Saturday, April 16, 2022

தலையாலங்காடு நர்த்தனபுரீஸ்வரர்

156.#தலையாலங்காடு

தடைகளை தகர்த்தெறியும் தலையாலங்காடு தயாபரர் வழிபாடு

மூலவர் : நர்த்தனபுரீஸ்வரர் ( ஆடவல்லார்), நடனேஸ்வரர்
  அம்மன்/தாயார் : பாலாம்பிகை, உமாதேவி
  தல விருட்சம் : வில்வம், பலா
  தீர்த்தம் : சங்கு தீர்த்தம், குளம்
  புராண பெயர் : தலையாலங்கானம்
  ஊர் : திருத்தலையாலங்காடு
  மாவட்டம் : திருவாரூர்
 மாநிலம் : தமிழ்நாடு
 
 பாடியவர்கள்: அப்பர் 

தேவாரப்பதிகம்

மெய்த்தவத்தை வேதத்தை வேதவித்தை விளங்கிளமா மதிசூடும் விகிர்தன் தன்னை எய்த்தவமே உழிதந்த ஏழையேனை இடர்க்கடலில் வீழாமே ஏறவாங்கிப் பொய்த்தவத்தார் அறியாத நெறி நின்றானைப் புனல் கரந்திட்டு உமையொடொரு பாகம் நின்ற தத்துவனைத் தலையாலங் காடன் தன்னைச் சாராதே சாலநாள் போக்கி னேனே.

                        -திருநாவுக்கரசர் 

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 93வது தலம்.

திருவிழா: 

     தை அமாவாசை, மாசி சிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம்.   

  தல சிறப்பு: 

     இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 156 வது தேவாரத்தலம் ஆகும்.

பொது தகவல்: 

    சிறிய ஊர், கோயில் தெற்கு நோக்கியது. சுவாமி அம்பாள் கோயில்கள் மட்டுமே உள்ளன. சுவாமி சன்னதியில் விநாயகர், விசுவநாதர், தலவிநாயகர், முருகன், பைரவர், நால்வர் சன்னதிகள் உள்ளன.

மூலவர் அழகான மேனி. அம்பாள் தெற்கு நோக்கிய சன்னதி. இக்கோயில் "எண்கண்' கோயிலுடன் இணைந்தது. அருமாமையில் எண்கண், குடவாயில் பெருவேளூர், முதலிய திருமுறைத் தலங்களும், மணக்கால், காட்டூர் முதலிய வைப்புத் தலங்களும் உள்ளன.

தலபெருமை: 

    கோயிலின் முன்பு தீர்த்தம் உள்ளது. இது மிகவும் விசேஷமானது. இதில் நீராடி இறைவனுக்குத் தீபமிட்டு உறுதியுடன் வழிபட்டால் வெண்குஷ்டநோய் நீங்கபெறும் என்பது இன்றும் மக்களின் அசையாத நம்பிக்கையாகும்.

தல வரலாறு: 

     தாருகாவனத்து முனிவர்கள் சிவபெருமானை அழிப்பதற்காக வேள்வி ஒன்றை நடத்தினார்கள். அதில் தோன்றிய யானையின் தோலை சிவன் உரித்தார். மானை தன் கையில் ஏந்திக்கொண்டார். முயலகன் என்ற அரக்கனை அழித்து அவனது முதுகின் மீது ஏறி நர்த்தனம் ஆடிய தலம் இது.

கபில முனிவர் பூஜித்த தலம்.சங்க காலத்தில் இத்தலத்தில் பாண்டியன் நெடுஞ்செழியனுக்கும் ஏனைய தமிழ் வேந்தர் இருவருக்கும் கடும் போர் நிகழ்ந்தது. இதில் பாண்டியன் நெடுஞ்செழியன் வெற்றிபெற்றான். அவனுக்கு தலையானங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியன் என்ற சிறப்பு பெயர் ஏற்பட்டது.

🍁 தந்தை தாய் சேய் ஆகிய மூன்று உருவில் முதல்ஊழி பிரம்மனுக்குக் காட்சி அருளிய விடங்கர் சோமாஸ்கந்தர் எனப்படும் மூவுருவர் தியாக ராஜர் துதி

⚜️ திருத் தலையாலங்காடு ஆட வல்ல வரதர் கோயில். அம்மன் தவமும் பூஜையும் செய்து ஆடி மாத நாயகன் நடராஜ தரிசனம் பெற்ற தலங்களில் ஒன்று.

🕉️ தொண்டர்க்குத் தூ நெறியாய் நின்றான் தன்னைச் சூழ் நரகில் வீழாமே காப்பான் தன்னை

அண்டத்துக்கு அப்பாலைக்கு அப்பாலானை ஆதிரை நாள் ஆதரித்த அம்மான் தன்னை

முண்டத்தில் முளைத் தெழுந்த தீ ஆனானை மூவுருவத்து ஓர் உருவாய் முதலாய் நின்ற

தண்டத்தில் தலையாலங் காடன் தன்னைச் சாராதே சால நாள் போக்கினேனே (அப்பர்)

🔥 மாசு மலம் உள்ள பிறவி நோய் நீக்கி முக்தி வழங்கும் தூய நெறியானவன், நரகத் துன்பம் நீக்குபவன், *எல்லா உலகங்களுக்கும் அப்பாற்பட்ட சிவலோகன் , சிதம்பரத்தில் தொழுத அரிஅயன் ருத்திரன் அம்மன் முதலிய தெய்வங்களுக்கு மார்கழித் திருவாதிரையில் திருநடனக் காட்சி அருளியவன் நெற்றியில் முளைத்த நெருப்பே கண்ணான நெற்றிக் கண்ணன், ஒருவனே தந்தை தாய் மழலை ஆகிய மூன்று உருவில் இருக்கும் ஊழி முதல்வன் தண்டு உடைய தண்டபாணி யோகீஸ்வரன் தலையாலங்காடன். அத்தகைய ஈசனைத் தொழாத நாள் எல்லாம் பயனற்ற பாழ் நாளே




No comments:

Post a Comment