ஏது இந்த பீரோ?"
("இந்த பீரோ மடத்துக்கு வேண்டாம்..."
ஒளி வீசும் ஒரு தத்துவம்)
ஒரு நாள் ஸ்ரீமடத்தில் ஒரு பீரோ புதிதாகக் காணப்பட்டது.
அது பெரியவா கண்ணிலும் பட்டுவிட்டது.
"ஏது இந்த பீரோ?" என்று மானேஜரிடம் கேட்டார்கள்.
"......வந்து.....நம்ம...திருவாலங்காடு திருமூர்த்தி (என்ற பக்தர்) வாங்கிக்கொண்டு வந்து வைத்துவிட்டுப் போனார்.."
"அவர் எங்கே?"
"வெளியே நிற்கிறார்..."
"கூப்பிடு.."
வந்தார் திருமூர்த்தி.
"இந்த பீரோவை எங்கே வாங்கினே?....
பழசுக்குப் பாலிஷ் போட்டதோ?..."
"மர்ரே கம்பெனியில் ஏலத்தில் வாங்கினேன்..."
என்று குழைந்தார் அன்பர்.
"இந்த பீரோ மடத்துக்கு வேண்டாம்..."
மானேஜர் உட்பட எல்லோருக்கும் திடுக்கென்றது.
"ஒரு பக்தர் வீட்டில் இருந்த பீரோ இது. அவர் கடன் வாங்கியிருந்தார்.திருப்பிக் கொடுக்க முடியல்லே.சாமானையெல்லாம் ஜப்தி பண்ணி, ஏலம் விடச் சொல்லிட்டா...
அந்த பக்தர் ரொம்ப ஆசையாய், நேர்த்தியாய் இந்த பீரோவைச் செய்தார்.
என்னமோ கஷ்டகாலம்...ஏலத்துக்கு வந்து விட்டது.
அவர் மனம் எவ்வளவு வேதனைப்பட்டிருக்கும்?....
மனவேதனையோடு வந்த பொருள் மடத்துக்கு வேண்டாமே?..."
பீரோவைக் கொண்டு வந்தவர் முகத்தில் அசடு வழிந்தது. "புது பீரோ!....மடத்துக்குக் காணிக்கையாகக் கொண்டு வந்தேன்!" என்று தண்டோரா போட முடியாமல் போய்விட்டது.
பெரியவாளின் ரத்தினச் சொற்களினூடே ஒளிவீசும் ஒரு தத்துவத்தை நாம் புரிந்து கொண்டால் நல்லது
Jaya Jaya Shankara hare hare shankara
No comments:
Post a Comment