#Easychair_55
அத்யாயம் : 55 .. ஈஸி சேர்
வழியனுப்பி வைத்த பூவனூர் பர்வதத்தை வரவேற்கவும் காத்திருந்தது பாலத்தடியில். அத்தை ஊருக்கு வருகிறாள் என்ற ஒரு வார்த்தை, பூவனூரையே மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது.
வைத்தா, விசு வாத்யார், நாராயணிக்கு கிடைக்காத கௌரவம் பர்வதத்தின் மூலம் அந்த குடும்பத்திற்கு கிடைத்தது.
மூன்று நான்கு வருடங்களுக்கு பிறகு வருவதால் அகரஹாரத்து குடும்பங்கள் தேக்கி வைத்திருந்த ஊர் விஷயங்களை கொட்டித் தீர்த்தன. இறங்கியதிலிருந்தே பரஸ்பரம்.
விசு வாத்யாரும் நடராஜ ஐயரும் மூட்டை முடிச்சுகளோடு வில் வண்டியில் முன்னே செல்ல, மற்றவர்கள் சோக பரிமாற்றங்களிலும் சந்தோஷ உணர்வுகளிலும் மெய் சிலிர்த்து நடந்து வந்தார்கள்.
விசு வாத்யார் நேராக தன் வீட்டுக்கு சென்றார். அந்த வீட்டில் தற்போது ஜெயராம குருக்களும், அவர் மனைவி தையல் நாயகியும் குடி அமர்த்தப் பட்டிருந்தார்கள். வாடகை என்று எதுவும் விசு வாத்யார் இதுகாறும் வாங்கியது இல்லை. நீடாமங்கலத்திலிர்ந்து இங்கு இடம் பெயர்ந்தவர்கள். அவர்களுக்கு ஊர்மக்கள் இந்த குடும்பத்தின் மீது வைத்துள்ள பற்றை எண்ணி வியந்துதான் போனார்கள்.
சற்று ஓய்வு, குளியல், சந்தியாவந்தனம், சாப்பாடு முடிந்து, வைத்தா அப்பாவை அழைத்துக் கொண்டு கோபாலன் வீட்டுக்கு சென்று பத்திரப் பதிவு விஷயமாக பேச சென்றனர்.
இந்த நிலம் விற்க துணையாக இருந்த தங்கையனும் வந்தான். தங்கையனை பற்றி சொல்வதென்றால் சொல்லிக் கொண்டே போகலாம். ராயப்பன் சாவடியிலிருந்து நீடாமங்கலம் வரையில் உள்ள விவசாய நிலங்களை வாங்குவதற்கும் விற்பதற்கும் இவனை அணுகினால் போதும். இவனின் இனிமையான பேச்சால் எல்லோருக்கும் பிடிக்கும் இவனை.
ஐயா, பார்ட்டிகிட்ட பேசிட்டேன். நாளைக்கே பணத்தோட நீடாமங்கலம் சப் ரிஜிஸ்டர் ஆபீஸுக்கு வந்துடுவாங்க. பத்திரமெல்லாம் கூட பட்டாமணியார் சொன்னபடி தயார் பண்ணி வெச்சாச்சு. கமிஷன கூட பிறவு பார்த்துக்கலாம் ஐயா.
பிறகு எல்லோரும் பட்டாமணியார் வீட்டுக்கு சென்று பத்திர விஷயங்களை உறுதிப் படுத்தி கொண்டார்கள்.
இதற்கிடையில் பர்வதத்தை ஒவ்வொருவரும் அவரவர் வீட்டிற்கு அழைத்து அகமகிழ்ந்தனர்.
எல்லோரும் மாலை சாமுண்டி கோவிலுக்கு செல்ல திட்டமிட்டனர்.
மாலை நான்கு மணி இருக்கும். என்ன ஆச்சர்யம், எதேச்சையாக தாத்தியை அழைத்துக் கொண்டு அவன் அப்பா ராமச்சந்திரன் மன்னார்குடியிலிருந்து வந்தார். வைத்தா குடும்பத்தினர் வந்ததை அறிந்து ஓட்டமும் நடையுமாக வந்தான் பர்வதத்தை பார்க்க.
தாத்திக்கு முதலில் தயக்கம். செல்லலலலம் என்று வழக்கம் போல பர்வதம் கூப்பிட அவ்வளவுதான், ஒரே தாவல், சிரிப்பு, வழக்கம்போல வாயிலிருந்து எச்சல். என்னென்னமோ பேச ஆசைப் படுகிறான். தையல் நாயகி மாமிக்கு ஒரே ஆச்சர்யம். என்ன பர்வதம், ஏதோ அம்மாவைப் பார்த்து குழந்தை தாவறது போல தாவறதே.
அந்த மாமிக்கு தெரியுமா கடந்த கால அன்பு பரிமாற்றங்கள்.
எல்லோரும் கோவிலுக்கு சென்றனர். தாத்தியின் அப்பா கோவில் தரிசனம் முடிந்து அங்கிருந்து பாலத்தடி சென்றான். தாத்திக்கு மீண்டும் ஏக்கம். அவன் அழ அழத்தான் ராமு அவனை அழைத்து சென்றான்.
மறுநாள் பத்திரப் பதிவு திட்டமிட்டபடி நடந்தது. மீதி பணம் 4000 ரூபாயை எண்ணி தங்கையன் கொடுத்தான்.
உன் கமிஷன் எவ்வளவப்பா? என்று கேட்க, தங்கையன் கமிஷனை மறுத்தான்.
ஐயா, எங்க வூட்டம்மா காசு வாங்க கூடாதுன்னு என்னுட்ட சொல்லிடுச்சு. சின்னம்மா இந்த ஊருக்கு செஞ்ச உபகாரத்துக்கு நான் ஒங்ககிட்டேந்து கமிஷன் வாங்க மாட்டேய்யா.
ரிஜிஷ்ட்ரேஷன் முடிந்து பூவனூர் திரும்ப மாலை மூன்றாகி விட்டது.
ஊர் வந்தவுடன், வைத்தாவிடம் விசு வாத்யார், 'வைத்தா, நான் சித்த நம்ம வயலை கடைசியா பார்த்துட்டு வரேன்'.
நானும் வேணா வரட்டுமாப்பா.
வேண்டாம், என்னமோ தனியா போய் பார்த்துட்டு வரணும் போல . இந்த ஊர் கொடுத்தது எனக்கு. எனக்கு பிற்காலம் இந்த ஊருக்கே கொடுக்கணும்னு நெனச்சிண்டிருந்தேன். நம்ம கஷ்ட காலம், அதை வித்து ஆஸ்பத்திரிக்கு அழ வேண்டியிருக்கு. கொஞ்சம் அவகிட்ட தனியா போய் அழுதுட்டாவது வறேன் சித்த.
விசு வாத்யார் சென்று வருவதற்குள் கோபாலன் வீட்டில் எல்லோரும் ஆட்டம் பாட்டம். குழந்தைகளும் பெரியவர்களும் ஆடுவது, பாடுவது, கொல்லென்று சிரிப்பது என்று அக்ரஹாரமே ரெண்டு பட்டது.
கல்யாணி அம்மன் கோவிலுக்கு சென்றார்கள். எல்லோரும் அவர்களுடைய திருமண விருந்தை நினைவு கூர்ந்து ஒரே கலாட்டாக்கள்.
கோவிலை விட்டு வெளியே வரும்போது, வேக வேகமாக, ஓட்டமும் நடையுமாக தையல் நாயகி மாமி வந்தாள் இவர்களை நோக்கி.
பர்வதம், மாமா வயலுக்கு போயிட்டு வந்து நம்மாத்து ஈஸி சேரில மயக்கமா இருக்கா, வந்து பாருங்கோளேன் சீக்கிரமா.
சப்த நாடியும் அடங்கி விட்டது வைத்தாவுக்கும் பர்வதத்திற்கும்.
ஏதோ ஒரு விபரீதத்தை நோக்கி வைத்தா ஓட, பட்டாமணியாராத்தில் இருந்த நடராஜ ஐயரும் தொடர, பர்வதமும் செய்வதறியாது திகைத்து ஓடினாள்.
தொடரும்...
No comments:
Post a Comment