#Easychair_47
அத்யாயம் : 47 ... ஈஸி சேர்.
வேதராமன் கார் திரும்பியதும் வீடு வந்த பாருவிடம் வைத்தா கேட்ட முதல் கேள்வி 'யாராவது ஏதாவது சொன்னாளா? கண்ணெல்லாம் கலங்கியிருக்கு உனக்கு'
ஒண்ணுமில்லைன்னா. நீங்க சாப்பிட்டேளா?
சாப்டாச்சு பாரு. அம்மா போட்டா. நீ அவாத்திலேயே சாப்பிட்டையோண்ணோ?
சாப்பிட்டேன்னா என்றவள், நேராக சமையலுள்ளுக்குப் போய் அம்மாவை போய் படுக்கச் சொன்னாள்.
ஒரு மாதிரி இருக்கியே. உடம்பு சரியில்லையா? நாராயணி வாஞ்சையுடன் கேட்டாள்.
இல்லைமா, கொஞ்சம் அசதியா இருக்கு.
அப்படின்னா நீ போய் ப்படுத்ததுக்கோயேன். பாத்திரத்த ஒழிச்சுப் போட்டுட்டு நான் படுத்துக்கறேன். நீ போ.
ஏனோ அதற்கு மறுப்பு சொல்லவில்லை. நேராக படுக்கை அறைக்கு சென்றாள். அவள் நடவடிக்கை அன்று அவனுக்கு விசித்திரமாக இருந்தது.
அவனும் கதவைத் தாழிட்டு அவள் பக்கத்தில் அமர்ந்தான்.
என்ன ஆச்சு பாரு?
விசும்பி விசும்பி அழ ஆரம்பித்தாள்.
கல்யாணம் ஆகி ஆறு வருஷம் ஆச்சே நமக்கு. இனிமே குழந்தையே பொறக்காதான்னா?
யார் சொன்னா பாரு. பகவத் க்ருபை இன்னும் கிடைக்கல. அவ்வளவுதான். ஏண்டி இப்படி கேட்கிற?
கண்ணீரை துடைத்துக் கொண்டே மீனாட்சி சொன்னதை சொல்லிவிட்டு, 'நான் என்ன அவ்வளவு கெட்டவளா, இவா கொழந்தைய நானே தூக்கிண்டு போறதுக்கு. நமக்கு குழந்தையில்லேன்னா, இவா கொழந்தைய நம்மாத்துக்கு கொண்டு வந்துடுவேனா?
இதுக்காடி வருத்தப் படறே பாரு. அவாளுக்கு தெரியாதா நீ அப்படி செய்ய மாட்டேன்னு. ஏதோ விளையாட்டுக்கு சொல்லியிருப்பா. இதெல்லாம் பெரிசு படுத்தி வருத்தப் படாதே.
நம்ம மேலையும் தப்பிருக்கு. நானும் இங்க பணம் சம்பாதிக்கறதிலேயே குறியா இருந்துட்டேன். நீயும் பூவனூரே கதின்னு இருந்துட்ட. நீ வேணா பாரேன். இந்த வருஷம்.....
லேசான புன்னகை. அவன் தோளில் சாய்ந்து 'என் மேலதான் தப்பு. நான்தான் ஒங்கள ரொம்ப கஷ்டப் படுத்திட்டேன். என்ன மன்னிச்சுடுங்கோ.
போடி, பைத்தியம் மாதிரி பேசாதே. உன்ன நெனச்சா எனக்கு பெருமையா இருக்கு தெரியுமோ? பெத்தவாளுக்காக சந்தோஷங்களையே ஒதுக்கிட்டு பூவனூரிலேயே ஒரு பரோபகார வாழ்க்கை வாழ்ந்திருக்கயே. யாருமே இப்படியெல்லாம் செய்ய மாட்டா.
மெல்ல அவள் தலையை வருடிக் கொடுத்தான். அது அவளுக்கு ஆறுதலை மாத்திரம் தரவில்லை. கூடவே அந்தரங்கத்திற்கும் மெள்ள அழைக்க எத்தனித்தது.
கண்ணீரில் துவக்கினாலும் களிப்பிலே ஆழ்ந்தது இருவர் மனங்களும் பிறகு உடல்களும்.
இதுநாள் வரை இல்லாத பூரிப்பு. இதுநாள் வரை இல்லாத ஒரு ஆனந்தம் அன்று இருவருக்கும்.
கண்ணயர்ந்தனர். மறுநாள் காலை சற்று அசதியுடன் எழுந்திருக்கும்போது மணி கிட்டத்தட்ட ஆறு.
எப்போதும் ஐந்து மணிக்கு எழுபவளுக்கு ஆறு மணிக்கு எழுந்தது வெட்கமா இருந்தது.
மன்னிச்சுக்கோங்கோம்மா. கொஞ்சம் அசதியா லேட்டா.
அதனால என்னடி. நான் வாச தெளிச்சு கோலமெல்லாம் போட்டுட்டேன். அடுப்புல பால் இப்பத்தான் வெச்சேன் சூடா இருக்கு. பல் தேச்சுட்டு காப்பி ரெடி பண்ணு. வைத்தா அப்பாவும் எழுந்துட்டார். அவருக்கும் சேர்த்தே காப்பி கலந்துடு.
இன்னிக்கு ஒரு நாள்தான் அங்க போகவேண்டாமே.
இல்லைமா. இங்க வந்துட்டேனே தவிர நினைப்பு முழுக்க சுப்புணி கிட்டதான் இருக்கு. பாவம், அண்ணா வேற ஆஃபிஸ் கண்டிப்பா போகணும்னார். மாத்து புடவையெல்லாம் அங்க தானே இருக்கு. காபி சாட்டுட்டு கிளம்பறேன்.
சரிடியம்மா. உடம்ப பார்த்துக்கோ. முடியலைனா சொல்லி அனுப்பு. நான் வேணா வந்துடறேன்.
வைத்தாவிடம் சொல்லிக் கொண்டு மடிப்பாக்கம் கிளம்பினாள்.
தொடரும்...
No comments:
Post a Comment