#Easychair_51
அத்யாயம் : 51 ... ஈஸி சேர்.
விசு வாத்யார் பர்வதத்திடம் சொன்னார்.
இதோ பாரம்மா. எங்களுக்கு எல்லாமே நீதான். பகவான் என்னமோ நெனச்சு என்னமோ செஞ்சிருக்கார். எங்க பாப கணக்க வெச்சு உங்கள வதச்சுருக்கார். குழந்தை இல்லைனா நீ எங்க மாட்டுப் பொண் இல்லைனு ஆயிடுமா? நீ எங்களுக்கெல்லாம் மாட்டுப்பொண்ணுன்னு சொல்றதவிட, எங்க பொண்ணுன்னு தான் நாராயணியும் நானும் பேசிப்போம். எங்க சொந்த பொண்ணு பெத்தவாள கவனிக்கறத விட நீ எவ்வளவோ எங்க ரெண்டு பேருக்கும் சேவை செஞ்சிருக்க. அந்த பாக்கியம் ஒண்ணே எங்களுக்கு போதும்.
ஒன்னையும் தேத்திண்டு வைத்தாக்கும் ஆறுதல் சொல்லி மேற்கொண்டு என்ன வாழ்க்கைல செய்யணுமோ அதை செய். நீ ஆரம்பத்திலிருந்தே தைரியமான பொண்ணு. வைத்தா அப்படி இல்ல. அவனுக்கு உன் அளவு தைரியம் பத்தாது. அதனால அவன பார்த்துண்டாலே போதும்.
பர்வதம் பேசவில்லை. மாமனாரே மனதார அவளை தேற்றியது அவளுக்கு சற்று பலத்தை கொடுத்தது.
மாமனார் சொன்னது சரிதான். வைத்தாவை சகஜ நிலைக்கு கொண்டு வருவது அவ்வளவு சுலபமாக இல்லை அவளுக்கு. குழந்தை போல குமுறிக் குமுறி அழுவான் இரவில். குழந்தையை மடியில் கிடத்தி தாலாட்டுவதைப் போல இவளும் ஆறுதல் அளித்துக் கொண்டிருந்தாள்.
பெண்களுக்கு எப்படியோ தாங்கும் சக்தியை இறைவன் கொடுத்து விடுகிறான் இயற்கையிலேயே. ஆனால் பலசாலி என்ற பெயர் என்னவோ ஆண்களுக்கு கிடைத்து விடுகிறது. மனோ தைரியம் இருந்தால் எப்போதுமே மார்க்கம் உண்டு.
ஏன்னா இப்படி எப்பப் பார்த்தாலும் சங்கடப் பட்டுண்டிருக்கேள். எல்லாம் தான் தெரிஞ்சு போச்சே. இனி நீங்க எனக்கு குழந்தை. நான் ஒங்க குழந்தை. நாம தைரியமா இருந்தாத்தானே பெத்தவா தைரியமா இருப்பா?
சகஜ நிலைக்கு குடும்பம் திரும்பிக் கொண்டிருந்தது. அடிக்கடி சுப்புணியோடு விளையாடி விட்டு வருவாள். சில முறை அவனை அழைத்துக் கொண்டு வைத்தா வீட்டுக்கு வருவார் வேதராமன். சுப்புணியை கிடைத்த சில மணி நேரத்தில் கொஞ்சித் தீர்த்துவிடுவார்கள் குடும்பத்தினர். விசு வாத்தியாரின் பெருத்த வயிறு அவனுக்கு மிருதங்கம். வைத்தா யானையாகவே மாறிவிடுவான் அவனை முதுகில் ஏற்றிக் கொண்டு. உட்கார்ந்திருக்கும் நாராயாணி முதுகில் ஏறிக்கொள்வான், அவள் முன்னும் பின்னும் சாயவேண்டும். இவர்கள் வீட்டில் குழந்தையை சிறிது நேரம் விட்டு விட்டு சமாஜதத்திற்கு சென்றுவிடுவார் வேதராமன்.
ஒட்டு மொத்த குடும்பமும் இவனோடு கண்ணா மூச்சி விளையாடும்.
போதா குறைக்கு நடராஜ ஐயரும் சேர்ந்து கொள்வார். அவர் குடுமியை ஆட்டுவான். அது அவிழும், இடி இடியென்று சிரிப்பான். அவன் சிரிக்கிறான் என்பது தெரிவதால் இவரும் வேண்டுமென்றே அவிழ வைப்பார்.
பர்வதத்தின் இடுப்பில் ஏறினால், சமையல் அறை பக்கம் கை காட்டுவான். அங்கு சென்றால் பட்சண சம்படத்தை நோக்கி கண்கள் போகும். எடுத்துக் கொடுத்தால் உமிழ்நீர் ஒழுக அடக்கிக் கொள்வான்.
பிறகு அவனைத் துடைத்து விட்டு அலங்காரங்கள், திருஷ்டிப் பொட்டு, ரிப்பன், கண்மை, இத்யாதி இத்யாதிகள். ஆளாளுக்கு பாடல், அவர்களால் முடிந்த ஸ்ருதியில்.
வேதராமன் திரும்ப வந்து கூப்பிட்டால் வரமாட்டேன் என்ற அடம். அவனுக்கு விடை கொடுக்க அந்த குடும்பம் அவனை ஏமாற்ற வேண்டும்.
இவன் லீலைகளில் அந்த குடும்பம் லயித்தது. தன்னை மறந்தது. தன்னை உற்சாகப் படுத்திக் கொண்டது.
சுப்புணிக்கு ஆயுஷ்ய ஹோமம். வைத்தா தான் வாத்தியார். பர்வதம் தான் சீஃப் குக். நடராஜ ஐயரும் விசு வாத்தியாரும் வேத கான இசையமைப்பாளர்கள். ஹோமங்கள் மந்திரங்கள் தடபுடல். நாராயணி ஸ்டோர்ஸ் இன் சார்ஜ் மற்றும் சுமதியை பார்த்துக் கொள்வது. ஆசை ஆசையாக கொண்டாடி மகிழ்ந்தன வைதீகப் பறவைகள்.
வந்தவர்கள் வியந்தனர். மீனாட்சியும் வேதராமனும் திக்கு முக்காடினர்.
வெள்ளிக் கொலுசு பரிசு வைத்தா தம்பதியினர் கொடுத்தனர். நடராஜ ஐயர் தன் பங்கிற்கு சில்க் சட்டை.
வேதராமன் கோபித்து திணித்த வைதீக சம்பாவனையை சாமர்த்தியமாக சுப்புணிக்கு ஆசீர்வாத பணமாக ஓதிவிட்டு பெருமிதம் அடைந்தனர்.
எல்லா வைபவங்களையும் முடித்துக் கொண்டு வைத்தா குடும்பம் வீடு திரும்பும் போது இரவு மணி பத்து. பனிரெண்டு மணி வரை அன்றைய பொழுதை ஸ்லாகித்துக் கொண்டே இருந்தார்கள். பிறகு நெஞ்சு நிறைந்த உறக்கம்.
தொடரும்....
No comments:
Post a Comment