Thursday, April 14, 2022

ஈஸி சேர் - 56

 #Easychair_56

அத்யாயம் : 56 ..  ஈஸி சேர்.

எல்லோரும் வந்து பார்த்தார்கள்.  தண்ணீர் தெளித்து பார்த்தார்கள்.  சில்லென இருக்கும் கைகளை தொட்டுப் பார்த்தார்கள். இனி ஒன்றும் இல்லை.  எல்லாம் முடிந்துவிட்டது.

இதற்காகத்தான் வந்தாரோ விசு வாத்யார், சொந்த ஊரிலே உயிரை விட.  பணத்தை வைத்துக் கொண்டு உடம்பை தேற்றிக் கொள்ளலாம் என நினைத்து உடலைக் கரை சேர்க்க பணத்தை பெற்றுக் கொண்டார்.

வைத்தாவுக்கு அழுகை ஓயவில்லை.  தந்தையாய், குருவாய் அவனுக்கு பலமாயிருந்தவர் போய்விட்டார்.

பட்டாமணியார் பர்வதத்தை கூப்பிட்டார்.

நம்ம ஊரிலேயே பதினோரு நாள் காரியத்த வெச்சுக்கலாம்.  வைத்தாவோட சொந்தக் காராளெல்லாம் பட்டுக்கோட்டை அது இதுன்னு இந்த ஜில்லாலையேதானே இருக்கா.  எப்படியாவது சொல்லி அனுப்புவோம்.  நீங்க எல்லாரும் வேற இங்க தானே இருக்கேள். வைத்தாவ கொஞ்சம் சமாதானப் படுத்தி ஆக வேண்டியத பாரும்மா.  உங்க அப்பாவே காரியம் எல்லாம் செஞ்சு வைக்கட்டும்.  மத்த விஷயங்கள் எல்லாத்துக்கும் ஊர் காராள வெச்சுண்டு நான் பார்த்துக்கறேன்.  கவலைப் படாதே.

நிலத்தை வித்ததுல ஏதாவது உங்களுக்குள்ள மனஸ்தாபமா?

இல்லை மாமா, எவ்வளவோ நானும் சொன்னேன்.  அம்மா போய் இவரும் ஒரு வருஷம் வேலை எதுவும் எடுத்துக்காததால பணத்துக்கு கஷ்டப் படறோம்னு நெனச்சே விக்கறதுல பிடிவாதமா இருந்தார்.

சொல்லி விட்டு விசும்பி விசும்பி அழுதாள் பர்வதம்.  நாம கொஞ்சம் நிலத்த விற்க வேண்டாம்னு இன்னும் அழுத்தமா சொல்லி இருக்கலாமோ?  ச்சே, இப்படி நம்ம கஷ்டத்தையே ப்ரதானமா நெனச்சுட்டேனே.

வைத்தாவை தேற்றினாள்.  அன்னா, அடுத்தடுத்து ஆக வேண்டியத பாருங்கோன்னா.  சொந்தக்காரா அட்ரெஸ் எல்லாத்தையும் கோபால் கிட்ட கொடுங்கோன்னா.

என்னுட்ட எல்லா அட்ரஸும் இல்லை பாரு.  இருக்கறதை தந்தான், சில ஃபோன் நம்பர்களுடன் தன் டைரியை பார்த்து.

ஃபோன் கால்கள் பறந்தன.  ஒவ்வொருவராக தொடர்பு கொண்டு அவர்கள் மூலம் கிட்டத்தட்ட எல்லா சொந்தங்களுக்கும் தகவல் கொடுக்கப் பட்டது.  ஜெயராம குருக்கள் வைதீக சாமான்களை நடராஜ ஐயருக்கு கொடுப்பதாக கூறினார்.

மறுநாள், சொந்த பந்தங்கள் வந்தார்கள்.  வெட்டியான் ஏற்பாடுகளை பட்டாமணியாரே கவனித்துக் கொண்டார்.

ஒரு சகாப்தம் கிளம்பி விட்டது.  பர்வதம் நிலை குலைந்து போனாள்.  நிலம் வித்த காசை வைத்து காரியங்களை முடிக்கலாம்.

ஆனால், இன்னொரு வருடம் வைத்தா வேலைக்கு போக முடியாதே.  ஆத்து செலவை எப்படி சமாளிப்பது.  

வேதராமன் பத்து அன்று வந்தார். அவருக்குத்தான் இந்த குடும்பத்தின். மீது சற்றும் குறையாத பற்று.

உங்களுக்கு ஆறுதல் ஏதோ சொல்லணுமேன்னு தான் சொல்ல முடியும். எதுக்கும் கவலைப். படாதீங்கோ.  என்னால் முடிந்த ஒத்தாசை செய்யறேன். 

கையிலிருந்து ஒரு ஆயிரம் ரூபாயை கொடுத்தார். தயங்கினாள் பெற்றுக் கொள்ள.

என்னிடம் இருக்கு கொடுக்கிறேன். வித்யாசமா நினைக்காதேம்மா.  காரியத்தையெல்லாம். முடிச்சிண்டு மெட்ராஸ் வரும்போது மற்றதை பேசிக்கலாம்.

கிரேக்கியம் முடிந்தவுடன் கிளம்பினார்.

பட்டாமணியார், கோபாலன் மற்றும் கமலத்திடம், 'என்னவோ நல்ல மனுஷாளையெல்லாம் பகவான் ரொம்ப சோதிக்கிறார்.  நீ்ங்கள்லாம் அவாளுக்கு பக்க பலமா இருந்து ஆறுதல் சொல்லி மெட்ராஸுக்கு அவாளை சீக்கிரம் அனுப்பி வைங்கோ'.

மெட்ராஸ் திரும்பினார்கள்.  ஒரு வருடம் எப்படி ஓட்டப் போகிறோம் என்ற கவலை பர்வதத்திற்கு.  பெண்ணாய் பிறந்து விட்டாலே சமாளிப்பிலேயே வாழ்க்கையை ஓட்ட வேண்டும் என்பது தானே நியதி.  

நடராஜ ஐயர் பர்வதத்தை கூப்பிட்டார்.

அம்மாடி, சோர்ந்து போகாதே.  எல்லாம் சமாளிச்சுடலாம்.  வேணும்னா, பெருங்களத்தூரில இருக்கற நிலத்தை வித்துடலாம்.  எனக்கு பிற்காலம் உனக்கு சேரட்டும்னு நெனச்சேன்.  எப்ப குடுத்தா என்ன?

இல்லப்பா, அதையும் வித்துட்டா உங்களுக்குனு என்ன இருக்கு.  அதான் நீங்க பக்க பலமா இருக்கேளே.  உங்களுக்கு ஆட்சேபணை இல்லைனா, உங்க ஜாகையை காலி பண்ணிட்டு ஒண்ணா இருக்கலாம்பா.  வாடகையாவது மிச்சமாகும்.  இப்பதான் சம்மந்தியோட இருக்கப் போறதில்லையே.

நானும் யோசிச்சேன் இதப் பத்தி.  மாப்பிளைகிட்ட நீயே பேசிட்டு சொல்லு. அதுபடியே செஞ்சுடலாம்.

வைத்தாவிடம் பேசினாள்.  'என்ன பாரு.  இதுக்கெல்லாம் என்கிட்ட கேட்டுண்டு. மாமா நம்மளோடையே இருந்தா அதை விட நமக்கு பலம் தானே.  நானே என் வாயால அவர்கிட்ட சொல்லிடறேன்.  யார் என்ன சொல்வாளோன்னு தயங்காதே'.

ஒரு மாதத்தில் அவர் ஜாகையை காலி செய்து விட்டு தன் பெண் வீட்டோடு வந்து விட்டார்.

ஏழைக் குடும்பங்கள் தான் சிக்கனத்திற்காக எப்படியெல்லாம் திட்டமிடுகின்றன?  நடராஜ ஐயருக்கு சற்று கௌரவ குறச்சல்தான், நாலு பேர் ஏதாவது சொல்வாளோ என்ற பயம்தான்.  இதையெல்லாம் பார்த்தா, நடக்குமா?  பொண்ணுதானே எப்போதுமே அவருக்கு லோகம்.

வேதராமன் மெட்ராஸ் வந்தவுடன் மீனாட்சியுடன் பேசினார்.

மீனு, நான் சொன்னா தப்பா நெனைக்க மாட்டியே.  பர்வதம் பாவம் டி.  இன்னும் ஒரு வருஷத்துக்கு வைத்தா வைதீகத்துக்கு போக மாட்டான் போல இருக்கு.  உனக்கு கூட மாட ஒத்தாசையா இருக்க பர்வதத்தை ஆத்துல வேலைக்கு வெச்சுக்கலாமா.  அவளுக்கு மாசாமாசம் ஏதாவது கொடுத்தா அவளுக்கு கொஞ்சம் சௌகர்யமாவும் இருக்கும்.  சுப்பிணியோ அவ கிட்ட ரொம்ப ஒட்டிண்டு இருக்கான்.  அதனால அவளும் தன் துக்கத்த ஆத்திக்கலாம்.

மறுக்கவில்லை மீனாட்சி.  சுமதியும் இப்ப ஸ்கூல் போயிண்டிருக்கா.  சுப்புணிக்கும் இரண்டாம் வயதுக்கு அடியெடுத்து வைத்திருந்தான்.  பரவதத்தின் வாழ்வில் இதை விட என்ன சந்தோஷம் இருக்க முடியும்?  மீனாட்சிக்கும் நெருங்கிய தோழியாக, உடன் பிறவா அண்ணன் ஆறுதலுக்கு.

வஸத்தம் வரவேற்கிறது?

தொடரும்....a

No comments:

Post a Comment