154.கரவீரம் கரையபுரம்
அம்மன்/தாயார் : பிரத்தியட்சமின்னம்மை
தல விருட்சம் : செவ்வரளி, அலரி
தீர்த்தம் : அனவரத தீர்த்தம்
ஆகமம்/பூஜை : காரண ஆகமம்புராண பெயர் : திருக்கரவீரம், கரையபுரம்
ஊர் : கரைவீரம்
மாவட்டம் : திருவாரூர்
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள்: அப்பர், சம்பந்தர், சுந்தரர்
தேவாரப்பதிகம்
பண்ணி னார்மறை பாடல் ஆடலன் விண்ணி னார்மதில் எய்தமுக் கண்ணி னான் உறையுங் கரவீரத்தை நண்ணுவார் வினை நாசமே.
-திருஞானசம்பந்தர்
தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 91வது தலம்.
திருவிழா:
மாதம் தோறும் அமாவாசை தினத்தில் இங்கு திருவிழா கொண்டாடப்படுகிறது. மார்கழி திருவாதிரை, மகாசிவராத்திரி,பங்குனி உத்திரம்
தல சிறப்பு:
இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். 108 திவ்ய க்ஷேத்ரம்- திருகண்ண மங்கை சமீபம். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 154 வது தேவாரத்தலம் ஆகும்.
பொது தகவல்:
இத்தலவிநாயகர் ராஜகணபதி என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.
தலபெருமை:
சிவபெருமான் தான் பிரதிஷ்டை செய்த லிங்கத்தை பராமரிக்க கவுதம முனிவரை நியமித்தார். கவுதம முனிவர் இத்தலத்தில் தவம் செய்து இறைவனின் அருள் வேண்டினார். இவரது தவத்தில் மகிழ்ந்த இறைவன் வேண்டும் வரம் கேள்,'என்றார். அதற்கு முனிவர் இறைவா! நான் இறந்த பின் எனது உடலை யாரும் பார்க்க கூடாது. ஏனெனில் உனக்கு சேவை செய்ய வந்தவன் நான். சிவனை வணங்க வருபவர்கள், முனிவராகிய என்னையும் சேர்த்து வழிபாடு செய்வார்கள். எனவே என்னை இத்தலத்தின் தலவிருட்சமாக ஏற்று அருள்புரியுங்கள் என்றார். இறைவனும் அதன்படி அருள்புரிந்தார். எனவே தான் அமாவாசை நாட்களில் பெண்கள் கவுதம முனிவர் ஜீவசமாதியில் உள்ள தலவிருட்சத்திற்கு தண்ணீர் ஊற்றிவிட்டு, பின் பிரம்மபுரீஸ்வரரை வழிபாடு செய்கிறார்கள்.
கரவீரம் என்பதற்கு பொன்னலரி என்பது பொருள். அலரியைத்தலமரமாக கொண்டதால் இத்தலம் கரவீரம் எனப்படுகிறது.திருஞான சம்பந்தர் இத்தலம் வந்த போது இருட்டிவிட்டதால், இரவு தங்கி மறு நாள் இறைவனை பாடியுள்ளார். சம்பந்தர் தான் பாடிய ஒவ்வொரு பாடலிலும் இப்பெருமானை வழிபட்டால் வினைகள் யாவும் நீங்கும் என பாடியுள்ளார். எனவே பக்தர்கள் ஏதேனும் ஒரு இரவில் இங்கு தங்கி மறுநாள் இறைவனை வழிபாடு செய்தால் எப்படிப்பட்ட கஷ்டமாக இருந்தாலும் நீங்கி விடும் என்பது ஐதீகம்.
கழுதைக்கு முக்தி: சிவபெருமானின் தரிசனம் வேண்டி ஒரு கழுதை இத்தலத்தில் தவம் இருந்தது. தரிசனம் கிடைக்காத வருத்தத்தில் நாகூர் வரை நடந்து சென்று கடலில் விழ இருந்தது. அப்போது ஏதோ சப்தம் கேட்க, கழுதை திரும்பி பார்த்த போது இத்தலத்தில் இருந்தபடியே இறைவன் தரிசனம் தந்து, மோட்சம் அளித்தார் என புராணம் கூறுகிறது. எனவே தான் சிவனின் எதிரில் கொடிமரமும், நாகூர் வரை வீடுகளும் கிடையாது.
இத்தலத்து சிவபெருமான் கழுதைக்கு மோட்சம் அளித்துள்ளார். எந்த உயிரினமாக இருந்தாலும் உண்மையான பக்தி இருந்தால் சிவதரிசனம் நிச்சயம் என்பதை இதன் மூலம் அறியலாம்.
தல வரலாறு:
முன்னொரு காலத்தில் தேவகன்னியர்கள் கைலாயத்தில் சிவனையும் சக்தியையும் தரிசிக்க சென்றனர். அப்போது அவர்கள் பார்வதியிடம்,""தேவி! தங்களுக்கு சிவபெருமான் கணவனாக உள்ளார். குழந்தைகளும் உள்ளது. எங்களுக்கும் திருமண பாக்கியம் தந்தருள வேண்டும்,'என வேண்டினர். அதற்கு பார்வதி தேவி சிவனிடம்,""இறைவா, இதற்கு தாங்கள் தான் பதில் கூறவேண்டும்,'என வேண்டினாள். உடனே சிவபெருமான் காவிரியின் தென்கரையில் தானே லிங்கம் அமைத்து கொடுத்து, அதை அமாவாசை தினத்தில் தேவகன்னியரை வழிபாடு செய்ய கூறினார்.
தேவகன்னியரும் அதன்படி செய்து பலனடைந்தனர் என தலபுராணம் கூறுகிறது. எனவே அமாவாசை நாட்களில் பெண்கள் இங்கு வந்து இங்குள்ள தலவிருட்சத்தில் தண்ணீர் ஊற்றி, சிவனை வழிபாடு செய்கின்றனர். இதனால் அடுத்த அமாவாசைக்குள் திருமணம் நிச்சயமாகும் என்பது நம்பிக்கை.
முதலாம் திருமுறை❤️
திருக்கரவீரம்❤️
பாடல் எண் : 1
வரிகொண் மாமணி போற்கண்டம்
கரிய வன்றிக ழுங்கர வீரத்தெம்
பெரிய வன்கழல் பேணவே.
பொழிப்புரை :
வரிகள் அமைந்த சிறந்தநீலமணிபோலக் கண்டம் கறுத்தவனாய், விளங்கும் திருக்கரவீரத்தில் எழுந்தருளியுள்ள எம்பெருமானாகிய இறைவன் திருவடிகளைத் துதித்தால் நம் வினைகளாக உள்ளன யாவும் முற்றிலும் கழியும்.
பாடல் எண் : 2
திங்க ளோடுடன் சூடிய
கங்கை யான்றிக ழுங்கர வீரத்தெம்
சங்க ரன்கழல் சாரவே.
பொழிப்புரை :
தாழ்ந்து தொங்கும் சடைமுடிகளை உடைய உயர்ந்தோனாய் இளம்பிறையோடு கங்கையை உடனாகச் சூடிய, திருக்கரவீரத்தில் விளங்கும் சங்கரன் திருவடிகளை வழிபட்டால் நம்மைப் பற்றிய வினைகள் தங்கா.
பாடல் எண் : 3
பூதம் பல்படை யாக்கிய
காத லான்றிக ழுங்கர வீரத்தெம்
நாதன் பாத நணுகவே.
பொழிப்புரை :
நல்லனவாகிய பூதகணங்களைப் பல்வகைப் படைகளாக அமைத்துக் கொண்டுள்ள அன்பு வடிவினனும் விளங்கும் திருக்கரவீரத்தில் எழுந்தருளிய எம் நாதனுமான சிவபெருமான் திருவடிகளை அடைவோரைத் துன்பங்கள் வந்தடையமாட்டா.
பாடல் எண் : 4
மறையு மாமணி போற்கண்டம்
கறைய வன்றிக ழுங்கர வீரத்தெம்
இறைய வன்கழ லேத்தவே.
பொழிப்புரை :
நீலமணி போலக் கண்டத்தில் கறையுடையவனும், விளங்கும் திருக்கரவீரத்தில் உறையும் எம் இறைவனுமாகிய பெருமான் திருவடிகளை ஏத்த நம் வினைகள் நீங்கும். சஞ்சிதமாக உள்ளவும் மறையும்.
பாடல் எண் : 5
விண்ணி னார்மதி லெய்தமுக்
கண்ணி னானுறை யுங்கர வீரத்தை
நண்ணு வார்வினை நாசமே.
பொழிப்புரை :
சந்த இசையமைப்புடன் கூடிய வேதங்களைப் பாடியும் ஆடியும் மகிழ்பவரும், வானகத்தில் சஞ்சரித்த மும்மதில்களையும் எய்தழித்த மூன்றாம் கண்ணை உடையவரும் ஆகிய சிவபிரானார் எழுந்தருளிய திருக்கரவீரத்தை அடைவார் வினைகள் நாசமாம்
பாடல் எண் : 6
அழலி னாரழ லேந்திய
கழலி னாருறை யுங்கர வீரத்தைத்
தொழவல் லார்க்கில்லை துக்கமே.
பொழிப்புரை :
ஒளி பொருந்திய பிறைமதியைச்சூடிய நீண்ட சடைமுடியினரும், அழலைக் கையில் ஏந்தியவரும் வீரக்கழலை அணிந்தவரும் ஆகிய சிவபெருமான் எழுந்தருளிய திருக்கரவீரத்தைத் தொழவல்லவர்கட்குத் துக்கம் இல்லை.
பாடல் எண் : 7
அண்ட னாரழல் போலொளிர்
கண்ட னாருறை யுங்கரவீ ரத்துத்
தொண்டர் மேற்றுயர் தூரமே.
பொழிப்புரை :
தீயவர்களாகிய அசுரர்களின் முப்புரங்களும் அழிந்தொழியுமாறு கணை எய்தவரும், அனைத்து உலகங்களின் வடிவாக விளங்குபவரும், விடம் போல ஒளிவிடும் கண்டத்தை உடையவரும் ஆகிய சிவபிரான் எழுந்தருளியுள்ள திருக்கரவீரத்துத் தொண்டர்களைப் பற்றிய துயரங்கள் தூரவிலகும். அழல் - தீப்போன்ற கொடிய விடம்.
பாடல் எண் : 8
சினவ லாண்மை செகுத்தவன்
கனல வன்னுறை கின்ற கரவீரம்
எனவல் லார்க்கிட ரில்லையே.
பொழிப்புரை :
கடலால் சூழப்பட்ட இலங்கை மக்களின் தலைவ னாகிய இராவணனின் தலைகள் பத்தும் நெரியுமாறு செய்து, கோபத்தோடு கூடிய அவனது ஆண்மையை அழித்தவனாய், எரிபோலும் உருவினன் ஆகிய சிவபிரான் எழுந்தருளிய கரவீரம் என்று சொல்ல வல்லார்க்கு இடர் இல்லை.
பாடல் எண் : 9
தெள்ளத் தீத்திர ளாகிய
கள்ளத் தானுறை யுங்கர வீரத்தை
உள்ளத் தான்வினை யோயுமே.
பொழிப்புரை :
நீரில் தோன்றும் தாமரை மலர் மேல் உறையும் நான் முகனோடு திருமாலும் உண்மையைத் தெளியுமாறு ஒளிப்பிழம்பாகத் தோன்றி அவர்கள் அறியாவாறு கள்ளம் செய்தவனாகிய சிவபிரான் உறையும் திருக்கரவீரத்தை நினைந்து போற்ற வினைகள் நீங்கும்.
பாடல் எண் : 10
கொடிய வெவ்வுரை கொள்ளேன்மின்
கடிய வன்னுறை கின்ற கரவீரத்
தடிய வர்க்கில்லை யல்லலே.
பொழிப்புரை :
முடைநாற்றம் வீசும் அமணர்களோடு காவியாடை அணிந்து திரியும் புத்தர்கள் ஆகியோர்தம் கொடிய வெம்மையான உரைகளை மெய்யெனக் கொள்ளாதீர். அனைத்துலகையும் காத்தருள்கின்றவனாகிய சிவபிரான் உறைகின்ற திருக்கரவீரத்து அடியவர்க்கு அல்லல் இல்லை.
பாடல் எண் : 11
சேடன் மேற்கசி வாற்றமிழ்
நாடு ஞானசம் பந்தன சொல்லிவை
பாடு வார்க்கில்லை பாவமே.
பொழிப்புரை :
அழிவில்லாதவனாக விளங்கும் திருக்கரவீரத்துப் பெரியோன் மேல் அன்புக்கசிவால் தமிழை விரும்பும் ஞானசம்பந்தன் சொல்லிய இத்திருப்பதிகப் பாடல்களாகிய இவற்றைப் பாடுவோர்க்குப் பாவம் இல்லை.
திருஞானசம்பந்த பெருமான் பொற்கழல் போற்றி! போற்றி !!

No comments:
Post a Comment