Saturday, April 16, 2022

ஈஸி சேர் - 57

#Easychair_57

அத்யாயம் : 57 ..  ஈஸி சேர்.

இரண்டு வருடங்கள் வேதராமன் குடும்பத்தில் உழைத்தாள்.   அதாவது, வைத்தாவுக்கு கொஞ்சம் வைதீகம் மீண்டும் சூடு பிடிக்கும் வரை.  இரு வருடங்களாக அவர்கள் தந்த ஊதியம் அவளுக்கு பேருதவியாக இருந்தது.

ஒவ்வொரு காலையும் வைத்தாவுக்கும் அப்பாவிற்கும் தேவையானவைகளை செய்து விட்டு வேதராமன் வீட்டிற்கு வருவாள்.  மதியம் வரை பத்து பாத்திரம் தேய்ப்பது, துணிகள் அலசி உணர்த்துவது, சுப்புணியோடு விளையாடுவது, அவனைக் குளிப்பாட்டுவது, விதவிதமா ட்ரெஸ் போட்டு அழகு பார்ப்பது இப்படி தனக்குத்தானே ஒரு உலகத்தை உருவாக்கி அதில் சஞ்சரித்துக் கொண்டிருந்தாள்.  அந்த குழந்தையின் ஸ்பரிஸமும் ஸ்வாசமும் அவளை மெய்மறக்க செய்து கொண்டிருந்தன.

நாளைக்கு சுமதிக்கு பிறந்தநாள் பர்வதம்.  ஏதாவது ஸ்வீட் பண்ணேன். என்ன பண்ணலாம்.

பரங்கிக்காயை பார்த்தாள்.  காசி அல்வா?

பண்ணினாள்.  சுமதியை விட சுப்புணிக்கு ரொம்ப பிடித்திருந்தது.

சாப்பிண்டு இருடா, நான் ரெண்டு துணியை உணர்த்திட்டு வரேன்.

அவன் எந்த அளவுக்கு ரசித்து சாப்பிட்டிருக்கிறான்!! உடம்பு முழுக்கன்ன சாப்பிட்டிருக்கு.  இவளை பார்த்தவுடன் நமுட்டு சிரிப்பு.  என்னடா இப்படி உடம்பு முழுக்க பிசுக்கு பண்ணிண்டிருக்கியே வறதுக்குள்ள. கிண்ணத்தை பிடுங்கினால் சிணுங்கல்.

அவன் ஒவ்வொரு லீலையையும் இரவு படுக்கப் போகும்போது வைத்தாவிடம் பகிர்வாள்.  அவனும் ரசிப்பான்.  அதைவிட இவள் ரசித்து சொல்வதில் லயிப்பான்.  சிலமுறை இருவருக்கும் அழுகை வரும்.  தங்களுக்கு குழந்தை இருந்திருந்தால், சுப்புணியுடன் .  ரெண்டு பேரும் ஒரே ஸ்கூலில் படிப்பார்கள்.  இப்படி, சுப்புணிக்கு இணையாக அவர்களுக்கு பிறக்காத ஒரு குழந்தையை வளர்த்து வந்தார்கள்.

போதாக் குறைக்கு தாத்தா வேறு.  பர்வதம், சீனா மாமாவாத்துல பூஜை.  கொஞ்சம் பக்ஷணம் கட்டிக் கொடுத்தா.  இதக் கொண்டு சுப்புணிகிட்ட கொடு.  அப்பா அவா ஏதாவது வித்யாசமா நெனக்கப் போறா?

ஞாயம்தானே.  பணக்கார குடும்பத்தின் குழந்தைக்கு உபாத்யாயம் செஞ்சுட்டு எடுத்துண்டு வந்த பக்ஷணமா?  நமக்கு கொடுத்துண்டிருக்கிற மரியாதையை நாமளே கெடுத்துக்க கூடாதில்லையோ?

இப்படியாக பதினைந்து வருடங்கள், கண் மூடித் திறப்பதற்குள்.  வைத்தாவின் வருமானம் பெருகியது.  இவளும் ஸ்ராத்த காரிய சமையல்கள், பக்ஷணங்கள், அப்பளம் கருவடாம் செய்து விற்பனை என்று வைத்தாவுக்கு உறுதுணையாக இருந்தாள்.  ஓரளவு குடும்பம் பொருளாதாரத்தில் தலை தூக்கிக் கொண்டிருந்தது.

எவ்வளவு வேலை இருந்தாலும் நேரம் கிடைக்கும் போது சுப்புணியை பார்க்க ஓடிவிடுவாள்.  அவனையும் வேதராமன் தனக்கு சமாஜ வேலை இருக்கும் போதெல்லாம் வைத்தா வீட்டுக்கு அழைத்து வருவார்.  இவன் தலையை பார்த்தாளோ இல்லையோ, காசி அல்வா தயாராகிவிடும்.  அவன் ரசித்து சாப்பிடுவதை கண் கொட்டாமல் பார்த்து கொண்டிருப்பாள்.  இப்படியாக இவள் வாழ்க்கை, ஒரு புறம் உழைப்பு, மறுபுறம் சுப்புணியால் கிடைக்கும் ஆனந்தம்.

ஸ்கூல் படிப்பு முடியும் தருவாயிலும் அத்தை மடியை விடமாட்டான்.  வைத்தா இவளை பாரு பாரு என்று கூப்பிடுவதைப் பார்த்து, நடனமாடிக் கொண்டே, 'அடி பாரு, நேத்திக்கு பாதியில் விட்ட கதையை கன்டின்யூ...சீக்கிரம், சீக்கிரம்' என்பான்.  பேர் சொல்லியா கூப்படற படுவா.  அடுப்புல கரண்டி வெச்சுருக்கேன், ரெண்டு இழு இழுத்தா சரியா போகும்.

வைத்தா மத்யஸ்தம்.  எங்க ஞாயமான தீர்ப்பு? எல்லா தீர்ப்பும் சுப்புணிக்குதான்.

ரொம்ப வருஷம் ஆச்சே பகவான் வந்து.  வந்தார், வந்து நடராஜ ஐயர் உடம்பை லேசா அசைச்சார்.  இருமல், காய்ச்சல், வாந்தி, பேதி...ஒண்ணு பாக்கியில்ல. வைத்தாதான் அட்டென்டண்ட்.  மாப்பிள்ளை அசீகை பார்க்காம செஞ்ச சிக்ஷுசைகளை நினைத்து நினைத்து பெருமிதமும் பட்டுண்டார், கண்ணுல ஜலத்தையும் உட்டார்.

பர்வதம், நான் அப்பவே சொன்னேன், நீதான் வேண்டாம்னுட்ட.  பெருங்களத்தூர் நிலத்த உன் பேரில் கிரயம் பண்ணிக்கோ.  நான் இருக்கேனோ இல்லையோ, உனக்குன்னு ஒரு வீடு கட்டிண்டு நன்னா இரு.

மறுத்தாள்.  விடவில்லை அப்பா.

கிரயம் ஆகிய சில மாதங்களிலேயே சிகிச்சை பலனின்றி நடராஜ ஐயர் உயிர் விட்டார்.  பேரிடிதான்.  முந்தைய இழப்புகளைப் போல இதுவும் ஒன்று தானே.  வைத்தா ரொம்ப ஆடி விட்டான்.  சமஸ்கிருத கல்லூரி வேலையை விட்டு வந்தவுடன் இவருடைய பரிச்சயம் மட்டும் இல்லைனா, பாரு தான் கிடைத்திருப்பாளா.

பர்வதத்தின் அப்பா காரியங்கள் முடிந்தன.  அப்பாவின் சுருக்குப் பையில் பத்தாயிரம் பணம்,கூடவே கடுதாசி.  என் சுய நினைவு அது இது என ஏதேதோ எழுதி என் மகள் பர்வதத்திற்காக

கடுதாசியை பார்த்தவுடன், பீரிட்டு வந்தது அவளுக்கு அழுகை.  இந்த முறை அதிசயமாக வைத்தா அவளை தேற்றினான்.

ஒரு தீர்மானத்திற்கு வந்தாள்.  அந்த பணத்தை வைத்து வீட்டை கட்ட ஆரம்பிப்பது என்று.  வேதராமனிடம் ஆலோசனை.  அவரே ஒப்பந்தக்காரரை நியமித்தார்.  ஒரு நானூறு சதுர அடியில் சக்திக்கேற்றவாறு.

வீடு கட்டும் போது தன் முழு பல உழைப்பையும் கொட்டினாள்.

க்ருஹப்ரவேசம் போது அப்படி ஒரு பெருமிதம்.  சிறிய அளவில், குறைந்த செலவில்.

இனி ஜாகை பெருங்களத்தூர்.  புதிய மனிதர்கள், புதிய உலகம்.

தொடரும்....

(இத்துடன் பாருவின் இளமை மற்றும் இளைய முதுமை முடிவுக்கு வருகிறது.  இனி வைத்யநாத ஐயருடன் கதை முடியும் வரை தொடருவோம்).

No comments:

Post a Comment