#Easychair_49
அத்யாயம் : 49. ...ஈஸி சேர்
பொதுவாக வைதீக காரியங்களை முடித்து விட்டு வைத்தா வீட்டில் இருக்கும் நேரம்தான்.
என்ன பாரு, அதிசயமா இருக்கு. சீக்கிரம் வந்துட்டயே. கையில் என்ன?
சிரித்தாள் மெல்ல. அவனுக்கு அந்த சிரிப்பின் அர்த்தம் புரியவில்லை.
அவர்கள் இருவரும் உறங்கும் அறைக்கு வரச் சொல்லி சைகை காட்டினாள். ஒன்றும் புரியாமல் அவனும் பின் தொடர்ந்தான்.
விஷயத்தை அவள் சொன்னதுதான் தாமசம், அவனுக்குவ தலைகாலே புரியவில்லை.
பகவான் நம்மள கைவிடல பாரு. ரொம்ப சந்தோஷம். நீ இனிமே பத்திரமா உடம்ப பார்த்துக்கணும் என்ன? இரு இத அம்மாகிட்ட நான் சொல்றேன். ரொம்ப சந்தோஷப் படுவா.
அன்னா, அவசரப் படாதீங்கோ. நான் சொன்னாத்தான் சரியா இருக்கும்.
அந்த வைதீக பறவைகளுக்கு அன்றைய தினம் கிடைத்த ஆனந்தத்திற்கு எல்லையே இல்லை. பர்வதம் அப்பா அம்மாவை நமஸ்கரித்தாள், நாராயணி அவசரம் அவசரமாக கேசரி செய்தாள்.
வைத்தாவும் பர்வதமும் கோவிலுக்கு சென்றனர். வழி நெடுக பிறக்கப் போகும் குழந்தையை பற்றியே அவர்கள் பேச்சாக இருந்தது. தனக்கு ஆண் குழந்தையே வேண்டும் என்று அவளும், பெண் குழந்தையே என்று அவனும் ஒருவரை ஒருவர் செல்லமாக சீண்டிக் கொண்டு வந்தனர்.
மறுநாள் வேதராமன் குடும்பத்தினர் நேரில் புஷ்பம் பழங்களோடு வந்து பாராட்டிவிட்டு சென்றனர் இருவரையும்.
பர்வதம், நீ நம்மாத்துக்கும் இங்கைக்குமா அலையாதே. நான்தான் சுப்புணிய பக்கத்துல வெச்சுக்கலாம்னு டாக்டர் சொல்லிட்டாளே. நான் எப்படியோ சமாளிச்சுக்கறேன்.
இல்ல மன்னி. எனக்கு சுப்புணிய பார்க்கலேன்னா ஒரு மாதிரி இருக்கும். தெனமும் வரலைனாலும் வாரத்துக்கு ஒரு தடவை வறேன் மன்னி.
இரண்டு தினங்களுக்குள் அக்கம் பக்கம் வீடுகளுக்கும் பூவனூருக்கும் தகவல் தெரிவிக்க ஒரே பாராட்டு மழைதான் போங்கள்.
மாதங்கள் கடந்தன. ஒரு நாள் பர்வதத்திற்கு வயிற்றில் கடும் வலி. எந்த கை மருத்துவத்திற்கும் கட்டுப் படவில்லை. அவளால் பொறுக்க முடியவில்லை.
வைத்தா, நாராயணி, விசு வாத்தியார் முகங்களில் சோகம். என்றுமே பாரு இனப்படி வயிற்று வலியால் அவதிப் பட்டதில்லையே.
முகத்தில் சோகக்களை தாண்டவமாடிக் கொண்டிருந்தாலும், அவளுக்கு ஆறுதலை கொடுத்துக் கொண்டிருந்தான்.
அன்னா, டாக்டர் பத்மா கிட்டையே போகலாம்னா. எனக்கு என்னவோ பயமா இருக்கு. போகிற வழியில மன்னிகிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு போகலாம்னா. ஒரு ஆட்டோவ அழைச்சுண்டு வாங்கோன்னா.
ஏதோ தன் மனதில் ஒரு பலத்தை தனக்குள் வரவழைத்துக் கொண்டு அவனிடம் சொன்னாள். அவனும் சரி என்று ஆட்டோ பிடிக்க கிளம்பினான்.
ஆட்டோவில் ஏறியவுடன் வைத்தாவின் கையை இறுக பற்றிக் கொண்டாள் பர்வதம். 'குழந்தைக்கு ஒண்ணும் ஆகாதோன்னா?' அந்த வலியிலும் கேட்டாள்.
அவனுக்கு அவளை எப்படி தேற்றுவது என்று தெரியவில்லை. அவனுக்கும் ஒன்றும் புரியவில்லை என்றாலும், அவளை தேற்றித்தானே ஆகவேண்டும். ஆறுதல் சொன்னான். 'ஒண்ணும் ஆகாதுடி. கொஞ்சம் தைரியமா இரு பாரு.
வழியில் வேதராமன் வீட்டில் வண்டி நின்றது. வைத்தா கீழே இறங்கி மீனாட்சியிடம் சொல்ல அவசரம் அவசரமாக ஆட்டோவில் ஏறினான். வேதராமன் நான் வைத்தாவை அழைத்துக்கொண்டு வருவதாக சொன்னார்.
டாக்டர் பத்மா பரிசோதித்தாள். பிறகு மீனாட்சியை மாத்திரம் உள்ளே அழைத்தாள், பர்வதத்தை வெளியே அனுப்பிவிட்டு.
என்ன மன்னி சொன்னா?
மீனாட்சி முகத்தில் கவலை தெரிந்தாலும் காட்டிக் கொள்ள வில்லை.
ஒண்ணுமில்லை பர்வதம். புள்ளையாண்டு இருக்கையோன்னோ, ஏதோ டெஸ்ட் எடுக்கணுமாம். பெரிய ஆஸ்பத்திரிக்கு அழைச்சுண்டு போக சொல்றா. நீ கவலைப் படாதே. அண்ணாவும் வைத்தாவும் வந்துடட்டும்.
ஆனால் டாக்டர் சொன்னது மீனாட்சிக்கு பேரிடியாக இருந்தது. தனியாக சற்று வெளியே சென்றுவிட்டு கண்ணை துடைத்துக் கொள்வதும், பிறகு உள்ளே வந்து பர்வதத்திடம் பேசுவதுமாக இருந்தாள்.
வேதராமனும் வைத்தாவும் காரில் இறங்கினர். அவர்களைப் பார்த்த மாத்திரத்தில் மீனாட்சி அவர்களை நோக்கி வேக வேகமாக ஓடினாள்.
தொடரும்....
No comments:
Post a Comment