Monday, April 11, 2022

ஈஸி சேர் - 50

 #Easychair_50

அத்யாயம் : 50 ...  ஈஸி சேர்.

வைத்தா ஸ்தம்பித்து நின்றான்.  வேதராமன் ஆறுதல் சொன்னார்.  மீனாட்சியும் கண்ணீரை சிந்திக் கொண்டே இருந்தாள்.

டாக்டர் பத்மா சொன்னது இதுதான்.  குழந்தையின் இதயத்துடிப்பிற்கான அறிகுறி இல்லை.  பர்வதத்தின் கர்ப்ப பையில் ஒரு கட்டி இருக்கும் சாத்தியக் கூறுகள் அதிகம்.  தீவிர சோதனையில் உறுதி செய்யப் பட்டால் கர்ப்ப பையை நீக்குவதைத் தவிர வேறு வழியில்லை.  உடனே ஆஸ்பத்திரியில் சேர்த்து பர்வதத்தின் உயிரை காப்பாற்ற முயற்சி செய்யுங்கள். இந்த குழந்தை பெற்றெடுப்பது என்பதை பொறுத்த மட்டில் இது ஒரு மிஸ் கேரியிங்.

சாரி என்று ஒரு வார்த்தையில் டாக்டர் முடித்து விட்டார்.

ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.  பரிசோதனைகள் டாக்டர் பத்மா சொன்னவற்றை உறுதி செய்தன.

எல்லாம் ஒரு நாள் பொழுதில் முடிந்தன.  சிசுவோடு சேர்ந்து கனவுகளும் சிதைக்கப் பட்டன.

வைதிகப் பறவைகளுக்கு வாழ்க்கையே அஸ்தமனம் ஆனது போன்ற உணர்வு.  கதறித் தீர்த்தன. பர்வதம் உயிர் பிழைத்தது மட்டுமே ஆறுதல் வைத்தாவுக்கு.  மலடி இல்லை அவள், மகப்பேறு பாக்கியம் இல்லாதவளாக ஆக்கப்பட்டுவிட்டாள்.

பகவானின் ருத்ர தாண்டவம்.  நாங்கள் செய்த தவறென்ன என்று எத்தனை முறை கேட்டாலும் அவனிடமிருந்து விடையில்லை.  கர்மா கணக்கை வைத்து ஒரு கோர தாண்டவமாடி சந்ததியை நிறுத்தி விட்டான்.

அன்பில் துவங்கிய வாழ்க்கை இனி கடமைக்காக மட்டும் வாழவேண்டும், கடனே என்று வாழவேண்டும்.

அவள் செய்த தவறுதான் என்ன?  தன் அப்பாவுக்காகவும் வைத்தாவின் பெற்றோருக்காகவும் பூவனூர் வாழ்க்கையை கையில் எடுத்ததா?  அவள் எடுத்த முடிவு ஆண்டவனுக்கு பிடிக்கவில்லையா?  வைத்தாவும் பூவனூருக்கு வந்து போய்க் கொண்டுதானே இருந்தான்.  இதற்கெல்லாமுமா ஒரு ஆயுள் தண்டனை கொடுக்க வேண்டும்?

அன்பே கடவுள் என்று தானே சொல்கிறார்கள்?  அன்பாக எல்லோரிடத்தும் பழகியது குற்றமா?  வாழ்ந்தது குற்றமா?  தன்னலத்துடன்தான் வாழ வேண்டுமா?  இந்த ஜன்மா பாவங்களுக்கு தண்டனை ஏற்கக் கூடியது, அதில் ஞாயமும் இருக்கிறது.

ஒரு சிசுவை சிதைத்து, ஒரு கர்ப்பத்தை உருக்குலைத்து ஒட்டு மொத்த குடும்பத்திற்கும் நிம்மதியை கெடுத்தது எந்த வகையில் ஞாயம்?  கடவுளுக்கே இது அநீதி என்று தெரியாதா?

பர்வதம் வைத்தாவிற்கு இனி் பிள்ளை பாக்கியம் இல்லை. நடராஜ ஐயர், விசு வாத்தியார், நாராயணி இவர்களுக்கெல்லாம் பேரப் பிள்ளைகள் இல்லை, சந்ததிகள் இல்லை.  எத்தனையோ குடும்பங்களை மந்திர ஒலிகளால் இத்தனை காலம் வாழ்த்திதானே வந்தார்கள்?  ஏன் இவர்களுக்கு இந்த கொடுமை?

இந்த இளம் தம்பதியினர் இறந்தால் இனி கொள்ளி வைக்க யாரோதானே?  எத்தனையோ ஸ்ராத்தங்களையும் தர்ப்பணங்களையும் பல குடும்பங்களுக்கு செய்து வைத்தானே வைத்தா?  இவன் இறந்தால் இவனுக்கு?

ஞாயமில்லாமல் என்ன தண்டனை வேண்டுமானாலும் ஆண்டவன் கொடுக்கலாம், ஆனால் அவனை பற்றிக் கொண்டே இருக்க வேண்டும், போற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.  உன்னைவிட உயர்ந்தவர் யார் இருக்கிறார்கள் என்று முகஸ்துதி செய்து கொண்டே இருக்க வேண்டும். பகவானின் எல்லா செயலுக்கும் அர்த்தம் உண்டு என்று நம்மை நாமே சமாதானப் படுத்திக் கொள்ள வேண்டும். 

மனுஷாளிடம் தவறு கண்டால்  ஒதுங்குகிறோம், அல்லது வஞ்சம் தீர்க்கிறோம்.  கீதையிலே தர்மத்துக்கு பங்கம் வந்தால் எதிர்த்து போரிடு என்று கண்ணனே உபதேசிக்கிறான்.  இந்த பகவானின் அதர்மத்திற்கு அவனிடமிருந்து ஒதுங்க வேண்டுமா?  திட்டித் தீர்க்க வேண்டுமா?

இனி பகவான் நினைத்தாலும் திருத்த முடியாது.  விதி என்று பெயர், கர்மா என்ற சட்டம்.  பகவானின் சட்டங்கள் அவருக்கே தெரிந்து நடக்கிறதா என்ற சந்தேகம்.  மனதை உருக்குலைத்து பக்குவப் படுத்துகிறாராம் பகவான்.  என் வழிப்படி நீ நட என்பதற்குப் பெயர் விதி.

பர்வதத்தை எத்தனையோ பேர் ஆறுதல் படுத்தினார்கள்.  அழுது அழுது அவள் கண்கள் பாலைவனம்.  இனி ஒரு சோலையை தேடவேண்டும்.  கனவு இப்போது கண்டால் கானல் நீர் கூட தெரிவதில்லை.

வேதராமனும் மீனாட்சியும் ஒருவருக் கொருவர் இதைப் பற்றி மாய்ந்து போனார்கள்.  விடாமல் ஆறுதல் சொல்லிக் கொண்டே இருந்தார்கள்.  இனி எந்த ஆறுதலும் இவர்களை மீட்குமா.

ஒவ்வொரு முறையும் பர்வதத்தை பார்க்கச் செல்லும்போதும் சுப்புணியை அழைத்து செல்வார்கள் மறக்காமல்.

ஒவ்வொரு முறையும் அவர்கள் வீடு திரும்ப செல்லும் போதும் சுப்புணி ஒரே அழுகை, பர்வதத்தை விட்டு வரமாட்டேன் என்று.  அத்தை அத்தை என்று வாய் ஓயாமல் கூப்பிடும் அவன் மழலைப் பேச்சில் சிறிது இயல்பு நிலை

பகவான் தாங்கும் சக்தியைப் பொறுத்தே ஒருவருக்கு துன்பத்தை கொடுக்கிறானாம்.  அந்த சக்தியைப் பெற வேறு ஒரு மாயைக்கு வழிகாட்டுகிறானாம்.

தொடரும்.....

No comments:

Post a Comment