Sunday, April 24, 2022

உருளைக்கிழங்கு பால்கறி

 சப்பாத்தி, பூரியுடன் தொட்டுக் கொண்டு சாப்பிட உருளைக்கிழங்கை வைத்து இப்படி அருமையான உருளைக்கிழங்கு பால்கறி செய்தால், எவ்வளவு சப்பாத்தி செய்தாலும் பத்தவே பத்தாது.

வீட்டில் சப்பாத்தி, பூரி என்றாலே அனைவருக்கும் குஷியாகத் தான் இருக்கும். ஏனென்றால் எப்பொழுதும் இட்லி, தோசை என்று சாப்பிட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு சற்று வித்தியாசமாக இந்த உணவை செய்து கொடுக்கும் பொழுது மிகவும் ஆர்வமாக இருப்பார்கள். அது மட்டுமல்லாமல் சப்பாத்தி, பூரி செய்தால் அவற்றுடன் தொட்டுக்கொள்ள சற்று வித்தியாசமான சைடிஷ் செய்வார்கள் என்று அனைவருக்கும் தெரிந்தது தான். அவ்வாறு சப்பாத்தி பூரியுடன் தொட்டுக் கொண்டு சாப்பிட சென்னா மசாலா, தக்காளி தொக்கு, உருளைக்கிழங்கு மசாலா இவைகள் தான் மிகவும் அருமையாக இருக்கும். அப்படி உருளைக்கிழங்கை வைத்து செய்யக்கூடிய ஒரு வித்தியாசமான உணவு வகை தான் இந்தப் பால் கறி. இதனை குழந்தைகளும் மிகவும் விருப்பமாக சாப்பிடுவார்கள். காரம் குறைவாகவும், சுவை அதிகமாகவும் இருக்கும் இந்த உருளைக்கிழங்கு பால்கறி உணவை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு – கால் கிலோ, வெங்காயம் – 2, தக்காளி – ஒன்று, இஞ்சி பூண்டு விழுது – ஒரு ஸ்பூன், எண்ணெய் – 6 ஸ்பூன், தேங்காய் – மூன்று சில்லு, முந்திரி பருப்பு – 10, சோம்பு – 1 ஸ்பூன், பட்டை சிறிய துண்டு – ஒன்று, ஏலக்காய் – 2, கிராம்பு – 2, பிரியாணி இலை – ஒன்று, பச்சை மிளகாய் – 4, உப்பு – ஒரு ஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லி தழை – ஒரு கொத்து.

செய்முறை:

முதலில் தக்காளி மற்றும் வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்க வேண்டும். பிறகு மூன்று சில்லு தேங்காயை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் நறுக்கி வைத்துள்ள தேங்காய், முந்திரி பருப்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், நட்சத்திர பூ= 3 பச்சை மிளகாய் மற்றும் ஒரு ஸ்பூன் சோம்பு சேர்த்து அனைத்தையும் பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளவேண்டும்.

பிறகு உருளைக் கிழங்கை முக்கால் பதத்திற்கு வேக வைத்து, தோலுரித்து, அவற்றை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பின் மீது ஒரு கடாயை வைத்து, எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் அரை ஸ்பூன் சோம்பு மற்றும் பிரியாணி இலை சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

அதன்பின் தக்காளி, பச்சை மிளகாயையும் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும். பிறகு இவற்றுடன் தேவைக்கு ஏற்ப தண்ணீர் ஊற்றி அனைத்தையும் வேக வைக்க வேண்டும்.

பின்னர் இவற்றுடன் வேக வைத்த உருளைக்கிழங்கை சேர்த்து கிளறி விடவேண்டும். சிறிது நேரம் கழித்து அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்றாக கலந்து விட்டு, சிறிது தண்ணீர் சேர்த்துக் கிளறி விடவேண்டும். பின்னர் இவை நன்றாக கொதித்ததும் இவற்றுடன் கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி தழை சேர்த்து, ஒரு கொதி வந்ததும் அடுப்பை அனைத்துவிட வேண்டும்.



No comments:

Post a Comment