#Easychair_48
அத்யாயம் : 48 .. ஈஸி சேர்
நாட்கள் வேகமாக ஓடிக் கொண்டிருந்தன. பர்வதத்தை பார்த்தவுடன் சிரிப்பதும், குதிப்பதும், தாவுவதுமாக சுப்புணி இருந்தது இவளுக்கு ஆறுதலைக் கொடுத்துக் கொண்டிருந்தது.
மீனாட்சியின் ஸ்பரிசத்தை விட இவள் ஸ்வாசத்திலேதான் அவன் ஆனந்தம் கண்டான். நங்கநல்லூருக்கும் மடிப்பாக்கத்திற்கும் தினமும் நடப்பது அவளுக்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை.
நாட்கள் கடந்தன. இவள் பெண்மையின் மாத நிகழ்வும் தள்ளிப் போனது.
நான் நினைப்பது போல இருக்குமோ? இருக்காது, அவ்வளவு பாக்யசாலியா நான். ஏன் இருக்காது? நானும் பெண்தானே? எனக்கு அனுக்ரஹம் பண்ணாமல் பகவான் யாருக்கு பண்ணப் போறார். எனக்குன்னு மட்டும் ஒரு சுப்புணி கிடைக்க மாட்டானா என்ன?
யார் கிட்ட கேட்கறது இதை? உடனே டாக்டர் கிட்ட? எல்லோருக்கும் ஒரு அதிர்ச்சி சந்தோஷத்தை கொடுக்கணும். டாக்டர் சொன்ன உடனே முதல்ல அவர் கிட்ட தான் சொல்லணும். கேட்ட உடனே என்ன பண்ணப் போறார்னு பார்கணும்?
எந்த டாக்டர் கிட்ட போறது? கைராசி டாக்டரா பார்க்கணும். எங்க தேடறது? பேசாம மன்னி கிட்ட மெல்ல சொல்வோம். அதுதான் சரி.
வெட்கத்தோடு மீனாட்சியிடம் சொன்னாள் தனக்கு தள்ளியிருப்பதாக. உடனே மன்னியின் கிண்டல் ஆரம்பம்.
அம்பாளே, இந்த பெண்ணுக்கு நல்ல தகவலா கிடைக்கணும். மீனாட்சிக்கு காளிகாம்பாள்தான் எல்லாத்துக்கும். வேண்டிக் கொண்டாள்.
பர்வதம், எனக்கு பார்க்கிற டாக்டர்கிட்டேயே போகலாம். அண்ணா கார் இப்ப வந்துடும். டாக்டர் கூட இருப்பா இந்த நேரத்தில.
அவளுக்கும் ஆர்வம் ரொம்ப இருந்ததால் சரி என்றாள்.
கார் வந்தது. டாக்டரிடம் சென்றார்கள். பரிசோதித்த டாக்டர் பத்மா உறுதி செய்தாள் வாழ்த்துக்களோடு.
ஆனந்தம் புரண்டோடியது பர்வதத்திற்கு. மன்னி, தேங்க்ஸ். நீங்க அழைச்சுண்டு வந்ததாலத்தான் இந்த அனுக்ரஹம் கிடைத்தது.
போடி நீ வேற. எல்லாம் உன் நல்ல மனசுக்கு எல்லாம் நல்லதுதான் நடக்கும். இன்னிக்கு நான் சுப்புணிய சமாளிச்சுக்கறேன். நானே உங்காத்துல ட்ராப் பண்றேன். நாளைக்கு நானே வந்து உன்ன பார்க்கிறேன். நீ சுப்புணி பத்தி கவலைப் படாம ஒங்காத்து மனுஷாளோடு சந்தோஷமா இரு இன்னிக்கி.
மீனாட்சியின் இரு கரங்களையும் பற்றிக் கொண்டாள். கண்ணீர் தாரை தாரையாக வந்தது அவள் கண்களில்.
எல்லாம் உங்க ரெண்டு பேரோட ஆசீர்வாதம்தான் மன்னி. நான் மலடியில்லங்கறதே எனக்கு சந்தோஷமா இருக்கு.
அடி, அசடே. உன்னை யார் அப்படி சொன்னா?
இல்லை மன்னி. ஒருத்தராத்து வளைகாப்புக்கு போனேன் மன்னி. அவா என்ன பொண்ணுக்கு சந்தனம் குங்குமம் இட கூட சம்மதிக்கல மன்னி. எனக்கு அன்னி முழுக்க ஏண்டா பொண்ணா பொறந்தோம்னு அழுகையா வந்தது மன்னி. கொழந்த பொறக்கலேன்னா பாவப்பட்ட ஜன்மமா மன்னி.
தத்து பித்துனு ஏதாவது கவலைப் பட்டுண்டு உடம்ப கெடுத்துக்காதே. அதான் இப்ப எல்லாம் சரியாயிடுத்தே.
வரும் வழியில் காரை நிறுத்தி ஒரு டஜன் ஆப்பிளை வாங்கி பர்வதத்தின் கையில் கொடுத்தாள் மீனாட்சி.
நெஞ்சமெல்லாம் பரிபூரண சந்தோஷம் பர்வதத்திற்கு.
அடுத்த ஜன்மம்னு ஒண்ணு இருந்தா மீனாட்சியே தனக்கு சகோதரியா வரணும்னு பிரார்த்தித்தாள் மனதிற்குள்.
கார் வைத்தா வீடு வந்தது.
அண்ணா வந்துடுவார் ஆஃபிஸிலிருந்து. ஆத்துக்குள்ள வரமுடியாது பர்வதம். ஜாக்கிரதையா உடம்ப பார்த்துக்கோ. அண்ணாவும் நானும் இருக்கோம். எதற்கும் கவலைப் படாதே.
சரி மன்னி. அண்ணா கிட்ட சொல்லுங்கோ. சந்தோஷப் படுவார்.
சொல்லாம இருப்பேனா? வைத்தாவ அழச்சுண்டு கோவிலுக்கு போ.
தொடரும்....
No comments:
Post a Comment