்கு போணம்.நேத்து பத்து நிமிஷம் லேட்டானதுக்கு அந்த மேனேஜர் நாக்கை பிடிங்கிக்கிறமாதிரி கேக்கறான்" என்றாள். "சரி தோ வரேன்.ராகுலுக்கு எப்படி இருக்கு " என்றான் ரகு.
ரகு,சாருமதியின் ஐந்து வயது பையன் ராகுல்.இரண்டு நாட்களாக ஜுரம்.பள்ளிக்குச் செல்லவில்லை. பெட்ரூமில் தூங்கிக் கொண்டிருக்கிறான்.
" ராத்திரி பூரா குழந்தை லொக், லொக்குன்னு இருமிண்டிருந்தான்.கொஞ்சம் கூட கண்ண கொட்டல.வெடிகாலம் தூங்க ஆரம்பிச்சிருக்கான்"என்றாள் சாருமதி. அம்மா கையால் கொடுத்த காபியை குடித்த பின்பு குளித்துவிட்டு வந்து
திருமண் இட்டுக்கொண்டு,
பூஜை அறையில் சாமிக்கு கும்பிடு போட்டான் ரகு. "பெருமாளே .அப்பாவுக்கு நல்லபடியா சரியா போணம்.பழைய படி நண்ணா நடமாடணம்" என்று மனப்பூர்வமாக வேண்டிக் கொண்டான்.கொஞ்ச நேரம் கழிந்ததும் சாப்பாட்டுக்கு தட்டை எடுத்து வைத்தாள் சாருமதி." இல்ல சாரு. நேக்கு சாப்பிட பிடிக்கல. கையில சாதம் கட்டி கொடுத்துடு.நான் மத்யானம் சீக்கிரமே சாப்ட்டூட்றேன்" என்றான். அதற்குள் வைதேகி "என்னடா இப்படி பண்ற. எங்களுக்கும் அப்பா உடம்பு சரியில்லாதது கஷ்டமாதான் இருக்கு.அதுக்கோசரம் சாப்டாம போனா உடம்பு என்னதுக்கு ஆகும்" என்று அங்கலாய்த்தாள்.
" இல்லம்மா. இன்னிக்கு நேக்கு என்னமோ சாப்ட பிடிக்கல. நாளைலேர்ந்து ஒழுங்கா சாப்டறேன்"என்ற ரகு பேண்டை மாட்டிக் கொண்டு கையில் லஞ்ச் பாக்ஸ் எடுத்துக்கொண்டு கார் பார்க்கிலிருந்த ஸ்கூட்டரை ஸ்டாண்டிலிருந்து விடுவிக்கும்போது அந்த போன் வந்தது. கிளினிக் நம்பராக இருக்கவே அதை இம்மீடியட்டாக அட்டெண்ட் பண்ணினான் ரகு.
" ரகு சார். நாங்க கிளினிக்கேலேர்ந்து பேசறோம். உங்க அப்பா அஞ்சு நிமிஷம் முன்னாடி தவறீட்டார்" என்றார் மறு முனையிலிருந்தவர்.
"என்ன சொல்றீங்க நீங்க" என்றான் ரகு."ஆமா சார். நீங்க காலையிலிருந்த வரைக்கும் நல்லாதான் இருந்தார்.அப்புறம் அவர காபி கொடுக்க தட்டி எழுப்பி இருக்காங்க.அப்ப தல சாஞ்சு போச்சு" என்றார் போனில் இருந்தவர்.செய்தியை கேட்டவுடன் ரகுவிற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை . தன்னிச்சையாக ஸ்கூட்டர் ஸ்டாண்டை போட்டுவிட்டு திக்பிரமை பிடித்த மாதிரி நின்று கொண்டிருந்தான். உள்ளே இருந்து வந்த சாரு அவனைப் பார்த்து
" என்ன இப்படி நிக்கறேள்" என்றாள். அதற்காக பதில் ஒன்றும் கிடைக்காததால் பயந்து போன சாருமதி, மாமியாரைப் பார்த்து "பாருங்கோம்மா. இவர் ஒரு மாதிரி நிக்கறார் "என்று கத்தினாள். சமையல் அறையிலிருந்து ஓடி வந்து வைதேகி
" என்னடா இது பேயரஞ்ச மாதிரி நிக்கிற" என்றாள். "அம்மா.அம்மா"என்றான் ரகு. மேற்கொண்டு பேச்சு வரவில்லை. வைதேகி அவனைப் பிடித்து உலுக்கி "என்ன ஆச்சு .சொல்லுடா" என்றாள். "அப்பா நம்மளை எல்லாம் மோசம் பண்ணிட்டாரும்மா அப்பா" என்றான் அவன்.அவன் தோளிலிருந்து கையை எடுத்த வைதேகி தலையில் அடித்துக் கொண்டு "தெய்வமே உன்னை மலையா நம்பிண்டிருந்தேனே. என்னை இப்படி மோசம் பண்ணீட்டியே" என்ற கதறியவள், உள்ளே வந்து சோபாவில் அமர்ந்தாள். ரெண்டு நிமிஷம் என்ன செய்வது என்று யாருக்கும் தெரியவில்லை. சாருமதி தான் சட்டென்று சுதாரிதித்துக் கொண்டாள். அவனைப் பார்த்து" நீங்க ஆஸ்பத்திரிக்கு போயிட்டு பாடியை ஆத்துக்கு கொண்டுவர வழியை பாருங்க . நான் சாஸ்திரிகளுக்கு சொல்லிடறேன். உங்க தம்பிக்கும், வேற வேண்டப்பட்ட மனுஷாளுக்கும் போன்பண்ணீட்றேன்" என்றாள். ஒரு மூலையில் இடிந்து போய் உட்கார்ந்திருந்த வைதேகியின் கண்ணிலிருந்து தாரைதாரையாக நீர் வழிந்து கொண்டிருந்தது.
சாருமதி ஓலாவை புக் பண்ண ,ரகு நடைப்பிணமாக ஆட்டோவில் ஏறினான். ஹாஸ்பிடல் போய் கட்ட வேண்டிய பணத்தை கட்டி விட்டு தந்தையின் உடலை ஆம்புலன்சில் வீட்டுக்கு எடுத்து வந்தான் ரகு.கிளினிக் ஸ்டாப்,ஆம்புலன்ஸ் ட்ரைவர் உதவியுடன் ஆம்புலன்ஸிலி ருந்து சுதர்சனத்தின் உடல் கீழே இறக்கப்பட்டு ஹாலில் வைக்கப்பட்டது. அதற்குள் சாருமதி ஃப்ரீசர் பாக்ஸ் அரேஞ்ச் செய்து இருந்ததால், ஃப்ரீசர் பாக்ஸில் சுதர்சன் படுத்துக்கொண்டார்.
"லேசா குளிர்னா கூட ஆகாதேடா உங்க அப்பாக்கு.இப்போ பப்ரீசர்ல படுத்திண்டிருக்காரே" என்று கதறினாள் வைதேகி.(தொடரும்)
No comments:
Post a Comment