Saturday, April 16, 2022

ஈஸி சேர் - 58

 #Easychair_58

அத்யாயம் : 58 ... ஈஸி சேர்

சனிக்கிழமை காலை எல்லா குழந்தைகளையும் தயார் படுத்தினார்.  சந்தியாவந்தனம், ஸமிதாதானம் எல்லாம் செய்துவிட்டு, நாலு முழம் வேஷ்டியை கட்டிக்கொண்டு எல்லா குழந்தைகளும் காஞ்சிபுரம் கிளம்ப தயாரானார்கள்.  ஆச்சு, ஏழு மணிக்கு சமாஜாதத்திலிருந்து வேன் வந்துவிடும்.

வேன் வந்தது.  குருவிடம் ஆசி பெற்றனர்.  எல்லா குழந்தைகள் முகத்திலும் சந்தோஷம் தாண்டவமாடிற்று.  அறிவுரைகள் சொன்னார் குழந்தைகளுக்கு.  எல்லாம் வேனில் ஏறி இவருக்கு கைகளை அசைத்து விடைபெற்றன.

இன்று முழுவதும் தனிமை.  வேலை ஆட்களும் வரமாட்டார்கள்.  அதான் சுப்புணி சொன்னானே.  இன்னிக்கு சமையல் பண்றவரையும் தனக்காக வரவேண்டாம்னு சொல்லிட்டார்.

இன்று என்னவோ அவரிடம் ஒரு பரபரப்பு.  கட கடவென்று நித்ய பூஜையை முடித்தார்.  தனக்கு தெரிந்த புளி அவலை காலை சிற்றுண்டிக்காக ரெடி பண்ணினார்.  சுமார்தான்  பசிக்கு பரவாயில்லை.  இனி ஒரு மணிக்கு மதிய உணவு.  பன்னிரெண்டு மணிக்கு சாதம் வைத்தால் போதும்.  கூட ஏதோ ஒரு ரசத்தை வைத்தால் போகிறது.

ஒரு பெரிய ஏப்பத்தை விட்டு விட்டு ஈஸி சேரில் அமர்ந்தார்.  ஆனாலும் சற்று நேரத்தில் எழுந்து வீட்டை சுற்றி வலம் வந்தார்.  நடந்து கொண்டிருக்கும் கட்டட வேலைகளை பெருமையுடன் பார்த்தார்.  சுப்புணி சொன்னானே, மேல ஒரு ரூம்ல பாருவோட படம் பெரிசா வைக்கப் போறதா, என்கிட்ட கூட ஏதாவது பாருவோட படம் இருக்கான்னு கேட்டானே.  எங்க இருக்கு.  ஃபோட்டோ எடுத்ததே கல்யாணத்துல தான்.  அது கூட கோபால் கிட்டதான் இருக்கணும்.  இதெல்லாம் ஒழுங்கா வெச்சுக்க வேண்டாமோ?

இங்கதான் நந்தியாவட்டை வெச்சிருப்பா.  இதோ இங்க பவழமல்லி.  பாரு செடிக்கெல்லாம் தண்ணி ஊத்திண்டே ஏதேதோ அதுங்களோட பேசிண்டிருப்பா.  , இங்க பாருங்கோன்னா, ரோஜாப்பூ மொட்டு விட்டுடுத்தன்னா.  இங்க பாருங்கோன்னா, இந்த செடி என் புடவைய புடிச்சிண்டு விடமாட்டேங்கறது.  செடிகளிடம் கூட அவளுக்கு அத்தனை ப்ரேமை.  செடிகளுக்கெல்லாம் பெயர் வேற.  சித்ரா என்பாள், மனோ என்பாள்.  அவள் நந்தவனம், அவள் உலகமா இருந்தது.  அவளை நெனச்சுண்டே இருந்தேனே தவிர, அவளுக்கு பிடிச்ச விஷயங்களை காத்துல இப்படி பறக்க விட்டுட்டேனே.

இப்ப ஒரு செடி இல்லை.  அவள் போனவுடன் எல்லாமே பட்டு போச்சு, என் வாழ்க்கை மாதிரி.  துளசி மாடத்தை மாத்திரம் இன்னும் இடிக்கல, வேலைக்கு வந்தவா.  ஏன்னு தெரியல.  அதுவும் பாதி ஒடஞ்சு. பாரு எத்தனை தடவை இந்தை துளசி மாடத்தை சுத்தியிருப்பா?  ஒரு ஜலம் ஒரு சொம்பில் வைத்துக் கொண்டு வலம் வருவாள்.  ஏதோ ஸ்லோகத்தை முணுமுணுத்துக் கொண்டு.

மனம் ரம்யமா இருந்தது அவருக்கு.  சாதம், ரசம், மோர், இதில் அவர் மதிய உணவு முடிந்தது.

மீண்டும் ஈஸி சேர்.  அப்போது பக்கத்து வீட்டு மலர் வந்தாள்.

ஐயா, புள்ளீங்களெல்லாம் காணோம்.

காஞ்சிபுரம் போயிருக்காங்க பெரியவாள பார்க்க.  நாளைக்கு மத்யானம்தான் வருவா.  அதான் பொழுது போகாம நேரத்த போக்கிண்டிருக்கேன்.

ஐயா, உங்கள பார்க்க ரொம்ப பெருமையா இருக்கய்யா.  வீட்ட பொதுக் காரியத்துக்கு கொடுக்கறது எவ்வளவு பெரிய விஷயம்?

இத்தனை வருஷம் தேவையில்லாம மனச வதச்சிண்டு வீண்டிச்சுட்டேன்.  எல்லாம் சுப்புணியோட ப்ளான்.  பாரு பேரில் ஒரு வேத பாடசாலை.  நினைக்கவே கர்வமா இருக்கு.  இனி இந்த பாடசாலை மேல மேல உயர்றதை பார்க்கணும்.  கண்டிப்பா சுப்பிணி செய்வான்.

ஐயா, கொஞ்சம் அந்த புள்ளைய பத்தி சொல்லுங்களேன்.  நானும் தெரிஞ்சுக்குறேன்.

மணிக்கணக்கில் சுப்புணியின் சிறு வயது சம்பவங்களை சொன்னார்.  பலமுறை மலர் கண்ணீரை துடைத்துக் கொண்டாள்.

அவரு உங்க பிள்ளையே தான் ஐயா.  அவர் இருக்கும்போது எதைப்பத்தியும் கவலைப் படாதீங்க.  போதா குறைக்கு மூணு நாலு பேரப் புள்ளைங்க வேற உங்களுக்கு கிடைச்சிருக்காங்க.  மனச தைரியமா வெச்சுக்கங்க.

நான் வரேங்க.  எதாவது வேணும்னா ஒரு குரல் உடுங்க.  உடனே வர்றேன்.

மலரை அனுப்பி விட்டு சற்று ஈஸி சேரில் இளைப்பாறி அப்படியே தூங்கி விட்டார்.

தொடரும்....

No comments:

Post a Comment