Monday, April 18, 2022

திருநாலூர்மயானம் ஞானபரமேஸ்வரர்

159.#திருநாலூர்மயானம்

மூலவர் : ஞானபரமேஸ்வரர், பலாசவனநாதர்
  அம்மன்/தாயார் : ஞானாம்பிகை, பெரிய நாயகி
  தல விருட்சம் : பலாசு, வில்வம்
  தீர்த்தம் : ஞானதீர்த்தம், சந்திர தீர்த்தம்
  புராண பெயர் : திருமயானம், திருநாலூர் மயானம், நாத்தூர்
  ஊர் : திருமெய்ஞானம்
மாவட்டம் : தஞ்சாவூர்
  மாநிலம் : தமிழ்நாடு
  பாடியவர்கள்: திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் 

தேவாரபதிகம்

பத்துத் தலையோனைப் பாதத் தொருவிரலால் வைத்து மலையடர்த்து வாளோடு நாள் கொடுத்தான் நத்தி னொலியோவா நாலூர் மயானத்தென் அத்தனடி நினைவார்க்கு அல்லல் அடையாவே.

                                     -திருஞானசம்பந்தர்

தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை தலங்களில் இது 96வது தலம்.

திருவிழா: 

     தினமும் 3 கால பூஜை நடைபெறுகிறது. புரட்டாசி, மாசி, மார்கழி மாதங்களில் உற்சவம் நடைபெறுகிறது.  

     தல சிறப்பு: 

      இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஆபத்தம்ப முனிவர் பூசித்தது. நான்கு வேதங்களும் வழிபட்ட சிறப்பினது. இலிங்கத்தின் திருமுடியில் சில வேளைகளில் பாம்பு ஊர்வதாகக் கூறுகின்றனர்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 159 வது தேவாரத்தலம் ஆகும்.

பொது தகவல்: 

     இங்கு மூலவர் கஜப்பிரஷ்ட விமானத்தின்கீழ் அருள்பாலிக்கிறார். இது ஒரு மாடக்கோவிலாகும்.

தலபெருமை: 

     சோழர்காலத்து ஏகதளக் கற்றளியாகிய இக்கோயில் மிக்க கலையழகுடையது. சோழர் காலக் கலைப்பணியைச் சேர்ந்தது. முதல் ஆதித்தன் காலத்துத் திருப்பணியைப் பெற்றது. கருவறை சதுரமானது. சிகரம் உருண்டை வடிவுடையது. தூண்களும் போதிகைகளும் சிற்ப அழகு உடையவை.

தல வரலாறு: 

     சோழர் காலத்தில் சதுர்வேதி மங்கலமாக இருந்த ஊர், தமிழில் "நால்வேதியூர்' என்று வழங்க தொடங்கி "நாலூர்' என்று மருவி இருக்கலாம். வேதங்களில் சிறப்புற்று விளங்க இத்தலம் வந்து பூஜித்தால் சிறந்து விளங்கலாம் என்பது நம்பிக்கை. நான்கு மயானங்களில் இதுவும் ஒன்று.

மற்ற மூன்றும்

1. கச்சி மயானம், 
2. கடவூர் மயானம். 
3. காழி மயானம் என்பவை.

#

அருள்மிகு ஞானபரமேஸ்வரர் கோவில், 

தக்ஷ ஊர். இது ஒரு தேவார வைப்புத் தலம். இறைவன் பெயர் பலாசவனேஸ்வரர். நாலூர் என்ற இந்த ஊரைக் கடந்து அத்திக்கடை பாலத்திற்கு முன்னால் இடதுபுறம் பிரியும் சாலையில் சிறிது தூரம் சென்றால் நாலூர் மயானம் என்ற இத்தலம் இருக்கிறது. 

இக்காலத்தில் இவ்விடம் திருமெய்ஞானம் என்று அழைக்கப்படுகிறது. இந்த திருமெய்ஞானம் கிராமத்தில் அமைந்துள்ள ஞானபரமேஸ்வரர் திருக்கோவிலே திருநாலூர் மயானம் என்று திருஞானசம்பந்தர் பதிகம் பெற்ற பாடல் பெற்ற தலம். நான்கு வேதங்களாலும் வழிபடப்பட்ட இத்தலம் சோழர் காலத்தில் சதுர்வேதிமங்கலம் என்று வழங்கியது.

சோழர் காலத்து கட்டிடக் கலைப்பாணியில் அமைந்த இககோவில் கிழக்கு நோக்கி ஒரு முகப்பு வாயிலுடன் அமைந்துள்ளது. முகப்பு வாயிலுக்கு வெளியே நந்தி மண்டபமும், பலிபீடமும் உள்ளன. கோவிலுக்கு வெளியே ஞானதீர்த்தம் உள்ளது. வாயில் வழி உள் நுழைந்தால் வெளிப் பிரகாரம் உள்ளது. பிரகாரம் சுற்றி வரும்போது மேற்குச் சுற்றில் அமிர்தகடேஸ்வரர், சட்டநாதர், ஏகாம்பரேஸ்வரர், ஸ்ரீவீழிஅழகர் ஆகிய சிவலிங்கத் திருமேனிகள் வரிசையாக உள்ளன. அதையடுத்து நாகாராஜா, சண்டிகேஸ்வரி, புதிய தட்சிணாமூர்த்தி, ஆத்மலிங்கம் ஆகியவற்றைக் காணலாம். வள்ளி தெய்வானை சமேத முருகப் பெருமானின் சந்நிதியும் இப்பிரகாரத்தில் உள்ளது. வடக்குப் பிரகாரத்தில் கோஷ்டத்தில் விஷ்ணு துர்க்கையைக் காணலாம். நவக்கிரக சந்நிதியும் வெளிப் பிரகாரத்தில் உள்ளது.

பிரகாரச் சுற்று முடிந்து கருவறை மண்டப வாயில் வழி உள்ளே நுழைந்தால் மூலவர் கருவறையில் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஆபத்தம்ப முனிவர், நான்கு வேதங்களும் வழிபட்ட சிறப்பைப் பெற்ற தலம். இறைவன் கருவறை விமானம் உருண்டை வடிவத்திலுள்ளது. அம்பாள் தெற்கு நோக்கி தரிசனம் தருகிறாள்.

திருஞானசம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளியுள்ள இப்பதிகம் 2-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. இந்த ஊரைச் சேர்ந்தவர்கள் அடிக்கடி இத்தல இறைவனின் திருமேனி மேல் பாம்பு ஊர்வதாகக் கூறி, அதற்கு ஞானசம்பந்தரின் பதிகத்தின் முதல் பாடலில் வரும் "பாலூரும் மலைப்பாம்பும் பனிமதியும் மத்தமும் மேலூரும் செஞ்சடையான்" என்னும் இவ்வூர்த் தேவாரப் பகுதியைக் காட்டுவர்.

பதிகம்: பாலூருமலைப் -2 -46 திருஞானசம்பந்தர்

திருநாலூர்மயானம்

பண் :சீகாமரம்

பாடல் எண் : 1

பாலூரு மலைப்பாம்பும் பனிமதியு மத்தமும்
மேலூருஞ் செஞ்சடையான் வெண்ணூல்சேர் மார்பினான்
நாலூர் மயானத்து நம்பான்ற னடிநினைந்து
மாலூருஞ் சிந்தையர்பால் வந்தூரா மறுபிறப்பே

பொழிப்புரை :

பக்கத்தே ஊர்ந்து செல்லும் மலைப்பாம்பு, குளிர்ந்த மதி, ஊமத்தை மலர் ஆகியனமேலே பொருந்தப்பெற்ற செஞ்சடையினனும், வெண்மையான பூணநூல் சேர்ந்த மார்பினனும் ஆகிய நாலூர் மயானத்து இறைவன் திருவடிகளை நினைந்து மயங்கும் மனமுடையார்க்கு மறுபிறப்பு வந்து பொருந்தாது.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 2

சூடும் பிறைச்சென்னிச் சூழ்கா டிடமாக
ஆடும் பறைசங் கொலியோ டழகாக
நாடுஞ் சிறப்போவா நாலூர் மயானத்தைப்
பாடுஞ் சிறப்போர்பாற் பற்றாவாம் பாவமே.

பொழிப்புரை :

பிறை சூடிய சென்னியுடன், காடு சூழ்ந்த சுடுகாட்டில் பறை சங்கு ஒலிகளுடன் அழகாக ஆடுபவன் எழுந்தருளிய, பலராலும் நாடும் சிறப்புக்குன்றாத நாலூர் மயானத்தைப் பாடும் சிறப்புடையோரைப் பாவம் பற்றா.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 3

கல்லா னிழன்மேவிக் காமுறுசீர் நால்வர்க்கன்
றெல்லா வறனுரையும் இன்னருளால் சொல்லினான்
நல்லார் தொழுதேத்தும் நாலூர் மயானத்தைச்
சொல்லா தவரெல்லாஞ் செல்லாதார் தொன்னெறிக்கே.

பொழிப்புரை :

கல்லால மரநிழலில் எழுந்தருளியிருந்து, விரும்பி வந்த புகழ் உடையவராகிய சனகாதி நால்வர்க்கு அன்று எல்லா அறவுரைகளையும் இன்னருளால் சொன்னவனாய் எழுந்தருளிய நல்லவர் தொழுது ஏத்தும் நாலூர் மயானத்து இறைவன் புகழைச் சொல்லாதவர் சைவநெறிக்கண் செல்லாதவர் ஆவர்.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 4

கோலத்தார் கொன்றையான் கொல்புலித்தோ லாடையான்
நீலத்தார் கண்டத்தான் நெற்றியோர் கண்ணினான்
ஞாலத்தார் சென்றேத்தும் நாலூர் மயானத்தில் 
சூலத்தா னென்பார்பாற் சூழாவாந் தொல்வினையே.

பொழிப்புரை :

அழகால் நிறைந்த கொன்றைமாலையைச் சூடியவன், கொல்லும் புலியினது தோலை ஆடையாக உடுத்தவன், நீலநிறம் பொருந்திய கண்டத்தினன். நெற்றிக்கண்ணன், உலகோர் சென்று பரவிப்புகழும் நாலூர்மயானத்தில் விளங்கும் சூலத்தினன் என்பாரைத் தொல்வினை சூழா.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 5

கறையார் மணிமிடற்றான் காபாலி கட்டங்கன் 
பிறையார் வளர்சடையான் பெண்பாக னண்பாய
நறையார் பொழில்புடைசூழ் நாலூர் மயானத்தெம்
இறையானென் றேத்துவார்க் கெய்துமா மின்பமே.

பொழிப்புரை :

விடக்கறை பொருந்திய நீலமணி போன்ற மிடற்றினன். கையில் கபாலம் ஏந்தியவன். மழுஏந்தியவன். பிறை வளரும் சடைமுடியினன். தன்பால் நட்புக்கொண்ட பெண்பாகன். தேன் பொருந்திய பொழில்கள் புடையே சூழ்ந்துள்ள நாலூர் மயானத்து இறைவன் என்று அவனை ஏத்துபவர்க்கு இன்பம் வந்துறும்.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 6

கண்ணார் நுதலான் கனலா டிடமாகப்
பண்ணார் மறைபாடி ஆடும் பரஞ்சோதி
நண்ணார் புரமெய்தான் நாலூர் மயானத்தை
நண்ணா தவரெல்லாம் நண்ணாதார் நன்னெறியே.

பொழிப்புரை :

கண்பொருந்திய நுதலினனும், கனலை ஆடும் களமாகக் கொண்டவனும் பண்ணமைதியுடைய வேதங்களைப் பாடுவோனும், நடனம் ஆடும் பரஞ்சோதியும், பகைவருடைய முப்புரங்களை எய்தவனும் ஆகிய சிவபெருமான் உறையும் நாலூர் மயானத்தை நண்ணாதவர் எல்லாம் நன்னெறியைச் சாரார்.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 7

கண்பாவு வேகத்தாற் காமனைமுன் காய்ந்துகந்தான்
பெண்பாவு பாகத்தான் நாகத்தோ லாகத்தான்
நண்பார் குணத்தோர்கள் நாலூர் மயானத்தை
எண்பாவு சிந்தையார்க் கேலா விடர்தானே.

பொழிப்புரை :

நெற்றிக் கண்ணிலிருந்து பரவிய வெம்மை வேகத்தால் மன்மதனைக் காய்ந்து உகந்தவனும், மாதொருபாகனும் யானைத்தோல் போர்த்த மார்பினனும் ஆகிய சிவபெருமான் உறைவதும் நட்புக்குணம் அமைந்தோர் வாழ்வதுமான நாலூர் மயானத்தைத் தியானிக்கும் சிந்தையை உடையார்க்கு இடர் வாரா.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 8

பத்துத் தலையோனைப் பாதத் தொருவிரலால்
வைத்து மலையடர்த்து வாளோடு நாள்கொடுத்தான்
நத்தி னொலியோவா நாலூர் மயானத்தென்

அத்த னடிநினைவார்க் கல்ல லடையாவே.

பொழிப்புரை :

பத்துத்தலைகளை உடைய இராவணனைப் பாதத்து ஒரு விரலால் மலையின் கீழ் அகப்படுத்தி அடர்த்து, பின் அவனுக்கு வாளும் நாளும் கொடுத்தவனும், சங்கொலி முழங்கும் நாலூர் மயானத்தில் விளங்கும் என் தலைவனுமான சிவபெருமான் திருவடிகளை நினைவாரை அல்லல்கள் அடையா.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 9

மாலோடு நான்முகனும் நேட வளரெரியாய்
மேலோடு கீழ்காணா மேன்மையான் வேதங்கள்
நாலோடு மாறங்கம் நாலூர் மயானத்தெம்
பாலோடு நெய்யாடி பாதம் பணிவோமே.

பொழிப்புரை :

திருமாலும் நான்முகனும் தேடிமேலொடு கீழ் காணாவகையில் வளர் எரியாய் நின்ற மேன்மையாளனும் நான்கு வேதங்களையும் ஆறு அங்கங்களையும் அருளியவனும் நாலூர் மயானத்துப் பாலும் நெய்யும் ஆடி மகிழ்பவனும் ஆய எம்பெருமானின் பாதங்களைப் பணிவோம்.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 10

துன்பாய மாசார் துவராய போர்வையார்
புன்பேச்சுக் கேளாதே புண்ணியனை நண்ணுமின்கள்
நண்பாற் சிவாயவெனா நாலூர் மயானத்தே
இன்பா யிருந்தானை யேத்துவார்க் கின்பமே.

பொழிப்புரை :

துன்பமாகிய அழுக்குடையவர்களும், பழுப்பாகிய போர்வையை அணிந்தவர்களுமான சமணபௌத்தர்களின் பொருளற்ற பேச்சுக்களைக் கேளாது புண்ணியத்தின் வடிவாய் விளங்கும் பெருமானை நட்போடு `சிவாய` என்னும் மந்திரத்தைக் கூறிக் கொண்டு நண்ணுங்கள். அப்பெருமான் நாலூர் மயானத்தில் இன்ப வடிவினனாய் இருந்தருளுகின்றான். அவனை ஏத்துவார்க்கு இன்பம்  விளையும்.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 11

ஞாலம் புகழ்காழி ஞானசம் பந்தன்றான்
நாலு மறையோதும் நாலூர் மயானத்தைச்
சீலம் புகழாற் சிறந்தேத்த வல்லாருக்
கேலும் புகழ்வானத் தின்பா யிருப்பாரே.

பொழிப்புரை :

உலகம்புகழும் காழிப்பதியில் தோன்றிய ஞானசம்பந்தன், நான்மறைகளை அந்தணர் ஓதும் நாலூர் மயானத்தில் விளங்கும் பெருமானின் சீலத்தையும் புகழையும் போற்றிப்பாடிய இப்பதிகத்தைச் சிறந்தமுறையில் ஓதிவழிபட வல்லவர்க்கு உயரிய புகழ் கூடும். வான் உலகில் இன்பம் ஆர்ந்து இருத்தல் இயலும்.




No comments:

Post a Comment