#Easychair_54
அத்யாயம் : 54 .. ஈஸி சேர்
விசு வாத்யாரின் உடல்நிலை மோசமாகிக் கொண்டிருந்தது. டாக்டர் கொடுக்கும் மருந்துகள் கேட்கவில்லை. இருமி இருமி தொண்டையெல்லாம் ரணமாக போய்க்கொண்டிருந்தது.
பாரு, வேணா ஸ்பெலிஷ்டு கிட்ட போகலாமா?
இதுல என்னன்னா கேள்வி? பெத்தவாளுக்கு இதைக் கூட செய்யாமல் இருக்கலாமா? அழைச்சுண்டு போங்கோன்னா. அவர் கொடுக்கற மருந்திலியாவது குணமானால் நல்லதுதானே.
ஏதோ சொல்லிவிட்டாளே தவிர பணத்துக்கு எங்கே போவாள். மாமியாரை கரையேத்தி வருஷாப்திகம் பண்றதுக்குள்ள குடும்ப நிலைமை ஒரு வழி ஆகிவிட்டது. ஒரு வருடமா வைதீகத்துக்கு வேற போகலை.
பணம் இல்லை பணம் இல்லைனு யார் கிட்டையாவது சொல்லிக்க கூட வெட்கமா வேற இருக்கு. நம்மள நம்பி யார் கடன் கொடுப்பா, அதுவும் இப்ப சம்பாத்யம் இல்லாத சூழ்நிலைல.
அவள் ஏதோ சொல்லிக்க முடியாம தவிக்கறா என்பது மாத்திரம் புரிந்து கொண்டார் நடராஜ ஐயர்.
அம்மா கோந்த, ஏதாவது பணம் கிணம் தேவையா இருக்கா.
அப்பா கேட்டதும், ஒண்ணுமில்லப்பா. எப்படியோ சமாளிச்சுக்கறேன்பா. உங்களுக்கும் வயசாறதே. நீங்கதான் எத்தனை நாள் எங்களுக்கும் சேர்த்து சம்பாதிச்சிண்டு இருப்பேள். நாளைக்கே உங்களுக்கு உடம்பு சரியில்லைனா என்ன பண்ணுவேள். பார்த்துக்கலாம்பா.
கண்ணீர் விட்டார் நடராஜ ஐயர். இருந்தாலும் மனசு கேட்கவில்லை. ஒரு இருநூறு ரூபாயை கையில் திணித்தார்.
எல்லாம் கொஞ்சநாள் தானே பர்வதம். மாப்பிள்ளைக்கு வைதீக வேலைகள் திரும்ப ஆரம்பிச்சோண எல்லாம் சரியாயிடும்.
வைத்தா ஒரு வருடமா எங்கேயும் போகாததால சில பேர் வாத்யார்களை வேற மாற்றிக் கொண்டு விட்டார்கள். இதற்காக அவாளோட சண்டையா போட முடியும்.
இதய மருத்துவரிடம் விசு வாத்யாரை அழைத்து சென்று வந்த வைத்தா குண்டை தூக்கிப் போட்டான். சளி மார்பு முழுக்க அடைச்சுண்டிருக்காம். ஆஸ்பத்திரியில அட்மிட் ஆனாதான் சளிய கரைக்கணுமாம். இன்னும் கவனிக்காம விடோம்னா
விசு வாத்தியார் பரவதத்தை கூப்பிட்டார்.
எனக்காக ஒண்ணும் எதுவும் பார்க்க வேணாம். போகிற வயசு தானே. ஏதோ ஒரு மூலைல உட்கார்ந்து காலத்தை போக்கிட்டு போய்ச்சேர்றேன். நாமெள்லாம் கலெக்டர் உத்யோகமா பார்க்கிறோம். ராஜ வைத்யமெல்லாம் பார்க்கறதுக்கு.
அப்படியெல்லாம் பேசாதீங்கோ அப்பா. உங்களுக்கும் உடம்பு குணமாயிடுத்துன்னா, நீங்களும் தானே வைதீகத்துக்கு போகப் போறேள். அப்புறம் எல்லாம் சரியாயிடும்.
வேணா ஒண்ணு செய் பர்வதம். வைத்தாகிட்ட சொன்னா நிலைமைய புரிஞ்சுக்காம தையா தக்கானு குதிப்பான். அவன பூவனூர் போய் கோபாலாத்துல தங்கிண்டு நம்ம நிலத்த விக்க ஏற்பாடு பண்ண சொல்லு. வித்த காசுல வேணா வைத்தியம் பண்ணிக்கறேன்.
எதுக்கு அப்பா என்று வாய் சொன்னாலும் அதுவே அவளுக்கு சரியாக பட்டது.
வைத்தா பூவனூர் சென்றான். கோபாலின் முயற்சியில் இரண்டு ஏக்கர் நிலத்தை விலைபேசி ஆயிரம் ரூபாய் முன் பணமும் பெறப் பட்டது. குத்தகை பாக்கியில் இரண்டாயிரத்தையும் பட்டாமணியாரின் கெடுபிடியில் வாங்கப்பட்டு வைத்தாவிடம் தரப் பட்டது. ஒரு மாதத்திற்குள் அப்பாவை அழைத்துக் கொண்டு வந்தி நிலத்தை கிரயம் பண்ணித் தருவதாக வைத்தா உறுதி அளித்தான் பட்டாமணியார் முன்னிலையில்.
பெருமூச்சு வந்தது பர்வதத்திற்கு. ஆஸ்பத்திரியில் விசு வாத்யார் தங்கி சிகிச்சை எடுத்ததில் சற்று முன்னேற்றம்.
வைத்தா, இப்பத்தான் கொஞ்சம் தேவலையே. ஊருக்கு போய் கிரயம் பண்ணிக் கொடுத்துட்டு வந்துடுவோமே. உன் ஆம்பிடையாளையும் அழைச்சுண்டு போகலாம். அவளும் ஊர்ல எல்லாரையும் பார்த்த மாதிரி இருக்கும்.
அவளுக்கும் ஒரு சேஞ்ச் தேவைப்பட்டது. சந்தோஷித்தாள். டாக்டரிடம் உத்தரவு வாங்கிக் கொண்டு பூவனூர் செல்ல ஆயத்தமானார்கள்.
நான் மாத்திரம் இங்க இருந்து என்ன செய்ய? நானும் வரேன்.
நடராஜ ஐயரும் சேர்ந்து கொண்டார்.
தொடரும்....
No comments:
Post a Comment