#Easychair_52
அத்யாயம் : 52 .. ஈஸி சேர்
அன்று புதன் கிழமை காலை.
வைத்யநாத ஐயர் குழந்தைகளுக்கு சூர்ய நமஸ்காரம் கற்றுக் கொடுத்து விட்டு மஹாலக்ஷ்மி அஷ்டோத்திர ஸ்தோத்திரத்தை கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார். இவர் ஒரு முறை ஒரு வார்த்தையை சொல்ல குழந்தைகள் மூன்று முறை சொல்லிக் கொண்டிருந்தார்கள். இடையிடையே அர்த்தங்களும் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த காரில் சுப்புணியும் சிவதாணுப் பிள்ளையும் வந்திறங்கினார்கள்.
கட்டட வேலைகளை பார்த்து விட்டு இவர் குழந்தைகளுக்கு பாடம் எடுப்பதை சற்று பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
குழந்தைகளை அதுவரை நடந்த பாடத்தை படிக்கச் சொல்லிவிட்டு சுப்பிணியிடம் சென்றார். சிவதாணுப்பிள்ளை கைகூப்பி வணங்கினார். இவருக்கும் ஆசி வணங்கினார்.
மாமா, கட்டட வேலைல தளம் போடப் போரோம் வர ஞாயிறு அன்னிக்கு. அதனால சனிக்கிழமையும் ஞாயித்துக் கிழமையும் குழந்தைகளை காஞ்சீபுரம் அழச்சுண்டு போகலாம்னு நெனச்சிண்டு இருக்கோம் மாமா. நீங்களும் அவாளோட கூட போரேளா?
இல்ல சுப்புணி. குழந்தைகள் போயிட்டு வரட்டும். நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கறேன். சனிக்கிழமை கட்டட வேலை உண்டா?
இல்லை மாமா, அன்னிக்கு யாரும் வர மாட்டா. அதுக்கு பதிலா தான் ஞாயிற்றுக் கிழமை வேலை வெச்சிருக்கோம்.
அப்புறம் சுப்புணி. சின்னக் குழந்தைகள் மூணு பேர் பூணூல் போடாம இருக்கா. ஒரு சமஷ்டி உபநயனம் ஏற்பாடு செஞ்சா தேவலை.
அதுக்கென்ன மாமா, செஞ்சுட்டா போறது. அத்தை அனுக்ரஹத்தில எல்லாம் நல்ல படியா நடக்கும். அவன் அத்தை என்றது பர்வதத்தை.
ஒன் காதுல போட்டாலே அது நடந்த மாதிரி தானே. ஆத்துல எல்லாரும் சௌரியம் தானே.
எல்லாரும் நன்னா இருக்கா மாமா. உங்கள பத்திதான் அம்மா கேட்டுண்டே இருக்கா. மறக்காம அடிக்கடி பார்த்துண்டே இருன்னு என்ன சொல்லிண்டே இருப்பா மாமா.
ஒங்க குடும்பத்துக்கு நான் எவ்வளவோ கடமை பட்டிருக்கிறேன். பாரு இருந்திருந்தா கொஞ்சத்துல கொஞ்சமாவது ஒங்கம்மாவுக்கு ஆறுதலா இருந்திருக்கும். இந்த கடனெல்லாம் என்னால இந்த ஜன்மாவில எப்படி தீர்க்க முடியும் தனியா?
பார்த்தேளா பார்த்தேளா. இதுக்குதான் இங்க நான் வரதுக்கே யோசிக்க வேண்டிருக்கு. ஒருத்தொருக்கொருத்தர் உபகாரமா இருக்கறதுக்கு விலையே கிடையாது மாமா. அதை தீர்க்கவும் எந்த ஜன்மாவிலும் முடியாது மாமா. நான் பொறந்த போது அம்மா கிட்ட கூட போக முடியாம இருந்ததாமே, அம்மா அடிக்கடி சொல்லிண்டிருப்பா. அப்ப அத்தை தானே என்ன பார்த்துண்டா. சின்னக் குழந்தைல செஞ்ச விஷமங்கள்லாம் நிறைய ஞாபகம் இருக்கறதில்ல. ஆனா தாத்தா வயத்துல தாளம் போட்டது இன்னும் ஞாபகம் இருக்கு. இன்னும் சொல்லப் போனா அதுதான் நான் மிருதங்கம் கத்துக்க ஆர்வத்த கொடுத்தது.
இருவரும் சிரித்தார்கள். சிவதாணுப் பிள்ளை ரசித்துக் கொண்டிருந்தார்.
கிளம்பலாமா சுப்ரமணியன்.
சிவதாணு பிள்ளை ஞாபகப் படுத்திய பின்புதான் நிறைய நேரம் வைத்யநாத ஐயருடன் பேசிக் கொண்டிருந்தது தெரிந்தது.
வரேன் மாமா. உடம்ப பார்த்துக்கோங்கோ.
விடை பெற்றான். அவருக்கு மீண்டும் பாடத்தை தொடர சிறிது நேரம் பிடித்தது. அத்தனை நினைவலைகள் ஒருவரை நொடிப் பொழுதில் ரீங்காரமிடும்போது யாருக்கு தான் அதிலிருந்து அவ்வளவு எளிதில் மீள முடியும்.
தொடரும்....
No comments:
Post a Comment