ஆந்திரா பப்பு
முதலில் 1 கப் அளவு துவரம் பருப்பை எடுத்து தண்ணீரில் கழுவி, தண்ணீரை நன்றாக வடித்து பருப்பை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு 10 மிளகாய்களை எடுத்து சிறு சிறு துண்டுகளாக கிள்ளி எடுத்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.
அடுத்து அடுப்பில் ஒரு குக்கரை வைத்துக் கொள்ள வேண்டும். குக்கரில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி தண்ணீர் வடித்து வைத்திருக்கும் துவரம் பருப்பை குக்கரில் போட்டு, பொன்னிறமாக சிவக்கும் வரை வறுக்க வேண்டும். பருப்பு முக்கால் பாகம் வறுபட்டவுடன் கிள்ளி வைத்திருக்கும் வரமிளகாய் – 10, வரமல்லி – 1 ஸ்பூன், சீரகம் – 1 ஸ்பூன், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 1, பொடியாக நறுக்கிய தக்காளி பழம் – 1, சிறிய எலுமிச்சை பழம் அளவு – புளி, இந்த பொருட்களையும் பருப்போடு சேர்த்து இரண்டு நிமிடம் போல மீண்டும் வறுக்க வேண்டும். அதன் பின்பு 1 கப் அளவு துவரம் பருப்புக்கு, 3 கப் அளவு தண்ணீரை ஊற்றி, மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன் சேர்த்து நன்றாக கலந்து விட்டு குக்கரை மூடி 3 அல்லது 4 விசில் விட்டு பருப்பை வேகவைத்து எடுத்துக்கொள்ளுங்கள்
பருப்பு வெந்து குக்கரில் பிரஷர் அடங்கியதும் குக்கரைத் திறந்து இதை ஒரு மண் சட்டியில் ஊற்றி நன்றாக மசிய கடைய வேண்டும். காரணம் இதில் நாம் வரமிளகாய் சேர்த்து இருக்கின்றோம். வரமிளகாய் அனைத்தும் அறைபட்டால் தான் சுவையாக இருக்கும். உங்களால் பருப்பு வெந்த பின்பு மிளகாயைக் கடைய முடியவில்லை என்றால் மிளகாய்களை மட்டும் தனியாக எடுத்து மிக்ஸியில் போட்டு அரைத்து இந்த பருப்போடு ஊற்றிக் கொள்ளலாம். அது நம்முடைய விருப்பம் தான்.
இப்போது நமக்கு பருப்பு வெந்து தயாராக உள்ளது. இதற்கு ஒரு தாளிப்பு கொடுக்க வேண்டும். ஒரு கடாயை வைத்து 4 டேபிள் ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி, கடுகு – 1 ஸ்பூன், சீரகம் – 1 ஸ்பூன், கடலைப்பருப்பு உளுந்தம்பருப்பு – 1 ஸ்பூன், வரமிளகாய் – 1, கருவேப்பிலை – 1 கொத்து, பெருங்காயம் – 1/4 ஸ்பூன் இந்த பொருட்களை போட்டு தாளித்து குக்கரில் தயாராக இருக்கும் பருப்பை கடாயில் ஊற்றி நன்றாக கலந்து விட்டு ஒரே ஒரு கொதி வந்தவுடன் மேலே கொத்தமல்லி தழைகளைத் தூவி அடுப்பை அணைத்து விடுங்கள். உங்களுக்கு பருப்பு ரொம்பவும் கெட்டியாக இருக்கிறது என்றால் பருப்பு வெந்த பின்பு அதில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ளலாம். அது நம்முடைய விருப்பம் தான்.
அவ்ளோ தாங்க. சுடச்சுட சாதத்தில் இந்த பருப்பை போட்டு நெய்விட்டு பிசைந்து சாப்பிட்டு பாருங்கள்.

No comments:
Post a Comment