Wednesday, April 13, 2022

ஈஸி சேர் - 53

 #Easychair_53

அத்யாயம் : 53 ... ஈஸி சேர்

ஒரு புறம் பர்வதம் வாழ்க்கையில் சுப்புணி சந்தோஷங்களை கொடுத்துக் கொண்டிருந்தாலும் இன்னொரு புறம் சில சம்பவங்கள் அவள் நிம்மதியை கெடுத்துக் கொண்டிருந்தன.

முதலில் நாராயணி மரணம்.  முற்றத்தில் முதல்படியில் காலை வைப்பதாக நினைத்து அடுத்த படியில் காலை வைத்து கீழே விழுந்து தலையில் அடிபட்டு ஆஸ்பத்திரி அது இதுன்னு என்னென்னமோ ஆகி, கடைசியில் பணமும் மனமும் கரைந்ததுதான் மிச்சம்.

நாராயணியை இழந்தது அவளுக்கு சொந்த தாயை இழந்தது போல இருந்தது.  இரண்டு மாதங்கள் படுத்த படுக்கையாய் ஆஸ்பத்திரியில் இருந்தாள் நாராயணி.  பர்வதத்தின் சிக்ஷுஸையில் தினமும் லயித்து கண்ணீரை மட்டும் விட்டுக் கொண்டிருந்தாள்.

பர்ர்வதம், எனக்கென்னவோ நான் பொழைக்க மாட்டேன்னு தோணறது.  என்னை சீக்கிரம் கூட்டுண்டான்னா, உனக்கு செலவாவது மிச்சமா இருக்கும்.  எப்படியெல்லாம் கஷ்டப்படற இந்த குடும்பத்துக்காக.

அடுத்த ஜன்மால நீதான் எனக்கு பொண்ணு, நீ வேணா பாரேன்.

இந்த ஜன்மாவையே நம்மால் தீர்மானிக்க முடியல.  அடுத்த ஜன்மாவை நாம் எப்படி சுலபமாக தீர்மானிக்கறோம்?

எல்லாம் இந்த ஜன்மாவில் அன்பு படுத்தற பாடு இருக்கே, நம்மளே ஒரு லிஸ்ட் போட்டு பகவான் கையில கொடுத்துடறோம்.  அடுத்த ஜன்மாவில்  இவா இருக்கணும், அவா இருக்கணும். இவா கூடாது, அவா கூடாது.  நான் பணம் காசோட பொறக்கணும்,  நான் உன்னையே நெனச்சிண்டு இருக்கணும்.  எத்தனை மனுக்களை பகவானிடம் கொடுக்க தயாரா வைத்துக் கொண்டிருக்கிறோம்?

இதோ இந்த நாராயணி இருக்காளே, போன ஜன்மத்தில கோகிலத்த கூட இப்படித்தான் சொன்னா, இப்ப பர்வதம்னு பேரை வெச்சுண்டு இப்ப சம்ரக்ஷணை பண்ணிண்டு இருக்காளோ என்னவோ?

நாள் ஆக ஆக, நாராயணியின் உடல்நிலை மோசமடைந்தது.  வைத்தாவின் சேமிப்பும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வந்தது.

இதோ கிளம்பிவிட்டாள் நாராயணி்.  இனி வைத்தா பர்வதத்திற்கு புள்ள இல்லையேங்கர கவலை இல்லை, ஆத்துக்காரருக்கு பர்வதம் காப்பி கொடுத்தாளோங்கற விஜாரமெல்லாம் இல்லை.   வைத்தா வெகுளி ஆச்சே, அவன் எப்படி பெரிய ஆளா வருவான் என்கிற யோசனை இல்லை.  ஒரு பெரிய மூச்சு, எல்லாத்தையும் இவ கிட்டேந்து எடுத்துட்டான்.  அட அட, இவளோட அடுத்த ஜன்மா அப்ளிகேஷன்ஸ் கூட எடுத்துண்டு போக முடியல.

உசுரு போனா அதோட போச்சா இங்க இருக்கற சொந்தங்களுக்கு.  இங்க தான் எல் ஷேப்பில உட்கார்ந்திருப்பா, சாஞ்சு சாஞ்சு நடந்து வருவா சமையலுக்கு உதவ, சாயரட்சை ஆனா உட்காரு பர்வதம், தலை பின்னி விடறேன்... வேற ஆஸ்பத்திரி அழச்சுண்டு போயிருந்தா பொழைச்சிருப்பாளோ.

நம்ம ஆத்தாமைக்கு கேட்கவா வேணும்?  மறக்கலாம்னு நெனச்சா கூட மாசா மாசம் தான் மாசியம், சோதகம்பம்னு அமக்களப் படறது.  பித்தள பாத்திரங்கள், பஞ்ச பாத்ர உத்தரணி, சின்ன கிண்ணங்கள், பெரிய கிண்ணங்கள்னு தேச்சு ரெடி பண்ணின்றுக்கும் போது ஞாபகம் வந்துடறது, மனம் பாரமாயிடறது, அழுகையும் வந்துடறது.  வயசானவளா கூட நெனைக்க முடியலையே.  தெம்பா தானே இருந்தா?  சித்த அந்த பார்த்துக்கோங்கோன்னு சொல்லிட்டு வெளிய இப்ப போக முடியலையே.  இவாளுக்காவது அவள் பார்க்கணும், இவாள பார்க்கணும்னு சொல்லிண்டு கிளம்பிடறா. பொம்மனாட்டிகளுக்கு அப்படி முடியறதா?  வீடேதான் ப்ரதானம்.

ஒரு வழியாக நாராயணியின் வருஷாப்திகம் முடிந்தது.  ஒரு வருடம் வருமானம் வேற இல்லை.  வேதராமன் கிட்ட சொன்னா உடனே கொடுத்துடுவார் எவ்வளவு ஙேணாலும்.  ஆனா நன்னாவா இருக்கும்.  வைத்தாவோ பிடிவாதமா வருஷாப்திகம் முடிஞ்சுதான் வைதீகம் போவேன்னு சொல்லிட்டார்.

அப்பாதான் தன் பொண்ணு கஷ்டப் படறாளேன்னு கையில் கிடச்சத கொடுத்து ஒத்தாசை பண்ணின்டு இருக்கார்.

விசு வாத்யாரோ ஏதோ நடமாடிண்டு பொழுதை போக்கிண்டிருக்கார்.  ரெண்டு தடவை பூவனூர் சென்று குத்தகைக்கு விட்டிருந்த நிலத்தை விற்கலாம்னு போனா,, பேரம் படியலைனு வந்துட்டார்.

ஏதோ, அக்கம் பக்கத்துக் காராளுக்கு அப்பளம், பக்ஷணம் பாடி பண்ணிக் கொடுத்து தன் பங்கிற்கு சமாளித்துக் கொண்டிருந்தால் பர்வதம்.

நம்ம வில்லன் பகவானுக்குத்தான் இது பிடிக்காதே.  என்ன கஷ்டம் கொடுத்தாலும் எப்படியோ சமாளிச்சு நிக்கறதே.  இன்னும் கொஞ்சம் கஷ்ட லோடை ஏத்துவோமா, தீர்மானித்து விட்டான்.

மனசு ஆத்தாமைக்காம சித்த நடந்துட்டு வரேன்னு காலங்கார்த்தால மார்கழி குளிர்ல நடந்துட்டு வருவார் விசு வாத்யார்.  ஆச்சு தை மாசம் ஆஸ்பத்திரி.  மார் முழுக்க சளி.  மூச்சடைப்பு, எல்லா சிரமங்களும்.  கூடவே கால் வீக்கம்.

ஒரு மாசம் மருந்தும் மாத்திரையோட ஆத்துக்கும் ஆஸ்பத்திரிக்கும் நடையோ நடை.  தைரியமானவள் தான்.  மனம் வியாகூலத்திலேயே இருந்தா சோர்வு கொடுக்காம இருக்குமா?  செலவுகள் கொடுக்கற அழுத்தம் வேற.  

பாவம் அவள் என்னதான் செய்வாள்?

தொடரும்.....

No comments:

Post a Comment